தமிழ் சினிமா உருப்பட சில வழிகள்: ஒரு இயக்குநர் சொல்கிறார்!

தனபால் பத்மநாபன்

கிருஷ்ணவேணி பஞ்சாலை’ பட ரிலீஸின்போது 103 MBA மாணவர்களைக் கொண்டு ஒரு ‘Massive Marketing Effort’ எடுத்தேன். அந்த முயற்சியில் இந்திய தபால்துறையும் 5 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு மகளிர் சுய உதவிக் குழுவும் இணைய உறுதி செய்தார்கள். தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 40 கல்லூரிகளில் இருந்து வந்திருந்த 103 MBA மாணவர்களுக்கு திரைத் துறையின் செயல்பாடுகளைப் பற்றி திரைத் துறையின் முக்கிய ஆளுமைகள் வகுப்பெடுத்தார்கள். ஆனால் அது ஒரு கனவு முயற்சியாக நின்று போனது. எங்களால் 4 வாரங்களுக்கு முன்னால் தமிழகத்தில் 100 தியேட்டர்களை உறுதி செய்ய முடிந்திருந்தால் அந்த முயற்சி வெற்றி பெற்றிருக்கும்.இன்றைய திரைத் தொடர்புகள் அன்று இருந்திருந்தால் ஒருவேளை அந்த முயற்சி ஒரு 20% சாத்தியமாகலாம்.

ஆனால் சில கசப்பான உண்மைகள் புரிய ஆரம்பித்தது. அரசாங்கத்தின் கதவுகளைக்கூடத் திறந்துவிடலாம். ஆனால் சினிமாவின் மதகுகள் சில முதலைகளால் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறது. இங்கிருக்கும் Eco System முற்றிலும் ஒரு Feudal மன நிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு சில மன்னர்களும் குறு நில மன்னர்களும் அவர்களை அடியொற்றிய சில அடிமைகளும் வாழும் இடம் இது. சினிமாவின் மொத்த ரத்தமும் அவர்களால் உறிஞ்சப்படுகிறது. மன்மோகன்சிங் புதிய பொருளாதாரத்தைத் திறந்துவிட்டு 27 வருடங்கள் ஆகியும் அதன் நிழல்கூட இந்தத் துறையைத் தீண்டவில்லை. அமிதாப் பச்சன் நிறுவனத்தில் இருந்து UTV வரை யாரும் இங்கே வெற்றி பெற முடியவில்லை. பன்னாட்டு வெளியீட்டு நிறுவனங்கள் கூட INOX, PVR, SATYAM போன்ற Corporate நிறுவனங்களை நம்பித்தான் வியாபாரம் செய்ய முடிகிறது. சில தவறான ஆளுமைகளின் ராஜ்ஜியத்தின் கீழ்தான் ஏறத்தாழ 20 வருடங்களாக தமிழ் சினிமா தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

அப்படி என்றால் நம்பிக்கை கொள்ள ஒன்றுமே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். இவர்களை எல்லாம் மீறி வியாபார நீதியுடன் இயங்கும் ஐந்து நிறுவனங்களையாவாது எனக்குத் தெரியும். அவர்களும் தினம் தினம் இந்த முதலைகளுடன் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். புதிய பாதைகளை இவர்கள் போராடி உருவாக்குவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். என்னைப் பொறுத்த வரையில் இரண்டே இரண்டு விஷயங்களை அரசாங்கம் உறுதியாக நடைமுறைப் படுத்தினால் மொத்த தமிழ் சினிமாவும் இந்த இருண்மையில் இருந்து மீண்டு எழும்.

1. தியேட்டர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டண முறையை உறுதியாக நடைமுறைப்படுத்தி வெளிப்படையான கணக்கு வழக்குகளைக் கொண்டு வர வேண்டும்.

2. தியேட்டர்களுக்கான லைசன்ஸிங் முறையை காலத்திற்கு ஏற்றவாறு மிகவும் எளிமைப்படுத்த வேண்டும். முக்கியமாக 50 இருக்கைகள், 100 இருக்கைகள் அரங்குகளுக்கு மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட லைசன்ஸிங் முறை வேண்டும்.

சுலபமாகத் தெரியும் இந்த இரண்டு விஷயங்களை மட்டும் நடைமுறைப்படுத்தினால் 99% குற்றங்கள் தமிழ் சினிமாவில் குறைந்துவிடும், சினிமாத் துறைக்கு தொழில் அங்கீகாரமும் வங்கி உதவிகளும் கிடைக்கும். இந்த இரண்டு கோரிக்கைகள் தமிழ் சினிமாவின் எல்லாவிதமான verticals உடன் எப்படி நேரடியாக தொடர்புடையது என்பது அனுபவசாலிகளுக்குப் புரியும். இந்தத் தொழிலை அறியாதவர்களுக்கு சில நடைமுறைகளை விளக்குகிறேன்.

கட்டண முறையை உறுதியாக நடைமுறைப்படுத்தி வெளிப்படையான கணக்குகள் இருந்தால் என்ன நடக்கும்?

ஒரு படத்தின் தாயாரிப்புச் செலவுகள் அதிகரிக்க மிக முக்கியமான காரணங்களில் ஒன்று நடிகர்களின் சம்பளம். அவர்களின் சம்பளத்தை படத்திற்குக் கிடைக்கும் முதல் மூன்று நாள்களின் வசூல்தான் நிர்ணயிக்கிறது. தியேட்டர்களில் விதிகளுக்கு உட்பட்டு டிக்கெட் கட்டணம் இருந்தால் பெரும்பாலான பெரிய படங்களின் வசூல் இப்போதிருக்கும் விகிதத்தில் இருந்து 50% குறைந்துவிடும். அப்போது நடிகர்களின் சம்பளமும் குறையும். ஒரு நடிகரின் படம் செய்த வசூல் விவரங்கள் வெளிப்படையாக இருந்தால், அதைப் பொருத்துதான் அவர்களுடைய சம்பளமும் படத்தின் தயாரிப்பு செலவும் இருக்கும். பொய்க் கணக்குகளால் தவறாக திசை திருப்பப்படும் தயாரிப்பாளர்கள் விழித்துக் கொள்வார்கள். தியேட்டர்களில் இருந்து தயாரிப்பாளருக்கு வந்து சேர வேண்டிய தொகை முறையாக வரும். அவரின் தயாரிப்பு செலவை முறையாக ஈடுகட்ட முடியும். கறுப்புப் பணப் புழக்கம் குறையும். அதனால் தவறான வழிகளில் பணம் சம்பாதிப்பவர்கள் இத்துறையில் முதலீடு செய்வதற்கான சூழல் குறையும். படத்தின் வசூல் சாத்தியத்தை வைத்து (வினியோகஸ்தகர்கள், தியேட்டர்காரர்களின் உத்தேச மதிப்பு) வங்கிகளில் நேரடியாகக் கடன் பெற முடியும். அதன் மூலம் cost of funding குறையும். (இப்போது வசூல் சாத்தியத்தை அல்ல, வசூலையே வெளியில் சொல்ல முடியாது; அது பெரும்பாலும் கறுப்புப் பணம் என்பதால்.) முறையாக இயங்கும் தயாரிப்பு நிறுவனங்களின் முதலீடு நாடு முழுவதும் இருந்து தமிழ் சினிமாவிற்குக் கிடைக்கும். AVM போன்ற நிறுவனங்கள் இப்போது ஏன் படம் தயாரிப்பதில்லை என்பதை இதனோடு இணைத்துப் புரிந்து கொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக அரசாங்கத்திற்கு முறையாக வரி கிடைக்கும். பேராசைக்காரர்களின் கூடாரம் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகும். மக்களும் முதல் அமைச்சர் கோஷங்களில் இருந்து தப்பிக்கலாம். இன்னும் இதில் விரிவாகப் பேச ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. ரசிகர் மன்றங்கள் எவ்வாறு இயங்குகின்றன, ரசிகர் மன்றக் காட்சிகளில் வசூலிக்கப்படும் தொகை எவ்வளவு, இந்தக் காட்சிகளில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சம்பாதிக்கும் தொகை எவ்வளவு போன்ற விவரங்கள், ஒரு நடிகன் தனக்கான மாய பிம்பத்தைக் கட்டமைக்க இப்போதிருக்கும் நடைமுறை எப்படி அவனுக்கு உதவுகிறது, சிறிய தரமான படங்களை எப்படி இந்த நடைமுறை நசுக்குகிறது, குடும்பத்துடன் படம் பார்க்கும் வழக்கங்கள் ஏன் குறைகிறது, இளைஞர்களின் கூடாரமாக மட்டும் தியேட்டர்கள் இப்போது இருப்பதால் அவர்களைக் கவர எடுக்கப்படும் நாலாந்தரமான படங்கள் என்று இன்னும் நிறையப் பேசலாம்.

தியேட்டர்களுக்கான லைசன்ஸிங் முறையை எளிமைப்படுத்தினால் என்ன நடக்கும்?

இப்போது நிலங்களின் விலை தாறுமாறாக ஏறிவிட்டன. அதனால் மக்கள் வசிக்கும் பகுதிகளின் அருகாமையில் பெரிய நிலப் பரப்பில் பெரிய தியேட்டர்கள் கட்டுவது நடைமுறையில் சாத்தியம் இல்லை. அதனால் 50 பேர், 100 பேர் வரையில் உட்கார்ந்து பார்க்கும் சிறிய தியேட்டர்களுக்கு ஏற்ற வகையில் லைசன்ஸிங் முறையை மாற்றி அமைத்தால் தமிழகம் முழுவதும் குறைந்த பட்சம் 2000 புதிய தியேட்டர்கள் உருவாகும் சாத்தியம் இருக்கிறது. வினியோகஸ்தகர்கள் ஊருக்கு ஒரு தியேட்டரை லீசுக்கு எடுத்து வைத்துக் கொண்டு தயாரிப்பாளர்களை மிரட்டும் முறை அடியோடு ஒழியும். திரைப்பட வினியோக முறை ஆரோக்கியமான சூழலுக்கு மாறும். புதிய தியேட்டர்கள் புதிய தொழில் நுட்பத்தில் உருவாகும். படம் பார்க்கும் அனுபவமும் சிறப்பாக இருக்கும். இந்தக் காரணத்தாலும் வீட்டிற்குப் பக்கம் தியேட்டர்கள் அமைவதாலும் மக்கள் தியேட்டருக்கு வரும் பழக்கம் அதிகரிக்கும். ஒற்றைத் திரையில் இருக்கும் பெரிய தியேட்டர்கள் இரண்டு அல்லது மூன்று தியேட்டர்களாக மாறும். (இப்போதைய லைசன்ஸிங் முறையில் இதை சாத்தியப்படுத்துவது மிகவும் கடினம்.) தயாரிப்பாளர்களுக்கு தியேட்டரில் இருந்து கிடைக்கும் வருமானம் குறைந்தது இரண்டு மடங்காகும். சிறிய தரமான படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கும். நல்ல படங்கள் உருவாகும் சூழல் உண்டாகும். நிறைய புதிய தயாரிப்பாளர்கள் வருவார்கள். வினியோக முறை சீரானால் தொழிலின் நம்பகத்தன்மை அதிகரிக்கும்.

தமிழ் சினிமாவில் மாற்றத்திற்கான தேவைகள் நிறைய இருக்கின்றன. ஆனால் இப்போதிருக்கும் புற்று நோயில் இருந்து மீண்டு வர இந்த இரண்டு கோரிக்கைகளை மட்டும் உறுதியாக வைத்து திரைத் துறையினர் அனைவரும் ஒன்று திரள வேண்டும்.
நடிகர்களின் வசனங்கள் வெறும் வெற்றுக் கோஷங்கள்தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்களல்ல, அந்த வசனங்களுக்கு உணர்ச்சி வசப்பட்டு அவர்கள் பின்னால் நிற்கும் கூட்டம்தான் உண்மையில் கோமாளிகள். தற்கொலை செய்துகொண்ட அசோக் குமாரின் கடிதத்தை ஒருமுறை நிதானமாக படித்துப் பாருங்கள். அது காலத்தால் கைவிடப்பட்ட கடவுளின் குழந்தை ஒன்றின் கடிதம். அவர் ஆன்மாவிற்கு மதிப்பளிப்பதாக இருந்தால் களையை அழிக்க அல்ல, ஒட்டு மொத்த திரைத் துறையும் இந்த இரண்டு கோரிக்கைகளுக்காக போராட முன் வர வேண்டும்.

தனபால் பத்மநாபன், கிருஷ்வேணி பஞ்சாலை, பறந்து செல்ல வா ஆகிய படங்களின் இயக்குநர். 

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.