போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களை பணி நீக்கம் செய்ய முயற்சிகள் நடந்துவருவதாக எழுத்தாளரும் மனித உரிமை செயல்பாட்டாளருமான அ. மார்க்ஸ் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
“எஸ்.வி.சேகரின் ஆபாசப் பதிவை எதிர்த்த பத்திரிகையாளர்களின் போராட்டத்தை முன்வைத்து இங்குள்ள ஆர்.எஸ்.எஸ் / பா.ஜ.க வினர் சென்னையிலுள்ள முற்போக்குச் சிந்தனையுடன் கூடிய பத்திரிகையாளர்கள் எல்லோரையும் கூண்டோடு பழி வாங்கி ஒழித்துக் கட்ட தீவிரமாக முயல்கின்றனர்.
இன்று வழக்குத் தொடர்ப்பட்டுள்ள 30 பத்திரிகையாளர்களையும் பணி நீக்கம் செய்ய அந்தந்த நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது.
சற்று முன் கிடைத்த செய்தியின்படி நியூஸ் 18 தொலைக் காட்சியைச் சேர்ந்த இரண்டு முக்கிய பத்திரிகையாளர்களைத் தற்போது கட்டாய விடுப்பில் அனுபப வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படுவதாகத் தெரிகிறது.
அந்தத் தொலைக் காட்சியில் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவரையும் நீக்க வேண்டும் எனவும் அழுத்தம் கொடுப்பதாகத் தெரிகிறது.
ஏற்கனவே சன் டிவி வீரபாண்டியன் இப்படிச் சங்கிகளின் அழுத்தத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டுப் பல ஆண்டுகள் ஓடிவிட்டன.
இம்மி ஆதரவைக்கூடத் தமிழகத்தில் திரட்ட இயலாத சங்கக் கும்பல்கள் சேகர், ராஜா போன்ற ஆபாசப் பேச்சாளன்களை ஆட்டு வித்து மேற்கொள்ளும் இப்படியான ஆபாசத் தாக்குதல்களை நாம் கண்டு கொள்ளாமல் விட்டுக் கொண்டே போவோமானால் எதிர்காலத்தில் நாம் இன்னும் பல இழப்புகளைச் சந்திக்க நேரிடும்.
பத்திரிகையாளர்களிலேயே உள்ள சில இந்துத்துவ ஆதரவாளர்கள் இளம் தமிழகம், FITE போன்ற அமைப்பினர் அன்றைய பிரச்சினையின்போது ஊடுருவியதாகச் செய்தி பரப்பி வருவதும் கண்டிக்கத்தக்கது. இன்று வழக்குத் தொடரப்பட்டுள்ளவர்களில் ஒருவரான தோழர் பரிமளா போராட்டத்தில் கலந்து கொள்வற்காக அன்று அங்கு செல்லவில்லை. மகேஸ்வரி எனும் பத்திரிகையாளரைச் சந்திக்கச் சென்ற அவரையும் காவல்துறை வழக்கில் சேர்த்துள்ளது அதை வைத்து பரிமளா சார்ந்துள்ள இந்த இயக்கங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு பத்திரிகையாளர்களின் போராட்டத்தையே கொச்சைப் படுத்திச் சில பத்திரிகையாளர்களே பதிவிடுவது அழகல்ல.
இப்போது ஆபாச வெறிப் பதிவாளன் சேகருக்கு anticipatory bail பெறுவதற்கான முயற்சிகள் படு தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. அதே நேரத்தில் ஆபாசச் சொற்களால் தாக்கப்பட்ட தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மேல் கடும் சட்டங்களின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டு அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதை நோக்கித் தள்ளப்படுகிறார்கள்.
சன் டி.வி. வீரபாண்டியனுக்கு நேர்ந்த கதி மற்ற பத்திரிகையாளர்களுக்கும் நேரக் கூடாது.
இது தொடர்பாக ஒட்டுமொத்தமான கண்டனக் குரல்களை நாம் எழுப்ப வேண்டும்” என தனது பதிவின் மூலம் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.