
கே. ஏ. பத்மஜா
U Turn | Pawan Kumar | Kannada | 2016
மெர்சி எனும் உன்னத ஆன்மா இந்த உலகை விட்டு நீங்கியதற்கு அஞ்சலி செலுத்திவிட்டு கனத்த இதயத்துடனும், குழப்பமான மனநிலையுடனும் ஆக்ட்டிவாவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். அப்போது எதிர்பாராத விதமாய் நடுரோட்டில் கிடந்த ஒரு பெரிய கல்லில் வண்டி ஏறியது. அடுத்த நொடி நான் தரையில் ரத்த காயங்களுடன் கிடந்தேன். உதவிக்கு யாரும் இல்லாத தனிமையான சாலை. ஒரு வழியாக சமாளித்தேன். மருத்துவமனையில் முதல் உதவிக்கு பின் ஒரு வாரகாலம் கட்டாய ஓய்வு என்ற நிலையில், நான் விழ காரணமாய் இருந்த அந்தக் கல்லை அகற்றாமல் வந்தது நினைவு வர, மறுநாள் அந்தக் கல்லை அகற்றச் சென்றேன். நான் விழுந்த இடம் குறிப்பாய் மறந்து போனதும், அந்த இடத்தில எந்தக் கல்லும் இல்லாததும் அதிகக் குழப்பம் தந்தது. இந்த குழப்பத்திலும், ஓய்விலும், வலியிலும் நேரத்தைக் கடத்திக்கொண்டிருந்தபோது பார்த்த படம்தான் ‘யூ-டர்ன்’.
பவன் குமார் இயக்கத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், திலிப் ராஜ், ராதிகா சேத்தன் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த கன்னட த்ரில்லர் திரைப்படம் ‘யூ-டர்ன்’. பெங்களூர் மேம்பாலம்; அதில் பயணிக்கும் பயணிகள் சிலரின் அத்துமீறல்களும், அதைத் தொடர்ந்து நடக்கும் கொலைகளுக்கான காரணத்தைக் கண்டுபிடிப்பதுதான் கதை.
ரட்சானா (ஷ்ரத்தா ஸ்ரீநாத்) ஒரு பிரபல நாளிதழில் பணிபுரிகிறார். தன்னுடைய சுய ஆர்வத்தில் பெங்களூர் மேம்பாலத்தில் போக்குவரத்தில் சிக்காமல் இருக்க குறுக்கு வழியை பயன்படுத்தும் பயணிகளை கண்காணித்து அவர்களை பேட்டி எடுக்க முயற்சிக்கிறார். இதற்கு அவள் காதலனும், நண்பனும் தேவையான உதவிகளை செய்கின்றனர். ஒரு தற்கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்படும் ரட்சனா தான் நிரபராதி என நிரூபிக்க முயற்சி செய்கையில், அந்த மேம்பாலத்தை கடந்தவர்கள் என்று அவள் வைத்திருக்கும் குறிப்பில் இருக்கும் அனைத்து நபரும் அந்தக் கல்லை நகற்றி மேம்பாலத்தை கடந்த அதே நாளில் தற்கொலை செய்துகொண்டதாக காவல் பதிவேட்டில் இருப்பதைப் பார்த்ததும் காவல்துறையின் மொத்த சந்தேகமும் ராட்சனா மேல் குவியும். அவர்கள் அனைவரும் இறந்துள்ளனர் என்பது ரட்சனாவிற்கும் பெரும் அதிர்ச்சியை தரும். யாருக்கும் தெரியாமல் ஒரே ஒரு காவல் அதிகாரியின் துணையுடன் அந்த மேம்பாலத்தின் கல்லைக் கடக்க முயல்பவர்கள் தொடர் மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிப்பதும், அதன் பின் நிகழ்வதும்தான் படம்.
ரட்சனா கதாபாத்திரத்தில் கெத்து பத்திரிகையாளராய், துணிச்சலான பெண்ணாய் தன்னை வெளிப்படுத்தி இருப்பார் ஷர்ரதா ஸ்ரீநாத். ஒரு நாளில் பல ஆயிரம் பேர் கடந்து செல்லும் பாதையில் விபத்துகள் நடப்பது சாதாரணம் என்று கண்டுகொள்ளாமல் செல்லும் பல பேருக்கு மத்தியில் ரட்சனா மட்டும் அதற்கான காரணங்களை தேடுவதும் அதற்காக மெனக்கெடுவதும் அவளோடு சேர்ந்து நமக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும்.
ஏதோ பிடிக்கப் போய் பூதம் பிடித்தக் கதையா போச்சு என்பதை போல் விபத்திற்கான காரணம் தேடிப் போக எல்லோர் சாவிற்கும் ரட்சணவிற்கும் தொடர்பு இருக்குமோ என்று காவல்துறை சந்தேகப்படும் நிலைக்கு தள்ளப்படுவாள், பல கட்ட விசாரணையில் வெறும் தற்கொலை என்று எல்லா வழக்கையும் முடிவுக்கு கொண்டுவரும் அதிகாரிகளை பார்க்கும்போது. சமீபத்தில் அனிதா தற்கொலைக்கு பின்னால் இருக்கும் படுகொலைத் தூண்டலை யாரும் கண்டுக் கொள்ளாததும், அதை வெறும் தற்கொலை என வழக்கு பதிந்த அதிகாரிகளின் மேம்போக்குத் தனமும் நினைவில் வந்து எரிச்சல் ஊட்டுகிறது.
துணை அதிகாரி நாயக் மட்டும் இந்த தற்கொலையில் இருக்கும் மர்மத்தை புரிந்துகொண்டு ரட்சனாவிற்கு துணையாய் இருப்பார். தனக்கு உதவிய சாலையோர நாடோடி தன்னால் காவல்துறையிடம் மாட்டிக்கொண்டு அடிவாங்கியதை நினைத்து வறுத்தப்பட்டு மறுநாள் அவரிடம் மன்னிப்பு கேட்பாள். எந்தச் சூழலிலும் தொடர் சாவிற்கும் கல்லிற்கும் இருக்கும் மர்மத் தொடர்பை புரிந்துகொள்ள முடியாத ரட்சனா தானே அந்தக் கல்லை நகற்றி, உண்மை தெரிய தன்னை பலியாக்க துணிவாள்.
ஆம், அனிதா போன்று தங்கள் உயிரை பணயம் வைத்துதான் பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டியது இருக்கிறது. மேம்பால மரணத்திற்கு தன் காதலன் காரணம் என்று தெரியும்போது அவள் பதறுவாள்; இருந்தும் உண்மைக்காய் நிற்க முடிவு எடுப்பாள். இறுதியில் தன் காதலன் காரணம் இல்லை என்று தெரியும்போது, உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க துணிச்சலாக முடிவெடுப்பாள்.
“கர்மா” என்று எல்லாம் ஒன்று உலகத்தில் கிடையவே கிடையாது என்று முகப்புத்தகத்தில் ஒரு குழுவில் விளக்கமும், விவாதமும் இருந்ததாக என்னுடைய தோழி ஒருத்தி என்னிடம் சொல்லி எனது கருத்தைக் கேட்டாள். அவளிடம், “கர்மமோ, கர்மாவோ உண்டா இல்லையானு தெரியாது; ஆனா நாம ஒரு தப்பு செஞ்சா, அது நம்மை சுற்றி இருக்கிறவர்களை பாதிக்கும். நம்மை சுற்றி இருக்கிறவர்கள் அடையும் பாதிப்பு நம்மையும் தாக்கும். எனவே, நம்ம செய்ற தப்பு நிச்சயம் நம்மை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கும். அதுக்கு பேர் என்ன கர்மம்னாலும் வச்சுக்கலாம்” என்றேன். யூ-டர்ன் படத்தில் ரட்சனா மூலம் வெளிப்பட்ட உண்மையும் இதுதான்!
உணர்ச்சிப்பூர்வமாக எழுதியிருக்கிறார்.தனிப்பட்ட ஈடுபாட்டோடு எழுதியிருப்பது போல தெரிகிறது, வாழ்த்துகள்.
LikeLike