நோ பிரா டே தினத்தில் எதற்காக பிரா இல்லாமல் இருக்க வேண்டும்?

ஷாஜஹான்

ஷாஜஹான்
ஷாஜஹான்

ஒரு ரகசியம் உடைந்து விட்டது : கேன்சர் என்பது வியாதி அல்ல, அது ஒரு வியாபாரம் இப்படியொரு தலைப்புடன் ஒரு கட்டுரை சுற்றிக்கொண்டிருக்கிறது. ஹெரால்ட் மேன்னர் என்பவர் எழுதிய நூலின் அடிப்படையில், அவருடைய ஆதரவாளர்கள் அல்லது அந்தக் கட்டுரையின் வாதத்தில் மயங்கியவர்கள் எழுதியது அது. மெடபாலிக் தெரபி என்பது ஹெரால்ட் முன்வைத்த கருத்து. சில நாட்களுக்கு முன்னால் நண்பர் ஒருவர் மேற்கண்ட கட்டுரையின் இணைப்பை அனுப்பினார். வழக்கம்போலவே, கூகுளிட்டு, விஷயத்தை தெளிவுபடுத்திக் கொண்டேன். இது ஆதாரமற்ற கட்டுரை என்று நிறுவும் இன்னொரு இணைப்பை அந்த நண்பருக்கு நான் அனுப்பி வைத்தேன்.

இதை எழுதும்போது இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் ஒனறு நினைவு வருகிறது. பேஸ்புக் வந்த சில மாதங்களில், பிரபலமான ஒரு தோழி ஆங்கிலக் கட்டுரை ஒன்றைப் பகிர்ந்திருந்தார். கேன்சர் குறித்து ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையிலிருந்து கிடைத்த புதிய தகவல் என்று அந்தக் கட்டுரை கூறியது. அது தீயெனப் பரவியது. கேன்சருக்கும் எங்கள் குடும்பத்துக்கும் நெருங்கிய உறவு என்பதால், கேன்சர் குறித்து என்ன தகவல் கிடைத்தாலும் உடனே படித்துவிடுவது என் வழக்கம். இதையும் படித்தேன், அதீத உற்சாகத்தில் பேஸ்புக்கில் பதிவேற்ற உடனே தமிழாக்கமும் செய்யத் துவங்கி முக்கால் பகுதி முடித்து விட்டேன். Cancer is a disease of the mind, body, and spirit என்ற வாக்கியத்தைப் படித்ததும் திடீரென்று உள்ளுக்குள் ஏதோ சந்தேகம் தட்டியது. இணையத்தில் தேடிப் பார்த்ததில், மிக ஆழமாக அலசப்பட்டதுபோலத் தோன்றிய இந்தக்கட்டுரை முழுக்கத்தவறு என்று தெரிந்தது. இன்று லண்டனில் புற்றுநோய் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் அன்புவுக்கும்கூட இந்தக் கட்டுரையில் கூறப்பட்ட விஷயங்கள் தவறானவை என்று நம்புவதில் சிரம்ம் இருந்தது. இந்தக் கட்டுரை குறித்து அவருடன் நீண்டநேரம் இன்பாக்சில் உரையாடல் நடைபெற்றது. (தமிழாக்கம் செய்த கட்டுரை கணினியில் அப்படியே இருக்கிறது.)

உயிருக்கு ஆபத்தாகக் கருதப்படும் சில நோய்களை, அவை நோய் அல்ல, பத்தியத்தால் சரி செய்து விடலாம்; அல்லது யோகாவால் குணப்படுத்தி விடலாம், அல்லது கோமியத்தால் சரி செய்யலாம் என்பது போன்ற இன்னும் பல கட்டுரைகளை நீங்கள் வாசிக்க நேரலாம். இவற்றில் அதிக நேரத்தை வீணடிக்க வேண்டாம். இதுபோன்ற கட்டுரைகளை நம்பாதீர்கள், மேலும் பரப்பாதீர்கள். தெரியாத விஷயம் என்றால், துறைசார்ந்தவர்களிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.

நேற்று நோ பிரா டே (No Bra Day) – மார்புக்கச்சை மறுப்பு தினம். சிலர் பதிவு எழுதியதைப் பார்த்திருப்பீர்கள். ஏன் பிரா அணியக்கூடாது? எதற்காக இந்த தினம்? பெண்கள் இறுக்கமான பிரா அணிவதால் மார்பகப் புற்றுநோய் வருகிறது, அதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் நோ பிரா டே. சரிதானே?

விவரம் அறியாதவர்கள் உடனே சரி என்றுதான் நினைப்பார்கள். உண்மையில், பிராவுக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பில்லை. நோ பிரா டே என்பது, பெண்களுக்கு வரும் மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தானே தவிர, பிரா எதிர்ப்புக்காக அல்ல. இது எப்போது யாரால் துவக்கப்பட்டது என்று தெரியாது, 2011இல் துவங்கி, இப்போதுதான் பரவி வருகிறது. nobraday என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் மார்பகப் புற்றுநோய் குறித்த பிரச்சாரம் செய்வது, பரிசோதனை செய்துகொள்ள ஊக்குவிப்பது, பிரச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போன்றவை இதன் நோக்கம். இன்று பிக் பிங்க் டே (Big Pink). மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்காக நிதி திரட்டும் தினம்.

இங்கே இன்னொரு விஷயத்தையும் சுட்ட வேண்டியிருக்கிறது. கேன்சர் ஒரு நோய் அல்ல என்ற கட்டுரை எவ்வளவு அபத்தமோ, அதே அளவுக்கு அபத்தம்தான் பிரா அணிவதால் புற்றுநோய் வரும் என்பதும். பிராவுக்கும் புற்றுநோய்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை ஆனாலும் இன்றும் அதே கட்டுக்கதை சுற்றிக்கொண்டிருக்கிறது. பிராவில் மார்பகத்தை மூடும் கூம்புப் பகுதியை வடிவமைப்பதற்காக உள்ளே இரும்பு அல்லது பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட பட்டைகள் பொருத்தப்படுகின்றன. அவற்றின் இறுக்கம் காரணமாகவே பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருகிறது என்று ஒருவர் எழுத, அது பரவ… அறிவியல்ரீதியாக மறுக்கப்பட்ட பிறகும் அந்த வதந்தி ஆரோக்கியமாக உலவிக் கொண்டிருக்கிறது.

நோ பிரா டே தினத்தில் எதற்காக பிரா இல்லாமல் இருக்க வேண்டும்? மார்பகப் புற்றுநோய்க்கு ஆளானவர்களுக்கு மார்பகம் நீக்கப்பட வேண்டியிருக்கலாம். அதை மறைப்பதற்காக அவர்கள் செயற்கையாக மார்பகம் போன்ற சிலிக்கான் அமைப்பைப் பொருத்தியிருக்கலாம், அது தெரியாமல் இருப்பதற்காக பிராக்கள் அணிந்திருக்கலாம். மார்பகம் நீக்கப்பட்டது என்பதைக் காட்ட வெட்கப்பட்டு, பிராவை அணிய வேண்டிய அவசியமில்லை. நோய் கண்ட உறுப்பு ஒன்று நீக்கப்பட்டது, அவ்வளவுதானே தவிர அதில் வெட்கப்பட ஏதுமில்லை என்று காட்டுவதற்காகத்தான், பிரா அணியாமல் இருக்கும் தினம் – நோ பிரா டே.

ஷாஜஹான், எழுத்தாளர்.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.