கார்ப்பரேட்டுகளுக்கு சிங்கார சென்னை? உழைக்கும் தலித் மக்களுக்கு பெரும்பாக்கமா?

ரமணி

அதிநவீன வசதிகள், கட்டமைப்புகள், ஐ.டி,கட்டிடங்களென பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கும் சென்னை பெருநகரம் முன்பு சுனாமியால் பாதிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் சென்னை நகரம் பெருவெள்ளத்தில் மூழ்கியது. தற்போது வடகிழக்குப் பருவமழையில் தத்தளித்து வருகிறது. தேங்கும் மழைநீரை வெளியேற்றவோ, இயற்கை மழையை சேமித்து வைக்கவோ அரசிடம் வழியில்லை. 5 நாள் பெய்த மழைக்கே நகரம் ஆங்காங்கே மூச்சு திணறுகிறது. நகர்ப்புறக் கட்டமைப்பு குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கிறது. கொடுங்கையூரில் இரு சிறுமிகள் மின்சாரத் துறையின் அலட்சியம் காரணமாக உயிரிழந்தனர். ஆனால், ஆட்சியாளர்களின் வீடுகள் மூழ்கியதாகவோ, பாதுகாப்பின்றி தவிப்பதாகவோ இதுவரை ஒரு செய்திகூட வரவில்லை. மூழ்கித் தத்தளிக்கும் இடங்களெல்லாம் உழைக்கும் மக்கள் வாழும் நகர, புநநகர்ப்பகுதிகளாகத்தான் இருக்கின்றன. சென்னையில் இருந்த 35க்கும் மேற்பட்ட ஏரிகள் நீர்வழிச்சாலைகள் எங்கே?. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் யார்? என்கிற கேள்வி வலுவாக எழுந்திருப்பதன்மூலம் அரசின் நகர்ப்புறக் கட்டமைப்பும், வளர்ச்சித் திட்டங்களும் தோற்றுப்போய் காட்சியளிக்கிறது.

நகரத்தின் சமப்பகுதியே இப்படியென்றால் கூவம், அடையாறு, பக்கிங்காம் கரையோரம் வாழும் இலட்சக்கணக்கான குடிசைப்பகுதி மக்களின் வாழ்நிலையோ மிகமிக மோசம் என்பதை சொல்லத்தேவையில்லை. சென்னை நகரில் மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் வந்தாலும், அரசுகள் கொண்டுவரும் நகர்ப்புறத் திட்டங்களானாலும் இதற்கு முதல் குற்றவாளிகளாக குறிவைக்கப்படுவது கூவம், அடையாறு, பக்கிங்காம் ஆகிய ஆற்றங்கரையோரங்களில் காலம்காலமாய் வாழ்ந்து வரும் குடிசைப்பகுதி அடித்தட்டு மக்களைத்தான். சென்னை நகரத்தில் இன்றைக்கு கிட்டத்தட்ட 18 இலட்சத்திற்கும் மேற்பட்ட உழைக்கும் மக்கள் குடிசைப்பகுதிகளில் வசித்துவருகிறார்கள். பளபளக்கும் கட்டிடங்கள், உயர்ரக மாளிகைகள், பன்னாட்டு நிறுவனங்கள், பறக்கும் மேம்பாலங்கள், சுரங்க ரயில் பாதைகள் என நகரத்தை தம் உழைப்பால் செதுக்கி உயர்த்திய பூர்வகுடிகளைத்தான் ஆக்கிரமிப்பாளர்களாகக் குற்றம்சாட்டி, அகதிகளாகக் குப்பைகள்போல் அள்ளிவீசும் கொடிய செயலை ஆட்சியாளர்கள் அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதன்தொடர்ச்சிதான் தற்போது அப்புறப்படுத்த காத்திருக்கும் திடீர் நகர், மக்கீஸ் கார்டன்,ரங்கூன் ஆற்றோரப்பகுதிகள்.

பூர்வகுடி தலித் மக்களின் நிலை திடீர் நகர்

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கிரீம்ஸ் சாலையில் கூவம் கரையோரம் அமைந்திருக்கும் குடிசைப்பகுதி திடீர் நகர். இந்நகரில் மட்டும் கிட்டத்தட்ட 3000 குடும்பங்கள் வசித்துவருகின்றன. திடீர் நகர், மக்கீஸ் கார்டன், ரங்கூன் தெரு ஆகியவற்றின் பரப்பளவு சுமார் 3 ஏக்கர். இங்கு குடியிருக்கும் உழைக்கும் மக்களில் பெரும்பகுதியினர் தலித் மக்கள். இம்மக்கள் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்விடத்தில் வசித்துவருகின்றனர். திடீர் நகரில் குடியிருக்கும் பெண்கள் பெரும்பாலும் வீட்டுவேலையிலும், ஆண்கள் ஆட்டோ ஓட்டுதல், பெயிண்டிங், துப்புரவுப்பணி போன்ற முறைசாரா தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். தம் பிள்ளைகளை அருகில் இருக்கும் அரசு பள்ளியிலும், தனியார் பள்ளியிலும் படிக்க வைக்கின்றனர். இளைஞர்கள் பலர் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்துவருகின்றனர். குறைந்த கூலியே ஆனாலும் தம் சொந்த உழைப்பின்மூலம் கௌரவமான ஒரு வாழ்க்கையை அமைத்து தம் பிள்ளைகளின் எதிர்காலக் கனவுகளோடு அன்றாட வாழ்க்கையை நகர்த்திவருகிறார்கள். போக்குவரத்து, மருத்துவமனை, பள்ளி, வேலை, வாழ்வாதாரமென அத்தியாவசிய வசதிகள் நகரத்திற்குள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால் கரையோரங்களில் வாழ்ந்து வருகின்றனர். திடீர்நகர் பகுதியில் அமைந்திருக்கும் வீடுகள் அனைத்துமே கல்வீடுகள், குறிப்பாக 2001ல் தி.மு.க. ஆட்சியின் போது அங்கிருந்த குடிசைகள் இடிக்கப்பட்டு 700 கல்வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. கால்வாய் கரையிலிருந்து 30 அடி இடைவெளிக்கு பிறகுதான் இந்த குடியிருப்பு அரசாங்கத்தால் கட்டப்பட்டுள்ளது.. 10 தெருக்களுக்கு மேல் உள்ள இந்த இடத்தில் பாதாள சாக்கடை அமைக்ப்பபட்டுள்ளது. அப்பகுதிக்குள்ளேயே போலீஸ் கிளப்பையும், மருத்துவமனையையும் அன்றைய அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இவர்களுக்கான வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது.

மக்கீஸ் கார்டன் மக்களின் நிலை

அப்பல்லோவிற்கு எதிரில் இருக்கும் மக்கீஸ் கார்டன் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகிறார்கள். 2001ல் திமுக அரசு திடீர்நகரில் கல்வீடுகளை கட்டிக்கொடுத்திருக்கிறது. ஆனால் மக்கீஸ் கார்டன் ரங்கூன் பகுதிகளை மட்டும் ஏனோ புறக்கணித்துவிட்டது. மக்கீஸ் கார்டனில் கூரைகளும், கல்வீடுகளும் கலந்திருக்கின்றன. இங்கு வசிப்பவர்களில் பெரும்பகுதியினர் தலித் கிறித்தவ மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பகுதிகள் முழுவதுமே முதல் பட்டதாரி பிள்ளைகள் படித்துவருகிறார்கள். 2012ல் மக்கீஸ்கார்டனின் குடிசைப்பகுதிகள் திட்டமிட்டே அரசாங்கத்தால் தீயிட்டு கொளுத்தப்பட்டது. 150 வீடுகள் எரிந்து சாம்பலாயின. வழக்கம்போல் 5 கிலோ அரிசி, 5000 ரூபாய் கொடுக்கப்பட்டு பெரும்பாக்கம் செல்ல கட்டாயப்படுத்தினார்கள் அரசு அதிகாரிகள். இருந்த வீடுகளும் எரிந்துவிட்ட நிலையில் தகவல் அறிந்து அப்பகுதிக்குச் சென்றோம். வீதியில் விடப்பட்ட அம்மக்களை சந்தித்து ஒன்றுதிரட்டும் முயற்சியில் தோழர்கள் ஈடுபட்டோம். தமிழ்நாடு இளைஞர் இயக்கத்தின் சார்பில் நிரந்தர வீடு, தடுப்புச்சுவர் ஏற்படுத்தக்கோரி மக்களை, குறிப்பாக பெண்களை ஒன்றுதிரட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தோழர் அ. மார்க்ஸ், சீனிவாசன் உள்ளிட்ட மனித உரிமையாளர்களைக் கொண்ட உண்மையறியும் குழு அமைக்கப்பட்டு அப்பகுதிகள் முழுவதும் ஆய்வை மேற்கொண்டது. பத்திரிகையாளர் சந்திப்பில் குடிசைப்பகுதி அடித்தட்டு மக்களுக்கான கோரிக்கையை அரசுக்கு முன்வைத்து அறிக்கையை வெளியிட்டது அக்குழு. பின்பு அரசும் நிர்வாகமும் அமைதிகாத்தது. மக்கீஸ்கார்டன் அருகில் ஓடும் கூவம் ஆற்றில்தான் பறக்கும் சாலைக்கான தூண்கள் கட்டப்பட்டிருக்கின்றன. திமுக அரசு அந்த திட்டத்தைக் கொண்டுவந்ததால் அதிமுக அரசு வந்ததும் அத்திட்டம் முடங்கியிருந்தது. தற்போது மீண்டும் அத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திமுக ஆட்சியாளர்கள் முனைப்போடு செயல்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். மக்கீஸ் கார்டனுக்கு எதிரில் கூவம் ஆற்றிற்கு தள்ளி பெரும் தடுப்புச்சுவர் கட்டப்பட்டிருக்கிறது. ஆனால் உழைக்கு மக்கள் வாழும் கூவம் அருகில் தடுப்புச்சுவர் கட்டிக்கொடுக்க பல முறை மக்கள் முறையிட்டும் இதுவரை கட்டிக்கொடுக்கப்படவில்லை. மக்களை வாழ வைப்பதற்கு எந்தளவிற்கு நிர்வாகம் அக்கறைக் காட்டுகிறது என்பதற்கு இதுவே சாட்சி. திட்டமிட்டே தொடர்ந்து இப்பகுதி மக்களைப் புறக்கணித்து இன்று நகரத்தைவிட்டு வெளியேற்றுவதற்கானக் கணக்கெடுப்பை அரசு தொடங்கிவிட்டது. இளைஞர் இயக்கத் தோழர்களின் முயற்சியில் திடீர் நகர் மக்கள் “நாங்கள் வெளியேறமாட்டோம், கூவம் கரையோரம் தடுப்புச் சுவரை, வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டும்“ என போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

நிலத்தை ஆக்கிரமித்த அப்பல்லோவும் தாரைவார்த்த தமிழக அரசும்

திடீர் நகர், மக்கிஸ் கார்டன் குடிசைப் பகுதிகளின் எதிரில்தான் அப்பல்லோ மருத்துவமனை தலைமை மய்யம் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்ட அப்பல்லோ மருத்துவமனைகள் நாடெங்கும் உள்ளன. இந்நிறுவனத்தின் கடந்த ஆண்டுக்கான வருமானம் மட்டும் 7.250 கோடி ஆகும். அதன் பிரதான கட்டிடம் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதன் பல கிளைகள் கிரீம்ஸ் சாலையில் இயங்கிவருகின்றன. அரசியல் பிரமுகர்களுக்கும், பெரும் செல்வந்தர்களுக்கும் உயர்ரக மருத்துவ சிகிச்சையை அளிக்கும் முக்கிய தனியார் மருத்துவமனையாக உள்ளது; ஏழைகள் எட்டிக்கூட பார்க்கமுடியாத அப்பல்லோவிற்குதான் எளிய மக்களின் வாழ்விடம் தேவையாம்?

அப்பல்லோவின் ஆதிக்கம்

அப்பல்லோவின் health check என்ற கட்டிடம் கூவம் ஆற்றுக்கால்வாயின் மீதே ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. பரப்பளவு சுமார் 6000 சதுர அடி. மருத்துவமனையின் முன்பக்கத்தில் உள்ள பழைய காவல்துறை குடியிருப்பை அரசு இடித்தது. சுமார் 8 ஏக்கராக உள்ள அந்நிலம் அதிமுகவின் அமைச்சர் வளர்மதி மூலம் அப்பல்லோ நிர்வாகத்திற்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளது.

அப்பல்லோவின் மருத்துவமனையை ஒட்டியுள்ள சுமார் 1/2 ஏக்கர் பரப்பளவில் உள்ள அம்பேத்கர் நகரில் சுமார் 40 ஆண்டுகால பழமையான குடிசை மாற்று வாரியக் கட்டிடம் உள்ளது. இதில் 128 குடியிருப்புகள் உள்ளன. இந்த கட்டிடம் அப்பல்லோ மருத்துவமனைக்கு அசிங்கமாக இருப்பதாகச் சொல்லி அந்த நிர்வாகம் 3 மாடி அளவிலான பேனர் வைத்து தடுத்திருக்கிறது. இக்குடியிருப்பில் உள்ள மக்களைக் காலிசெய்ய அரசு நிர்பந்தித்துவருகிறது.

குடிசை மாற்று வாரியத்தின் பின்புறத்தில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் உள்ள கார்ப்பரேசன் பூங்கா பராமரிக்கப்படாமல் குப்பை கிடங்குபோல் உள்ளது. இந்த இடத்தையும் அப்பல்லோவின் வாகனம் நிறுத்தும் இடமாக மாற்ற முயற்சித்து வருகின்றனர். 2015 ல் அதிமுக ஆட்சியில் அப்பல்லோவின் “மல்ட்டிலெவல் கார் பார்க்கிங்“கிற்காக அந்த நிலம் 20 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட ஆதாரங்களே அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கான சில எடுத்துக்காட்டுகள். மக்கள் வாழ வழிசெய்வதற்கு வக்கற்ற தமிழக அரசு, அப்பல்லோவை ஆக்கிரமிப்பாளர்கள் என கேள்வி கேட்பதில்லையே ஏன்?.

கூவம் ஆற்றை கழிவுக்கூடாரமாக்குவ்து யார்?

திடீர் நகர் மக்கள் வசிக்கும் தெரு ஓரத்திலேயே அப்பல்லோ நிர்வாகம் கூவம் ஆற்றில் கலக்கும் வகையில் சிறிய கால்வாய் ஒன்றை அமைத்திருக்கிறது. அக்கால்வாய் வழியாகத்தான் அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் அனைத்தும் கூவம் ஆற்றில் கலக்கிறது. இதன் துர்நாற்றத்தால் அப்பகுதி மக்களின் ஆரோக்கியமும் சுகாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி மக்கீஸ் கார்டன் பகுதிக்கு எதிரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் வெளியேற்றக்குழாய் மக்கீஸ் கார்டன் பகுதி மக்கள் வீடுகளுக்கு அருகிலேயே அமைக்கப்பட்டு கடும் துர்நாற்றத்துடன் கூவம் ஆற்றில் கலக்கிறது. இப்படி சென்னை நகர ஆறுகளை கழிவுநீராக்கி கொண்டிருப்பவர்கள் ஒருபுறம் இருக்க, மீண்டும் மீண்டும் குடிசைப் பகுதி மக்களைக் குற்றவாளிகளாக்கும் கொடுமை நடந்துவருகிறது. உழைக்கும் மக்களின் குடியிருப்புகளைச் சுற்றியுள்ள இடங்கள் அனைத்தும் கழிவுகளாகவும், குப்பைகளாகவும் ஆக்கப்படுவதற்கு பொறுப்பேற்க வேண்டிய அரசு பாதிப்புக்குள்ளானவர்கள் மீது பழிபோடுகிறது.

அரசின் ஆக்கிரமிப்புத் திட்டம்

குடிசையில்லா நகரம், சிங்கார சென்னை என்றெல்லாம் அறிவித்து பன்னாட்டு முதலாளிகளிடம் ஒப்பந்தங்களைப் போட்டது தி.மு.க. அரசு. கிட்டத்தட்ட 3000 முதல் 5000 கோடி வரையிலான மதுரவாயல் – சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் 23 கி.மீ தொலைவில் அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்கு கூவம் கரையோரம் இருக்கும் குடிசைகளை அகற்றி கூவம் ஆற்றுக்குள்ளேயே தூண்களை அமைத்திருக்கிறது. நதியை அழகுபடுத்தும் திட்டம், தனியார் நிறுவனங்களுக்கான கார் பார்க்கிங் வசதிகள் அனைத்தும் ஆற்றங்கரைகளிலேயே ஒதுக்கப்பட்டிருக்கின்றன. மக்களை வெளியேற்றி ஆற்றங்கரைமீது கட்டப்படும் இப்பறக்கும் சாலை யாருக்குப் பயன்படப்போகிறது? ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் போன்ற இடத்தில் செயல்பட்டுவரும் ஆட்டோமொபைல் கம்பெனிகளின், கார்ப்பரேட்டுகளின் சரக்கு பொருட்கள் போக்குவரத்து தடையின்றி விரைவாக துறைமுகத்திற்குச் சென்று சேரவே இத்திட்டம். இதுமட்டுமின்றி சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், சிறுசேரி சிப்காட் வளாகம், ஃபோர்டு, நிசான் நிறுவனங்கள், வேளச்சேரி பறக்கும் ரயில் முனையம், புறநகர் தேசிய நெடுஞ்சாலைகள் என எண்ணற்ற வளர்ச்சிக் கட்டமைப்புகள் ஏரிகளை ஊடறுத்தும் உபரிநீர் கால்வாய்களைத் தடுத்தும் செல்கின்றன. வண்டலூர், நெமிலிச்சேரி, மீஞ்சூர் சாலை கட்டமைப்புகள் செம்பரம்பாக்கத்திற்கு வருகிற கால்வாய்களைத் தடுத்து மூடிவிட்டன. குடிசை வாழ் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்லி அப்புறப்படுத்த துடிக்கும் அரசு உண்மையான ஆக்கிரமிப்பாளர்களை விமர்ச்சிக்காமல் விடுவதன் நோக்கம் என்ன?

நகர்ப்புற விரிவாக்கத் திட்டமும் உலக முதலாளிகளின் நலனும்

2008ல் இந்திய தரகு முதலாளிகளின் சங்கமான இந்திய தொழில் கூட்டமைப்பு “தமிழ்நாடு விசன் 2023“ என்கிற திட்டத்தை அறிவித்தது. தமிழகத்தின் பொருளாதாரம் எந்த திசையில் செல்லவேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ், மெக்கன்சி போன்ற உலக வங்கியின் சர்வதேச ஆலோசனை நிறுவனங்களின் வழிகாட்டலில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக “தற்போதைய சென்னை மாநகரத்தைச் சுற்றிலும் ஒரு மீப்பெருநகரப் பிராந்தியம் (Mega Urban Region) உருவாக்கப்பட வேண்டும். அது சுமார் 5000 சதுர கி.மீ பரப்பளவு கொண்டதாகவும் விரிவுபடுத்தப்படவேண்டும்.

தமிழகத்தின் 24 முக்கிய நகரங்களின் தரமும் உயர்த்தப்பட்டு, அவற்றுடன் தாலுகா தலைநகரங்கள் நான்கு வழிச்சாலைகள் மூலம் இணைக்கப்படவேண்டும். இந்த 24 நகரங்களும் நான்கு பெருநகரங்களுடன் ஆறு வழி மற்றும் எட்டு வழிச்சாலைகள் மூலம் இணைக்கப்பட வேண்டும். “தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross State Domestic Product) சேவைத்துறை மற்றும் தொழில்துறையின் பங்கு 93% ஆக உயர்த்தப்படவேண்டும்.

தற்போது (2008) 50 சதவீதமாக இருக்கும் நகர்ப்புற மக்கள் தொகை, 2023 இல் 75% ஆக உயர்த்தப்படவேண்டும். 2025-ஆம் ஆண்டில் விவசாயத்தை சார்ந்திருக்கும் கிராமப்புற மக்கள் தொகையை 25% ஆகக் குறைக்க வேண்டுமானால், நகரமயமாவதை இப்போதுள்ளதைக் காட்டிலும் 18 மடங்கு வேகத்தில் தீவிரப்படுத்த வேண்டும்.”

2023இல் தானியங்கி, தோல், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை, பிற ஆலை உற்பத்தித் தொழில்கள், கட்டுமானத்துறை, ஐ.டி. மற்றும் பிற சேவைத்துறைகளே வேலை வாய்ப்பை வழங்கும் முதன்மையான துறைகளாக இருக்கும். நானோ தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், மருந்து உற்பத்தி, உணவு பதப்படுத்தும் தொழில் ஆகியவற்றை மையப்படுத்தித் தொழில்துறை வளர்க்கப்படவேண்டும்.
கால்நடை வளர்ப்பு, காய்-கனி-பூ ஆகியவற்றை மையப்படுத்திய தோட்டத்தொழில் போன்ற அதிகம் தண்ணீர் தேவைப்படாத உற்பத்திகளை நோக்கியும் விவசாய உற்பத்தி மாற்றியமைக்கப்பட வேண்டும்.
நகர்ப்புறத்தில் சில்லறை வணிக நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சியைக் கணக்கில் கொண்டு) அரசின் விவசாயக் கொள்கை அமைய வேண்டும். அதன்படி ஒப்பந்த விவசாயத்தின் நிறைகுறைகள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.”

நகரத்திற்கு வெளியே உருவாகும் நவீன சேரிகள்

மேற்கண்ட நோக்கத்தின் அடிப்படையில்தான் நகரத்தை விரிவாக்கும் திட்டம் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. உண்மை இவ்வாறிருக்க ஆக்கிரமிப்புகள் என அரசே குடிசைகளை எரித்து, கல்வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கும் மனித உரிமை மீறலை செய்துகெண்டிருக்கிறது. கடினப்பட்டு கட்டிய வீடுகளும் சுயமரியாதையும் நொறுங்கிவிழுவதைத் கண்ணீரோடும் கைக்குழந்தையோடும் வாழ்கையைத் தொலைத்த துயரத்தோடும் தடுக்கமுடியாமல் வீதியில் நிற்கிறார்கள். வேறுவழியின்றி கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் போன்ற புறநகர்ப்பகுதிகளுக்கு இடம்பெயர்கிறார்கள் உழைப்பாளி வர்க்கமான தலித் மக்கள். இத்தகைய மலிவான உழைப்பாளிகளான குடிசைப்பகுதி மக்களையும், வட இந்திய தொழிலாளர்களையும் நகரத்திற்கு வெளியே 40 கி.மீ தொலைவில் கொத்தடிமைகளாக குவித்திருக்கிறது. ’கேட்டட் கம்யூனிட்டிஸ்’ என சொல்லப்படும் உயர் வர்க்கத்தினர் வாழும் இடத்திற்கு அருகிலேயே அடிமைகளாக சேவைசெய்யும் கட்டமைப்போடு கண்ணகி நகர், செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், பெரும்பாக்கம் ஆகிய ஏரிப்பகுதிகளில் நவீன குடிசைப்பகுதிகளாக 8 மாடி குடியிருப்புகளைக் கொண்ட புதிய நகரத்தை உருவாக்கியிருக்கிறது குடிசை மாற்று வாரியம். ஆனால், நகரத்தின் பிரதானப் பகுதியான சைதாப்பேட்டையில் கோல்ப் மைதானம் 90 ஏக்கர் பரப்பளவில் 50 பணக்காரர்கள் கோல்ப் விளையாடுவதற்காக நிலத்தை ஒதுக்கியுள்ளது தமிழக அரசு. அக்கம்பக்கமாக இருக்கும் இந்த கோல்ப் மைதானமும் டாடண்டர் நகரமும் அரசின் வர்க்க சார்பைக் காட்டி நிற்கின்றன.

இச்சாதிய சமூகத்தில் தீண்டாமை, சாதிய ஒடுக்குமுறையிலிருந்து மீண்டெழுந்து பொது நீரோட்டத்தில் கலந்து வாழ முற்படும் இச்சமூக மக்களின் முன்னேற்றத்தை நசுக்குவதாகவே அரசின் இப்பொருளாதார நடவடிக்கை அமைந்திருக்கிறது. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியும் முதலாளித்துவ பொருளாதாரமும் இச்சாதிய சமூக ஏற்றத்தாழ்விற்கு வலுசேர்ப்பதாகவே இருக்கிறது. கிராமப்புறங்களிலிருந்து நகரம் நோக்கி இடம்பெயரும் நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் தலித்மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, குறிப்பாக நகர்ப்புறத்தில் வளர்ச்சி என்ற பெயரில் நிகழ்த்தப்படும் வர்க்க சுரண்டலில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களே முதலில் பலிபீடத்தில் ஏற்றப்படுகின்றனர். சென்னை நகரத்தில் உள்ள ஒட்டுமொத்த குடிசைப்பகுதியில் வாழும் தலித் மக்கள் உள்ளிட்ட பின்தங்கிய சமூகப் பிரிவினர் அனைவருக்கும், நிரந்தர வீடு, நிரந்தர வேலை, சுயமரியாதையான வாழ்வு, ஆகியவையே முதன்மையான கோரிக்கையாக இருக்கிறது. இதற்கான வலுமிக்க போராட்டத்தை நடத்தவேண்டியிருக்கிறது. நகர்ப்புற தலித் மக்களின் போராட்டமானது சாதி ஒழிப்பு இயக்கத்தின் பகுதியாகவும் அமைகிறது.

இதன் அடிப்படையில் இச்சிக்கலின் ஆழத்தை உணர்ந்து திடீர் நகர், மக்கீஸ் கார்டன் உள்ளிட்ட குடிசைப்பகுதி தலித் மக்களின் போராட்டத்திற்கு வலுசேர்த்து, கரையோர மக்களுக்கான வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும் பணியை சனநாயக சக்திகள், அம்பேத்கரிய, பெரியாரிய, இடதுசாரி இயக்கங்கள் முன்னெடுக்க வேண்டியது அவசியம்.

ரமணி, சாதி ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு இளைஞர் இயக்கம் அமைப்பைச் சேர்ந்தவர். தொடர்புக்கு…aruvi1967@gmail.com.

படங்கள் நன்றி: தயாளன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.