அரசு வங்கிகளைவிட தனியார் வங்கிகளுக்கு அதிக பணம் கொடுத்தது எப்படி?: விசாரணை தேவை

அரசு வங்கிகளைவிட தனியார் வங்கிகளுக்கு அதிக பணம் கொடுத்தது எப்படி? என கேள்வி எழுப்பியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,

“கருப்புப்பணத்தை ஒழிப்பதற்காக ரூ.1000, ரூ.500 தாள்களை செல்லாது என அறிவித்த மத்திய அரசின் திட்டம் பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாக எதிர்மறை திசையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில் இதுவரை நிகழ்ந்தவற்றை வைத்துப் பார்க்கும் போது எந்த பயனும் ஏற்படாது என்றே தோன்றுகிறது.

இந்தியாவில் ரூ.8.58 லட்சம் கோடி மதிப்புள்ள 1716.50 கோடி ரூ. 500 தாள்கள், ரூ.6.86 லட்சம் கோடி மதிப்புள்ள 685.80 கோடி ரூ.1,000 தாள்கள் என மொத்தம் ரூ.15.44 லட்சம் கோடி புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. இதில் குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் கோடி முதல் ரூ.5 லட்சம் கோடி வரை கருப்புப் பணமாக இருக்கும் என்றும், அந்தப் பணம் கடைசி வரை வங்கிகளில் வைப்பீடு செய்யப்படாமல் இருந்தால், அது அரசுக்கு சொந்தமானதாக கருதப்படும் என்பதால் அதை வைத்து பல திட்டங்களை செயல்படுத்தலாம் என மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால், மத்திய அரசின் இந்நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. காரணம், வங்கிகளில் வைப்பீடு செய்யப்படும் பழைய ரூபாய் தாள்களின் மதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்வது தான். நேற்று வரை மொத்தம் ரூ.12.44 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.500, ரூ.1000 தாள்கள் திரும்பப் பெறப்பட்டிருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுனர் காந்தி அறிவித்துள்ளார். இதில் ரிசர்வ் வங்கியில் கடந்த நவம்பர் 8-ஆம் தேதி இருப்பு வைக்கப்பட்டிருந்த ரூ.4.06 லட்சம் கோடியும் அடங்குமா? என்பது தெரியவில்லை. ஒருவேளை அதையும் சேர்த்து தான் இவ்வளவு பணம் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது என்றால் இன்னும் ரூ.3 லட்சம் கோடி மட்டும் தான் திரும்பப் பெறப்பட வேண்டியிருக்கிறது.

ஒருவேளை ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பணம் இந்த கணக்கில் சேர்க்கப்படவில்லை என்றால், ஒட்டுமொத்தமாக புழக்கத்தில் விடப்பட்ட பணத்தை விட அதிக பணம் திரும்பப்பெறப்பட்டிருப்பதாக பொருள் ஆகும். இந்தக் குழப்பம் ரிசர்வ் வங்கிக்கே ஏற்பட்டிருப்பதால் ஒவ்வொரு வங்கியும் திரும்பப்பெற்ற பணத்தின் மதிப்பை மீண்டும் சரிபார்க்கும்படி ரிசர்வ் வங்கி ஆணையிட்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பணம் கணக்கில் சேர்க்கப்பட்டதாகவே வைத்துக் கொண்டாலும் இம்மாத இறுதிக்குள் மேலும் ரூ.2 லட்சம் கோடி திரும்பப் பெறப்பட வாய்ப்பிருப்பதாலும், மார்ச் 31ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கியில் பழைய ரூபாய் தாள்களை திரும்பச் செலுத்த அவகாசம் இருப்பதாலும் மத்திய அரசின் நடவடிக்கையால் பயன் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. இம்மாத இறுதியில் இதை மத்திய அரசே ஒப்புக்கொள்ளக்கூடும்.

மத்திய அரசின் இந்த முயற்சி தோல்வியடைந்ததற்கு காரணம் இத்திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்பே பெரும் பணக்காரர்களும், பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் தங்களிடமிருந்த கருப்புப் பணத்தை ஆட்சியாளர்களின் உதவியுடன் புதிய பணமாக மாற்றி விட்டது தான் என்று கூறப்படுகிறது. இதுதவிர உள்ளூர் அளவில் கருப்புப் பணத்தை வெள்ளையாக்க தனியார் வங்கிகள் பெரிதும் உதவியாக இருந்ததாகவும், அதற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் உடந்தை என்றும் கூறப்படுகிறது. இதற்கு வசதியாக தனியார் வங்கிகளுக்கு புதிய ரூபாய் தாள் அதிக அளவில் வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, நவம்பர் 8&ஆம் தேதி முதல் திசம்பர் 7&ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ.14,000 கோடி மதிப்புள்ள புதிய தாள்கள் வந்திருக்கின்றன. அவற்றில், 56% மட்டுமே பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 9000 பொதுத்துறை வங்கிக் கிளைகள் உள்ள நிலையில், அவற்றுக்கு இந்த தொகை போதுமானதல்ல. சராசரியாக பார்த்தால் ஒரு பொதுத்துறை வங்கிக்கு ரூ.86 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் மொத்தம் 25 நாட்கள் வங்கிகள் பணியாற்றியுள்ளன. அப்படியானால், ஒவ்வொரு பொதுத்துறை வங்கிக் கிளையும் ஒரு நாளைக்கு ரூ.3,44,000 மட்டுமே வாடிக்கையாளருக்கு வழங்க முடியும். ஒரு நாளைக்கு 500 வாடிக்கையாளர்களுக்கு பணம் தர வேண்டுமென்றால் சராசரியாக ரூ.1000 கூட வழங்க முடியாது. தமிழகத்தில் கடுமையான பணத்தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு இதுவே காரணம்.

அதேநேரத்தில் மொத்தம் 900 கிளைகள் மட்டுமே கொண்ட தனியார் வங்கிகளுக்கு ரூ.6100 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு வங்கி கிளைக்கு ரூ.6.7 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்கப்பட்டதை விட 8 மடங்கு அதிகமாகும். பொதுத்துறை வங்கிகளை விட தனியார் வங்கிக் கிளைகளில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதால், இவ்வளவு பணத்தை கொண்டு தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தாராளமாக பணம் வழங்கியிருக்கலாம். ஆனால், தனியார் வங்கிகளிலும் பணம் இல்லை என்ற அறிவிப்பு அட்டை தான் பெருமளவில் தொங்கிக் கொண்டிருந்தது. இதிலிருந்தே தனியார் வங்கிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணம் கருப்புப் பண முதலைகளுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்டிருப்பதை உணர முடியும். தனியார் வங்கிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் ரூ.4000 கோடி கருப்புப் பண முதலைகளுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என வங்கி அதிகாரிகளே கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சிக்கு தனியார் வங்கிகள் துணை போனதாக கூறப்படும் நிலையில் அது குறித்தும், பொதுத்துறை வங்கிகளை விட தனியார் வங்கிகளுக்கு 8 மடங்கு அதிக பணம் வழங்கப்பட்டது குறித்து விசாரணை நடத்துவதற்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.