
காந்தியடிகள் 1921 ஆம் ஆண்டு சுயராஜ்யம் என்றால் என்ன என்று அழகாக வரையறுத்தார்.” அகிம்சை , இந்து – முஸ்லிம் ஒற்றுமை , தீண்டாமை ஒழிப்பு , பொருளாதார தற்சார்பு என்ற நான்கு தூண்களில் சுயராஜ்யம் என்ற மேசை அல்லது படுக்கை இருக்கிறது ” என்றார். இவ்வாறு காந்தி சொல்லிய 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வந்தது. இதில் காந்தி சொன்ன நான்கு தூண்களும் உள்ளடக்கப்பட்டு சட்டப்பூர்வமாகவும், அரசியல்ரீதியிலும் அதற்கு அதிகாரம் Sanction) கொடுக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் ; சாதி ஒழிப்பு மற்றும் பால் அசமத்துவ ஒழிப்பு; ம , மொழி பன்முகத்தன்மை; பொருளாதார தற்சார்பு என்ற நான்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் நான்கு தூண்களாகும். இந்திய தேசியத்திற்கு சில பெறுமதிகள் (values) அடிப்படையாக இருக்கின்றன. இந்த பெறுமதிகளை அடிப்படையாக கொண்டுதான் நாடு ஒற்றுமையானது.அதற்கு ஒரு வடிவம் கிடைத்தது. நான் இந்த தேசியத்தைத்தான் அரசியலமைப்பு நாட்டுப்பற்று (constitutional Patriotism)என்று கூறுகிறேன்.
அரசியலமைப்பு நாட்டுப்பற்று
இதற்கு ஐந்து அடிப்படையான அம்சங்கள் இருக்கின்றன. நமக்கு பாரம்பரியமாக கிடைத்துள்ள பன்முகத்தன்மையை (diversity) மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வது முதல் அம்சமாகும்.எந்த இந்தியனும் சிறப்பானவன் இல்லை; எந்த மொழியும் சிறப்பானது அல்ல; அரசியலமைப்பு சட்ட பெறுமதிகளை பொறுத்தே இந்தியதன்மை என்பது வரையறை செய்யப்படுகிறது.
நாட்டுப்பற்றை பல்வேறு தளங்களிலும் கடைபிடிக்க முடியும் என்பதும் , கடைபிடிக்க வேண்டும் என்பதும் இதன் இரண்டாவது முக்கியமான அம்சமாகும். நாட்டுப்பற்று என்பது வீட்டிலிருந்தே தொடங்குகிறது. எப்படி உங்கள் குழந்தைகளை நடத்துகிறீர்கள், உங்களுக்காக பணி புரிபவர்களிடம் எப்படி பழகுகிறீர்கள். இப்படியாக இது தெருவில் , நகரத்தில், மாநிலத்தில, நாட்டில் என எல்லா பகுதியிலும் செயல்படும். இவை ஒன்றுக்கொன்று ஆதரவானவை; எதிரானவை அல்ல.

நமது நாட்டின் தோல்விகளைக் கண்டு வெட்கப்படுவதும், அதனை திருத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புவதும் நான்காவது அம்சமாகும். ஒவ்வொரு உண்மையானகுடிமகனும் நமது சமூகத்தின் தோல்விகளைக் கண்டு, அரசு இழைக்கும் குற்றங்களைக் கண்டு, காவல்துறை செய்யும் மனித உரிமை மீறல்களை கண்டு (சமயத்தில் இராணுவம் ) வெட்கப்படுகிறான். பொது அமைப்பில் நிலவிவரும் ஊழல், ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையில் நிலவிவரும் சாதி, பாலின வேறுபாடு என பல நிலைகளுக்கு இது பொருந்தும்.உள்நாட்டு கலாச்சாரத்திலும், நாட்டிலும் வேர்பிடித்து நின்று மற்ற கலாச்சாரங்களிலிருந்தும், நாடுகளிலிருந்தும் கற்றுக் கொள்ள விரும்புவதும் உண்மையான நாட்டுப்பற்றின் ஐந்தாவது அம்சமாகும். இந்தக் குறிப்புகள் உலகின் மற்ற நாடுகளுக்கும் பொருந்தும். இந்த அரசியலமைப்பு நாட்டுப்பற்று இப்போது தற்காப்பு (defensive) நிலையில் இருக்கிறது.

மூர்க்க தேசியவாதம் ( jingoism )
இப்போது தேசியத்தின் புதிய மாதிரி உருவாகிக் கொண்டு இருக்கிறது. இது ஏறுமுகத்தில் இருக்கிறது. ஆங்காரமாக இருக்கிறது . முதலில் ஒரு மதத்திற்கு சலுகை: இந்து மதம்; ஒரு மொழிக்கு சிறப்பு அந்தஸ்து இந்தி; பொது எதிரி: பாகிஸ்தான் என்று இது இருக்கிறது. 19ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிலவிய இந்த தேசியவாதம் 20 ம் நூற்றாண்டின் மத்தியில் பாகிஸ்தானில் பிறந்தது; 21 ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் அது இந்தியாவில் மீண்டும் பிறந்தது. விமர்சிப்பவர்கள் அனைவரையும் தேசத்திற்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்துவது மற்ற அனைத்தையும்விட வருத்தமளிக்கும் நான்காவது அம்சமாகும்.
எம்.எஸ்.கோல்வாக்கர் எழுதிய சிந்தனைக் கொத்து என்ற புத்தகம் 51 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியானது. அது மக்களை ஒரு குறிப்பிட்ட சிந்தனைக்கு மாற்றுகிறது. அது உள்நாட்டு அச்சுறுத்தல் 1. முஸ்லிம்கள் 2. கிறிஸ்தவர்கள் 3.கம்யூனிஸ்டுகள் என்று கூறுகிறது. நான் இந்த மூன்றுமே இல்லை. ஆனாலும் நான் பலரின் பார்வையில் இந்த நாட்டின் எதிரிதான். இது பயமளிக்கக் கூடிய, தண்டிக்கக்கூடிய தேசியமாகும்.ஒரு மதத்துடனும், ஒரு மொழியுடனும் தேசியத்தை அடையாளப் படுத்துவது குறுகிய கண்ணோட்டமாகும். இது வெளிநாட்டினரைக் கண்டு பயப்படுகிறது. பழைய தேசியத்தை நிலைநிறுத்த, புத்துணர்வு கொடுக்க விரும்புவர்களை தண்டிக்கிறது. இதனை நாட்டுப் பற்று என்று சொல்ல வேண்டுமா? மூர்க்க தேசியவாதம் என்று சொல்ல வேண்டுமா? நாட்டுப்பற்று என்பது அன்பிலும், புரிந்து கொள்ளலிலும் முகிழ்ந்து இருப்பது ; மூர்க்க தேசியம் என்பது வெறுப்பையும், பழிவாங்குதலையும் ஆதாரமாகக் கொண்டது. ஒரு நாடு, ஒரு கலாச்சாரம், ஒரு தலைவர் என்பதே உயர்ந்தது என்ற நம்பிக்கையை கொண்டது; இரண்டாவதாக எல்லா விமர்சகர்களையும் தேசத்திற்கு எதிரானவர்கள் என சித்தரிப்பது; வன்முறையை கட்டவிழ்த்து தெருவில் தங்கள் நினைப்பதை அமலாக்க வேண்டும் என்று நினைப்பதாகும். ஏன் மூர்க்க தேசியம் வளர்ந்து வருகிறது என்றும், நாட்டுப்பற்று பின்தங்கி இருக்கிறது என்றும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். மூர்க்க தேசியம் என்றால் என்ன என்று சொல் இருக்கிறேன். இது ஏன் தாக்கத்தை தருவதாக, ஏற்றுக் கொள்ள கூடியதாக (articulate), எல்லாரும் பேசும்படியாக இருக்கிறது என்பதற்கு நான்கு காரணங்கள் உள்ளன.
இடதுசாரிகளின் மேட்டிமைத்தனம்
முதல்காரணம் இடதுசாரிகளின் மேட்டிமைத்தனம் (hypocrisy). இந்தியாவில் திரிபுராவிலும், கேரளாவிலும் இடதுசாரிகள் அதிகாரத்தில் உள்ளனர்; மேற்கு வங்காளத்திலும் இருந்துள்ளனர். இடது சிந்தனையானது அறிவுஜீவிகளின் வாழ்க்கையிலும் , கலாச்சார வாழ்விலும் ஒரு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சிறந்த எழுத்தாளர்கள், கதாசிரியர்கள், கவிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மார்க்சிஸ்டுகளாக இருக்கின்றனர். நமது நாட்டைவிட மற்ற நாடுகளைத்தான் இந்திய இடதுசாரிகள் அதிகமாக விரும்புகின்றனர். இந்த நிலைதான் இருபதுகளிலும்,முப்பதுகளிலும், நாற்பதுகளிலும் இருந்தது. நீண்ட காலமாக அவர்கள் சோவியத் யூனியனை விரும்பினார்கள். பின்னர் ரஷ்யாவையும், அதன் பின்னர் சீனாவையும் விரும்பினார்கள். அதற்கு பிறகு அது வியட்நாம், கியூபாவாக இருந்தது.

தான் ஏற்கெனவே சொல்லியபடி மற்ற நாடுகளில் உள்ள நல்ல அம்சங்களை விரும்ப வேண்டும்; பாராட்ட வேண்டும்; ஆராதிக்க வேண்டும். எனக்கு கனடா நாட்டு பொது சுகாதார முறை பிடிக்கும்; அமெரிக்க தாட்டு பல்கலைக்கழகங்களை பிடிக்கும். அதே சமயம் நான் எனது சொந்த நாட்டை மேம்படுத்த விரும்புகிறேன். நான் ஒரு மார்க்சிஸ்ட் கட்சி தலைவரைக் கேட்டேன். இறந்துபோன ஜெர்மானிய தத்துவவாதிகள் மார்க்ஸ், எங்கெல்ஸ், ரஷ்ய தலைவர்கள் லெனின், ஸ்டாலின் படங்களை மட்டுமே உங்கள் மாநாடுகளில் படமாக வைக்கிறீர்கள். அதில் ஒருவர் கூட இந்தியர் இல்லையா என்று கேட்டேன். இடதுசாரிகளின் மேட்டிமைத்தனத்தனம் மூர்க்க தேசியத்திற்கு ஆயுதங்களைத் (ammunition) தருகிறது.
அறம் இழந்த காங்கிரஸ்
காங்கிரசின் ஊழல் நடவடிக்கைகள் மூர்க்க தேசியம் வளர்வதற்கு இரண்டாவது காரணமாகும். இந்திரா காந்த , சோனியா காந்தி காங்கிரசானது அனைத்து திட்டங்களுக்கும் அவர்கள் பெயரையே வைக்கிறது. உத்திரபிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் சாஸ்திரி பெயரை ராகுல் காந்தி சொல்லவே இல்லை. அவர்தான் பசுமைப்புரட்சிக்கு அடித்தளம் இட்டவர்; அரசியலமைப்பு நாட்டுப்பற்றாளர் என்பதற்கு அவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாவார். காங்கிரசு கட்சியில் இருக்கும் பொருளாதாரம் சார்ந்த ஊழல் மட்டுமல்ல; அறம் சார்ந்த, அறிவார்ந்த ஊழலாலும் சுதந்திரப் போரில் மிகப்பெரிய பங்காற்றிய கட்சியை ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட வரலாறாக, வாழ்க்கையாக மாற்றியதும் மூர்க்க தேசியத்திற்கு வாய்ப்பாக போய்விட்டது.
உலக அளவில் மாற்றங்கள்
உலக அளவில் நடந்து வரும் மாற்றங்களினாலும் மூர்க்க தேசியம் வளர்கிறது. பாகிஸ்தானிலும், வங்க தேசத்திலும் இசுலாமிய அடிப்படைவாதம் வளர்ந்து வருகிறது. இதனால் இந்தியாவிலும் அடிப்படைவாதம் வளர்கிறது. அடிப்படைவாதமும், மூர்க்க தேசியமும் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருக்கின்றன. ஆஸ்திரியா, ஹங்கேரி, போலந்து போன்ற நடுவில் வளர்ந்துவரும் வலதுசாரி எழுச்சியினாலும், பிரெக்சிட் (Brexit) , டொனால்டு டிரம்ப் போன்ற காரணிகளினாலும் மூர்க்க தேசியம் வளர்கிறது.

இடதுசாரிகள், காங்கிரசின் தோல்விகளினால் மூர்க்க தேசியத்திற்கு வெளி( space) கிடைக்கிறது. இந்துத்துவா என்பது கொஞ்சம் ஐரோப்பிய, கொஞ்சம் மத்திய கிழக்கு நாடுகள் , கொஞ்சம் கிறிஸ்தவ, கொஞ்சம் முஸ்லிம்களிலிருந்து அமைகிறது. இந்துத்துவா என்பது உள்நாட்டில் வேர் கொண்டுள்ளது என்பது தவறானது ஆகும். இது 19 ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருந்த ஒரு மொழி, ஒரு மதம், ஒரு எதிரி என்ற சிந்தனைப் போக்கை ஒட்டி அமைகிறது.
இப்படிப்பட்ட அரசியல , சமூக அமைப்பை திணிக்க வேண்டும் என்ற விருப்பம் மத்திய மேற்கு ஆசியாவிலிருந்து வருகிறது. மதினா (Medina) , முஸ்லிம் ஸ்பெயின் (Muslim Spain), ஒட்டாமென் துருக்கி ( ottaman turkey) , ஈராக்கில் உள்ள அமைப்புகளில் மூன்று விதமான குடிமக்கள் உள்ளனர்.முதலாவது சான்றளிக்கப்பட்ட முஸ்லிம்கள் ; அவர்கள் வெள்ளிதோறும் மசூதி செல்வர்; அவர்களுக்கு குரான் கடவுளின் வார்த்தை. யூதர்களும், கிறிஸ்தவர்களும் இரண்டாம் தர குடிமக்கள். அவர்களும் பாதுகாக்கப்பட்ட மக்கள் என்றுதான் அழைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு இரண்டாம்தர குடி மக்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அரசராகவோ, தளபதியாகவோ, ஆலோசகராகவோ, துணை வேந்தராகவோ மத்திய மேற்கு ஆசியாவில் உள்ள யூதரோ, கிறித்தவரோ முடியாது. இப்படிப்பட்ட தெளிவான மாதிரியைத்தான் மூர்க்க தேசியவாதிகள் கிறிஸ்தவர்கள் மீதும், இசுலாமியர்கள் மீதும் இன்று திணிக்க விரும்புகிறார்கள்.
இந்தியாவில் இன்று இருக்கும் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் மேற்கத்திய இசுலாமில் உள்ள யூதர்கள், கிறித்தவர்களைப் போல உள்ளனர். இந்த சித்தாந்தம் நம்மை கலாச்சார ரீதியாகவும் பாதிக்கும்; பொருளாதார ரீதியாகவும் பாதிக்கும்.