பீட்டர் துரைராஜ்

அருந்ததி ராய் God of small things நாவல் மூலம் புகழ்பெற்றவர்.19 ஆண்டுகளுக்குப் பிறகு இவர் எழுதி வெளிவந்திருக்கும் நாவல் “The Ministry of Utmost Happiness
“.இந்த நாவலும் புக்கர் பரிசுக்கு தேர்ந்து எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது; முதல் சுற்றில் இந்நாவல் இடம் பெற்றிருந்தது.” அருந்ததி ராய்க்கு புக்கர் புக்கர் பரிசு கிடைத்திருந்தால் காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரு வேகம் (traction) கிடைத்து இருக்கும்.” என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் த.நா.கோபாலன்.
அருந்ததி ராயின் மொழி சரளமான மொழி; வார்த்தைகள் குறிப்பான வார்த்தைகள். கதை முன்னும், பின்னும், இடையிலும் சொல்லப்படுவதால் மெதுவாக நகர்வது போல தோன்றுகிறது. கதை தெரிந்தவுடன் மீண்டும் ஒருமுறை படித்தேன் . அதன் விசாலமும், ஆழமும் இப்போது புரிகிறது.
மூன்றாம் பாலினம் (he is she), காவலாளி (நாளொன்றுக்கு 7 மணி நேரம், வாரத்திற்கு ஏழுநாள் வேலை), நகராட்சி தொழிலாளி (அதற்கு முன்பு பிணம் அறுக்கும் வேலை), தோழர். ரேவதி (என் தாயும், தத்தையும் எனக்கு கட்சிதான், பல நேரங்களில் பல முறை கட்சி தவறிழைத்து இருக்கிறது), கைவிடப்பட்ட குழந்தை (இதன் தந்தை பஸ்டர் காவலாளிகள் ஆறுபேரில் ஒருவன்) என இந்நாவலின் கதாபாத்திரங்கள் அனைவருமே ஏதோ ஒருகையில் கண்டுகொள்ள படாதவர்கள். நாவலாசிரியர் இவர்களை மையமாக வைத்து வார்த்தைகளால் விளையாடுகிறார். இவரது வசனங்களை படித்து மெலிதாக புன்னகைக்கலாம்; சத்தம் போட்டு சிரிக்கலாம். வாக்கியங்கள் சொல்லும் பொருள் ஒன்று; நமது அறவுணர்ச்சி, புரிந்து கொள்ளும் தன்மையைப் பொருத்து வெளிப்படும் பொருள் வேறு (read between the lines).
நாவல் பேசுவது முழுமையும் தற்கால அரசியல்தான்; அது நாவலாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஜந்தர்மந்தரில் ஒரு குழந்தை ஒருத்தியால் (அவள் உயரமானவள், குள்ளமானவள்; கறுப்பானவள், சிவப்பானவள்; அழகானவள் , அழகில்லாதவள் ) விட்டுச் செல்லப்படுகிறது. அதனை எடுத்து பராமரிக்கும் திலோத்தமாவிற்கு சிலர் உதவிபுரிகின்றனர். இதனையொட்டி நடக்கும் சம்பவங்களின் கோவைதான் இந்தக் கதை.

இந்த நாவல் சம காலத்தில் (ஏறக்குறைய முப்பது ஆண்டுகள்) நடக்கிறது. ஜந்தர் மந்தர்
(இதில் நடைபெறும் போராட்டங்கள் பற்றின விவரணைகள் அருமை) , ஆந்திரா கோதாவரிப்பகுதி (ரேவதி தோழரான பகுதி), தஞ்சாவூர் (வன்னியர் பகுதியில் எப்படி ஒரு தலீத்தின் சிலையில் துப்பாக்கி இருக்கலாம்), ஜம்மு காஷ்மீர் ( உடனடியாக காதுக்கு மருந்திட்டு சரி செய்ய வேண்டும், இல்லையானால் இராணுவம் கூப்பிடும்போது திரும்ப முடியாது, உயிருக்கு ஆபத்து), அகமதாபாத் அகதி முகாம் (காயத்திரி மந்திரம் கற்றுக்கொண்டால் தப்பிக்கும் வாய்ப்பு உண்டு), கொச்சி (அவர்கள் ஒவ்வொருவரும் வளைகுடா நாட்டிற்கோ, இங்கிலாந்திற்கோ, அமெரிக்காவிற்கோ, சென்று அங்குள்ள மலையாள தாதிப்பெண்கள் வரிசையில் சேர காத்திருந்தார்கள்) என இந்த நாவல் இந்தியா முழுமையும் இயல்பாக பயணிக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் நடப்பது என்ன? அங்குள்ள சாமானியனின் வாழ்வு எத்தகையது? அரசு யந்திரத்தின் பற்கள் எப்படிப்பட்டன என புரிந்து கொள்ள இந்த நாவல் உதவும். கதையின் பெரும்பாலான பக்கங்கள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மூசா (தில்லியில் கட்டடக்கலை பயின்ற காஷ்மீர் குடிமகன்), நாகராஜ் ஹரிகரன் (அவனுடைய ஆர்வம் ஒரே நேரத்தில் நம்பிக்கையும் , எரிச்சலையும் ஒரே நேரத்தில் கொடுத்தது), பிலப்தாஸ் குப்தா (தந்தை தமிழ், தாய் வங்காளி ), திலோத்தமா (பெற்ற தாயாராலேயே தத்து எடுக்கப்பட்டவள்; அவளுக்கு கடந்த காலம் இல்ல , குடும்பம் இல்லை, சமுதாயம் இல்லை, மக்கள் இல்லை, வீடும் இல்லை) என்ற இந்த நான்கு பேரும் தில்லியில் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். பின்பு காஷ்மீரில் ஒருங்கே பங்வேறு நிலைகளில் – குடிமகனாக, போராளியாக, காதலியாக; மனித உரிமை (?) பேசும் பத்திரிக்கையாளராக, அவன் மனைவியாக; உளவுப்பிரிவு இயக்குநராக, அவனுடன் படுப்பவளாக வருகிறார்கள். இவர்களுக்கு இடையேதான் கதை பின்னப்பட்டுள்ளது.
அவரது நடை துள்ளலாடும் நடை; அவர் விரும்புவது மானுட நேசம். அருந்ததி ராய் வெற்றி பெற்றிருக்கிறார். “நான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவோ, பணம் சம்பாதிப்பதற்காகவோ நாவல் எழுதவில்லை. நான் ஒரு நாவல் எழுத வேண்டும் எனவே நாவல் எழுதுகிறேன்” என்று அவர் சொல்லுவது பொருத்தமே.
திலோத்தமா ரீடர்ஸ் டைஜஸ்ட் பாணியில் காஷ்மீரைப் பற்றி எழுதி வைத்திருக்கும் குறிப்புகளைப் போல ஒரு சில பதிவுகள் :
1. கீழ்கண்டவைகள் சரியா? தவறா?
(அ) The Ministry of Utmost Happines
என்பது இடுகாடு
(ஆ)Mr.Aggarwal என்பது
கேஜ்ரிவாலைக் குறிக்கும்.
( இ) அமெரிக்காவில் தஞ்சம் அடைந்த
மேஜர். அம்ரிக்சிங் தற்கொலை
செய்து கொண்டார்.
( ஈ) காஷ்மீரில் இராணுவம்
போர்நிறுத்தத்தை
விரும்பியதில்லை .
The Ministry of Utmost Happiness
பெங்குவின் பதிப்பகம்
445 பக்கம்
ரூ.599/2017.
பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.