உயிர்மை இதழ் வருடந்தோறும் வழங்கி வரும் ‘சுஜாதா’ பெயரிலான விருதுகளை அறிவித்துள்ளது. விருதுக்குப் பின்னால் சர்ச்சைகள் கிளம்புவதுபோல் ‘சுஜாதா விருது’ அறிவிப்பையொட்டி இலக்கியவாதிகள் சில கருத்துகளை முன்வைக்க, அது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
எழுத்தாளர் மாலதி மைத்ரி தன்னுடைய முகநூல் பதிவில்
“சுஜாத்தா பெயரில் பெரும் பார்ப்பனப் பத்திரிகை விருதுக் கொடுக்கலாம். தீவிர இலக்கிய பகுத்தறிவு பங்காளின்னு சொல்லிக்கொள்ளும் நபர் கொடுப்பதற்கு பெயர் பார்ப்பனிய காவடி அரசியல்.
அதைவிட சக பெண்படைப்பாளியை ஆபாசமாக திட்டி எழுதிய மனுஷ்ய புத்திரனுடன் நட்புப் பாராட்டும் நூலைப் போடும் பெண்களின் பொதுவெளி நோக்கி எழும் பெண்ணிய அறச்சீற்றத்தைத்தைத்தான் தாங்க முடியல.
ஒரு பதிப்பகமும் விருது கடையும் அரசியல் கட்சியும் அதிகாரமும் இருந்தால் டயரை வணங்க அறிஜீவிகளும் தயார். சும்மா ஊருக்கு இளைத்த அம்மா அடிமைகளை கரித்துக் கொட்டி நம்மை யோக்கியவனா புனிதனா எவ்வளவு காலம்தான் பிலிம் காட்டறது.” என எழுதியுள்ளார்.
அதுபோல கருப்புப் பிரதிகள் பதிப்பகத்தின் வெளியீட்டாளர் கருப்பு நீலகண்டன்:
பார்ப்பன உணர்வோடே
தன் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டு
பார்ப்பன சங்க மாநாட்டில் கூட பங்கேற்று தன்னை பார்ப்பனராகவே
பிரகடனப்படுத்திக் கொண்டு
எழுதி இயங்கி மாண்ட புனைகதையாளர் சுஜாதாவின் பெயரிலான விருதை வாங்குவதற்கு பெருமிதமும் வாங்க இயலாமைக்கு பொச்சரிப்புமாய் இருக்கிறது
நமது சமகால எழுத்தாளர்களின் பதிவுகள்.
நேற்று ஒரு புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றபோது ஆய்வாளர், காவலரைப் பார்த்து
‘ரைட்டர் எங்கப்பா’ என்ற
போது என்னவோ போலிருந்த அந்த உணர்வு இப்போதும் கமறலாக எழுகிறது” என கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
எழுத்தாளர் சரவணகார்த்திகேயன் இந்த கருத்துகளுக்கு பதிலளிக்கும்விதமாக,
“சுஜாதா என்ற பிராமணர் பெயரிலான விருதை பகுத்தறிவை முன்வைக்கும் உயிர்மை எப்படிக் கொடுக்கலாம் என கவிஞ்ஞர் மாலதி மைத்ரி கேள்வி எழுப்பி இருக்கிறார். (அவரது கணிணி விசைப்பலகை ‘சுஜாத்தா’ என்று தான்தோன்றித்தனமாய் தட்டச்சியது போல் என்னுடையதும் ‘கவிஞ்ஞர்’ என்று தட்டச்சி விட்டது. பலகையைக் கொஞ்சம் கண்டித்து வளர்த்ததால் பெயரில் அல்லாமல் அடைமொழியில் மட்டும் பிழை செய்திருக்கிறது.)
சுஜாதா தன் இறுதி ஆண்டுகளில் முந்தைய காலத்தை விட கூடுதலாகத் தன்னை ஒரு வைஷ்ணவராக உணர்ந்தார் என்பது உண்மையே. அதை வெப்படுத்தவும் செய்தார். பிராமணர் சங்க விழாவில் பங்கெடுத்ததும் நடந்தது. அது வயோதிகத்தின் நெகிழ்வு. ஆனால் அவரது எழுத்தில் எப்போதேனும் பிராமணியத்தையோ சாதிய வன்மத்தையோ வெளிப்படுத்தியதைச் சுட்ட முடியுமா? இன்னும் சொல்லப் போனால் அசோகமித்திரன் பிராமணர்கள் ஒடுக்கப்படுவதாக ஆதங்கப்பட்டதைப் போல் கூட சுஜாதா எழுதினாரில்லை. பிறகேன் அவரைப் பிராமண அடையாளத்துக்குள் போட்டு அடைக்க வேண்டும்?
அப்பதிவில் ஒருவர் காலச்சுவடு பதிப்பகத்தில் தலித் எழுத்தாளர்கள் பங்கெடுப்பதைச் சுட்டியதற்கு “ஊடகங்கள் பதிப்பகங்கள் பெரும்பாலும் பார்ப்பனர் நடத்தும் பார்ப்பன சார்போடுதான் இயங்குகின்றன. அதில் குறைந்தப்பட்ச அறத்தோடு இயங்கும் வெளியை நாம் பயன்படுத்தலாம். ஆனால் அவர்களின் அரசியலுக்கு பலியாடுகளாக மாறக்கூடாது.” என்று மாலதி மைத்ரி விளக்கம் சொல்கிறார். அது நிச்சயம் ஏற்கத்தக்க, சரியான கருத்து தான்.
ஆக, நிறுவனத்தை நடத்துபவர் பிராமணராக இருப்பதோ, விருதின் பெயரில் பிராமணர் இருப்பதோ பிரச்சனை அல்ல; மாறாக அவர்கள் அதில் பிராமணியத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்களா என்பதே முக்கியமானது. அந்தத் தெளிவு உள்ளவர் பிராமணர் பெயரிலான விருது என்ற சவலையான குற்றாச்சாட்டை சுஜாதா விருதின் மீது வைக்க வேண்டியதில்லையே!
இந்த விருதுகளுக்குக் கண்மூடித்தனமாகக் கைத்தட்ட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. உலகில் எல்லா விஷயங்களுமே விமர்சனத்துக்கும் மறுஆய்வுக்கும் உட்பட்டவையே. எப்போதும் எதுவுமே புனிதம் இல்லை. ஆனால் எதிர்வினையாய் எதையாவது சொல்ல வேண்டும் என்று போகிற போக்கில் அடித்து விடுவதை நல்ல படைப்பாளிகள் கூடச் செய்வது தான் ஆதங்கம் அளிக்கிறது” என்கிறார்.