ஸ்ரீரசா

1977-ல் அதிமுக வேட்பாளர் ஐசரி வேலன் 28,416 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் 1991-ல் இங்கு 66,710 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட பி.கே.சேகர் பாபு 2001-ல் 74,888 வாக்குகளும், 2006-ல் 84,462 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றார். தற்போது திமுக துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் எஸ்.பி.சற்குணபாண்டி யன் 1989-ல் 54,216 வாக்குகளும், 1996-ல் 75,125 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2011 தேர்தலில் வெற்றிவேல் (அதிமுக) 83,777 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
டாக்டர் இராதாகிருஷ்ணன் நகரின் மொத்த வாக்காளர்களாகக் கடைசியாகத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விவரமானது
ஆண்கள் – 1,29,510
பெண்கள்- 1,35,609
மூன்றாம் பாலினத்தவர்- 109
மொத்தம்- 2,65,228
இவற்றில் வாக்களிக்கப் போவது சுமார் 60% என வைத்துக் கொண்டால் வாக்களிக்கும் வாக்காளர் எண்ணிக்கை – 159137 பேர்
65% என வைத்துக் கொண்டால் – 172398 பேர்
அதிகபட்சமாக 70% என்றால் -185659 பேர்
இவற்றில் பாதி என முடிவு செய்தால்
30% – 79568+1=79569
32,5% -86199 +1= 86120
35% – 92830 + 1 = 92831
ஆனால் 2015 -ல் நடந்த இடைத்தேர்தலில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 722 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். அதே போன்று மறுபடியும் நிற்கையில் 39 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றார்.
ஆனால் ஆர்.கே.நகரின் வெற்றி வாக்கு வரலாற்றைப் பார்க்கும் போது, ஜெயலலிதா போன்ற அசாதாரணர்கள் நிற்கும் நேரம் தவிர மற்ற காலங்களில் இத்தகைய 30 முதல் 35 சதம் வாக்குகளைப் பெறுபவர் வெற்றி பெறுவார் என்பதே இயல்பு வரலாறாக உள்ளது.
தோராயமாக 80000 பேர் என வைத்துக் கொண்டால், இன்றைய முதலாளித்துவ அரசியலின் கொள்ளையர்கள் இதனை எளிதான பணச்சூத்திரமாக மாற்றுகிறார்கள்.
சென்ற தேர்தலில் என்றால் 80000 X 4000 = 320000000 அதாவது ரூ.32 கோடியாக இருந்தது, இப்போது 80000 X 6000 = 480000000 அதாவது ரூ.48கோடியாக இருந்தது. மற்றும் இவற்றைப் பிரித்துக் கொடுக்கும் ஊழியர்களுக்கான செலவு. அதாவது பத்துப்பேருக்கு ஓர் ஆள் என வைத்துக் கொண்டாலும். 8000 பேருக்கான கூலி, போக்கு வரத்து,இத்தியாதி செலவுகள் எல்லாம் சேர்த்து வைத்தால் கூட சுமார் ரூ.2 கோடிக்குள் அடஙகி விடும். ஆக மொத்தம் ஒரு தொகுதிக்குத் தோராயமாக ரூ.50 கோடி (அதாவது இன்றைய நிலவரப்படி) செலவழித்தால் போதும் என நினைக்கிறார்கள்.
அதிகாரத்தை அடைந்த பின்பு அதனை எவ்வாறு பன்மடங்கு பெருக்கிக் கொள்வது என்பது போன்ற வித்தைகளை அவர்கள் நன்கு அறிவார்கள்.
இத்தகைய முதலாளித்துவ அரசியல் சூத்திரங்களினால்தான், இன்றைக்குப் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களில் சுமார் 50-60 பேர்கள் தவிர்த்து கிட்டத்தட்ட 500 பாராளுமன்ற உறுப்பினர்கள் ரூ.100 கோடி முதல் ஆயிரக்கணக்கான கோடிகளை உடைமைகளாக உள்ள மேற்பட்ட சொத்துக்கள் வைத்துள்ள பெருங் கோடீஸ்வரர்கள்…
இந்தியாவின் வர்க்க அரசியல் களம் இவ்வாறாகத்தான் உள்ளது.
வலுவான மக்கள் இயக்கங்களைக் கட்டமைக்காமல் அதாவது எண்ணிக்கையில் அதிகமாக மக்களைத் திரட்டுகிற வகையில், அவர்களை அரசியல் உணர்வுள்ளவர்களாக வென்றெடுக்கும் வரையில், வென்றெடுக்கும் வகையில் இடைவிடாத களப்பணியாற்றாத இடதுசாரி மற்றும் பிற மாற்று அரசியல் சார் இயக்கங்களால், இந்திய முதலாளித்துவத்தையும் அதன் வலதுசாரிப் போக்கையும் தடுத்து நிறுத்துவது இயலாத காரியம்தான்.
ஸ்ரீரசா, எழுத்தாளர்; ஓவியர். இவருடைய நூல் ‘அரசியல் சினிமா’ (காலம் வெளியீடு)