பீட்டர் துரைராஜ்

அண்ணாசாலையில் உள்ள தேவியில் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தை பார்த்து விட்டு என் சகோதரருடன் பல்லாவரத்திற்கு திரும்பி வந்தேன்.வருகின்ற வழியில் தொடர்ந்து இந்தப் படத்தைப்பற்றி பேசி வந்தோம்.அதில் வரும் காட்சி அமைப்பு பற்றி, வசனம் பற்றி, கதை பற்றி,அல்லது கதை இல்லாதது பற்றி பல விஷயங்களை திரும்பத் திரும்ப பேசி வந்தோம்.
வீட்டிற்கு வந்தவுடன் இதில் யார் ஹீரோ என்று என் மகன் கேட்டான்.மொபைல் போனில் தேடித்தான் -அந்தோணி என்று சொன்னேன்.இதனை இப்போது எழுதுகையில் அதில் கைப்பை, குடையோடு எப்போதும் தென்படும் ‘ சாக்கோ’ தோழர்தான் ஹீரோ என்று தோன்றுகிறது.
வீதி நாடகம் என்று சொல்லுவார்கள்.இதனை வீதி சினிமா என்று சொல்லலாமோ? திரையில் வசனங்கள் ஒரு சில இடங்களில் பேசும்போது பார்வையாளர்கள் பேசுவது போல இருக்கிறது. இந்தப் படத்தை ஐந்தாவது முறையாக பார்த்துக் கொண்டு இருப்பதாக, படம் வெளிவந்த இரண்டாம் நாளே எழுத்தாளர் கொற்றவை முகநூலில் தெரிவித்து இருந்தார்.
மலை என்றால் சுற்றுலா, குளிர்,ஜாலி என்றுதானே நம் மனதில் தோன்றும். ஆனால் இப்படத்தில் தோன்றுவதோ எளிய மக்கள்; ஒப்பனை இல்லாத மக்கள்; கறுத்த மக்கள்; நடிக்கத் தெரியாத மக்கள். மூட்டை தூக்கும் தொழிலாளியாகட்டும்,கிராம பெரியவராகட்டும்,கங்காணியாகட்டும், நண்பனாகட்டும்; அனைவரும் ‘வெள்ளந்தியாக’ வந்து செல்லுகிறார்கள். படத்தில் வில்லன் என்று யாரையும் சொல்ல முடியுமா? இந்தச் சமுதாயத்தில் உள்ள விதிகளுக்கு உட்பட்டுதானே லோகுவும் உரம்,விதை, பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை செய்கிறார்? இதில் அவரை மட்டும் குறை சொல்ல காரணம் என்ன? லோகுவை போன்ற ஒருவனை இந்தச் சமுதாயத்தில் நாம் சமூக அந்தஸ்து உள்ள மனிதராக பார்ப்பது இல்லையா?
மொத்தத்தில் இந்தக் கதை அழகாக நகர்கிறது.”மனதிற்குள் ஏனோ ஓராயிரம் எடைகளை சுமக்கும் ஒரு உணர்வைத் தருகிறது” என்று எழுத்தாளர் நந்தன் ஸ்ரீதரன் கூறுவது உண்மைதான்.
அந்த ‘சாக்கோ’ தோழர் அற்புதமான பாத்திரம். இப்படத்தின் கதாநாயகன் அவராக கூட இருக்கலாம். மலையாளத்தில் இடுக்கி. மலைப்பகுதிகளில் தோட்ட தொழிலாளிகளோடு அன்றாடம் புழங்கும் சாக்கோ ஒரு அற்புதமான தோழன். அவன் தன் கைப்பையை எப்போது கீழே வைப்பான்? மக்களின் நலனே அவனுக்கு முக்கியம். அதனால்தான் கட்சியில் இருக்கிறான். கட்சித் தலைமை நெறி பிறழும்போது அமைதியாக இருக்க வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை. எதிர்க்கக் கூடியஆன்ம பலம் அவனுக்கு இருக்கிறது. இவனைப் போன்றவர்களால்தான் கட்சி இருக்கிறது. கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் அட்டை வைத்து இருக்கும் தோழர்களுக்கு இந்தப் பாத்திரம் மேலும் விரிந்த பொருளைத் தருமோ என்னமோ? இதனை மையமாக வைத்து ஒரு தனியான விவாதமே நடத்தலாம்.
கதாநாயகன் ரங்கசாமிக்கு நிலம் வாங்க வேண்டும். இதுதான் அவனுடைய ஆகப் பெரிய இலட்சியம். இந்த ஆசைதான் அவனை இயக்குகிறது.இது ஒரு எளிய மனிதனின் சாதாரண கனவு. அவன் மனைவி அவனோடு ஒத்திசைவாக வருகிறாள். நல்ல தேர்வு.
மலையில் இருக்கும் மக்களை நம் முன்னே காட்சிப்படுத்தி இருக்கிறார்.அதில் வரும் ஒவ்வொரு பாத்திரங்களும் முழுமை பெற்றவை.அவர்களின் ஒவ்வொரு வசனங்களும்,செய்கைகளும் விரிந்த பொருளைத் தருவன. மலையாளி , தமிழன் என்ற வேறுபாடு வேண்டாம்; இந்து- முஸ்லிம் ஒற்றுமை என்பதெல்லாம் போகிற போக்கில் வருகிறது. இப்படத்தின் கதை,திரைக்கதை,இயக்கத்தை லெனின் பாரதி செய்துள்ளார். இந்தப் படம் பார்த்து முடிக்கையில் லெனின் பாரதியின் அனுபவம் என்ன? வயது என்ன? அவர் எத்தனை மாதங்கள் இதனை மனதில் சுமந்தார் என்று கேட்கத் தோன்றுகிறது. அவரை நினைக்கையில் பெருமிதமாக இருக்கிறது.இந்தப் படத்தை எடுத்தால் போட்ட பணம் திரும்பி வருமா என்ற நினைப்பு இல்லாமல் இதனை தயாரித்த விஜய்சேதுபதிக்கும் வாழ்த்துகள்.
சமூக வலைத் தளங்களால் இந்தப் படம் வெற்றி அடைந்து வருகிறது.
பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர். சினிமா, இலக்கியம் குறித்து எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.