அன்புசெல்வம்

இந்திய பொருளாதாரம் கடுமையான சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவில் 5.7% சரிந்திருப்பதை மத்திய புள்ளியியல் துறை தெரிவித்த பிறகு பொருளாதாரம் குறித்தான செய்திகள் முக்கிய விவாதமாகியுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 49 ரூபாய் கூடியதுமே ஏதாவது ஒரு வகையில் அந்த சுமை நாட்டு மக்களின் மீது ஏற்றப்படலாம் என்கிற அச்சம் பாமர மக்களிடமும் வந்து விட்டது. இனி விலைவாசி கட்டுக்குள் இருக்குமா என்பதற்கு உத்தரவாதம் எதுவும் இல்லை.
உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கம் முக்கியக் காரணம் என்பதால் மோடிக்கு எதிரான விமர்சனங்கள் அதிகமாகியுள்ளது. இன்னொரு பக்கம் அருண் ஜெட்லிக்கு எதிராக சுப்ரமணியம் சாமி, யஷ்வந்த சின்ஹா போன்றோரின் விமர்சனங்கள் பாஜக -வின் உட்கட்சி விவகாரம் என மேலோட்டமாக சொல்லப்படுவதும் நம்புவதற்கில்லை. அதிலும் சுதேசிய – சர்வ தேசிய பொருளாதர அரசியல் இருக்கிறது. உள்நாட்டு உற்பத்தியிலும், வேளாண்மையிலும் மிகவும் பின் தங்கியிருப்பதைக் குறித்து கவலைப்படாமல், இங்கே பிரச்சனைகள் வந்த போதெல்லாம் அதை சமாளிப்பதற்காகவே மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் அமைந்தன. பொருளாதாரச் சரிவை சரி செய்வதற்கான பயணம் அல்ல என்பதும் உறுதியாகத் தெரிகிறது.
2003 -ல் காங்குனில் (மெக்சிகோ) நடந்த 148 நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் மாநாட்டின் முக்கிய விவாதமே “வளர்ந்த நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகள், வளரும் நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகளோடு ஒத்துப் போகாது” என்பது தான். தென் கொரியா அந்த மாநாட்டை கடுமையாக எதிர்த்தது. அன்றைக்கு அதில் பங்கேற்ற அருண் ஜேட்லி அது ஒத்துப் போகும், WTO கை கொடுக்கும் என்று அபாரமாக நம்பினார். இருந்தாலும் பாஜக -விடம் ஒரு எதிர் பார்ப்பு கூடவே இருந்தது. அது மேக் இன் இந்தியா என்கிற சுதேசியம். ஆனால் அது கூட வளர்ந்த நாடுகளுக்கும், அம்பானி, அதானி போன்ற தனி நபர்களுக்கும் தான் சாதகமாகியுள்ளது.
வேறென்ன தான் நடந்தது? உள்நாட்டளவில் பாஜக கட்சியை வலுப்படுத்துவதும், சர்வதேச அளவில் மோடி புகழ் பாஜக என்பதை நிறுவுவதும், அதற்கான ஒப்பந்தங்களும், பயணங்களும் மட்டுமே கடந்த மூன்றாண்டுகளில் நடந்திருக்கிறது. இந்த அணுகுமுறை 2019 தேர்தலுக்கு நிச்சயம் பயனளிக்காது. பயனளிக்கவில்லை என்றால் வேறு வழியில்லை, ஜனாதிபதி வசம், தேர்தலற்ற Dictatorship ஆட்சி தான் பாஜக -வின் தீர்வாக இருக்கும். அதற்கு இத்தகைய பலவீனமான பொருளாதார பிரச்சனைகளும், இன்னும் சில பிரச்சனைகளும் முக்கிய அம்சமாக தேவைப்படலாம்.
அன்புசெல்வம் எழுத்தாளர், சமூக செயல்பாட்டாளர்.
முகப்புப் படம்: Animal Farm by George Orwell