பெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்

கிளாடியா ஜோன்ஸ்

வாக்குரிமைக்கான போராட்டத்தோடு, இடதுசாரிகள் புதிய பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.   பெண்களுக்கான  புதிய நிலையை பெற்றுத்தர புதிய இலக்குடன் போராடவேண்டியுள்ளது. *ஃபாஸ்டரின் சிறப்பு மிக்க பங்களிப்பில் இப்படி சொல்லப்பட்டுள்ளது :

ஆணாதிக்க அடக்குமுறையிலிருந்து பெண்ணை விடுவிக்கும் போராட்டத்தை முன்னெடுப்பதில் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்களிப்பு முதன்மையானது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியும் மார்ஸிய லெனினிய கட்சியும் 30-ஆம் ஆண்டை கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பெருமை மிகு பங்களிப்பாக இதை செய்திருக்கிறது. 

மார்க்ஸிய-லெனினியம் *பெண்ணின் கேள்வி குறித்தான குவிமையத்தை அம்பலப்படுத்துகிறது. சமூகத்தில் பெண்களின் நிலை, எப்போதும் எங்கேயும் சமமாக இருப்பதில்லை என்பதை இது காட்டுகிறது. ஆனால், உற்பத்தி என்பதன் மூலம் சமூகம் பெண்களின் தொடர்பை பெற்றுக்கொள்கிறது.

முதலாளித்துவத்தின் கீழ்,  முதலாளித்துவ வர்க்கத்தால் தொழிலாளர் வர்க்கம் சுரண்டப்படுவதிலிருந்து பெண்களின் சமத்துவமின்மை கிளைத்தெழுகிறது. ஆனால், பெண்களை சுரண்டுவதில் வர்க்க வேறுபாடுகள் இருப்பதில்லை; அனைத்து பெண்களையும் இது பாதிக்கிறது. ஆண்களைக் கடந்த பொருளாதார சார்பை பெண்கள் பெறுவது என்கிற கேள்வியை  சிறப்புமிக்க கேள்விகளாக பார்க்கிறது மார்க்ஸிய-லெனினியம்.  பெண்களை பாலியில் ரீதியாக சுரண்டுவதாகவும் நவீன முதலாளித்துவ குடும்பத்தில் தன்னை முதலாளியாகக் கருதிக்கொள்ளும் ஆணின் பணியாளாக, குடும்பத்தில் பெண்களை இந்த பொருளாதார சார்பு இருத்தி வைக்கிறது என ஏங்கல்ஸ் நூறாண்டுகளுக்கு முன்பே எழுதினார்.

எனவே, மார்க்ஸிய லெனினிஸ்டுகளின் போராட்டம்  கடுமையான வீட்டுப் பணிகளிலிருந்து பெண்களை விடுவிக்கவே. அவர்கள் எல்லா திசைகளிலிருந்து பெண்களுக்கான சம உரிமைக்காக போராடுகிறார்கள். பெண்களின் முக்கியமான பிரச்னைகள், தேவைகள்,  நம்பிக்கைகளை எடுத்து பேசாதவரை முற்போக்கு செயல்பாடுகளில் பெண்களை பங்கேற்க வைக்க முடியாது என்பதை அவர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்பாடு மற்றும் நடைமுறை கடந்த முப்பதாண்டுகளாக  இந்த அடிப்படை கொள்கையே நிர்வகித்து வந்திருக்கிறது. இதன் விளைவாக எங்கள் கட்சி  பெண்களின் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்து பெருமைமிகு அறைகூவல் செய்திருக்கிறது. முப்பதுகளில் அமெரிக்காவில் காணப்பட்ட பெண்களின் நிலையை பகுத்தாய்ந்து எழுதிய மார்க்ஸியர்களின் எழுத்தால் அமெரிக்க இலக்கியம் மெருகூட்டப்பட்டிருக்கிறது.  வாக்குரிமைக்கான போராட்டம், *நீக்ரோ மக்களின் உரிமைகளுக்கான போராட்டம், உழைக்கும் மக்களுக்கான விடுதலை பிரகடனத்தை முன்னெடுத்த, தனித்திறன் வாய்ந்த கம்யூனிஸ பெண்களான எலா ரீவ் ப்ளோர் (Ella Reeve Bloor) மற்றும் அனிடா விட்னி(Anita Whitney) போன்றோரின் பங்களிப்பு முக்கியமானது.

எங்களுடைய கட்சியும் அதன் தலைமையும் தொழிற்சங்கங்களில் உள்ள பெண்களை ஒருங்கிணைக்க ஊக்கப்படுத்தியது. தொழிலாளர்களின் மனைவிகளை இயக்கப்படுத்தவும் உதவியது. வீட்டுப் பெண்களின்(housewives’ councils) மன்றங்களை உருவாக்கி, அதிக செலவினங்களை உறுஞ்சும் வாழ்நிலைக்கு எதிராக போராட வைத்தார்கள். புறக்கணிப்பு உள்ளிட்ட போர்க்குணமிக்க நடவடிக்கைகளால்  எப்படி குடும்பத்தின் தேவையைப் பெறுவது என்பதைக் கற்றுத்தந்தார்கள். தங்கள் வர்க்கத்தின் அதாவது உழைக்கும் வர்க்கத்தின் நம்பிக்கைகளாலும் லட்சியங்களாலும் ஈர்க்கப்பட்ட பெண்களை, இடதுசாரி பெண் தலைவர்கள் அனைத்து மட்டங்களிலும் பயிற்சி கொடுத்து, உருவாக்கினார்கள்.

உழைக்கும் வர்க்க பெண்களை அமைப்பாக்கி போராட வைத்த முன்னோடியாக, எங்களுடைய கட்சிதான் முதன்முறையாக வெள்ளை இன பெண்களுக்கும் உழைக்கும் வர்க்கத்துக்கும் மூன்று அடுக்குகளால் ஒடுக்கப்பட்ட நீக்ரோ பெண்களின் நிலை, அனைத்து பெண்களின் அழுத்தத்தையும் காட்டக்கூடியது என்பதை உணர்த்தியது. மேலும், இந்த போராட்டமானது நீக்ரோ பெண்களின் முழு பொருளாதார, அரசியல், சமூக சமத்துக்கானதாகவும் இது வெள்ளை தொழிலாளர்களின் சுய ஆர்வத்தாலும், அனைத்து பெண்களுக்கான சமத்துவத்தை உணர்ந்து செயல்படும் பரந்த ஆர்வத்தாலும் சாத்தியமாகக்கூடியது என்பதை கட்சி உணர்த்தியது.

ஆனால், இது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்த வில்லியம் இஸட். ஃபாஸ்டரின் பங்களிப்புக்காக காத்திருந்தது. *பெண்ணின் கேள்வி குறித்து அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் சிந்தனையை கூர்மைப்படுத்த வேண்டியிருந்தது. உழைக்கும் வர்க்கத்துக்கும் அதனை பாதுகாக்கும் கட்சிக்கும்  பெண்களின் சமத்துவத்துக்காகவும் ஆண் மேலாதிக்கத்தால் வளர்க்கப்பட்ட உழைக்கும் வர்க்க ஆண்களின் பெண்களுக்கு எதிரான பாரபட்சங்களைக் களையவும் வேண்டியுள்ளதை தோழர் ஃபாஸ்டர் உணர்ந்திருந்தார். இது உழைக்கும் வர்க்கத்துக்கு அடிப்படை தேவையாகவும் கருதி முக்கியத்துவம் கொடுத்தார்.

ஃபாஸ்டரின் பங்களிப்பின் சாரம் என்னவென்றால்,  ஏகாதிபத்திய யுத்தத்திற்கும் பாசிசத்திற்கும் எதிரான அனைத்துப் போராட்டத்திற்கும் வெகுஜென அமெரிக்கப் பெண்களின் ஆதரவைப் பெறுவது அவசியம். அவர்களது பிரச்சினைகளை தனி கவனம் செலுத்துவதன் மூலமும், அவர்களின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக தேவைகளுக்கு சிறப்பு போராட்டங்களை வளர்ப்பதன் மூலமும் இந்தப் பெண்களை வென்றெடுக்க வேண்டும்.

மார்க்ஸிய-லெனினிய கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, பெண்களின் சமத்துவமின்மை தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதுடன் இயல்பாகவே தொடர்புடையது என்பதனை உணர்ந்து, ஃபாஸ்டர் கட்சிக்கும்  தொழிலாளர் வர்க்கத்துக்கும் அழைப்பு விடுத்தார். பெண்ணின் கேள்வி மீதான மார்க்ஸிய-லெனினிய தத்துவத்தை மேம்படுத்தவும், இந்தக் கேள்வியின் மீதான நடைமுறை பணிகளை ஆராயவும், முந்தைய தவறுகள், குறைகளை களையவும் அவர்களைப் பணித்தார்.

அமெரிக்காவின் ஒவ்வொரு வெளியிலும் பெண்களின் நிலைப் பற்றி அமெரிக்க ஏகாதிபத்தியம் போட்டிருந்த முகமூடியை தகர்த்தெறிந்தது ஃபாஸ்டரின் தனித்துவமான பங்களிப்பாகும். அமெரிக்க பெண்களுக்கு அனைத்து சம உரிமைகளும் கிடைத்துவிட்டன், இனி எதற்காகவும் போராட வேண்டியதில்லை என்கிற முதாளித்துவ பொய்யை தோழர் ஃபாஸ்டர் வெளிக்கொண்டுவந்தார். கருத்தியல் ரீதியிலான பிரச்சாரத்தை முன்னெடுத்த பிரச்சாரகர்கள், பெண்களின் ‘தாழ்வுமனப்பான்மை’ குறித்து தவறான தகவல்களைப் பரப்பினர். சமூகத்துக்கு எதிரான பெண்கள் குறித்த அவர்களுடைய வாதங்கள், போலி அறிவியல் யூகங்களாக இருந்தன. குறிப்பாக உயிரியல் சார்த்து போலி வாதங்களை பரப்பினர். இதை ஃபாஸ்டர் முன்வைத்தார்.

ஆண் மேன்மையை வெளிப்படுத்தும் பிரச்சாரத்துக்கு எதிராக தொடர்ச்சியான கருத்தியல் போராட்டம் தேவை எவ்வித தடங்களும் இன்றி நடைபெற வேண்டும். அப்போதுதான் அதை அழிக்க முடியும். பெண்களைப் பற்றிய தவறான கருத்துகளை பரப்ப முதலாளித்துவ சிந்தனையாளர்களால் உயிரியல் தவறாக பயன்படுத்தப்படும் போது, இடதுசாரிகளும் முற்போக்குகளும் உறுதியுடன் உயிரியல் அறிவியலை கற்க வேண்டும். முதலாளித்துவ கருத்துக்களையும் ஆண் மேலாத்திக்க நடைமுறையையும் முறியடிக்க நம்முடைய கோட்பாட்டு ரீதியிலான போராட்டத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

வால் ஸ்ட்ரீட்டில் ஒரு போராட்டத்தின் போது கிளாடியா ஜோன்ஸ்…

அதன்படி, பெண்ணின் கேள்வி மீதான மார்க்ஸிய -லெனினிய அணுகுமுறையை ஆழ்ந்து புரிந்துகொண்டு, கற்கும் பொருட்டு ‘பெண்களுக்கிடையே பணி குறித்தான கோட்பாட்டு அம்சங்கள்’ (Theoretical Aspects of Work among Women) என்ற சிறப்பு குழுவை கட்சி அமைத்தது.

பெண்ணின் கேள்வி கோட்பாட்டின் மீதிருந்த பெரும் தாகத்தை பிரதிபலிக்கும் வகையில் இடதுசாரிகளும் முற்போக்குகளும் ஒரு நாள் கருத்தரங்கில் பங்கேற்றனர். மார்க்ஸியமும் பெண்ணின் கேள்வியும் என்ற பெயரில் ஜெஃபர்சன் சமூக அறிவியல் பள்ளியில் இந்த ஆண்டு ஜூனில் இந்த கருத்தரங்கை நடத்தினோம். 600க்கும் அதிகமான பெண்கள், ஆண்கள் இதில் பங்கேற்றனர்.  பெண்களிடையே செய்யவேண்டிய வெகுஜென பணிக்காக பெண்களை எப்படி தயார்படுத்த வேண்டும் எனவும் பெண்ணின் கேள்விக்கு இடதுசாரி ஆண்களை பயிற்றுவிக்கவும் கட்சியின் பல்வேறு அமைப்பினர் பணியாற்றினர்.

தற்போது கட்சியின் சார்பில் 10 பெண்கள் குழுக்கள் உள்ளன. கட்சியின் மாவட்ட தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இவை செயல்படுகின்றன. கட்சியிலுள்ள பெண்களிடையே பணியாற்றவும், வெகுஜென அமைப்புகளிலும் இவர்கள் கவனம் செலுத்துவார்கள். 30-ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் நமது கட்சியினரின் முழு கவனத்தையும் இந்தக் கேள்வியின் மீது திருப்புவது மிகவும் அவசியம்.

இது அவசியம், முதலாவதாக… வெகுஜென பெண்களின் அணிதிரட்டல் இல்லாமல், குறிப்பாக உழைக்கும் வர்க்கமும் நீக்ரோ பெண்களும் இல்லாமல் மூன்றாம் உலகப் போரில் அமைதிக்காகப் போராடுவது சாத்தியமில்லை. அட்லாண்டிக் உடன்படிக்கை மற்றும் ஆயுத பயன்பாட்டு ஒப்பந்தங்களைக் கண்டு அமெரிக்க பெண்களும் அவர்களுடைய அமைப்புகளும் பயம் கொண்டிருக்கிறார்கள். இதை வெளிப்படுத்தி வெவ்வேறு வழிகளில் அவர்கள் குறிப்புகளை கொடுத்திருக்கிறார்கள்.

இந்த புரிந்துணர்வு அவசியம். இரண்டாவதாக…அமெரிக்க மக்களின் சிவில் உரிமைகளுக்கு எதிராக வளர்ந்து வரும் பிற்போக்குத்தனமான தாக்குதல் காரணமாக, எமது கட்சியின் 12 தலைவர்களுக்கு எதிராக நடந்துவரும் குற்றச்சாட்டு மற்றும் விசாரணையில் உள்ளவர்கள் பெரும்பாலும் பெண்கள்.

இறுதியாக, இந்த புரிந்துணர்வு அவசியமானது ஏனெனில் வெகுஜென பெண்களிடையே வேறூன்றாதவரையில், முற்போக்கு பெண்களின் இயக்கங்களை கட்டியெழுப்பாத வரையில் (உதாரணத்துக்கு அமெரிக்க பெண்கள் காங்கிரஸ், முற்போக்கு கட்சியின் பெண்கள் பிரிவு, நீக்ரோ பெண்களின் அமைப்பு போன்றவையும்) பெண்களின் சிறப்பு கோரிக்கைக்கான போராட்டத்தை முன்னெடுக்காத வரையில், ரோமன் கத்தோலிக்க எதேச்சதிகாரத்தின் பிற்போக்குத்தனமான தாக்கங்களிலிருந்தும் முதலாளித்துவ கருத்தாளர்களிடமிருந்தும் பெண்களை காப்பாற்ற முடியாது.

பெண்ணின் கேள்வி குறித்தான கோட்பாட்டில் நிபுணத்துவம் பெற்று, அமெரிக்க வெகுஜென பெண்களை திரட்டி, உழைக்கும் வர்க்க பெண்களின் அடிப்படையான பிரச்சினைகளிலும் தேவைகளிலும் கவனம் செலுத்துவோம். அமெரிக்க பெண்களின் புதிய அந்தஸ்துக்காக நமது கட்சி உறுதுணையுடன் இருக்கும்.

அதை சாதிக்க, முதலாளித்துவ போரிலும் பாசிசத்துக்கு எதிராகவும் நாம் கடுமையாக போராடி பெண்களை வென்றெடுக்க வேண்டும்.  டிமிட்ரோ(Georgi Dimitrov)பின் வார்த்தைகளில் சொல்வதானால், “பாசிசத்துக்கு எதிரான ஐக்கிய முன்னணி’ என்ற அறிக்கையில்…

பாசிசம் இளைய சமூகத்திடமிருந்து வெளிப்படும்போது,  இரக்கமற்ற தன்மையுடனும் வெறுப்புணர்வுடனும் பெண்களை அடிமைப்படுத்துகிறது. தாயாகவும், மனைவியாகவும் ஒற்றை உழைக்கும் பெண்ணாகவும் நிச்சயமற்ற எதிர்காலத்துடன் அது பெண்களை அடிமைப்படுத்துகிறது. தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்வதன் மூலம் பாசிசம், பட்டினியால் வாடும் ஒரு குடும்பத்துக்கு பிச்சைக்காரர்களுக்கு வீசியெறியும் வீணாய்போன பொருளைப் போல முன்னெப்போதும் இல்லாத அடிமைத்தனத்தில் சிக்குண்டிருக்கும் பெண்களிடைய கசப்புணர்வை தூண்டிவிடுகிறது.

ஐக்கிய தொழிலாள வர்க்க முன்னணியாகவும் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியாகவும் பெண்கள் தொழிலாளர்களுக்காக நாம் தோளோடு தோள் நின்று அவர்களுடைய உழைக்கும் வர்க்க சகோதரர்களுடன் இணைந்து நாம் போராட வேண்டும்.

*லிப்ஜிக்(Leipzig)கின் பாசிச எதிர்ப்பு நாயகனின் நினைவுகளோடு, முழுமையான பெண்களின் சமத்துவத்துக்காக நாம் அர்ப்பணித்து போராடுவோம் வாருங்கள்.

கருப்பின பெண்ணியவாதியும் இடதுசாரியுமான கிளாடியா ஜோன்ஸ் (1915-1964) எழுதிய We Seek Full Equality for Women (1949) என்ற கட்டுரையின் தமிழாக்கம். 

அடிக்குறிப்புகள்:

* William Z. Foster- 1945 முதல் 1957 வரைஅமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தவர். 

*பெண்ணின் கேள்வி – The woman question 1450களில் ஃபிரான்சிஸ் குடும்பம் முறைகளில் சீர்திருத்தம் நடந்ததபோது, பெண்ணை அடிமைப்படுத்துவது யார் என்கிற கேள்வி எழுந்து விவாதமானது. பின், ஐரோப்பிய வரலாற்றின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெண்களின் உரிமைகளுக்கான பிரச்சினைகளின் போது ‘பெண்ணின் கேள்வி’ என்கிற பதம் பயன்படுத்தப்பட்டது. விக்டோரிய யுகத்தில், தொழிற்சாலைகளில் பெண்கள் பணிபுரிய கிளம்பினார்கள். அவர்களின் உரிமை குறித்து உரிமை போராட்டம் நடந்தபோது ‘பெண்ணின் கேள்வி’ புத்துயிர் பெற்றது. 

* கருப்பின பெண்களைக் குறிக்க ‘நீக்ரோ ’என்ற பதம் 1966-ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்டது.

*லிப்ஜிக் – 1933-ஆம் ஆண்டு ஜெர்மன் அதிபராக அடாஃல்ப் ஹிட்லர் பதவியேற்ற பின் பிப்ரவரி 27-ஆம் தேதி, பெர்லினில் உள்ள  Reichstag கட்டடம் தீவைத்து எரிக்கப்பட்டது. இதை கம்யூனிஸ்டுகள் செய்தார்கள். இந்த வழக்கில் டிமிட்ரோவ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு லிப்ஜிக் வழக்கு என்ற பெயரில் ஐரோப்பா முழுவதும் கூர்ந்து நோக்கப்பட்டது. இந்த வழக்கில் விடுதலையான டிமிட்ரோவின் வாதங்களை புகழ்ந்து எழுதின ஐரோப்பிய பத்திரிகைகள்.

தமிழாக்கம்: மு. வி. நந்தினி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.