கே. என். சிவராமன்
நேற்றும் இன்றும் உரையாற்றியது இம்ரான் கான்தான் என்றாலும் அவ்விரு பேச்சுகளின் சாராம்சத்தை எழுதிக் கொடுத்தவர்கள் அந்நாட்டு அதிகார வர்க்கத்தினர். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று அவர் நிகழ்த்திய உரையில் விடுதலைப் புலிகள், தற்கொலைப் படைத் தாக்குதல் என பல விவரங்கள் கொட்டின.
நிச்சயமாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச அரசியலை கவனித்து வரும் அதிகார வர்க்கத்தினரால் மட்டுமே இப்படிப்பட்ட புள்ளிவிபரங்களை எடுத்து அதுவும் இந்த சூழலில் உலகத்தின் முன் வைத்து ஒட்டுமொத்தப் பார்வையையும் தங்கள் நாட்டின் மீது குவிக்க முடியும்.
ஏனெனில் பாகிஸ்தான் இப்போது தங்கள் நாட்டின் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சரில் கவனம் செலுத்தவே விரும்புகிறது. இதற்கு வளர்ந்த நாடுகளின் உதவி அந்நாட்டுக்குத் தேவை. ஆனால், விழுந்திருக்கும் தீவிரவாதிகளை ஆதரிக்கும் நாடு என்றப் பெயர் உதவ வருபவர்களை பின்வாங்க வைக்கிறது.
இதை எப்படிப் போக்குவது என்று யோசித்த பாகிஸ்தானுக்கு வகையாக சிக்கிய ஜாக்பாட் அபிநந்தன்.
இச்சூழலை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்நாட்டு அதிகார வர்க்கம் கடந்த காலம் போல் தீவிரவாதத்தை இனியும் நாங்கள் ஆதரிக்கப்போவதில்லை; சமாதானத்தையே விரும்புகிறோம் என்பதை அழுத்தம்திருத்தமாக அறிவித்துவிட்டது.
அடுத்து வரும் நாட்களில் எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பாகிஸ்தானில் கையெழுத்தாகப் போகின்றன என்பதை வைத்து அபிநந்தன் நிகழ்வில் எவ்வளவு ஸ்கோர் செய்திருக்கிறார்கள் என்பதை அறியலாம்.
இதற்கு மாறாக இந்திய அதிகார வர்க்கம் எந்தளவுக்கு கற்காலத்துக்கு சென்றுள்ளது என்பதை இதே அபிநந்தன் எபிசோட் உலக நாடுகளுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. சிம்லா ஒப்பந்தம் குறித்த பாதுகாப்புத்துறை அமைச்சரின் முத்துக்கள் எல்லாம் ஒரு சோறு பதம்.
நேற்று அபிநந்தனின் வீடியோவும் புகைப்படங்களும் வெளியானதுமே அவர் உயிருக்கு ஆபத்தில்லை என்பதும் சித்திரவதை செய்யப்பட மாட்டார் என்பதும் சேதாரமின்றி விடுவிக்கப்படுவார் என்பதும் புரிந்துவிட்டது.
ஏனெனில் வீடியோவும் போட்டோஸும் வெளியானதுமே அது சர்வதேச பிரச்னை ஆகிவிட்டது. மத்திய கிழக்கு நாடுகள், சிரியா ஆகியவற்றை அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் கையாள்வது போல் அபிநந்தன் எபிசோடை நகர்த்த முடியாது. கூப்பிடும் தொலைவில் சீனாவும் தயார் நிலையில் கொரியாவும் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
இதை ஊகித்தே பாகிஸ்தான் அதிகார வர்க்கம் தாயத்தை உருட்டியிருக்கிறது.
ஊகிக்கும் திறன் இருந்தும் தாயத்தை உருட்டும் ஆட்டக்காரர் திறனற்று இருப்பதால் இந்தியா கோட்டை விட்டிருக்கிறது.
ஜனநாயகத்தின் ஆணிவேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகள் அல்ல. அதிகார வர்க்கத்தினர்தான். இந்த வேர் ஆட்டம் கண்டால் அரச மரமாகவே இருந்தாலும் மொத்தமாக தத்தளிக்கும்.
கடந்த சில வருடங்களில், மாதங்களில் எத்தனை துறைகளில் இருந்து எவ்வளவு அதிகாரிகள் நீக்கப்பட்டிருக்கிறார்கள்; விருப்ப ஓய்வில் அனுப்பப்பட்டிருக்கிறார்கள் – இப்போது அந்த இடங்களில் யார் அமர்ந்திருக்கிறார்கள்; அமர வைக்கப்பட்டிருக்கிறார்கள் என கணக்கிட்டால் இப்போதிருக்கும் அரசு எந்தளவுக்கு கற்காலத்தை நோக்கி நாட்டு மக்களைத் தள்ளுகிறது என்பது புரியும்.
ஜனநாயகத்தையும் தேர்தலையும் நம்புபவர்களாக இருந்தால் அதிகார வர்க்கம் குறைந்தபட்ச ஒழுங்குடன் இயங்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இல்லையெனில் சக்கரம் சுற்றாமல் மக்கர் செய்யும்.
கே. என். சிவராமன், பத்திரிகையாளர்.