பீட்டர் துரைராஜ்

மிளிர் கல் நாவலாசிரியரும், எரியும் பனிக்காடு( நாவல்), தூக்கிலிடுபவரின் குறிப்புகள் போன்ற நூட்களின் மொழிபெயர்ப்பாளருமான இரா.முருகவேளின் சமீபத்திய நாவல் முகிலினி. ஒன்றுபட்ட கோயமுத்தூர் மாவட்டத்தின் 60 ஆண்டுகால வரலாற்றை , வாழ்வியலை, அரசியலை சுவாரசியமாகச் சொல்லுவதுதான் இந்த நாவல்.
காமராசர் ஆட்சி காலத்தில் இத்தாலி நாட்டு கம்பெனி ஒன்றின் உதவியோடு டெக்கான் ரேயான் என்கிற செயற்கை இழை தயாரிக்கும் ஆலையை கஸ்தூரிராஜா நிறுவுவதில் (1953) கதை தொடங்குகிறது. அவருடைய மகன், பேரன் காலம் வரை கதை நீள்கிறது. கம்பெனி விரிவாக்கம், பங்குதாரர் மாறுதல், மேலாண்மை மாறுதல், கம்பெனி பாவானி ஆற்றை பாழ்படுத்துதல், ஆலை மூடுதல், புது ஆலை வேறு இடத்தில் தொடங்குதல் என பல நிலைகளில் கதை செல்லுகிறது. எந்த அரசாக இருந்தாலும், எந்த சூழலாக இருந்தாலும் அதனை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளுவதில் முதலாளிகளுக்கு எந்தத் தடங்கல்களும் இல்லை. கால ஓட்டத்திற்கு தகுந்தாற் போல ஆலையை விரிவுபடுத்துகிறார்கள்; விற்கிறார்கள்; தொழிலை மாற்றுகிறார்கள் முதலாளித்துத்தின் பலத்தை, அதன் தொடர்பை, அரசியலை கதையாகச் சொல்லுகிறார் இரா.முருகவேள்.
ஆரோன் என்பவன் ஆலையின் தொழிலாளியாக, தொழிற்சங்க தலைவராக , கம்யூனிஸ்டாக மாறுகிறான். ஆனால் பணத்தை சேமிக்கத் தெரியாததால் ஆலை மூடலினால் இவரது குடும்பம் சிதைகிறது. எவ்வளவுதான் அரசியல் உணர்வு பெற்று இருந்தாலும் இவரது வாரிசுகள் இவரது அரசியலைப் பேசவில்லை. கால ஓடத்தை இந்த தொழிலாளியால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆலையில் இடைநிலை நிர்வாகியாக பணி புரியும் ராஜூவிலிருந்து அவரது அடுத்த இரண்டு தலைமுறை வரை கதையில் இருக்கிறார்கள். ராஜூ சுத்தமான பாவானி ஆற்றில் குடும்பத்தோடு விளையாடுகிறார்.
பாவானி என்ற சமஸ்கிருத பெயர் பிடிக்காமல் அந்த ஆற்றுக்கு முகிலினி என்ற அழகுத் தமிழைச் சூட்டி மகிழ்கிறார்..அதைச்சுற்றித்தான் இந்த நாவல் இறுதிவரை செல்லுகிறது. இன்னொரு பக்கம் ஆலைக்காக தங்கள் நிலத்தைக் கொடுத்த மாரிமுத்து வாயிலாக இன்னொரு தளத்திலும் கதை இயங்குகிறது. பவானி ஆறு ஆலையால் மாசு படுகிறது. கிராம மக்களைப் பாதிக்கிறது. வலுவான போராட்டங்களுக்குப் பிறகு ஆலை மூடப்படுகிறது. இதற்கான முதல் குரலை இடதுசாரி இளைஞர்கள்தாம் கொடுக்கிறார்கள். ஆறு மாசுபடுகையில் தொழிலாளி கண்டு கொள்ளவில்லை. ஆலை மூடப்படுகையில் கிராம மக்கள் கண்டுகொள்ளவில்லை. இவையிரண்டு செயல்களுக்கும் ஒத்திசைவு வேண்டுமா ? வேண்டாமா இது முருகவேள் எழுப்பும் கேள்வி .
ராஜூவின் பேரன் கௌதம் ரேயான் ஆலையின் கழிவால் பாதிக்கப்பட்ட கிராமத்தைச் சார்ந்தவன். ஆலை மூடலுக்கு எதிரான இயக்கத்தை , வழக்கை நடத்தும் அற்புதமான பாத்திரம். ஆலையால் வாழ்வாதாரம் இழந்த சந்துரு அதே ஆலையின் பொருட்களை களவாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். ஒரு கட்டத்தில் அதன் தொடர்ச்சியான கொலையில் சிக்குகிறான். அவனை நெறிப்படுத்தி சமூக வாழ்க்கைக்கு உந்தித் தள்ளும் பொறுப்பேற்றுக் கொள்கிறான் கௌதம். இந்தக் கொலை வழக்கு நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது.
நாவலிடையே சினிமா வருகிறது, இயற்கை விவசாயம் வருகிறது, உண்மையான வரலாற்றுப் பாத்திரங்கள் வருகின்றன. பல்வேறு தத்துவங்கள், விவாதங்கள், சம்பவங்கள் என கதை சுவாரசியமாக இறுதிவரை செல்கிறது . 2016 ஆண்டின் சிறந்த நாவல் விருதை எல்லா அமைப்புகளும் இதற்கு தரும் என்பது என் எண்ணம். இந்நாவல் பண்பாட்டுத் தளத்தில் ஒரு தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும். நாவல் உலகில் ஒரு முக்கிய இடத்தைப்பெறும். சகல பகுதி மக்களும் இதனைப் படிக்க வேண்டும்.
பொன்னுலகம் பதிப்பகம் / திருப்பூர்- 641 603 / ரூ.375 / பக்கம் 487.