“நீலமும் பச்சையும் கருப்பும் சிவப்புமாக ஒன்றிணைய இதைவிடவும் உக்கிரமான காலமேது?”: ஆதவன் தீட்சண்யா

குஜராத்தில் பசு பாதுகாப்பு கும்பலால் செத்த மாட்டின் தோலை உரித்த காரணத்துக்காக தாக்கப்பட்ட தலித் இளைஞர்களுக்கு ஆதரவாக எழுந்த தலித் மக்களின் எதிர்வினை, இந்தியா முழுமைக்கு அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆயிரம் ஆண்டுகால ஒடுக்குமுறையை எதிர்த்து, வெகுண்டெழுந்து இனி செத்த மாடுகளை தோலுரிக்க மாட்டோம் என அரசு அலுவலகங்கள் முன் செத்த மாடுகளை தூக்கி எறிந்த் நடத்திய போராட்டமும் அதற்குப் பிறகு தன்னெழுச்சியாக கட்டி எழுந்த ‘உனா பேரணி’யும் பெரும் அதிர்வலைகள்தான். அந்த அதிர்வலைதான் பசு பாதுகாப்பு கும்பலுக்கு பாதுகாப்பு வழங்கிய பாஜகவின் பிரதமரை பேச வைத்தது. அந்த அதிர்வலைதான் மாநில முதல்வர் பதவி விலக காரணமாக இருந்தது. பெண்களும் குழந்தைகளும் இளைஞர்களும் சிறுபான்மையினரும் உணர்வுடன் திரண்டெழுந்த இந்தப் பேரணியின் இறுதி மூன்று நாட்கள் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா பங்கேற்று திரும்பியிருக்கிறார். அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பிய கேள்விகளுக்கு இங்கே பதிலளித்திருக்கிறார். பதில்கள் விளக்கமாகத் தந்திருக்கிறது. நம் காலத்தின் தன்னெழுச்சியான போராட்டத்தை ஆவணப்படுத்துகிறவிதமாக அவை அமைந்துள்ளன…

30 ஆண்டுகளில் இல்லாத தலித் எழுச்சியை குஜராத் கண்டிருக்கிறது. நேரில் அதைப் பார்த்திருக்கிறீர்கள். எப்படி இருந்தது அந்த அனுபவம்?

“முதலில் முப்பதாண்டுகளுக்கு முந்தைய தலித் எழுச்சி என்பதை பற்றி சொல்ல வேண்டியிருக்கிறது.

1960ல் குஜராத் மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து அடுத்துவந்த இருபதாண்டுகளும் குஜராத்தின் அரசியல் களம் பார்ப்பனர்கள், பனியாக்கள், படேல்களின் ஆதிக்கம் நிறைந்ததாகவே  இருந்தது.  அவசர நிலையை விலக்கிக்கொண்ட பிறகு 1977ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளில் 6ல் மட்டுமே காங்கிரஸ் வென்றது. ஜனசங்கமும் பங்குபெற்ற  ஜனதா கூட்டணி 20 இடங்களை கைப்பற்றியது. சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வியடைந்திருந்தது. அவசரநிலைக் கொடுமைகளால் காங்கிரசை வீழ்ச்சியடையும் கட்சியாக கணித்த பார்ப்பனர்கள், பனியாக்கள், படேல்களில் கணிசமானவர்கள் அதன் எதிர்நிலைக்குத் தாவியதாலேயே இந்த அரசியல் மாற்றம் ஏற்பட்டது. பாபுபாய் படேல் தலைமையிலான  ஜனதா அரசாங்கத்தில் இந்த மூன்று பிரிவினரும் – குறிப்பாக படேல்கள்- அளவற்ற செல்வாக்கு பெற்றிருந்தனர்.

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜினாபாய் தர்ஜி, மாநிலத்தின் மக்கள்தொகையில் 56 சதவீதமாக இருந்த சத்திரிய, தாழ்த்தப்பட்ட, பழங்குடி, இஸ்லாமிய சமூகத்தவரை தனது கட்சிக்கு புதிய ஆதரவுத்தளமாக திரட்டிக்கொள்ளும் வகையில் KHAN ( kshatriya, harijan, a division, Muslim) என்கிற சூத்திரத்தை உருவாக்கினார். இச்சூத்திரம் 1980ஆம் ஆண்டு சட்டமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் நடந்தத் தேர்தல்களில் காங்கிரசுக்கு பெரும் வெற்றியை ஈட்டித்தந்ததோடு குஜராத் அரசியல் களத்திலிருந்து பார்ப்பனர்கள், பனியாக்கள், படேல்களின் ஆதிக்கத்தை முற்றாக அழித்தொழித்தது. அப்போதுதான் குஜராத்தில் முதன்முறையாக படேல்களில் ஒருவர்கூட கேபினட் அந்தஸ்தில் இடம் பெறாத அமைச்சரவை ஒன்று மாதவ்சிங் சோலங்கி தலைமையில் அமைந்தது.  மாதவ் சிங் சோலங்கி தலைமையிலான காங்கிரஸ்  அரசு, 1981ஆம் ஆண்டு மருத்துவம் பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 10 சதம் இடஒதுக்கீட்டை வழங்கியது.

அரசியலதிகார அமைப்புகளிலிருந்து தாங்கள் கழித்துக்கட்டப்பட்டிருப்பது குறித்த கசப்புணர்வில் இருந்த  உயர்சாதியினர், இந்த இடஒதுக்கிட்டை எதிர்த்து களமிறங்கினர். சங் பரிவாரத்தினர், அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் என்கிற மாணவர் அமைப்பினை மூடாக்காக பயன்படுத்திக்கொண்டு இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வன்முறையில் இறங்கினர். 1985 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த மாதவ்சிங் சோலங்கி பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 10 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தியதையடுத்து மீண்டும் பெரும் கலவரம் மூண்டது. பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்துதான் இந்தக் கலவரங்கள் நடந்தன என்றாலும் அவற்றில் கொல்லப்பட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் தலித்துகள்.

இந்தப் படுகொலைகளுக்கு எதிராக அப்போது அணிதிரண்ட  குஜராத் தலித்துகளை அடுத்துவந்த ஆண்டுகளில் சங்பரிவாரம் பல்வேறு தந்திரங்களின் மூலம் தனது செல்வாக்கு மண்டலத்துக்குள் இழுத்துக்கொண்டது என்பது ஒரு கசப்பான உண்மை.  1986 ஆம் ஆண்டிலேயே அலகாபாத் தேர்த்திருவிழா, 1990ல் அத்வானியின் ரதயாத்திரை, 1992ல் பாப்ரி மசூதி தகர்ப்பு ஆகியவற்றையொட்டி மூண்ட கலவரங்களில் தலித்துகளில் ஒருபகுதியினர் இஸ்லாமியர்களுக்கு எதிராக களமிறக்கப்பட்டனர். 2002ல் கலவரத்தில் சங்பரிவாரத்தின் அடியாள்படையாக தலித்துகளும் பழங்குடிகளும் ஈடுபட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், இஸ்லாமியர்களுக்கு எதிராக பல்வேறு சாதியினரையும் பயன்படுத்தியது போலவே தலித்துகளையும் பழங்குடிகளையும் சங்பரிவாரம் பயன்படுத்தியது என்பதே உண்மை. ‘நீங்கள் இஸ்லாமியர்களை விரட்டியடித்து விட்டால் அவர்களது இடங்களை நீங்களே எடுத்துக்கொள்வதற்கு ஏற்பாடு செய்து தருகிறோம் என்று சொல்லி உள்ளூர் பஜ்ரங்தள் நிர்வாகிகள் தூண்டிவிட்டதன் பேரிலேயே தலித்துகளில் சிலர் இஸ்லாமியருக்கு எதிராக கலவரம் செய்ததாக ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய் ( இந்துஸ்தான் டைம்ஸ், 2016 ஆகஸ்ட் 5) ஒரு கட்டுரையில் அம்பலப்படுத்துகிறார்.  ஆனால் இப்போது நிலைமையே வேறு. இப்போது ஏற்பட்டுள்ள தலித் எழுச்சியானது அடிப்படையில் சங்பரிவாரத்திற்கு எதிரானது. அந்த வகையில் இது முந்தைய எழுச்சிகளிலிருந்து பண்புரீதியாக மாறுபட்டது.

நானும் ஆரா, பாலமுருகன் உள்ளிட்ட நால்வரும் 13 ஆம் தேதி பிற்பகலில் தான் நடைப்பணயக்குழுவினருடன் இணைய முடிந்தது. சற்றே முன்கூட்டியே திட்டமிட்டு முதல் நாளிலிருந்தே பங்கெடுத்திருக்க வேண்டும் என்று அங்கு போனதும் பற்றிக்கொண்ட அங்கலாய்ப்பு இப்போதுவரை நீடிக்கிறது. சாதியத்திற்கு எதிராக பேசியும் எழுதியும் வந்தாலும் சாதியத்திற்கு எதிராக நடக்கும் ஒரு போராட்டத்தில் நேரடியாக பங்கெடுப்பதென்பது உணர்வுபூர்வமாகவும் அரசியல்பூர்வமாகவும்  எனக்கு முக்கியமாகப்பட்டது. பங்கெடுப்பின் அளவு ஒருவேளை பராக்கு பார்த்தல் என்கிற அளவுக்கு மட்டுப்பட்டிருந்தாலும்கூட அது தேவையான – நான் விரும்பிப் பெற்ற ஓர் அனுபவம்தான் என்று கருதுகிறேன்”.

IMG_1511

குஜராத் தலித்துகளின் எழுச்சியின் அடுத்த கட்ட நகர்வு எப்படி அமையும்? ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்ட போராட்டக்குழு தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

“அங்கு நவசர்ஜன் டிரஸ்ட் 1569 கிராமங்களில் நடத்திய ஓர் ஆய்வில் 98 வகையான தீண்டாமை வடிவங்கள் நடப்பிலிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வன்கொடுமை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளில் கால்வாசிப் பேரே தண்டனை பெறுகிறார்கள். 54 சதமான பள்ளிக்கூடங்களில் தலித் குழந்தைகள் தனியாக அமரவைக்கப்படுகிறார்கள். அம்மாநில அரசுப்பணிகளில் தலித்துகளுக்கென ஒதுக்கப்பட்ட 64,000 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே வைக்கப்பட்டுள்ளன. 2012ல் நான்கு தலித்துகளை சுட்டுக்கொன்ற போலிசார் மீது எந்த நடவடிக்கையுமில்லை. எனவேதான், உனா தலித் போராட்டக்குழு அறிவித்துள்ள கோரிக்கைகளில் பெரும்பாலானவை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்துவது மற்றும் செயல்படுத்துவது பற்றியவையாக இருக்கின்றன. ஆனாலும் அவற்றுக்குள்ள முக்கியத்துவத்திற்கு சற்றும் குறையாமல் மேலெழுந்துள்ள விசயங்கள், செத்த மாட்டை தூக்கமாட்டோம் கழிவுகளை அகற்றமாட்டோம் என்பதும், குஜராத் நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு தலித் குடும்பத்திற்கும் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்பதுமாகும். அம்பானிக்கும் அதானிக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை அள்ளிக் கொடுக்கிற அரசாங்கம் இதற்கு என்ன சொல்லப் போகிறது என்பதற்காக செப்டம்பர் 14ம் தேதி வரை காத்திருக்கப்போவதாக போராட்டக்குழு அறிவித்துள்ளது. நிலத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்காதபட்சத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுயமரியாதை, சமூக நீதி ஆகியவற்றுக்கான போராட்டம் இருத்தலுக்கான போராட்டத்தோடு இணைவதற்கான அறிகுறியே நிலத்துக்கான கோரிக்கை.

நடைப்பயணத்திற்கு பாதுகாப்பு கொடுக்க போலிசை உடன் அனுப்பிவைத்தது போல ரயில்மறியல் போராட்டத்தை அரசாங்கம் அணுகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என்னதான் உ.பி., குஜராத் தேர்தல் இருந்தாலும் அதற்காக நிலத்தைப் பிரித்துக் கொடுக்க அரசாங்கம் அவ்வளவு எளிதாக முன்வருவதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவு. தேர்தல் நெருங்கும்போது அதை பார்த்துக் கொள்ளலாம், இப்போதைக்கு ஒடுக்கிவைப்போம் என்கிற கடுமையான அணுகுமுறையைத்தான் அரசாங்கம் கடைபிடிக்கக்கூடும். ஆனால் கவனத்தில் கொள்ளவேண்டியது என்னவென்றால் ஒடுக்குமுறை எவ்வளவு கொடியதாக இருந்தாலும் நிலத்துக்கான போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று போராட்டக்குழுவும் மக்களும் அறிவித்திருப்பதுதான். ஏனென்றால் இப்போதைய எழுச்சி நிலத்துக்கான முழக்கத்தோடு உணர்வுபூர்வமாக கலந்துள்ளது”.

இத்தகைய எழுச்சி, தலித்துகளின் மீதான தாக்குதலை குறைக்குமா? எங்கள் ஒற்றுமை எங்களை பாதுகாக்கும் என்ற பாதுகாப்பு கேடயமாக மற்ற ‘சாதி’ சமூகத்துக்கு உணர்த்துமா?

“தலித்துகளிடையே ஏற்பட்டுள்ள எழுச்சி, அவர்கள் மீதான தாக்குதலுக்கு சாத்வீகமான ஓர் எதிர்வினையே. அவர்கள் தம்மை வருத்திக்கொண்டு சுமார் நானூறு கிலோமீட்டர் நடந்திருக்கிறார்கள். உறுதிமொழி எடுத்திருக்கிறார்கள், ஆயிரக்கணக்கில் திரண்டு உனா நகரத்தையே குலுங்க வைத்திருக்கிறார்கள் என்பதெல்லாம் சரிதான்,  ஆனால் அவர்களிடையே ஏற்பட்டுள்ள ஒற்றுமை மற்றும் போராட்ட உணர்வை மதித்து தம்மை மனிதாயப்படுத்திக் கொள்ளுமளவுக்கு பண்பட்டவர்களல்ல சாதியவாதிகள். சாதிமறுப்பாளர்கள், மனித உரிமைப் போராளிகள் தெரிவிக்கும் கண்டனங்களையோ அறிவுரைகளையோ கேட்டு தமது வன்கொடுமைகளை இந்த சாதியவாதிகள் கைவிடப் போவதுமில்லை. உனா பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்துவிட்டு ஊர் திரும்பியவர்களை வழிமறித்து தாக்குதல் நடத்தியது இதற்கோர் உதாரணம். இப்போதும் கூட செத்த மாட்டை அப்புறப்படுத்த மறுத்த தலித் சிறுவன் தாக்கப்பட்டதாக செய்தி வருகிறது. இனியொரு தலித் மீது கை வைத்தால் திருப்பித் தாக்குவார்கள் என்கிற சமநிலை உருவாகும்வரை  இந்தத் தாக்குதல் தொடரத்தான் செய்யும். ஆனால் மக்கள்தொகையில் வெறும் 7 சதவீதமே உள்ள தலித்துகள் மீதமுள்ள 93 சதவீத சாதியினருக்கு எதிராக அப்படியொரு நிலைப்பாட்டை எடுப்பதற்கான சாத்தியமுள்ளதா என்கிற கேள்வியெழலாம். தொடரும் வன்கொடுமைகளையும் புறக்கணிப்புகளையும் எதிர்கொள்வதற்கான எல்லா வழிகளும் அடைபடும் போது தங்களுக்கு வேறு எந்த வழிதான் மிச்சமிருக்கிறது என்று தலித்துகள் யோசிக்கக்கூடும்”.

una fin 3

யாத்திரையின் இறுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பரவலாக முஸ்லீம்களையும் பார்க்க முடிந்தது. இந்த ஆதரவு நிலையை எப்படி பார்க்கிறீர்கள்?

“இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்பு 1981, 1985 கலவரங்களின் போது தாக்குதலுக்குள்ளான ஏராளமான தலித்துகளுக்கு இஸ்லாமியர்கள் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்திருக்கிறார்கள். 2002 கலரவரத்தின் போது பாதிக்கப்பட்ட தலித்துகளும் இஸ்லாமியர்களும் பரஸ்பரம் தமக்குள் உதவிக்கொண்டது குறித்த செய்திகள் பலவுண்டு. சமீபத்தில் கோவாவில் கூடிய ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் செயற்குழு, நாடு முழுவதும் தலித்துகள் மீது அதிகரித்துவரும் தாக்குதல்களைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியதும், தாத்ரி – உனா போராட்ட இயக்கங்கள் ஒரு குடையின் கீழ் இணைய வேண்டும் என்று தலித் – முஸ்லிம் ஒற்றுமையை ஜிக்னேஷ் முன்மொழிந்திருப்பதும் இன்று பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன. உனா நடைப்பயணத்தின் தொடக்கத்திலிருந்தே தலித்துகளோடு முஸ்லிம் சகோதரர்கள் சாத்தியமான இடங்களில் இணைந்தே வந்திருக்கிறார்கள். 13ம் தேதி மாலை டிம்பி என்கிற சிற்றூருக்குள் நுழைந்த பயணக்குழுவை வரவேற்று உபசரித்ததிலும், 14 ஆம் தேதி மாலை உனா நகரத்தை உலுக்கியெடுத்தப் பேரணியிலும் 1 ஆம் தேதி பொதுக்கூட்டத்திலும் பெருமளவிலான முஸ்லிம்கள் பங்கேற்றதை நேரடியாகவே காண முடிந்தது.

சங்கபரிவாரத்தின் பிடியில் தலித்துகள் இல்லை என்பதையும் இஸ்லாமியர் தலித்துகளோடு இயல்பான அணிசேர்க்கையை எட்டியுள்ளனர் என்பதையும்   இப்போதையப் போராட்டம் ஒருசேர அறிவித்துள்ளது. காவி பயங்கரவாதத்திற்கு ஆளாகிவரும் இரு பெரும் சமூகத்தினர் ஒன்றாகத் திரண்டு போராடுவது மிகுந்த நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது. தலித் முஸ்லிம் பாய் பாய் என்கிற முழக்கம் குஜராத்தை கடந்து நாடு முழுதும் ஒலிப்பதற்கான தேவை உருவாகியிருக்கிறது.  அதற்கான ஆற்றலை உனா வழங்கியுள்ளது.

IMG_1629

பட்டேல் சாதியினரின் போராட்டத்தை கவர் செய்த ஊடகங்கள், தலித்துகளின் தன்னெழுச்சியான போராட்டத்தை கண்டுகொள்ளவே இல்லை. குறிப்பாக தமிழ் தொலைக்காட்சி, அச்சு ஊடகங்களும்…ஊடகங்களில் தொடரும் இந்தப் பாகுபாடு குறித்து உங்கள் கருத்தென்ன?

“படேல்களையும் தலித்துகளையும் சமமாக பாவிக்குமளவுக்கு நம்முடைய ஊடகங்கள் சாதி கடந்தவையல்ல. நடைப்பயணம் குறித்த செய்திகளை குஜராத் ஊடகங்களே தவிர்த்துவிட்ட நிலையில் தமிழ்நாட்டு ஊடகங்களிடம் எதிர்பார்ப்பது வீணென்றே படுகிறது. இந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, தி இந்து போன்ற ஆங்கில நாளிதழ்களும், ஸ்குரோல்.இன், தலித் கேமரா போன்ற இணைய இதழ்களும், சமூக ஊடகங்களும் ஓரளவுக்கு இச்செய்தியை முக்கியத்துவப்படுத்தவே செய்தன.  15-ஆம் தேதி பொதுக்கூட்டத்தை செய்தியாக்க நேஷனல் சேனல் என்று சொல்லக்கூடிய பலவும் தமது செய்தியாளர்களை அனுப்பி வைக்கத்தான் செய்தன. ஆனால் எந்தளவுக்கு நேர்மையோடு செய்தியாக்கி வெளியிட்டார்கள் என்பது கேள்விக்குறிதான். உதாரணத்திற்கு, 16-ஆம் தேதியிட்ட இன்டியன் எக்ஸ்பிரஸ் மும்பை பதிப்பு, ‘இதற்கென தமிழ்நாட்டிலிருந்தும் வந்திருந்த சிலர் முறையாக கூட்டம் முடிவதற்கு முன்பாகவே வெளியேறி விட்டனர்’ என்று எழுதியது. பெரும்பாலானவர்கள் கலைந்து சென்றுவிட்ட பின்னும் நான், நண்பர் ஆரா உள்ளிட்டவர்கள், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவரும் ரோஹித் வெமுலாவின் உற்றத்தோழர்களில் ஒருவருமான முன்னா, தோழர் கௌதம் மீனா போன்றவர்கள் அங்கேயேதான் உரையாடிக் கொண்டிருந்தோம். உனா எழுச்சியை ஆவணப்படமாக்க சென்னையிலிருந்து வந்து நடைப்பயணக்குழுவினருடனேயே தங்கி அவர்களோடே மூன்று நாட்கள் நடந்த சகோதரர் ஜெயகுமார் மற்றும் அவரது குழுவினர் பொதுக்கூட்டத் திடலில் இருந்தவர்களில் எவ்வளவு பேரிடம் பேட்டி எடுக்க முடியுமோ அவ்வளவு பேரிடமும் பேட்டியெடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் இந்தியன் எக்ஸ்பிரஸ் அப்படி எழுதியது”.

una fin 7

தமிழகத்தில் இடதுசாரி அமைப்புகள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு கூட்டங்களை நடத்துகின்றன. நிலப் போராட்டம் இங்கேயும் நடக்கவேண்டும் எனவும் தலைவர்கள் பேசியுள்ளனர். தமிழகச் சூழலில் இத்தகைய எழுச்சிப் போராட்டங்களை முன்னெடுக்க ஏராளமான தேவை இருக்கிறது. ஆனால் அது சாத்தியமாகுமா?

“சிபிஐ(எம்), அனைத்திந்திய இந்திய விவசாயிகள் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், பீகாரிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மா.லெ) போன்ற இடதுசாரி அமைப்பினர் நேரடியாக குஜராத் தலித்துகளின் போராட்டத்தில் பங்கேற்றிருந்ததைக் காண முடிந்தது. இந்த நாட்டில் நிலப்பகிர்வு நடக்கவேண்டுமென்பதை நீண்டகாலமாக வலியுறுத்திப் போராடி வருகிற இவ்வமைப்புகள், தலித் அத்யாட்சர் லடக் சமிதியுடன் உயிர்ப்பான தொடர்பை பேணி வருவது இயல்பான ஒன்றுதான். ஆகவே செப்டம்பர் 15ல் குஜராத்தில் தொடங்கவிருக்கும் நிலத்திற்கான ரயில் மறியல் போராட்டத்திலும் இவ்வமைப்புகள் பங்கேற்கவிருப்பதாக நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.

செத்த மாட்டை தூக்க மாட்டோம், இழிதொழில்களைச் செய்யமாட்டோம், 5 ஏக்கர் நிலம் கொடு என்கிற குஜராத் தலித்துகளின் முழக்கம் தமிழக தலித்துகளின் வாழ்வோடும் மிக நேரடியாக தொடர்புடையவை. கையால் மலமள்ளுதல், மனிதக்கழிவுகளை அகற்றுதல், சாக்கடைக்குழிக்குள் இறங்குதல் ஆகிய வேலைகளைச் செய்யமாட்டோம், இவ்வளவு காலமும் சட்டவிரோதமாக இத்தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கி மாற்று வாழ்வாதாரத்தை வழங்கு, தலித்துகளுக்குரிய 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டுக்கொடு, நிலமற்றவர்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குவதில் தலித்துகளுக்கு முன்னுரிமை வழங்கு என்று இதேகாலத்தில் தமிழகத்தில் ஒரு போராட்டத்தை  முன்னெடுப்பது அவசியம். நிலமீட்பு போராட்டத்தில் உயிரை ஈந்த போராட்டப் பாரம்பரியம் மிக்க தமிழ்நாட்டில் அப்படியொரு போராட்டத்தை கட்டியெழுப்புவது இப்போதும் சாத்தியம்தான்.

நிலம் என்பதை விவசாயத்திற்குரியதாக மட்டும் பார்க்காமல் இந்த நாட்டில் ஒவ்வொருவருக்குமுரிய உரிமைகளில் தலையாயது எனப் பார்க்கவேண்டும். விழுப்புரத்தை மையமாக கொண்டு இயங்கும் தலித் மண்ணுரிமை இயக்கம் பஞ்சமி நிலம் குறித்த ஆவணங்களைத் திரட்டுவது, ஊர்க்கூட்டம் போட்டு நிலவுரிமை பற்றிய கருத்துப் பரப்பலைச் செய்வது, நிலம் கோரி மனுக்களைத் திரட்டி அரசிடம் கொடுத்து வற்புறுத்துவது என இதில் கவனம் கொள்ளத்தக்கப் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலைச் சிறுத்தைகள், சிபிஐஎம் உள்ளிட்ட அமைப்புகள் சேர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் திருப்புலிவனத்தில் 62 ஏக்கர், மதுராந்தகம் வட்டம் ஆத்தூரில் 65 ஏக்கர்,  வேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டம் கீழ்ப்பாக்கத்தில் 200 ஏக்கர் என பஞ்சமி நில மீட்புப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியிருக்கின்றன. வேலூர் மாவட்டத்தில் மட்டும் 54 ஆயிரம் ஏக்கர் பஞ்சமி நிலம் இருக்கிறது. இதுகுறித்த ஆவணங்கள் அனைத்தையும் வட்டவாரியாக திரட்டியுள்ள தீண்டாமை ஒழிப்பு முன்னணி இதேபோன்று பிற மாவட்டங்களிலும் ஆவணங்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஆவணங்களைத் திரட்ட முடியாத இடங்களில் பொதுவிசாரணை நடத்தி பஞ்சமி நிலங்களை அடையாளப்படுத்துவதோடு, அவற்றை ஆக்கிரமித்திருப்பவர்கள் யார், யாருடைய அனுபோகத்தில் இருக்கிறது என்பது போன்ற விவரங்களைத் திரட்டுவதற்குரிய ஏற்பாட்டையும் செய்து வருகிறது. இவையெல்லாமல் தலித்துகளுக்கென ஒதுக்கப்பட்ட வீட்டுமனைகளை மீட்பதற்கான போராட்டத்தில் உசிலம்பட்டி நகராட்சி எல்லைக்குள் 244, அருப்புக்கோட்டை காளியம்மன் கோவில் தெரு தலித்துகளுக்கானவை 96 என்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 2000 மனைகள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால் தலித்துகளுக்கு உண்மையில் சேரவேண்டிய நிலப்பரப்போடு ஒப்பிடும்போது இவை அங்குல அளவு முன்னேற்றம் என்றே தீண்டாமை ஒழிப்பு முன்னணி கருதுகிறது. எந்தவொரு அமைப்பும் தனித்துப் போராடி வெற்றிபெறுவது சாத்தியமில்லை என்பதால் தலித்துகளின் நலனில், நிலப்பகிர்வில் மெய்யான அக்கறையுள்ள அமைப்புகளனைத்தும் ஓரணியில் திரண்டு போராடுவதற்கான பரந்த மேடை ஒன்றை உருவாக்குவதற்கும், வேறு யாரேனும் உருவாக்கினால் அவர்களோடு சேர்ந்து போராடுவதற்குமான திறந்த மனதோடு   தீண்டாமை ஒழிப்பு முன்னணி களத்தில் இயங்குகிறது.  இந்த நாடு காவிகளுக்கு உரியதல்ல என்பதை பறைசாற்றிட நீலமும் பச்சையும் கருப்பும் சிவப்புமாக ஒன்றிணைந்து பதாகைகளை உயர்த்துவதற்கு இதைவிடவும் உக்கிரமான காலமேது?”.

One thought on ““நீலமும் பச்சையும் கருப்பும் சிவப்புமாக ஒன்றிணைய இதைவிடவும் உக்கிரமான காலமேது?”: ஆதவன் தீட்சண்யா

  1. இடதுசாரி கட்சிகளுக்கு குஜராத்தில் வளர இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம். தனித்துவமான தலித் இயக்கங்கள் இடதுசாரிகள் தங்களது போராட்டங்களை இப்படி பயன்படுத்திக் கொண்டு வளர்வதை ஆதரிக்குமா என்பதுதான் கேள்வி. ஆதவன் தீட்சண்யா போன்றவர்கள் நீலம், பச்சை, சிவப்பு ஒன்று சேர்ந்து போராடுவதை விரும்பலாம். இந்த ஒற்றுமை பாஜகவை எதிர்க்க பயன்படும். அதற்கப்பால் அது எதை முன்வைத்து போராடும் என்றால் நில உரிமை என்பார்கள். அப்படியானால் நிலமின்மை தலித் அல்லாத பிற பிரிவினரில் உள்ள ஏழைகளுக்கும் உள்ள ஒரு பிரச்சினை இல்லையா, அதை எப்படி கையாள்வீர்கள் என்று கேட்டால் என்ன சொல்வார்கள். இடதுசாரிகள் அனைத்து ஏழைகளுக்கும் நிலம் வேண்டும் என்று கோரிக்கை முன் வைப்பார்களா.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.