இவர்களின் வாழ்தலுக்கான போராட்டத்தை வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டுமா?

சிவபாலன் இளங்கோவன்

ஒட்டுமொத்த மாணவர்களின் போராட்டத்தின் முகமாக இருக்கும் அந்த பர்தா அணிந்த, கண்ணாடிபோட்ட பெண்ணிடம் பத்திரிக்கையாளர் “எதற்காக இந்த போராட்டம்” என கேட்கும்போது, அந்த பெண் ஒரே வார்த்தை தான் அதற்கு பதிலாய் சொல்கிறாள் “For existence”. இதை சொல்லும்போது அவள் அத்தனை பதட்டமாக இருக்கிறாள். அவளது கரங்களை இறுக்கமாக பற்றிக்கொண்டு ‘பயப்பட வேண்டாம்’ என சொல்ல வேண்டும் போல் இருக்கிறது. ஆனால் பயப்பட வேண்டாமா?

“survival” ஐ தவிர மனிதனுக்கு வேறு என்ன தலையாக பிரச்சினை இந்த உலகத்தில் இருக்கிறது? அந்த survival கேள்விக்குறியாகும்போது அது எத்தனை பதட்டமானதாக, அச்சமூட்டக்கூடியதாக இருக்கும்?. அவர்களுக்காக இறங்கி போராடவில்லையென்றாலும், அவர்களுக்காக எதுவும் பேசவில்லையென்றாலும் கூட, அவர்களின் நிலையை புரிந்து கொள்வது தானே சக மனிதராக நமது முதன்மையான கடமை?, நாளை எல்லோருக்குமே இப்படிப்பட்ட existence பிரச்சினை வரும்போது இந்த சமூகம் நம்முடன் நிற்க வேண்டுமென்று தானே நாமும் எதிர்பார்ப்போம்?

அடிப்படை மனித பண்புகளை விட, நமது அடிப்படைவாத அடையாளங்கள் அத்தனை உயர்வானதா? மனித பண்புகளை உதறிவிட்டு அப்படி என்ன அடையாள பெருமையை நாம் தூக்கி சுமக்க போகிறோம்? என்னை பொறுத்த வரையில் அரசாங்க வன்முறை கூட அத்தனை அச்சமூட்டிவதாக இல்லை. ஒரு பெரும்பான்மையான சமூகம் அரசாங்கத்தின் இந்த வன்முறையை இப்படி கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறதே அது தான் அச்சமூட்டக்கூடியதாக இருக்கிறது.

இந்த காலத்தில் எப்படி மக்கள் இப்படி மாறிப்போய்விட்டார்கள்? உண்மையில் சக மனிதர்களின் மீதான எந்த வித கரிசனமும் இல்லாத, மனிதாபிமானமும் இல்லாத பெரும்பான்மையான மக்களின் மன நிலையை தான் அரசு பிரதிபலிக்கிறதோ என்று நினைக்க தூண்டுகிறது. உண்மையில் அது தான் என்னை நடுங்க வைக்கிறது.

சிறு வயதில் பள்ளி புத்தகங்களின் முதல் பக்கத்தில் அச்சிடப்பட்டிருக்கும் வேற்றுமையில் ஒற்றுமை (Unity in diversity) என்ற சொல்லை பார்க்கும்போதெல்லாம் அது எத்தனை பொருள் பொதிந்த சொல் என்று உணர்ந்ததேயில்லை. ஆனால் இப்போது புரிகிறது ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பது மாபெரும் கனவு. அது எப்படியாவது நனவாக வேண்டும் என்பதை தவிர வேறெதுவும் தோன்றவில்லை.

சிவபாலன் இளங்கோவன், மருத்துவர்; எழுத்தாளர்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.