சமூக ஊடகங்கள், வலைதள செயல்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் ஜனநாயக விரோத பாசிசம்!

மக்கள் அதிகாரம், மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.சி.ராஜு வெளியிட்டுள்ள அறிக்கை:

அப்போலாவில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி சமூக ஊடகத்தில் வதந்திகளைப் பரப்பியதாக இதுவரை ஆறு பேரை கைது செய்துள்ளது தமிழகப் போலீசு. அவர்கள் மீது தகவல் தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி வதந்திகளைப் பரப்பியதாக 3 சட்டப் பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றின் படி ஏழாண்டுகள் வரை அவர்களைச் சிறையிலடைத்துத் தண்டிக்கமுடியும். முதல்வர் உடல் நிலை பற்றி வதந்திகளைப் பரப்பியதாக இதுவரை 50 பேர் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளன. கைது நடவடிக்கைகள் தொடரும் என்று  போலீசு  உயர்  அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அப்போலாவில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறந்த (இதில் யாருக்கும் சந்தேகம் கிடையாது) சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த சிகிச்சை முறைகள் மற்றும் அவரது உடல் நிலையில் தொடர்ந்து காணப்படும் முன்னேற்றம் குறித்து அவ்வப்போது அப்போலா நிர்வாகம் செய்திக் குறிப்பு வெளியிடுகிறது. ஆனாலும் முதல்வரின் உடல்நிலை பற்றி சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வதந்திகள் பரவுவதைத் தடுக்கவே  நடவடிக்கை எடுப்பதாகப் போலீசு கூறுகிறது.

ஆனால், எப்போதும் தும்பை விட்டு, வாலைப்பிடிப்பதே போலீசின் வேலையாக இருக்கிறது! ஜெயலலிதா விவகாரத்தில் இவ்வளவு வேகம் காட்டும் போலீசு வினுப்பிரியா என்ற பெண் தற்கொலைக்குக் காரணமான விவகாரத்தில் சமூக வலைத்தளப் பதிவுக்கு எதிராக என்ன செய்தார்கள்? நடவடிக்கை எடுக்கவே, இலஞ்சம் வாங்கவில்லையா?

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் எப்போதும் பின்பற்றும் வெளிப்படைத்தன்மையற்ற, ஒளிவுமறைவான அணுகுமுறைதான் எல்லா ஊகங்களுக்கும் வதந்திகளுக்கும் அடிப்படைக் காரணம். முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அவர் அப்போலாவில் அனுமதிக்கப்பட்டது முதல் இப்போது வரை  அப்போலா நிர்வாகமும், மத்திய-மாநில அரசுகளும், ஆளும் கட்சிகளும் அவற்றின் கூட்டாளிகளும் அப்போலாவுக்கு யாத்திரை போய்வரும் பிரபலங்களும் கூறிவருவன  நம்பமுடியாததாகவும்  முன்னுக்குப்பின்  முரணானதாகவும்  இருக்கின்றன.

முதல்வர் ஜெயலலிதா அப்போலாவில் அனுமதிக்கப்பட்டபோது அவர்கள் என்ன சொன்னார்கள். அடுத்தடுத்த நாட்களில் என்னென்ன சொன்னார்கள் என்பவற்றையெல்லாம் தொகுத்தும் ஒப்பிட்டும் பார்க்க முடியாதவர்கள் அல்லவே! காய்ச்சல், நீர்ச்சத்துக்குறைவுக்கு சகிச்சை, ஓரிரு நாட்களில், ஒருசில மணிகளில் வீடு திரும்பி விடுவார் என்று செப்டம்பர் 23-ந் தேதி கூறினார்கள். “வழக்கமான உணவையே எடுத்து கொள்கிறார். உடல்நிலை சீராக இருக்கிறது. விரைவில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார். இன்னும் சிலதினங்கள் இருந்து விட்டு தன் பணிகளுக்குத் திரும்புவார்; உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுவருகிறது”என்றும் அக்டோபர் 08 ந் தேதி வரை அடுத்தடுத்த நாட்களில் கூறினார்கள். முதல்வருக்கு இன்னென்ன சிறப்பு மருத்துவர்கள்- என்னென்ன சிகிச்சை அளிப்பதாக அக்டோபர் 08 ந்தேதி முதல், சொல்லுகிறார்கள்  இந்த  முரண்பாட்டை மக்கள் புரிந்து கொள்ள மாட்டதவர்களா?

முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்த நிலைமை அப்போலாவில் அனுமதிக்கப்பட்ட 2016, செப்டம்பர் 22 அன்றோ, பிறகோ திடீரென்று ஏற்பட்டதாக நம்புவதற்கு மக்கள் முட்டாள்கள் அல்ல.கடந்த பல மாதங்களாக அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நேரங்களைக் குறைத்துக் கொண்டே வந்தார். அரசுப் பணிகளில் ஈடுபடும் நாட்கள், சட்டமன்றத்துக்கு வரும் நாட்கள் குறைந்தன. பல சமயங்களில் இரத்து செய்யப்பட்டன. அவர் உடல்நிலை காரணமாக அரசு நிழ்ச்சிகளும் வெட்டப்பட்டன. எல்லாம் காணெளிக்காட்சி  மூலம் நடத்தப்படுகின்றன. அமைச்சர்களும் கும்பலாகப் பதவி ஏற்றார்கள். தேசிய கீதமும் வெட்டப்படுகின்றன. கொடி ஏற்ற முடியவில்லை; கயிறை முதல்வர் தொட்டுக்கொடுக்க உதவியாளர் ஏற்றினர், பூங்கொத்தை வங்க முடியவில்லை; பழைய புகைப்படங்களை வெட்டிஒட்டி வெளியிட்டார்கள். காரில் ஏறி இறங்க முடியவில்லை; ஒவ்வொரு முறையும் உதவியாளர் படியைத்தூக்கிக் கொண்டு ஓடினார். எவ்வளவு தான் மறைத்தாலும் இதையெல்லாம் மக்கள் பார்த்தனர். காற்றடைத்த பந்தை எவ்வளவு தான் நீருக்குள் அமுக்கனாலும்  அது மேலேதான் வரும்.

ஜெயலலிதாவின் பிம்பத்தைவைத்து ஆதாயம் தேடியே பழகிவிட்ட அவரது பக்தர்கள் அவரது உடல்நிலை குறித்த உண்மை தெரிந்தால் மக்களை ஏய்க்கவோ ஆதாயம் அடையவோ முடியாது என்று பதறுகிறார்கள். பிரெஞ்சு சர்வாதிகாரி போனபர்ட்டைப்போலவே எனக்குப் பிறகு பிரளயம்- பேரழிவு! என்றகொள்கையைப் பின்பற்றி தகுதியான இண்டாம் நிலைத்தலைமை உருவகாமலேயே மட்டம் தட்டிவைத்திருந்தார். அப்படி ஒரு தேவையே இல்லை. அவரே நிரந்திரத் தலைவர், நிரந்தர முதல்வர், அவரது உடல்நிலையும் நிரந்தரமாகவே முன்னேற்றகரமாகவே இருக்கும்  என்ற தோற்றத்தை கட்டிக்காக்கவே எத்தணிக்கிறார்கள். ஆனால் அந்த பிம்பத்தை உண்மையை உடைக்கும் போது ஆத்திரம் கொள்கிறார்கள். ஜெயலலிதாவும் பலவகையிலும்  இந்த நிலைக்கு காரணமாக இருந்திருக்கிறார் என்பது இன்னொரு உண்மை. ஆனாலும்  பஞ்சைப்போட்டு நெருப்பை அணைக்க முடியாது.

தமிழக மக்கள் அனைவருக்கும் முதல்வர் ஜெயலலிதாதான். அவரது செயல்பாடுகள் குறித்து மாற்று கருத்து, எதிர்க்கருத்து கொண்டிருப் போருக்கும் சட்டப்படி அவர்தான் முதல்வர். ஆகவே, முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தெரிந்து கொள்ளவும், விவாதிக்கவும், கருத்து சொல்லவும் அனைவருக்கும் உரிமையுண்டு. ஆனால் மாற்றுகருத்து கொண்டிருப்போரை காவல்துறை கைது செய்வதும், வழக்குப் போட்டு மிரட்டுவதும் ஜனநாயக விரோத பாசிச நடவடிக்கையாகும்.

அந்த வகையில் சமூக  ஊடகங்கள், வலைதள செயல்பாட்டாளர்கள் ஆகியோர் மீதான காவல் துறையின் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்ய வேண்டும், பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.