வாணி சுப்பிரமணியம் இயக்கிய ‘The Death of Us’ என்ற ஆவணப்படம் அண்மையில் பெரியார் மணியம்மை அரங்கில் திரையிடப்பட்டது.
தில்லியைச் சார்ந்த தமிழ் பேசும் வாணி சுப்பிரமணியம் ஏற்கெனவே Meals Ready , Ayodhya Gatha என்ற ஆவணப்படங்களை இயக்கி உள்ளார். இவர் புதிதாக இயக்கி உள்ள படம் ‘The Death of Us’.
ஐம்பது வகையான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. மரணத் தண்டனைக்கு உட்படுபவர்களின் பொருளாதார நிலை மிகவும் கீழானது; இவர்களில் பெரும்பாலோர் பள்ளிக் கல்வியை தாண்டாதவர்கள்; மலைவாழ், தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை இனத்தைச் சார்ந்தவர்கள் என்கிறது இந்தப் படம். மரண தண்டனை வரை சென்றவர்கள், அல்லது மரண தண்டனைக்கு உள்ளானவர்களோடு நேரடி தொடர்புடையவர்களை நேர்காணல் செய்து இந்தப் படம் இயக்கப்பட்டுள்ளது.
அழித்தொழிப்பு இயக்கத்தில் சேர்ந்து கொலை செய்ததால் தூக்குத் தண்டனை வரை சென்று மீண்ட தோழர் தியாகு, கல்கத்தாவில் ஒரு சிறுமியை வன்புணர்வு செய்து கொலை செய்ததாகச் சொல்லி தூக்கிலிடப்பட்ட தனஞ்செய் சாட்டர்ஜி, இலங்கை கடற்படையினரால் போதை மருந்து வழக்கில் மாட்டப்பட்டு மோடியால் பிழைத்த இராமேஸ்வரம் மீனவர் , நாதுராம் கோட்சே , நெல்லூர் பேருந்தில் பெட்ரோல் எரிந்ததால் இருபது பேர் இறப்புக்கு காரணமான சலபதி ராவ் , பாராளுமன்ற தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட காஷ்மீரி முஸ்லிம் எஸ்.ஏ.ஆர்.ஜிலானி போன்ற ஆறு விதமான வழக்குகள் வழியாக இந்த ஆவணப்படம் பயணிக்கிறது.’ இதன் எடிட்டிங் அருமையாக இருக்கிறது’ என்றார் பத்திரிகையாளர் கவின்மலர். இந்த ஆவணப்படம் மரணத் தண்டனைக்கு எதிரான இயக்கத்தை உந்தித் தள்ளும்.

இந்த ஆவணப்படத்தில் நடித்த வாழும் சாட்சியான தியாகு திரையிடலுக்குப் பின்பு நடந்த உரையாடலில் பேசினார். “ஐரோப்பிய யூனியனின் 26 நாடுகளும் மரண தண்டனையை ஒழித்து விட்டன. ஆளை உயிரோடு வைத்துக் கொண்டு கொடுப்பதற்குப் பெயர்தான் தண்டனை. உயிரை எடுப்பதற்குப் பெயர் தண்டனை அல்ல. இங்கிலாந்தில் உள்ள அனைத்து கட்சிகளும் மரணத் தண்டனைக்கு எதிரான நிலை எடுத்து அதனை ஒழித்து விட்டன. பொதுக் கருத்து எதிராக இருந்தால் அரசுகள் மரண தண்டனையை நிறைவேற்றாது. எனவே சமூக ஆர்வலர்கள் மரண தண்டனைக்கு எதிரான பொதுக் கருத்தை உருவாக்குவது அவசியமானது” என்றார் தியாகு.
“கொடுங் குற்றங்களுக்கு மரண தண்டனை என்கிறார்கள். ஆனால் போபால் விஷ வாயு வழக்கு கொடுங் குற்றத்தில் வராது! பூலான் தேவி தூக்கில் இடப்பட்டு இருந்தால் அவர் எப்படி இப்படி மாறினார் என்பது நமக்குத் தெரிந்திருக்காது. மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் வெளியுலகோடு தொடர்பு கொள்ள முடியாது. எனவே அவருக்கு கருத்துரிமை கிடையாது. கல்கத்தா தனஞ்செய் சாட்டர்ஜி 14 ஆண்டுகள் சிறைக்குப் பின்பு தூக்கிலிடப்பட்டார். சரியான இடத்தில் ,சரியாக இருந்தால் உங்களுக்கு மரண தண்டனை வழங்கப்படாது” என்று திரையிடலுக்குப் பின்பு நடந்த உரையாடலில் பேசினார் வாணி சுப்பிரமணியம்.
வி.ஆர்.கிருஷ்ண அய்யரும், மனித உரிமைப் போராளியுமான பாலகோபால் உயிரோடு இருந்தால் இந்தப் படத்தைப் பார்த்து வாணி சுப்பிரமணியத்தை வாழ்த்தி இருப்பர்.
– பீட்டர் துரைராஜ்.