தீபா ஜானகிராமன்
இந்த நேரத்தில் கல்லூரி பேராசிரியர்களும் தங்கள் மனசாட்சியை கேள்விக்கு உட்படுத்த வேண்டும். பிஹெச்டி மாணவிகள் அனுபவிக்கிற பாலியல் சுரண்டல்களைப் பற்றி நிச்சயம் பேசத்தான் வேண்டும். காரணத்தை வெளியே சொல்ல முடியாமல் பாதியில் பிஹெச்டி முடிக்காமல் ஆய்வை நிறுத்திய மாணவிகள் அதிகம்.
‘கையை அமுக்கி விடு..காலை பிடிச்சு விடு’ என்று தன்னிடம் சேரும் ஆராய்ச்சி மாணவிகளிடம் சொல்லும் பேராசிரியர்கள் எங்கும் காணக் கிடைக்கலாம். தன்னிடம் ஆய்வுக்காக வரும் மாணவிகள் தங்களுக்காக ‘நேர்ந்துவிடப்பட்டவர்கள்’ என்று நினைக்கும் பேராசிரியர்கள் பணியில் தொடர்கிறார்கள். அவர்களிடம் படிக்கும் மாணவிகள் பாதியில் ஆய்வினை கைவிடுகிறார்கள்.
பல்கலைகழகங்களில் நடக்கும் இந்த பாலியல் சுரண்டல்கள் குறித்து மாணவிகள் புகார் செய்தால் அவர்களுக்கு கிடைக்கிற அவமானங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. இப்படித் தவறாக நடந்து கொள்ளும் பேராசியர்கள் தொடர்ந்து பணியில் இருப்பதற்கான காரணம், அவர்களுக்கெதிரான ஆதாரங்கள் இல்லாததே. இது போன்ற குற்றங்களுக்கு ஆதாரம் தேவையில்லை, மாணவிகளின் புகார் தான் அடிப்படை என்கிற போதும் கூட ‘ஆதாரம் இல்லை’ என்று நியாயம் மறுக்கப்பட்ட கதைகள் அநேகமாய் எல்லா கல்வி நிலையங்களிலும் உண்டு.
ஒவ்வொரு கல்விக்கூடங்களிலும் ‘விசாகா கமிட்டி’ போல ஒன்று செயல்பட வேண்டும். பேருக்கு அப்படியான ஒன்று இருக்கும். ஆனால் அங்கு இதுவரை எத்தனை பேருக்கு நியாயம் கிடைத்திருக்கிறது? நடக்கிற குற்றங்களும், விசாரணைக்கு வந்த புகார்களும், அதில் நியாயம் கிடைத்ததற்குமான எண்ணிக்கையில் தான் எத்தனை வேறுபாடுகள்.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் பேராசிரியை மாணவிகளைத் தவறாக வழிநடத்தினார் என்று அத்தனை மீடியாக்களும் தொடர்ந்து பேசின. அவர் நமக்கு கிடைத்த ஒரு சோறு பதம் தான். பேராசியர் தொழில் என்பது புனிதமான, விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது அல்ல. அது பொறுப்பு என்பதில் இருந்து வேலை என்பதாக மாறி வருடங்கள் ஆகிவிட்டன.
எப்படி நடந்து கொண்டாலும் நிர்வாகம் நம்மை பாதுகாக்கும் என்பதும், பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியில் சொல்ல மாட்டார்கள் எனபதும் தான் இவர்களுக்கு இருக்கும் தைரியம்.
அவர் நன்றாக பாடம் எடுக்கக்கூடியவர் , அவர் திறமையைப் பார்ப்போம், எப்படி நடந்து கொண்டால் என்ன, அது பாலியல் சுதந்திரம் தானே என்ற ரீதியில் பேசுபவர்கள் மத்தியில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவர்களில் குற்றமுள்ள நெஞ்சைக் கொண்டிருக்கும் சில பேராசிரியர்கள் தற்போது பயந்து போய் இருப்பதாக என்னளவில் கேள்விப்படுகிறேன். இந்த பயத்தை ஏற்படுத்தியதற்காக #metoo வைக் கொண்டாடுகிறேன்.
தீபா ஜானகிராமன், எழுத்தாளர்.