ராதிகா சுதாகர்
இவர்கள் எல்லாம் இந்தியாவிற்கு ஆபத்தானவர்களா என்ற தலைப்பிட்டு கைதானவர்கள் சிலரின் படங்கள் தமிழ் சமூக வெளியில் பகிரப்பட்டு வருகின்றன. அதில் ஆச்சரியம் என்னவென்றால் தமிழகத்தில் கடுமையான UAPA சட்டத்தால் சமீபத்தில் கைதான திருமுருகன் காந்தியின் படம் இல்லை. கேள்வி அரசாங்கம் இடதுசாரிகளை மட்டுமா நசுக்குகிறது? திருமுருகனுக்காக வேறு ஒரு இயக்கம் நடத்துபவர் போராட வேண்டும் என்றெல்லாம் கேட்கவில்லை. தகவலாக பதியும் ஒன்றில் பெயர் கூட கொடுக்க கூடாது என்று இருப்பது நேர்மை கிடையாது. திருமுருகன் மட்டும் அல்ல நந்தினி, முகிலன் என இன்னும் சிலரும் இருக்கிறார்கள். இவர்களில் திருமுருகன் மீது UAPA சட்டம் பாய்ந்தது என்பது பெரிய அநியாயம். தமிழ் வெளியில் அதை தட்டி கேட்க இந்தியத்தின் முகத்திரை கிழிக்க செய்தியாக கூட பகிர மாட்டேன் என்று சொல்வது நேர்மை கிடையாது. மேலும் தலைப்பே இந்தியாவிற்கு எதிராக போராடாதீர்கள் என்று சொல்கிறது! அப்படி போராடுவது என்ன குற்றமா என்பது தார்மீக கேள்வி?
பகிர்ந்த தோழர் ஒருவரின் பக்கத்தில் பின்னூட்டம் இட்டதை இங்கேயும் பதிகிறேன், ஆற்றாமையினால்.
சிக்கல் என்ன தெரியுமா தோழர் எப்பொழுதும். இந்த (பட) வரிசையில் திருமுருகன் காந்தி பெயர் இல்லாதது. தில்லி சேனல்கள் திருமுருகனை கூவியிருந்தால் நாம் கூவலாம் என்ற மனநிலையா இது? தமிழக பிரச்சனைகள், ஆட்களை பின்னுக்கு தள்ளிவிட்டு பன்னாட்டு பிரச்சனைகளை மட்டும் பேசுவது. உள்நாட்டில் நடக்கும் அடக்குமுறைகளை சிறு மோதல் நிலைக்கு சுருக்கி வெளிநாடுகளில் பெரும் பிரச்சனை பற்றி மட்டும் பேசவைத்து மக்களை உள்நாட்டு பிரச்சனைகளுக்கு போராடாமல் வைத்திருக்கவே உதவும். நியாயமான போராட்டங்களில் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தாது மட்டுமல்ல சிதைக்கும், மக்களுக்கு ஆபத்தை உணர்த்தாது. மேலே கொடுத்த படம் என்ன செய்தி சொல்கிறது? தமிழகத்தில் பிரச்சனையே இல்லை என்பதைத்தானே. இதைத்தான் தமிழகத்தில் இயங்கும் ஆங்கில மற்றும் பார்ப்பன தமிழ் ஊடகங்கள் செய்துக்கொண்டிருக்கின்றன. மேலே கொடுத்த படமும் இப்படி ஒரு பிம்பத்தை மக்களுக்கு வெளிச்சம் போட்டு வேறு காட்டுகிறது.
மேலே போட்டு உள்ள படங்களில் தமிழகத்தில் UAPA சட்டத்தில் அநியாயமாக கைதாகியிருக்கும் திருமுருகன் காந்தியின் படம் இல்லாமல் இருப்பது எப்படி நியாயமாகும்? தமிழகத்தில் தானே இயங்குகிறீர்கள்? UAPA தீவிர அடக்குமுறை இல்லையா? இடதுசாரிகளுக்கு/ இடதுசாரிகள் ஆதரவாளர்களுக்கு அல்லது தமிழகத்தில் இல்லாதோருக்கு மட்டுமே எங்கள் ஆதரவு என்ற நோக்கம் என்றால் உள்ளூர்காரருடன் பழகுவதிலேயே அர்த்தமில்லை. எப்படியும் உள்ளூர்காரன் கண்டுகொள்ள போவதில்லை. உங்கள் கட்சியின் அறிவித்த அல்லது அறிவிக்கப்படாத கொள்கை இப்படி என்றால் வெளிநபர்கள் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ஆதரவு சக்திகள் விமர்சனம் செய்துவிட்டு நண்பர்களிடம் வருத்தம் தெரிவித்து தனித்து வேலையை பார்க்க நகரலாம். இடதுசாரிகளின் இந்த மனநிலை தெரிந்து தான் ப.ச.க. தமிழகத்தில் விளையாடுகிறது, இந்த மனநிலையைத்தான் ப.ச.க. விரும்புகிறது என்று சொல்வதைத்தவிர வேறொன்றும் சொல்வதற்கு இல்லை. இவ்வளவு பாரிய சிக்கலில் தனித்தனியாக போராடுவோம். நான் மே பதினேழு இயக்க உறுப்பினர் அல்ல.
ராதிகா சுதாகர், பத்திரிகையாளர்.