முற்றிய மனநோயாளிகள்!

லக்ஷ்மி சரவணகுமார்

இரண்டு வருடங்களுக்கு முன்னால் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்ந்து பொது இடங்களில் பெண்களின் மீது பாலியல் அத்துமீறல் செய்த வழக்கில் கைதானவர். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளியின் மனநிலையைப் புரிந்து கொள்கிறார்.
அவரது தீர்ப்பில் இப்படி ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார். ‘பெண்கள் குறித்தான எந்தவித அடிப்படை புரிதல்களும் இல்லாமல் நீங்கள் வளர்க்கப்பட்டிருக்கிறீர்கள், உங்களுக்கு குறைந்தபட்சம் பெண்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதே சிக்கலாய் உள்ளது. பதினைந்து நாட்களுக்கு கொடைக்கானல் மதர் தெரஸா பெண்கள் கல்லூரி வளாகத்தில் அவர்களோடு தங்கி நன்னடத்தை கடிதம் பெற்று வரவேண்டுமென.’

இந்த வழக்கிற்கு பிறகு அந்த மனிதன் என்னவானார் என்பது தெரியாது. ஆனால் அந்த நீதிபதி குறிப்பிட்ட மிக முக்கியமான விஷயம் நீ பெண்கள் குறித்த எந்தவிதமான புரிதல்களும் இல்லாமல் வளர்க்கப்பட்டிருக்கிறாய். இது இந்தியச் சூழலில் 90 சதவிகித ஆண்களுக்கு பொருந்தும்.(என்னையும் சேர்த்து.)

இங்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு எல்லையில் தங்களின் யோக்கியத்தனத்தையும் அயோக்கியத்தனத்தையும் நிறுத்திக் கொள்கிறார்கள். பெண்கள் ஒரு குடும்பத்தின் தனிப்பெரும்பான்மை சொத்தாக பார்க்கப்படுவதிலிருந்து தான் அவர்களின் மீதான எல்லா வன்முறைகளும் துவங்குகிறது. அப்பாவுக்கு பணிந்து போகும் அம்மாவை அக்காவை தங்கைகளை பார்த்து வளரும் ஒருவன் பருவ வயதில் அப்பாவைப் போலவே மாறுகிறான்.

பெண்கள் தனது விருப்பங்களுக்கு கட்டுப்பட்டவர்கள் என்கிற மனோபாவம் மிகச் சிறிய வயதிலிருந்தே ஆண்களுக்கு ஆழமாக மனதில் ஊன்றி வளர்ந்து விடுகிறது. குடும்பத்தில் பொதுவெளியிலென எல்லா இடங்களிலும் ஆண் ஆணாகவே மாறிப்போவதற்கான முதல் காரணம் அவன் குடும்பம் அவனை சரியான புரிதல்களோடு வளர்ப்பதில்லை.

2005 ம் வருடத்தின் மாட்டுப் பொங்கல் நாள். அப்போது ஒரு மருத்துவமனையோடு சேர்ந்த என்.ஜி.ஓ வில் வேலை செய்து கொண்டிருந்தேன். மாலை நேரம், ஆட்டோவில் ஒரு பெண்ணைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். நாற்பது வயதிருக்கும். இடைக்குக் கீழ் உடையெங்கும் குருதி. பாதி மயக்கநிலை. பதறியடித்து அவரைத் தூக்கிக் கொண்டு போய் சிகிச்சைக்கு அனுப்பினோம். விசாரித்த போது அவர் பாலியல் தொழிலாளி என்று தெரிந்தது. முந்தைய நாள் மாலை இரண்டு இளைஞர்கள் அவரை அழைத்துக் கொண்டு ஊருக்கு வெளியிலிருக்கும் கன்மாய்க்கு சென்றிருக்கிறார்கள். இவர்கள் உறவு கொள்ளும் போது பக்கத்து கிராமத்திலிருந்த ஆண்கள் கொஞ்சம் பேர் அங்கு வர இவர்கள் பயந்து அங்கிருந்து ஓடிவிட்டார்கள். அதன்பிறகு 16 பேர் சேர்ந்து தொடர்ந்து மாறி மாறி அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கியுள்ளார்கள். இறுதியாக ஒருவன் முற்றிய போதையில் அந்தப் பெண்ணின் குறியில் க்ளிட்டை கடித்து துப்பியிருக்கிறான்.

கேட்கும் போது தலை சுற்றி மயக்கம் வந்தது. தன்னை நம்பி வரும் ஒரு பெண்ணுக்கான குறைந்தபட்ச பாதுகாப்பைக் கூட தரமுடியாத அளவிற்கு முட்டாள்தனமும் கோழைத்தனமும் நிரம்பிய இவர்களைப் போன்று இன்னும் எத்தனை பேர். கூட்டாக சேர்ந்து பாலியல் வன்முறை செய்வது யதார்த்தமானது, அதுவொரு சுவையென இவர்களை எது நம்பச் செய்கிறது?

பொள்ளாச்சி பாலியல் வன்முறை தொடர்பான வீடியோவை என்னால் முழுமையாய் பார்க்க முடியவில்லை. அந்தப் பெண்களின் அலறல் ஒன்றாய் நூறாய் ஆயிரமாய் எதிரொலிக்கிறது. தெரிந்த பழகிய ஒவ்வொரு பெண்களின் குரல்களும் அதன் பின்னால் இருப்பதான வேதனை மனமெங்கும் எழுந்தபடியே இருக்கிறது. பாலியல் ரீதியிலான வன்முறைக்கு இணங்க வைப்பதற்காக ஒரு இளம் பெண்ணை பெல்ட்டால் அடிப்பதும் அந்தப் பெண் அடிக்க வேண்டாமென கெஞ்சுவதும் இதெல்லாம் ஒரு சாதாரண மனிதன் செய்யக் கூடியதுதானா என்கிற அச்சத்தை உருவாக்குகிறது.

அதிலும் ‘உன்ன நம்பித்தானடா வந்தேன், லூசாடா நீ இப்டிலாம் பன்ற? ‘ என அந்தப் பெண் சொல்லும் நொடியில் வீடியோவை நிறுத்திவிட்டேன். அவள் அவனை எத்தனை நேசித்திருந்தால் இதை சொல்லி இருக்கக்கூடும். ஒரு மனிதன் தான் எதிர்கொள்ளும் எந்தப் பெண்ணையும் நேசிக்காமல் ஏமாற்றிக் கொண்டே இருக்கிறான் என்றால் பெண்கள் குறித்து வாழ்க்கை குறித்து அவனது புரிதல் தான் என்ன? இவர்கள் எப்படி தங்கள் வீட்டுப் பெண்களை தோழிகளை இயல்பாக பார்ப்பார்கள்?

இந்தக் குற்றவாளிகளில் சாதாரண ஆட்களில் இருந்து பெரும் அரசியல்வாதிகள் வரை பட்டியல் நீண்டபடி இருப்பது ஒரு அதிர்ச்சியென்றால் அவர்கள் என்னென்ன காரியத்திற்கெல்லாம் இதை செய்திருக்கிறார்கள் என்பதை கொஞ்சம் நெதுங்கி விசாரித்தால் அதைவிடவும் அதிர்ச்சியாக இருக்கிறது. பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு நண்பருடன் இது குறித்து பேசிக் கொண்டிருக்கையில் இந்த கேங் பொள்ளாச்சியின் முக்கிய பிரமுகர் ஒருவரின் மனைவியை இதேபோல் தங்கள் வலையில் வீழ்த்தி வீடியோவும் எடுத்து அதிலிருந்து மீள வேண்டுமானால் எண்பது லட்ச ரூபாய் தர வேண்டுமென மிரட்டி வாங்கி இருக்கிறார்கள். இதுவெறும் சாம்பிள்தான்.

இதுபோல் ஏராளமான ப்ளாக் மெயில்கள் ஒருபுறமென்றால் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்களை அரசியல்வாதிகளுக்கு இரையாக்குவது இன்னொரு வகை. இதில் ஆளுங்கட்சியின் பல முக்கியஸ்தர்களும் அடக்கம். பெண்களை இத்தனை துட்சமாக நினைக்கும் ஒரு கட்சி மாநிலத்தை ஆண்டால் மயிறா விளங்கும்? கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்கள், மாணவிகள் குடும்பப் பெண்கள் என இவர்கள் யாரையும் விட்டுவைக்கவில்லை. இத்தனையாண்டு காலம் யாரிடமும் மாட்டிக் கொள்ளாமல் இவர்களால் இதை செய்ய முடிந்திருக்கிறதென்றால் இவர்களுக்குப் பின்னால் இருந்து யாரோ பலமாக சப்போர்ட் செய்கிறார்கள் என்பதுதான் தெளிவாக விளங்குகிறது.

ஒரு சமூகத்தில் குடும்பம் அரசு யாவும் பெண்கள் குறித்த புரிதல்கள் இல்லாமல் இருப்பதை முற்றிய மனநோய் என்று சொல்வதா? கூட்டு வன்முறை என்று சொல்வதா? இதுபோன்ற பாலியல் குற்றங்களுக்கான அதிகபட்ச தண்டனைகள் என்ன? அல்லது எப்போது இவர்களுக்கான நீதி கிடைக்கும்? தனக்கு உடமையில்லாத ஒரு பெண்ணின் உடல் மீது எல்லாவிதமான வன்முறைகளையும் செய்துவிட்டு அதுகுறித்து எந்தவிதமான குற்றவுணர்வுகளுமில்லாமல் அலையும் இவர்களோடு சேர்ந்த ஒவ்வொருவரையுமே நாம் சந்தேகிக்கத்தானே வேண்டும். பரஸ்பரம் புரிந்துணர்வுடன் நடக்கும் ஒவ்வொரு காதலின் மீதும் உடல் உறவுகள் மீதும் சந்தேகங்களையும் அவருவருப்புகளையும் இவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.

இரண்டு பேர் பொதுவெளியில் நேசத்தோடு இருப்பதை பார்க்க முடியாதளவிற்கு சூழலை மாற்றிப் போட்டிருக்கிறார்கள். மாலை அயலகத்திலிருந்து அழைத்த நண்பர் ஒருவர் ஏன் உங்கள் தேசத்தில் மனிதர்கள் இத்தனை மனச்சிக்கல் கொண்டவர்களாய் இருக்கிறார்களென வருத்தப்பட்டார். இந்த சம்பவம் ஏற்படுத்திய பாதிப்பில் அவர் மருத்துவமனை சென்று வந்திருக்கிறார். 300 க்கும் மேற்பட்ட பெண்கள் என பத்திரிக்கைகள் சாதாரணமாக சொல்லும் போது நமக்குத் தெரிந்த நம்மோடு இருக்கும் பெண்கள் எல்லாம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கைகள் எல்லாம் உடைந்து நொறுங்குகிறது.

பாலியல் குற்றங்களை புரிகிற ஆண்கள் தனியாக எங்கிருந்தோ வருகிறவர்கள் அல்ல, நம்வீட்டில் நம் தெருவில் நமக்குத் தெரிந்தவர்களில் இருந்துதான் உருவாகிறார்கள். நம்மோடு இயல்பாக பழகும் இவர்கள் எல்லோருக்கும் சகிக்கமுடியாத இன்னொரு பக்கமுண்டு. பெண்களை இத்தனை இழிவாக நடத்தக்கூடிய இவர்களால் எந்தக் குற்றங்களையும் எளிதாக செய்ய முடியும். நேசத்தை தேடி வந்த ஒரு பெண்ணை கூட்டு பாலியல் வன்முறை செய்து அடித்து துன்புறுத்துகிறவனை முதலில் மனிதன் என்று சொல்வது சரியா? எதிர்பாலினத்தின் மீதான பாலியல் இச்சை, காதல் இதுவெல்லாம் இயல்பான விஷயங்கள். இவை எந்தப் புள்ளியில் சாடிஸமாக மாறுகிறது.

ஆயிரத்தில் ஒன்றல்ல, லட்சத்தில் ஒரு முறைதான் பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது. பல வழக்குகள் என்னவாகின்றன என்பதே தெரியவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளின் வரிசையில் நாம் முதலாவதாக இருக்கிறோம் என்று பெருமையொடு சொல்லிக் கொள்ளலாம். நீங்கள் எதிர்கொள்ளும் பத்தில் நான்கு பெண்கள் ஏதோவொரு சமயம் பாலியல் அத்துமீறலை எதிர்கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்று கூடி இந்த பிரச்சனையில் பாதிக்கபட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவும் போராட வேண்டும். ஏனெனில் இந்த பிரச்சனை நம் குடும்ப அமைப்புகளின் அடிப்படியை சிதைக்கக் கூடியதொன்று. பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்படுவதோடு அவை விரைவாக விசாரிக்கப்பட்டு நீதி வழங்குவதற்கான வழிகளை உருவாக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் சொல்லிக் குடுப்பதைப் போலவே, சிறு வயதிலிருந்தே பெண்களுடனான நட்பு அவர்களைப் புரிந்து கொள்வது குறித்து சரியான முறையில் கற்றுக் கொடுப்பதற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டும். இந்த அநீதிகளுக்குப் பின்னாலிருக்கும் ஒவ்வொருவரும் தண்டிக்கப்பட வேண்டுமென்றால் இடைவிடாத போராட்டம் மட்டுமே ஒரே தீர்வு.

லக்ஷ்மி சரவணகுமார் எழுத்தாளர்.

One thought on “முற்றிய மனநோயாளிகள்!

  1. Thanks for this. India should do something about it. My wife visited a few countries. I have never been sleepless like when she was in India for 5 days. That’s the reputation of the country. The wake up call, I think, came and passed when the Delhi bus victim’s case came to light. I have no idea how anything else will shake up the authorities to sit and draw a plan to fight this atrocity. Thanks again!

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.