
காவிரியின் குறுக்கே மேகேதாட்டு என்ற பகுதியில் புதிதாக அணை கட்டுகிற கர்நாடக அரசின் முயற்சிக்கு, தமிழக அரசு மறைமுகமாக இசைவு தெரிவித்துள்ளது, காவிரி சமவெளிப் பாசனத்தை நம்பியுள்ள லட்ச்சக்கணக்கான விவசாயிகளுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. கட்டப்போகிற இந்த புதிய அணையை கர்நாடக அரசு கட்டுப்படுத்தக் கூடாது, மாறாக (மூன்றாம் நபர்)சுயாதீன பொறியமைப்பின் கீழ் அணை மீதான கண்காணிப்பும் கட்டுப்பாடும் இருந்தால், தமிழகத்திற்கு வேண்டிய நீரை அது தருமானால், புதிய அணை கட்டுவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என தமிழக அரசுதரப்பு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்கள்.
தமிழக அரசு தரப்பு வழக்கறிகளின் இந்த யோசனையானது, உண்மையிலேயே வேலியில் போகிற ஓணானை எடுத்து வேட்டியில் விட்ட கதையை ஒத்துள்ளது. கர்நாடக எல்லைக்குள்ளாக சுமார் 320 கி மி ஓடுகிற காவிரியின் குறுக்கு நான்கு பெரும் அணைகள் கட்டியுள்ள கர்நாடக அரசு, பெரும்பாலும் இந்த அணைகளின் வழியே, மேட்டூருக்கு உபரி நீரை மட்டுமே திறந்துவிடகிறது. மாறாக காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படியான, நீர் பங்கீட்டை செய்தததில்லை என்பதை நமது வழக்கறிஞர்கள் சுலபமாக மறந்து விட்டனர் போலும். மேலும் கர்நாடக எல்லைக்குள்ளாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மலையில் வேகமாக காடுகள் அழிக்கப்பட்டு காபித் தோட்டங்கள் பயிர் செய்வதைக் கூட தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சுட்டிக் காட்டலாம்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியை முறையாக காப்பாற்றவில்லை எனில் காவிரி பாசனத்தை நம்பியுள்ள அனைத்து மாநில மக்களின் நிலை அதோகதிதான் என்ற எதார்த்த உண்மையை ஆணித்தனமாக சுட்டிக் கட்டி, புதிய அணை கட்டுவதால் ஏற்படுகிற இழப்பை குறிப்பிட்டாலே போதுமானது.மேலும் கர்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து வருகிற உபரி நீரும் ,கிருஷ்ணசாகர் அணையில் இருந்தும் வருகிற உபரி நீரும் ஒன்றுகலந்துதான் மேகதாட்டு வழியாக மேட்டூர் வந்தடைகிறது. இவ்வாறு வருவதால்தான் 93 TMC என்ற கொள்ளளவில் மேட்டூர் அணையில் நீர் தேக்கப் பட்டு,கல்லணை வழியாக காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் வழியே காவிரி டெல்ட்டாவிற்கு நீர் விநியோகிக்கப் படுகிறது.
ஆக,மேட்டூர் அணையில், தமிழகத்திற்கு காவிரி நீர் வரத்தின் தொடக்கப் புள்ளியில், நீர் வரத்து குறையுமானால், ஒட்டுமொத்த காவிரி டெல்டாவிற்கும் நீர் கிடைக்காது. கிருஷ்ணசாகர் நீரையும், கபினி நீரையும் சேர்ந்து தமிழகத்தை நோக்கி ஓடி வருகிற காவிரியின் குறுக்கு ஆடு தாண்டுகிற அகலத்தில் (மேக்கா -ஆடு,தாடு-தாண்டு) குறுகலாகுகிற காவிரியின் குறுக்கு அணை கட்டி தமிழகத்திற்கு வருகிற நீரை கர்நாடக அரசு தடுத்துவிட்டால், தமிழக காவிரி டெல்ட்டாவே சீர்குலையும்.
காவிரி என்பது நீர் ஓடிவருகிற ஆறு மட்டுமல்ல, அது பல ஆயிரம் ஆண்டுகளாக மக்களுடன் ஒன்றுகலந்துள்ள ஜீவனாக உள்ளது. இந்த ஆற்றங்கரையோரம் தழைத்த மக்களின் வாழ்வாதாரம் மட்டும்மல்ல, அம்மக்களின் பண்பாடிற்கும் ஆதாரமாக உள்ளது.
எப்போது இந்த ஆறு, பெரும் அணைகள் ஊடாக மையப் படுத்துப் பட்டு, நீர் பங்கீடுகள் கட்டுப்படுத்தப் பட்டதோ, அன்று முதல் ஒட்டுமொத டெல்ட்டா விவசாயிகள் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். ஆறுக்கும் மக்களுக்குமான உறவை, அணைகளை மேலாண்மை செய்கிற அதிகாரி வர்க்கத்தின் ஒற்றை தீர்மானங்கள் கிழித்துப் போட்டது! தற்போது நீதிமன்றங்கள் அதை செய்து வருகிறது. வழக்கறிஞர்கள் இந்த சிக்கலை மேலும் மோசமாக்கி வருகின்றனர்.

உலகமயம், தாராளமயம் ,தனியார் மயத்திற்கு முன்புவரை நிலச் சீர்திருத்தத்தை முறையாக மேற்கொள்ளாமை, பசுமைப் புரட்சி போன்ற காரணிகள் உழவர்களை விவசாயத்தை விட்டி வெளியேற்றியது. 90 களுக்கு பின்பு விவசாய உற்பத்தி பொருளின் வீழ்ச்சி, பாசன வசதிகளின் பராமரிப்பின்மை என்ற சிக்கல்களும் சேர்ந்து கொள்ள, இதோடு காடழிப்பு, காலநிலை மாற்றத்தால் பருவம் தப்பிய பருவமழையும் கூடுதல் காரணியாக ஒட்டுமொத்த கிராமப் பொருளாதாரமும் பெரும் குலைவை நோக்கி சென்றுகொண்டுள்ளது. கிராமங்கள் காலியாகி வருகிறது. உயிரற்ற உடல்கள் அங்கு அலைந்துகொண்டுள்ளது. நகரங்களின் மக்கள் நிரம்பி வழிகின்றனர்.
ஒரு ஏக்கர் அரை ஏக்கர் வைத்துள்ள விவசாயிகள் தினக் கூலிகளாக நகரத்தில் அலைந்து திருகின்றனர். கிராமத்திற்கும் நகரத்திற்குமான முரண்பாடு மீட்கமுடியாது எல்லைக்கு சென்றுகொள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் இப்போக்கு தீவிரம் பெற்றுள்ளது. இந்த சூழலில் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல தமிழக அரசின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைக்கிற தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் அப்பட்டமான ஜனநாயக விரோத நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆட்சி அதிகார பேர நாடகத்தில் மும்முரம் காட்டுகிற கும்பல்கள், தமிழக மக்களை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்துகின்றனர்.
காவிரி நடுவர் மன்றம், காவிரி மேலாண்மைக் குழு, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் போன்ற அதிகாரப்பூர்வ அலுவல் இயந்திரங்களாலும், மைய முதலாளிய அரசாலும் இதுபோன்ற நீர் உரிமைக்கான பிரச்சனைகளுக்கு (அறிவியல் பூர்வ அணுகுமுறை மற்றும் தேசிய சிக்கலாக உருவாகிற வாய்ப்புகள் குறித்த எச்சரிக்கை உணர்வுடன்)நீண்டகால தீர்வினை தெளிவாக முன்வைக்க இயலாத/முயலாத தன்மைகள் அம்பலப்பட்டுவருகிறது.
வரவுள்ள கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துக்கொள்வது, ஆட்சியை கைப்பற்றுவதற்கு பாஜக முயல்வது போன்ற காரணங்களுக்கு தேர்தல் ஓட்டுவங்கி அரசியலுக்கு காவிரிநீர்பங்கீட்டு விவகாரம் பெரும் வாய்ப்பாக திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. ஆனால், இந்த மோசமான நடைமுறைகளுக்கு நாம் கொடுக்கிற விலையோ பெரிதாக உள்ளது!