போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை பாலியல் ரீதியாக சீண்டிய உதவி ஆய்வாளர்; தட்டிக்கேட்டவர்கள் மீது தடியடி நடத்தியதன் பின்னணி!

சென்னை மேடவாக்கத்தில் பள்ளிக் கரணை காவல்துறையினர் நடத்திய கொடூரத் தாக்குதலை கண்டித்து ஜனவரி 4ம்தேதி அன்று கண்டன இயக்கம் நடத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஞாயிறன்று சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்தித்தார். அப்போது வழங்கிய அறிக்கை:

பாஜக தலைமையிலான மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்து 50 நாட்களாகியும் பணத் தட்டுப்பாடு தீரவில்லை. மத்திய அரசின்தவறான நடவடிக்கையை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 31.12.2016 அன்று சென்னை, மேடவாக்கம் – மாம்பாக்கம் சாலை சந்திப்பில் ஆர்ப்பாட்டம்நடத்தி உள்ளனர்.

தாக்குதலுக்கு இதுதான் காரணம்!

அப்போது பள்ளிக் கரணை காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரவி போராட்டத்தில் பங்கெடுத்த இளம்பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டி வன் முறையில் ஈடுபட்டுள்ளார். இந்தச்செயலை கண்டித்த வாலிபர் சங்கத் தோழர்கள் அனீஷ், ஹனீபா, சந்தீப் ரெட்டி, பாலகிருஷ்ணன், ஜெயவேல், அழகேசன், ஜெயகுமார், செல்வகுமார் ஆகியோரை கடுமையாக காவல்துறை தாக்கியதுடன், போலீஸ் வாகனத்தில் ஏற்றி, எங்கும் நிறுத்தாமல் வாகனத்திற்குள் வைத்தே லத்தியாலும், துப்பாக்கியாலும் கடுமையாக தாக்கியுள்ளனர். போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று கூட தெரிவிக்காத நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இதர தோழர்கள் அனைவரையும் காவல்துறை கைது செய்துள்ளது.

மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த வாலிபர் சங்க தென்சென்னை மாவட்டச் செயலாளரை தனியாக போலீசார் அழைத்து சென்றுள்ளனர். எதற்காக காவல்துறை இத்தகைய தாக்குதலை வாலிபர்கள் மீது தொடுத்துள்ளது. மாவட்டச் செயலாளரை ஏன் தனியாக அழைத்துச் சென்றது? என்ற விவரம் தெரியாத நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கே. வனஜகுமாரி, ஆர்.வெள்ளைச் சாமி, ஜி.செல்வா, எஸ்.குமார், எம்.குமார்,வாலிபர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் தீபா மற்றும் மாதர், ஆட்டோ, மாணவர் சங்கத் தோழர்கள் உள்ளிட்டு 200க்கும் அதிகமானோர், வாலிபர்களை அடைத்து வைத்திருந்த மண்டபத்திற்கு சென்றுள்ளனர்.

போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட 9 தோழர்கள் எங்கே உள்ளனர், அவர் களை நாங்கள் பார்க்க வேண்டும் என்று உதவி ஆணையர் கோவிந்தராஜூ-விடம் கேட்டுள்ளனர். காவல்துறையினர் 9 பேர் குறித்த எந்த தகவலையும் தெரிவிக்காமல் செய்தி அறிய சென்றவர்கள் மீதே தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளது.அச்சமயம் எங்கோ இருந்து 4 வாகனங்களில் காவலர்களுடன் வந்த பள்ளிக்கரணை ஆய்வாளர் நட்ராஜ் மற்றும் போலீசார் அனைவரும் காட்டுமிராண்டித்தனமாக அங்கு திரண்டிருந்த வாலிபர், மாணவர், இயக்கத்தினர் மீது கடுமையாக தடியடி தாக்குதல் நடத்தியுள்ளனர். சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள், அருகமை கடைகளில் இருந்தவர்களையும் இழுத்துப் போட்டு போலீசார் தாக்கியுள்ளனர்.

அரைகிலோ மீட்டர் தூரம் வரைபொதுமக்களை விரட்டி விரட்டி போலீசார் தாக்கியுள்ளனர். அவ்வழியாக சென்ற வாகனங்கள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனங்கள் அனைத்தையும் காவல்துறையினரே அடித்து நொறுக்கியுள்ளனர். எதற்காக காவல்துறையினர் வாகனத்தை, காவல்துறையினரே அடித்து உடைக்கின்றனர் என்று அங்கிருந்த சில பொதுமக்கள் வினவியபோது காவல்துறையினர் அவர்களையும் விரட்டியுள்ளனர்.

நிருபர் மீது தாக்குதல்

இச்செய்தியை சேகரித்துக் கொண்டிருந்த பத்திரிகை நிருபர், குறிப்பாக தீக்கதிர்நிருபரை போலீசார், பலவந்தமாக கேமிராவை பிடுங்கி குறிவைத்து தாக்கியுள்ளனர். காவல்துறை பிடுங்கிச் சென்ற கேமராவை பத்திரிகையாளர்களின் போராட் டத்தை தொடர்ந்து இரவு 2.30 மணிக்கு கொடுத்துள்ளனர். கேமராவில் இருந்ததடியடி சம்பந்தப்பட்ட புகைப்படங்களை அழித்துள்ளனர். இது பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கையாகும். இதனைச் செய்த காவல்துறையினர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

தாக்குதலுக்குள்ளான பலர் மருத்துவமனையில் அனுமதி

இந்த தாக்குதலில் போராட்டத்தில் பங்கேற்ற பலர் காயமுற்றுள்ளனர். காயமடைந்து மயங்கி கிடந்தவர்களையும் போலீசார் சுற்றிநின்று காலால் உதைத்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.செல்வாவின் மண்டையில் வலுவான தடியால் காவல்துறை தாக்கியதால், மண்டை உடைந்து படுகாயமுற்று ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர்களில் ஒருவரான விக்னேஷ், ஆட்டோ சங்கத்தின் மாவட்டத் தலைவர்களான ராஜூ, தயாளன் உட்பட 6 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படாத நிலையில், பலர் தனியார் மருத்துவமனைகளிலும், சிலர்குரோம்பேட்டை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுள்ளனர்.

மண்டபத்திற்குள் போலீஸ் காவலில் இருந்த இளம்பெண்கள், வாலிபர்கள், மாணவர் இயக்கத்தை சேர்ந்தவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சிலரையும் காவல்துறை சரமாரியாக தாக்கியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

தமிழகம் முழுவதும் கண்டன இயக்கம்

காவல்துறையின் இந்த கொடூரமான தாக்குதலைக் கண்டித்து ஜன.4ம் தேதி சென்னையில் மாபெரும் கண்டன இயக்கம் நடைபெறுகிறது. அன்றைய தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து மாவட்டக்குழுக்களும் கண்டன இயக்கங்களை நடத்துமாறு கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மனித உரிமை ஆணையத்தில் புகார்

சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த ஜி.ராமகிருஷ்ணன், ‘ஜனநாயக ரீதியாக நடந்த இந்த போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய தாக்குதலுக்கு ஆதாரம் உள்ளதால் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது வழக்கு தொடுப்போம்’ என்றார்.சமூக விரோதிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்து வதில்லை.

மாறாக மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுபவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. காவல் துறையின் கொள்கையில் மாற்றம் கொண்டுவர வேண்டும்.மாடம்பாக்கத்தில் வாலிபர்கள், மாணவர்கள், மாதர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல் குறித்து மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளிடமும் முறையிடுவோம் என்று கூறினார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.