“மூன்றாம் உலக நாடுகளிலிருந்து வருகிற ஒரு மனிதனுக்கு கதைகள் எழுத மன அமைதி எப்படி கிடைக்கும்? அதிருஷ்டவசமாக கலை தாரளமாகவும் கருணையோடும் இருக்கிறது. பிரச்சனைகளற்ற சந்தோசங்களை மட்டும் கலை ஆகர்ஷிப்பதில்லை, துன்பத்தில் உழல்பவர்களை அது நிராகரித்து ஒதுக்குவதுமில்லை. அவரவர் நெஞ்சிற்குள் பொங்கும் உணர்வுகளை அவர்களுக்கே உரித்தானதொரு தனிமுறையில் வெளிப்படுத்திக் கொள்ள கலை அனுமதிக்கிறது.”
– தனது நோபல் பரிசு ஏற்புரையில் ‘நாகிப் மாஃபஸ்.
கதைகளை கேட்பதைப் போல் வாசிப்பதைப் போல் எழுதுவதும் மகத்தான ஆறுதலைத் தருவதால்தான் எழுத்தின் மீதான வசீகரமும் மயக்கமும் குறையாமல் இருக்கிறது. ‘கதை சொல் அல்லது செத்து மடி’ என அரேபிய இரவுகளில் வேதாளம் கேட்பதுபோல் யாரேனும் நம் தலையை உலுக்கிக் கொண்டே இருந்தால் அதை ஆசிர்வாதமென்பேன். கதைகள் ஒரு சமூகத்தின் அகவுலகிற்குள் நுழைந்து பார்க்க உதவும் கதவுகள். அதனால்தான் வாழ்வின் மூலம் நாம் கண்டடையும் உண்மைகளை விடவும் எழுத்தின் வழி கண்டடையும் உண்மைகள் காலம் கடந்து நிற்கின்றன. இங்கே எல்லாம் சரியாய் இருக்கிறதென்கிற மாயைகளை, அன்பின் வழியாகத்தான் உலகம் இயங்குகிறதென்கிற பொய் நம்பிக்கைகளை உடைத்து துரோகமும், சூதும் தான் மனித பரிணாம வளர்ச்சியின் ஆதாரம் என்பதை ஜப்பானின் ஆதி காவியமான கெஞ்சிக் கதை துவங்கி இலியட், மஹாபாரதமென எல்லா பெருங் காவியங்களும் குறுங்காவியங்களும் வலியுறுத்துகின்றன. நமக்குள்ளிருக்கும் சக மனிதர்களின் மீதான வெறுப்பை வெளிப்படையாக பகிர்ந்துகொள்வதில் இருக்கும் தயக்கம் தான் காலம் முழுக்க வெறுப்பை சுமந்து கொண்டு அலைய காரணமாகிவிடுகிறது. அன்பைப் போலவே வெறுப்பையும் வெளிப்படுத்திதான் ஆக வேண்டும், அதன் பொருட்டு நாம் எத்தனை இழிவானவர்களாய்ப் பார்க்கப்பட்டாலும்.
எல்லோரையும் நேசிக்கச் சொல்லித்தான் கற்றுக் கொடுக்கிறார்கள். நம்மால் அப்படி இருக்க முடிவதில்லை என்பதுதான் வெறுப்பின் தனித்துவம்.
வெறுப்பின் சுவையைக் கதையாகச் சொல்ல வேண்டுமென உள்ளூர நீண்டகாலமாய் முயற்சித்ததுண்டு. முன்பு சில கதைகளில் கையாண்டபோது அது முழுமையைக் கொடுத்திருக்கவில்லை.அந்த வெறுப்பு மனதின் ஆழத்திலிருந்து எழுதப்பட்டதாய் இல்லாமல் மேலோட்டமாக இருந்ததால் முழுமையாக ஒரு நாவலை எழுதும் எண்ணம் வந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பு நண்பர் செந்திலுடன் திருவணந்தபுரத்திலிருந்து கண்ணூர் வரையிலான நீண்ட சாலைப் பயணத்தில் இந்த கதைக்கான முழு வடிவமும் சற்றேறக்குறைய தயாராகி இருந்தது. ஆனால் உடனடியாக எழுதுவதற்கு தயக்கம். அன்பின் கதையை வாசித்து கண்ணீர் மல்க நாள் தவறாமல் தன் ஆதர்ஷ எழுத்தாளர்களுக்கு கடிதம் எழுதி, அது மட்டுமே இலக்கியமென கிலேசமடையும் ஒரு சமூகம் வெறுப்பை எழுதுகிறவனை என்னவாய்ப் பார்க்கும்? இதற்குப் பின்னாலிருக்கும் நியாயங்களுக்கு அவர்கள் உடன்படுவார்களா? இப்படி ஏராளமான குழப்பங்கள். அருவருப்பும் வெறுப்பும் நீங்கள் நம்பும் அன்பைப் போலவே அசாத்தியமான நிஜம், தவிர்க்க முடியாத சுவை என்பதை உரக்க சொல்லவேனும் இதை எழுத வேண்டுமென்கிற உறுதியோடுதான் துவங்கினேன்.
ஒவ்வொரு நாவலும் வாசிக்கிறவர்களுக்கு கற்றுத்தருவதைவிட எழுதுகிறவர்களுக்கு கற்றுத்தருவது ஏராளம். இந்த நாவல் அனேகம் கற்றுக் கொடுத்ததோடல்லாமல் மனதளவிலும் சில மாற்றங்களைத் தந்திருக்கிறது. உள்ளிருந்த வெறுப்பை எல்லாம் கொட்டித் தீர்த்தபின் இப்பொழுது மனம் இலகுவாகியிருக்கிறது. கொமோரா வெறுப்பைத்தான் பேசுகிறது. உங்களுக்கு உடன்பாடில்லாமல் போகலாம், நீங்கள் இதை வெறுக்கலாம். ஆனால் இந்த உண்மைகளை நீங்கள் ஒவ்வொரு நாளும் கடந்து போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்பதை மட்டும் புரிந்து கொண்டால் போதும்.
சிக்கலான கடந்த காலங்களில் இருந்து இலக்கியம் எத்தனை லாவகமாய் காப்பாற்றி வந்திருக்கிறதெனப் புரிந்து கொண்டு வாசிக்கக் கற்றுக் கொடுத்த எல்லோரையும் இந்த நேரத்தில் நன்றியோடு நினைத்துப் பார்த்துக் கொள்கிறேன். நண்பர்கள், பகைவர்கள், உறவினர் எல்லாமே இலக்கியம் சார்ந்தவர்களாக மட்டுமே மாறிப்போன சூழலில் தப்பித்துச் செல்ல விரும்பினாலும் இந்த பிணைப்பு விடுவதில்லை. ஒரு புதிய கதையை எழுதச் சொல்லி நண்பர்கள் கேட்கிற நேரங்களில் எல்லாம் தயக்கத்திற்குப் பதிலாக உற்சாகம் வந்துவிடுகிறது. எத்தனை வேலைகள் இருந்தாலும் தவிர்த்துவிட்டு மீண்டும் மீண்டும் எழுத்தின் பக்கமாய் ஓடிவந்துவிடுவது என்னளவில் எனக்கு ஆரோக்கியமான விளையாட்டு.
இந்த நாவல் எழுதின காலகட்டங்களில் பயணங்கள் வழியாய் அறிமுகமான ஏராளமான நண்பர்களுக்கு எனது அன்பு. கம்போடிய பயணத்தை சாத்தியப்படுத்திக் கொடுத்ததில் தோழர் மணிமொழிக்கு பெரும் பங்கு உண்டு. புதிய உரையாடல்களையும் புரிதல்களையும் உருவாக்கியதில் இலங்கையைச் சேர்ந்த நண்பர்கள் இம்தாத், ஃபர்ஹான், கருணாகரன் இவர்களோடு இன்னும் சிலருக்கு முக்கியமான பங்குண்டு. இந்த நாவல் பயணங்களாலும், பயணங்களில் சந்தித்த மனிதர்களாலும் மட்டுமே முழுமையடைந்தது. பயணங்களின் போது பொருளாதார ரீதியிலும், உபசரித்தும் உதவிய அத்தனை நண்பர்களுக்கும் நன்றி. உப்புநாய்கள் நாவல் எழுதும் போது எழுத்தாளர் சோபா சக்தி தான் கொமோரா என்ற தலைப்பை முதலி பரிந்துரைத்தார், அப்போது அந்த நாவலுக்கு அது பொருந்தாமல் போனதால் வைக்க முடியவில்லை. கதை வந்த போதே தலைப்பையும் உடனடியாக முடிவு செய்துவிட்டேன். அந்த வகையில் அவருக்கு நன்றி. என் வேலை சார்ந்து, தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்து எப்போதும் அக்கறை கொண்டிருக்கும் நண்பர்களுக்கு அன்பும் முத்தங்களும். மற்றபடி இந்தக் கதையைத் தவிர இப்போதைக்கு உங்களுக்குச் சொல்ல என்னிடம் எதுவுமில்லை.
கொமோரா நாவலுக்கான முன்னுரை.
லஷ்மி சரவணகுமார்.
சென்னை.
9176891732