“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்” – ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.

கனகா வரதன்

திருநங்கை, திருநம்பி, இடையிலங்க (இன்டர்செக்ஸ்) மற்றும் பல பைனரி அல்லாத பாலின அடையாளங்களை கொண்ட மாற்றுப்பாலின மக்களுக்கான “திருநர் பாதுகாப்பு மசோதா – 2019” அம்மக்களின் பெரும் எதிர்ப்புகளுக்கும், போராட்டங்களுக்குமிடையே இன்று மத்திய அரசால் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இம்மசோதா இப்பொழுது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. இந்துத்துவா சித்தாந்தத்துடனும், பிற்போக்கு மனப்பான்மையுடனும் பா.ஜ.க அரசால் கொண்டுவரப்பட்ட இம்மசோதா மாற்றுப்பாலின சமூகத்தின் எந்த ஒரு அடிப்படை கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்காமல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர்-26 அன்று நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. குறைந்த பட்சம் தேர்வு குழுவிற்கு அனுப்பி மறுஆய்வு செய்யுங்கள், மக்களின் குறைகளை கேட்டறியுங்கள் என்பதை கூட ஆளும் அரசு ஏற்க தயாராக இல்லை.

மாற்றுப்பாலின மக்களுக்காக தனி நபர் மசோதாவை கொண்டுவந்தவரும், அம்மக்களுக்காக தொடர்ந்து குரலெழுப்புபவருமான திருச்சி சிவா அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் விடுத்த கோரிக்கை, “பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்” என்பதாக இருந்தது. மாற்றுப்பாலின சமுகத்தின் பிரதிபலிப்பாக ஒலித்த அக்குரல் ஒரு கட்டத்தில் வேண்டுகோளாகவும் மாறியிருந்தது. காசுமீர் மாநில உரிமைகள் பறிப்பு முதல் பெரும்பான்மை பலத்தை மட்டுமே வைத்து பாசிச போக்குடன் ஆளும் அரசு கொண்டு வந்த சட்ட திருத்தங்களின் வரிசையில் இன்று திருநர் மசோதாவும் இணைந்துள்ளது.

பெரும் நெருக்கடிகளுக்கிடையே தங்கள் சொந்த பொருளையும், நேரத்தையும், மூலதனங்களையும் செலவு செய்து கிட்டதட்ட கடந்த நான்கு ஆண்டுகளாக இம்மசோதாவிற்கு எதிராக தொடர் சனநாயக போராட்டங்களை மேற்கொண்ட மாற்றுப்பாலின மக்களுக்கும், தோழமை சக்திகளுக்கும் இன்றய தினம் பெரும் மன உளைச்சலை தரக்கூடிய ஒரு கருப்பு நாளாகவே இருக்கும். ஆளும் அரசால் புக்கணிக்கப்பட்ட எல்லா ஒடுக்கப்பட்ட சமூகத்தை போலவும் மாற்றுப்பாலின சமூகமும் ஒரு நீண்ட சட்ட போராட்டத்திற்கு தயாராக வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்த மசோதாவில் நிராகரிக்கப்பட்ட, மாற்றுப்பாலின சமுகத்தின் பிரதான கோரிக்கைகளில் சில,
திருநர் நபர்களின் அடையாளத்திற்கான அங்கீகாரம் இந்த மசோதா திருநர் மக்களின் அடிப்படை உரிமையான பாலினத்தை சுய நிர்ணயம் செய்யும் உரிமையை மறுக்கிறது. திருநர் மக்களின் கோரிக்கை எங்கள் சொந்த பாலினத்தை அடையாளம் காண்பது எங்களின் அடிப்படை உரிமை (இது இந்திய அரசமைப்பு வழங்கும் அடிப்படை உரிமை, 21 வது பிரிவின் கீழ் ஒரு பகுதியாக அமைகிறது), இந்த உரிமையை ஒப்புக் கொண்ட உச்சநீதிமன்றம் நல்சா தீர்ப்பிலும், புட்டசாமி தீர்ப்பிலும் இதை அங்கீகரித்து உள்ளது.

நல்சா தீர்ப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள், சுயமாக பாலினத்தை அடையாளம் காணும் உரிமையை வழங்குங்கள். எந்தவொரு அறுவை சிகிச்சை, ஹார்மோன் சிகிச்சை இல்லாமல் பாலினத்தை ஆண், பெண் அல்லது திருநராக சுயமாக அடையாளம் காணும் உரிமையை அங்கீகரியுங்கள். சான்றிதழ்கள் மற்றும் அடையாள ஆவணங்களில் பெயர் மற்றும் பாலின மாற்றத்திற்கான வழிமுறைகள் சுய அடையாளத்தின் அடிப்படையில் அமைந்திடல் வேண்டும்.

இடஒதுக்கீடு இம்மசோதா எந்த ஒரு இடஒதுக்கீட்டையும் வழங்கவில்லை. திருநர் மக்களின் கோரிக்கை இடஒதுக்கீட்டுக்கான எல்லா ஏற்பாடுகளையும் உடனே இந்த மசோதாவில் நிறுவ வேண்டும். பொது மற்றும் தனியார் துறையில், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் திருநர்களுக்கென பிரத்யேக (கிடைமட்ட) இட ஒதுக்கீடு வேண்டும். இந்த இடஒதுக்கீட்டின் விழுக்காடானது திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளடக்கிய திருநர் மற்றும் இன்டர்செக்ஸ் நபர்களின் மக்கள்தொகைக்கு ஏற்றவாறு தீர்மானிக்கப்பட வேண்டும்.

குற்றங்களும் தண்டனைகளும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் ஒப்பிடுகையில், திருநர் நபர்களுக்கு எதிரான பாலியல் வன்முறை 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை தண்டனை என்று மசோதா கூறுகிறது. இது மாற்றுப்பாலின மக்களுக்கு எதிரான நேரடியான பாகுபாடாகும்.

திருநர் மக்களின் கோரிக்கை மாற்றுப் பாலினத்தவருக்கு எதிரான குற்றங்களுக்கு வழங்கும் தண்டனைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைக்கு இணையாக இருந்திடல் வேண்டும்.

குடும்பம் மற்றும் மேம்பாடு

இந்த மசோதாவில் திருநர் குழந்தைகள், அவர்கள் பிறந்த குடும்பத்துடன் வசிக்க வேண்டும் என்று கட்டாயமாக்குகிறது. பிறப்பு குடும்பங்கள் பெரும்பாலும் இந்நபர்களுக்கு எதிரான வன்முறையின் முதல் தளமாக இருந்தாலும் இம்மசோதா அதை முற்றிலும் மறுதலிக்கிறது. அதுமட்டுமின்றி இத்தகைய நிலைமைகளில் இருந்து தப்பிக்க திருநர் நபர்களுக்கு பிற திருநர் சமூக உறுப்பினர்களின் உதவி இருந்தால், சமூக உறுப்பினர்கள் 4 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம் எனவும் வரையறுக்கிறது.

திருநர் மக்களின் கோரிக்கை

பாரம்பரிய ஹிஜ்ரா குடும்பங்கள் மற்றும் திருநங்கை ஜமாத் அமைப்புகளை அங்கீகரித்து சேர்க்க வேண்டும்.
“மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு” என்ற கட்டமைப்பை கைவிட்டு “திறன் மேம்பாடு” திட்டங்கள் மற்றும் மையங்களை அமைத்தல் தேவை. இந்த மையங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி திருநர் ஆணையத்தின் பரிந்துரையின் படி அமைந்திட வேண்டும்.

கனகா வரதன், சமூக செயல்பாட்டாளர்.

ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்!

ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை பிற்போக்குத்தனங்களை தூக்கி சுமப்பதில் நவீன கலை வடிவமான சினிமாக்களும் விதிவிலக்கல்ல. எப்படி ஆதிகாலம் முதல் கலை இலக்கியங்கள் பெரும்பாலும் பழமைவாதத்தை நிலைநிறுத்தப் பயன்படுத்தப்பட்டனவோ அதுபோல, சினிமாக்களும் பழமைவாதத்தை பரப்பும் ஒரு கருவியாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கதாநாயகர்கள் மாற்றுகிரக வாசிகளைத் தேடி விண்கலன்களில் பயணிக்கும் அறிவியல் படங்களில்கூட சிலுவைகளைக் காட்ட ஹாலிவுட் இயக்குநர்கள் தவறுவதில்லை. அம்மன் படங்களுக்கு இணையாக பைபிளை முன்னிறுத்தியும் படங்கள் எடுக்கப்படுகின்றன. ‘சினிமா அறிவியலின்’ உச்சம் பெற்ற ஹாலிவுட்டில் மூடநம்பிக்கை, மத பரப்புரை, பேய் ஆகியவற்றை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களே அதிகமாக இருக்கும்.

இவை ஒருபுறம் இருக்க, ஆணாதிக்கக் கூறுகளை சத்தமில்லாமல் திணிக்கும் படங்களும் அதிகம். உதாரணத்துக்கு உறவு மீறல் சித்தரிப்புகள் ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை ஆணாதிக்க விசம் எவ்வளவு ஆழமாக பரவியுள்ளது என்பதை அறிய முடிகிறது.

2017-ஆம் ஆண்டில் வெளியான ‘டூலிப் ஃபீவர்’ (Tulip fever) என்ற ஆங்கிலப் படம், இங்கிலாந்தில் தயாரானது. 17-ஆம் நூற்றாண்டில் ஆம்ஸ்டர்டாமில் நடப்பதாக எழுதப்பட்ட டெபோரா மொகாச் -இன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் இது.

கதை இதுதான். ஆனாதைகள் இல்லத்தில் வளரும் சோபியா, தனது சகோதரிகள் நியூயார்க்கில் உள்ள உறவினரிடம் சென்று சேர வேண்டும் என்பதற்காக தன்னைவிட வயதில் மூத்த, மனைவியை இழந்த கார்னீலிசை திருமணம் செய்துகொள்கிறாள்.

சோபியாவை குழந்தை பெற்றுத்தரப்போகும் எந்திரமாகப் பார்க்கிறார் கார்னீலிஸ். சோபியாவுக்கு இந்த அன்பில்லாத எந்திரத்தனமான வாழ்க்கை கசக்கிறது. இன்னதென்று சொல்ல முடியாத ஒன்றை இழந்துவிட்ட சோகத்தோடு சோபியா நாட்களை கடத்துகிறாள். அப்போது, இந்தப் பொருந்தா ஜோடியை ஓவியமாக வரைய இளம் ஓவியர் ஜான் அந்த வீட்டிற்கு அழைத்து வரப்படுகிறார்.

முதல் பார்வையிலேயே சோபியாவும் ஜானும் காதல் கொள்கிறார்கள். இருவருக்குள் கிளர்ந்தெழும் காதல் உணர்வை கார்னீலிசுக்குத் தெரியாமல் வளர்க்கிறார்கள். அப்போது டூலிப் மலர்கள் மீதான மோகம் நாடெங்கும் பரவுகிறது. புனித உர்சுலா தேவாலயத்தில் உள்ள சகோதரிகள் டூலிப் மலர்களை வளர்ப்பதாக கேள்விப்பட்டு, அதைத் திருடி விற்று சோபியாவுடன் நியூயார்க் செல்ல திட்டமிடுகிறான் ஜான்.

ஒரு கட்டத்தில் சோபியாவின் காதல் விவகாரம் கார்னீலியசுக்குத் தெரிய வருகிறது. அவர் அந்த இடத்தில் புனிதராக மாறி, அவர்களை மன்னிக்கிறான். சோபியா, கார்னீலியசுக்கு ‘துரோகம்’ செய்துவிட்டதாக எண்ணி வருந்தி, ஜானுக்கும் தெரியாமல் எங்கோ சென்று விடுகிறாள்.

எட்டு ஆண்டுகள் கழித்து, ஜான் வரைந்த சோபியாவின் ஓவியத்தைப் பார்த்து புனித உர்சுலா தேவாலயத்திலிருந்து ஒரு சகோதரி, ஜானிடம் தேவாலயத்தில் ஓவியம் வரையும்படி பணிக்கிறார். தேவாலயத்துக்கு வரும் ஜான், அங்கே சகோதரியாக உள்ள சோபியாவைப் பார்க்கிறான். இருவரும் மெல்லிய புன்சிரிப்புடம் கடந்துபோவதாக படம் முடிக்கப்படுகிறது.

இதை எழுதியவர் ஒரு பெண். ஆனால் ஆணாதிக்க மதம் பரப்பும் கருத்துக்களை அப்படியே பிரதிபலிக்கிறது அவருடைய எழுத்து. சோபியாவின் வறுமையை பயன்படுத்தி, தன்னைவிட வயதில் இளையவள் என்றபோதும், அவளை ஒரு உடலாகவே பார்க்கிற கார்னீலியஸ் மீது எழுத்தாளர் எந்தவித விமர்சனத்தையும் வைக்காமல், அவரை புனித ‘ஏசு’வாக்கி விடுகிறார்.

கிடைக்காத அன்புக்காக ஏங்கி, தன் காதலனுடன் வாழ முயலும் சோபியாவை, ‘நீதி’ சொல்லி, கணவனுக்கு துரோகம் செய்கிறவளாகவும் அந்த துரோகத்துக்குப் பரிகாரமாக அவளை தேவாலயத்தில் சகோதரியாகவும் காட்டுவதன் மூலம், உறவு மீறலில் ஈடுபடும் பெண்களை ‘தக்க பாடத்தை’ புகட்டுகிறார் இதை எழுதியவர்.

ஒரு பணக்கார கிழவனின் உடல் மீதான இச்சையை, வெறித்தனத்தை புனிதப்படுத்திவிட்ட எழுத்தாளர், இளம் வயதில் இருக்கும் இயற்கையான உணர்வுகளை வெளிப்படும் கதாநாயகர்களை கூண்டில் ஏற்றி குற்றவாளிகள் போல நிற்க வைக்கிறார். இந்தப் பிற்போக்குத்தனத்தை அப்படியே திரையில் காட்டியிருக்கிறது ‘டூலிப் ஃபீவர்’.

ஆண்களுக்கான உணர்வுகளை உயர்ந்த இடத்தில் வைக்கும் இத்தகைய சினிமாக்கள், தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் பெண்களை மோசமானவர்களாகவும் காமவெறி பிடித்தவர்களாகவும் காட்டுகின்றன.

ஒரு இளம் சிறுமிக்கு வயதான ஒரு கிழவனுக்குமான பால் உறவை புனிதப்படுத்தி ‘லோலிதா’ என்ற பெயரில் சினிமாவாக எடுக்க முடியும். ஆனால், தன்னைவிட 10 வயது இளையவனை காதலிப்பதாக சினிமா எடுத்தாலும் அதில் அந்தப் பெண்கள் சித்தரிக்கப்படும் விதமும் அதில் இவர்கள் சொல்லும் நீதியும் மேற்கத்திய படங்களில் எத்தகைய ஆணாதிக்க சூழல் நிலவுகிறது என்பதை பறைசாற்றும்.

பிரைம் (Prime- 2005) என்றொரு ஹாலிவுட் படம், உமா த்ரூமன் நடித்தது. இந்தப் படத்தில் உமா த்ரூமன் விவகரத்தான 30 வயதுகளில் உள்ள பெண். இவரும் தன்னைவிட 13 வருடங்கள் இளையவரான பிரையான் க்ரீன்பர்க்கும் காதல் வயப்படுகிறார்கள். உமா த்ரூமன் ஆரம்பத்தில் இந்தக் காதலை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார். பிரையான் தன்னுடைய வயதை சற்றே உயர்த்தி சொல்லி, சம்மதிக்க வைக்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து வாழத் தொடங்குகிறார்கள்.

உமாவுக்கு மனநல ஆலோசனை சொல்லும் மெரில் ஸ்டீரீப் தன் மகன் தான் உமா காதலிக்கும் நபர் என்பதை அறிந்துகொண்டு, அந்தக் காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். யூத மத பின்னணியில் உள்ள பிரையானின் குடும்பம் மிக மிகத் தயங்கி உமாவை ஏற்றுக்கொள்ள முயற்சிக்கிறது. ஆனாலும் தீராத சமூகம் ஏற்படுத்திய குற்றவுணர்வின் காரணமாக, இணக்கமான உறவு என்றபோதும் தன் காதலனைவிட்டுப் பிரிகிறார் உமா.

சில ஆண்டுகள் கழித்து, ஒரு உணவகத்தில் எதேச்சையாக பிரையானை சந்திக்கிறார் உமா. இருவரும் புன்னகைத்துக் கொள்வதாக படம் முடிகிறது.

இந்த வயது வித்தியாசம் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இருந்திருந்தால் அந்தக் கதையின் போக்கு வேறுமாதிரியாக இருந்திருக்கும்; முடிவு வேறுமாதிரியாக இருந்திருக்கும். காதலர்கள் பிரிவதற்கான பிரச்சினையும் வேறாக இருந்திருக்கும்.

ஆனால், பெண்ணுக்கு வயது வித்தியாசம் ஒரு பெரிய தடை. மேற்கத்திய சமூகங்களிலும் இந்த வயது வித்தியாசம் மிகப்பெரிய விலக்கத்துக்கு உள்ளானதாக இருக்கிறது. காத்ரின் ஸீட்டா ஜோன்ஸ் நடித்த ’த ரீபாண்ட்’ (The rebound- 2009) என்றொரு படம். இதே கதைபோன்றதொரு கதைக்கருவுடன் இதே போன்றதொரு முடிவை சொன்ன படம்.

இத்தனைக்கும் இந்த இரண்டு படங்களிலும் கதாநாயகிகள் முறையான மணவிலக்கு பெற்றவர்கள். அவர்கள் காதலிக்கும் நபர்கள்கூட வேறு உறவுகளில் பிணைக்கப்படாதவர்கள். ஆனால் வயது வித்தியாசம் என்ற ‘தடை’ ஒன்றே இவர்கள் காதலை விட்டுத்தர போதுமானதாக இந்தப் படங்கள் வலியுறுத்துகின்றன, கிட்டத்தட்ட பழமைவாதிகளின் குரலில் இந்தப் படங்கள் பேசுகின்றன.

வெகுஜென படங்களை மட்டுமே இங்கே உதாரணத்துக்கு எடுத்திருக்கிறேன். இதுவே ‘உலகப் படங்களில்’ எனில் அத்தனை பிற்போக்குத்தனமானவையாக சித்தரிப்புகள் உள்ளன. ஒரு பெண்ணுக்குள்ள தேவை, ஆணுடனான பாலுறவு மட்டுமே என்பதே அந்தப் படங்களில் பொதுவான கதைக்கரு. மட்டுமிஞ்சிய பாலுறவு காட்சிகள் அந்தப் படங்களை ‘உலகப் படங்கள்’ என சொல்ல போதுமானவையாக உள்ளன. அவற்றின் பெயர் குறிப்பிடுவதுகூட ஒருவகையில் பெண்களை இழிவுபடுத்துவதாகவே கருதுகிறேன்.

தாராளவாதத்தை முதன்மைப்படுத்தும் மேற்குலக படங்களே இப்படியென்றால், அவற்றை பிரதியெடுத்து இயங்கும் இந்தியப் படங்கள், குறிப்பாக தமிழ் சினிமாக்கள் பெண்களின் உறவு சிக்கல்களை காட்சிப்படுத்தும் விதம் பிற்போக்குத்தனத்தை பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

‘புரட்சி’கரமான படமாகக் கருதப்படும் ‘மறுபடியும்’ படத்தின் நாயகி, தன் கணவனின் துரோகத்துக்காக அவரை விவாகரத்து செய்கிறார். புரட்சி அந்த அளவில் மட்டும் என நினைத்த இயக்குநர், தனக்கு ஆதரவாக உள்ள நண்பரின் காதலை நாயகி நிராகரிப்பதாக முடிக்கிறார். விவகரத்தானாலும் தன் முன்னாள் மனைவி கடைசி வரை இன்னொருவனின் கைப்படாதவளாகவே வாழ்நாளை கழிக்க வேண்டும் என்கிற ‘ஆழமான’ கருத்தை விதைத்து விட்டுச் செல்கிறது இந்தப் படம்.

‘நலம் வாழ என்னாலும் என் வாழ்த்துகள்’…

அதுபோல, ராதிகா நடிப்பில் வெளியான டெலிஃபிலிமான ‘சிறகுகள்’ (1999) லண்டனில் அப்பாவியான ஒரு பெண், தன் கணவனின் உறவு மீறலால் பாதிக்கப்பட்டு அவரை விவாகரத்து செய்வதை பேசியது. இதிலும்கூட காதலோடு வருபவரை நிராகரிப்பதாகவே கதை முடிக்கப்பட்டிருக்கும். நிஜ வாழ்வில் ராதிகா இருமுறை விவாகரத்து செய்து, மூன்று முறை திருமணம் செய்துகொண்டவர். ஆனாலும், ‘முற்போக்கு’ போனியாகாது என்கிற கணக்கில் காலம் முழுக்க கண்ணீரிலே பிள்ளைகளுக்கு குண்டி கழுவும் ஆயாவாகவே அந்தப் பெண் சாக வேண்டும் என கதையை முடிக்கிறார் அந்தப் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான ராதிகா.

ஆக மொத்தத்தில் பெண் உணர்வற்ற உடலாக, ஆண்களின் உடமையாக பிற்போக்கு சமூகம் எப்படி கட்டமைத்திருக்கிறதோ அதை அப்படியே பிரதி எடுக்கின்றன இந்த சினிமாக்கள். புரட்சி போல தெரியும் ஆனால் புரட்சியல்ல. சீர்திருத்தம்போல தெரியும் ஆனால் சீர்திருத்தம் அல்ல. ஆணுக்குள்ள அத்தனை உரிமையும் குறைந்தபட்ச உரிமைகளையாவது புரிந்துகொள்வது ஒரு திரைக்கலைஞருக்கு உள்ள நேர்மையான சமூக அக்கறையாக இருக்க முடியும். தனிப்பட்ட நபர்களை உணர்வளிக்க முடியாது. ஆனால், பொது சமூகமாக இந்த ஆணாதிக்கக் கூறுகளிலிருந்து விடுபடும் வழியைக் கண்டடைந்தால் பெண்ணை உணர்வுள்ளவளாகக் கருதும் படங்கள் வெளிவரலாம்!

நன்றி: திரையாள்.

கச்சநத்தம் சாதிவெறி படுகொலையை கண்டித்து கண்டனக் கூட்டம்

கச்சநத்தம் சாதிவெறி படுகொலையை கண்டித்து கண்டனக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது.

சட்டங்களை மூட்டைக் கட்டி வைத்து எல்லோரையும் மன்னித்துவிடுவோம்; ஏனெனில் நாம் கருணைமிக்க பெண்கள்!

அண்மையில் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புதிய தலைமுறை தொலைக்காட்சி நிருபரின் கேள்விக்கு பதிலளிக்காமல், ‘நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க… நீங்க போட்டிருக்க கண்ணாடி ரொம்ப நல்லா இருக்கு’ என மூன்றாம் தர பொறுக்கி போல நடந்துகொண்டார். ‘பொறுக்கி’ என்பது கடுமையான வார்த்தையாக இருக்கலாம்.  சற்று விளக்கமாகவே பார்க்கலாம். நீங்கள் ஒரு பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள். மதிக்கத்தக்க தோற்றத்துடன் உள்ள ஒருவரிடம் பஸ் எப்போது வரும் என கேட்கிறீர்கள். அவர் குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் ‘நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க. தினமும் பார்க்கிறேன், இன்னைக்கு உங்களுக்கு கண்ணாடி சூப்பரா இருக்கு’ என்கிறார். அவருடைய நடவடிக்கையை என்னவென்று சொல்வீர்கள்? தினமும் பார்க்கிறவர்; கண்ணியமிக்கவர் என சிரித்துவிட்டு போவீர்களா? அல்லது பொறுக்கி போல நடந்துகொள்கிறாரே என எரிச்சல் அடைவீர்களா?  சட்டப்படி இது பாலியல் தொல்லை தருவதன் கீழ் வரும். பத்திரிகையாளர் தன் பணி இடத்தில் பாலியல் ரீதியிலான பேச்சுக்களை எதிர்கொள்கிறார். அப்படிப் பேசியவர் மேதகு அமைச்சர்!

இந்த விவகாரத்தில் பலரும் கண்டனம் தெரிவித்தார்கள், அமைச்சர் தவறான அர்த்ததில் சொல்லவில்லை என விளக்கம் கொடுத்தார். ஒரு ஆண் நிருபரிடம் ‘நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்’ என அமைச்சர் சொல்லியிருப்பாரா? பெண் நிருபரிடம் ‘அழகு’ என்கிற வார்த்தைகளைப் பயன்படுத்தியதன் உள்ளார்ந்த நோக்கம், அவர் பெண் என்பதால் தானே சாத்தியமானது. விசாகா கமிட்டியின் பரிந்துரையின் படி, இதுவும் தண்டனைக்குரியதே. ஆனால், தொடர்புடைய அந்த நிருபர் சார்ந்த தொலைக்காட்சி அமைச்சரின் விளக்கத்தில் ’திருப்தி’ அடைந்துவிட்டது. அல்லது இதுவே போதுமென்று விட்டுவிட்டது.

இந்த சம்பவம் நடந்துமுடிந்த ஒரு சில வாரங்களுக்குள்ளாக மற்றொரு அவமானத்துக்குரிய சம்பவம், மேதகு தமிழக ஆளுநரால் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த முறை ஆளுநரின் கை நீண்டுள்ளது.

பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோவில் ஆளுநர் குறித்து பேச்சு வந்துபோக, சமூக வலைத்தளங்களில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். தன்னுடைய நிலையை விளக்கி ஆகவேண்டிய நிலையில், செவ்வாய்கிழமை மாலை 6 மணிக்கு ஆளுநர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

பத்திரிகையாளர்கள் நிர்மலா தேவி விவகாரம் குறித்து கேள்விகளை பூசி மெழுகி கேட்டுக்கொண்டிருக்க, த வீக் பத்திரிகையின் மூத்த பத்திரிகையாளர், லட்சுமி சுப்ரமணியன் முக்கியமான கேள்விகளை முன்வைத்தார்.  அதில் ஒன்று, உள்துறை அமைச்சகத்திடம் தென்னிந்திய ஆளுநர் ஒருவர் ஆளுநர் மாளிகை பெண்களை பாலியல் ரீதியிலான இச்சைகளுக்குப் பயன்படுத்திய புகார் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அது தமிழக ஆளுநர் மாளிகை பற்றியதுதானா என்று கேட்டார்.  கேள்வியை முடிக்கும் முன்பே ஆதாரம் அற்றது; முட்டாள்தனமானது என்றார் ஆளுநர்.

ஆளுநராக பதவியேற்று ஆறு மாதங்கள் ஆனதை ஒட்டியும் இதுவரை அப்பதவியில் இருந்த ஆளுநர்கள் செய்யாத ‘ஆய்வு’ப் பணிகளை செய்தமைக்காகவுமே பத்திரிகையாளர் சந்திப்பு, நிர்மலா பேரிலான விவகாரம் இரண்டாம் பட்சமே என்கிற ‘தெளிவு’ படுத்தலுடம் பத்திரிகையாளர் சந்திப்பு முடிவுக்கு வந்தது.

ஆளுநரின் தமிழ் மொழி ஆர்வம் குறித்து சில தொலைக்காட்சி நிருபர்கள் கேள்வி எழுப்ப, லட்சுமி ‘உங்களுடைய தமிழ் ஆசிரியர் யார்?’ என கேட்டிருக்கிறார். அதே கேள்வியை மற்றொரு ஊடகத்தின் பெண் நிருபரும் கேட்டிருக்கிறார். ஆனால், பன்வாரிலால் அதற்கான பதிலை அளிக்காமல் லட்சுமியின் கன்னத்தை தட்டிக் கொடுத்து சிரிக்கிறார்.

லட்சுமி அந்த சந்திப்பில் மிக முக்கியமான கேள்விகளை எழுப்பிய பத்திரிகையாளர். அவர் ஆளுநரின் குடும்ப விழாவில் கலந்துகொண்ட உறவுக்காரரும் அல்ல. தன் பணியை செய்துகொண்டிருக்கும் ஒரு பெண், எந்த வகையில் ‘தாத்தா’வைப் போன்ற உணர்வை லட்சுமியின் செயலின் மூலம் பெறுகிறார். சமூக ஊடகங்களில் ஆளுநரின் செயலுக்கு ‘தாத்தா’ வின் செயல்போன்றது என பூசிமெழுகும் நபர்களின் புரிதல் எந்த வகையில் ஏற்புடையதாகும். தன் கடமையைச் செய்யும் ஒரு பெண்ணை அவமதிக்கும் செயலாக அவர்களுக்குப் படவில்லையா? ஆளுநர் என்ன மனநிலையில் இத்தகைய கீழ்த்தரமான செயலை செய்திருப்பார்?

‘என்வாழ்நாளில் பெண் பத்திரிகையாளர்களேயே பார்த்ததில்லை… நீங்கள் இப்படியெல்லாம் கேள்வி கேட்பவர்களாக இருக்கிறீர்களே’ என தன் பாராட்டுதலை தெரிவிக்கிறாரா? அல்லது ‘யார் கேட்காத கேள்வியெல்லாம் கேட்கிறாய்; ஜாக்கிரதையாக இருந்துகொள்’ என்கிற எச்சரிக்கையை தட்டிக்கொடுத்து விடுக்கிறாரா? அல்லது பெண்ணின் செயலைப் பார்க்காமல் அவளை உடலாகப் பார்க்கும் திமிர்த்தனமா? என்ன விளக்கம் சொன்னாலும் ஆளுநரின் செயல் மன்னிக்கமுடியாத அழுக்கு!

சென்னை பத்திரிகையாளர் சங்கம், ஆளுநரின் செயலை கண்டித்திருக்கிறது.  இந்திய குற்றவியல் தண்டனை சட்டப் பிரிவு 354 பிரிவின் கீழ் தண்டனைக்குரியது என சுட்டிக்காட்டுகிறது. ஆளுநரின் இச்செயல் பாராட்டத்தக்கதல்ல என்கிறது. ஆளுநரை மன்னிப்பு கேட்கச் சொல்கிறது. மன்னிப்புக் கேட்டால் விட்டுவிடுவோம் இல்லையேல் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராவோம் என்கிறது அந்த அறிக்கை.

பத்திரிகையாளர் சங்கம் சுட்டிக்காட்டிய பிரிவின் கீழ் ஆளுநரின் செயலும் மேலே விவரித்த அமைச்சரின் செயலும் மூன்றாண்டு சிறை தண்டனைக்குரியவை. ஆனால், இங்கே மன்னிப்பு மட்டுமே போதுமானதாக இருக்கிறது. சில சமயங்களின் விளக்கம் மட்டுமே கூட போதும்.

பத்திரிகையாளர் லட்சுமி சுப்ரமணியன், ஆளுநரின் செயல் அருவருப்பாகவும் ஆவேசமூட்டக்கூடியதாகவும் உள்ளது என்கிறார். ஒரு ஆணுக்கு உள்ளதைப் போன்ற வெளியுடன் சுதந்திரத்துடன் தன் பணியைச் செய்ய நினைக்கும் ஒவ்வொரு பெண்ணும் இதையேதான் உணர்வார். ஆனால் ஆண்மைய சிந்தனையில் ஊறிய ஊடக நிறுவனங்களுக்கும் சங்கங்களுக்கு ‘மன்னிப்பு’ என்கிற வார்த்தையே போதுமானதாக இருக்கிறது. ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் ‘வெறும்’பெண்கள். கருணைமிக்க பெண்கள். எல்லா அத்துமீறல்களுக்கும் இனி ‘மன்னிப்பு’ மட்டும் போதுமானது. காஷ்மீரத்துச் சிறுமியிடம் கூட மன்னிப்பு கேட்டுவிடுங்கள்.

ஆளுநர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை: வலுக்கும் எதிர்ப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித், கோவை ஆட்சியருடன் இன்று ஆய்வுக்கூட்டம் நடத்தினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது, நியமனம் செய்யப்பட்ட ஆளுநர் ஆட்சிப் பணிகளில் தலையிடுவதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முன்னதாக ஆளுநர் ஆலோசனை நடத்திய விருந்தினர் மாளிகைக்கு எதிரே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

சட்டவிரோத தேர்தல்: எச்.ராஜா

சாரண, சாரணியர் இயக்க தலைவருக்கான தேர்தல் சட்ட விரோதமாக நடந்துள்ளதாக பாஜக தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு நடக்கும் போராட்டங்கள்; தொகுப்பு!

https://www.facebook.com/anbe.selva/posts/1492603270806521மாணவி அனிதாவின் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் பல இடங்களில், பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரையில் விடுதலை சிறுத்தைகள் பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்து போராட்டம்; கைது…

சென்னை அண்ணாசாலையில் தமிழ்நாடு இளைஞர் இயக்கம் ஆர்ப்பாட்டம்…

 

விசிக சென்னையில் நடத்திய போராட்டம்…

டெல்லி ஜந்தர்மந்தரில் எழுத்தாளர் மாலதி மைத்ரி ஒருங்கிணைக்கும் போராட்டம்…

மதுரையில் மே 17 இயக்கம் நடத்திய போராட்டம்…

சென்னையில் சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தலைமையில் நடத்திய போராட்டம்…

மதுரையில் வழக்கறிஞர்கள் சாலைமறியல்…..

 

 https://www.facebook.com/rabeek.raja.904/posts/1616381675094223

“நிகழ்ந்தது மரணம் அல்ல; மத்திய மாநில அரசுகள் கூட்டுச் சேர்ந்து செய்த பச்சை படுகொலை”

ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் அறிக்கை:

நிகழ்ந்தது மரணம் அல்ல மத்திய மாநில அரசுகள் கூட்டுச் சேர்ந்து செய்த பச்சை படுகொலை. அடிப்படை வசதிகளற்ற கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு படித்து உயர் மதிப்பெண் பெற்றும் மருத்துவம் படிக்க முடியவில்லையே என்று சட்டப் போராட்டங்களை நடத்தி, தீர்வு கிடைக்காத காரணத்தினால் மன அழுத்தத்திற்கு ஆளாகி மரணத்தை தழுவிய மாணவி அனிதாவை இழந்து வாடும் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் ஆதித்தமிழர் பேரவை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளியாக இருக்கும் தந்தைபடும் துயரம், இத் தலைமுறையோடு போகட்டும் என, 12 ஆம் வகுப்பில் இரவு பகல் பாராது கடுமையாக உழைத்து, படித்து 1,176 மதிப்பெண்களைப் பெற்று மருத்துவக் கல்லூரிக்குள் செல்லும் கனவுகளோடு காத்திருந்த அரியலூர் மாணவி அனிதாவை, மார்ச்சுவரிக்குள் தள்ளி இருக்கும் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோதச் செயலை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.

தலைமுறை தலைமுறையாக தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும், குறிப்பாக பெண்கள் எவரும் கல்வி கற்க கூடாது என கட்டளைகளை விதித்த பார்ப்பன மதம், பார்பான் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற விதியை ஏற்படுத்தி வைத்திருந்த மனுநீதியின் அநீதியை எதிர்த்து, புரட்சியாளர் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் போராடிப் பெற்ற உரிமையான சமூகநீதிக் கோட்படிலான இட ஒதுக்கீட்டைத் தகர்க்கும் நோக்கில் மத்திய மோடி அரசு கொண்டு வந்துள்ள நீட் நுழைவுத்தேர்வு சமூகநீதியை சவக்குழிக்குள் தள்ளி மாணவி அனிதாவின் உயிரைப் பறித்துள்ளது. நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக நாடு முழுதும் எழுந்த எதிர்ப்புகளையும் மீறி, மக்கள் விருப்பத்திற்கு மதிப்பளிக்காமல், அறுதிப் பெரும்பான்மையாக இருக்கிறோம் என்ற அகந்தையில் ஆர்.எஸ்.எஸ் திட்டங்களை, ஒவ்வொன்றாக நடைமுறைப் படுத்துவதில் மட்டுமே குறியாக இருந்து வருகிறது மத்திய அரசு. இதைத் தட்டிக் கேட்டு தமிழக உரிமைகளை பாதுகாக்க வேண்டிய எடப்பாடி அரசோ, தனது அரசை காப்பாற்றிக் கொள்வதற்காக பா.ச.க வின் கைப்பாவை அரசாகவே மாறி, வாக்களித்த தமிழக மக்களுக்கு பெரும் துரோகத்தை செய்துவருகிறது.

மத்திய பாடத்திட்டத்தின் மூலம் பயின்ற மாணவ மாணவியர் மட்டுமே இனி மருத்துவக் கல்லூரிகளுக்கு செல்ல முடியும் என்ற நிலையை உருவாக்கி, ஏழை எளிய, கிராப்புற ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவை தவிடு பொடியாக்கி, மாணவி அனிதாவின் உயிரைப் பறித்தது மட்டுமல்லாது, பல மாணவ மாணவியரை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி தனது பயங்கரவாத செயலை அரங்கேற்றி வருவது கண்டனத்துக்குறியது. மாணவி அனிதாவின் உயிரிழப்பு ஒட்டு மொத்த மாணவ மாணவியரின் உணர்வின் வெளிப்பாடே ஆகும். எனவே மாணவி அனிதாவின் மரணத்திற்கு பிறகாவது தமிழக அரசு, மத்திய மோடி அரசிற்கு அழுத்தம் கொடுத்து நீட் நுழைவுத் தேர்விற்கு நிரந்தர தடை கோர வேண்டும் என்று தமிழக அரசை வற்புறுத்துவதோடு, மாணவியை இழந்து வாடும் பெற்றோருக்கு உரிய நீதியை வழங்கிட வேண்டும் என்று ஆதித்தமிழர் பேரவை தமிழக அரசை வலியுறுத்துகிறது.

கண்டனக் கூட்டமும் கவிதை வாசிப்பும்

அனிதாவின் மரணத்திற்கும் நீட்டை எதிர்த்தும் கண்டனக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது.

நாள்: 02.09.2017 சனிக்கிழமை, மாலை 4.30 மணி.
இடம்: அம்பேத்கர் திடல், அசோக் நகர், சென்னை.
ஒருங்கிணைப்பு: சுகிர்தராணி, நாச்சியாள் சுகந்தி.

படைப்பாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள் அனைவரும் வருக.
இது நம்ம கடமை …வந்திடுங்க.

அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகள் போராட்டம்!

மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் நீட் தேர்வை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் போராட்டத்தை நடத்தின.

 

நாளையும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை அறிவித்துள்ளன.

இரா.தெ.முத்து:

அனிதாவிற்காக நாளை ( செப் 2 ) ஒரு போராட்டம் நடக்கிறது. வருக தோழர்களே
சென்னை தாராப்பூர் டவர் அருகே( தேவி தியேட்டர் எதிரே) காலை 10/மணி
மறியல் போர்
தோழர் ஜி ராமகிருஷ்ணன் தலைமை
மார்க்சிஸ்ட் கட்சி களம்

நீங்கள் நீலிக்கண்ணீர் வடிக்காதீர்கள்: ஊடகங்களை பகிரங்கமாக குற்றம்சாட்டிய மரு. கிருஷ்ணசாமி

நீட் தேர்வால் தன்னுடைய மருத்துவ கனவு சிதைந்தநிலையில் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா. அனிதாவின் மறைவு தமிழக சூழலில் பெரும் புயலைக் கிளப்பியது. இதுகுறித்து தொலைக்காட்சி ஊடகங்கள் விவாதங்களை நடத்தின. நியூஸ் 7, புதிய தலைமுறை, நியூஸ் 18 தமிழ்நாடு ஆகிய தொலைக்காட்சிகள் நடத்திய விவாதங்களில் பங்கேற்றார் மருத்துவர் கிருஷ்ணசாமி. நியூஸ் 7 விவாதத்தில் நெறியாளர் விஜயனிடம் கடுமையாக நடந்துகொண்ட கிருஷ்ணசாமி, ஊடகங்கள் கருத்துகளை புகுத்துவதாக குற்றம்சாட்டினார். புதிய தலைமுறை விவாத்தில் நெறியாளர் கார்த்திகை செல்வன், நீங்கள் எந்த அடிப்படையில் மருத்துவர் ஆனீர்கள் என கேட்டதற்கு, நீங்கள் எந்த அடிப்படையில் ஊடக பணிக்கு வந்தீர்கள் என ஆவேசப்பட்டார் மரு. கிருஷ்ணசாமி.

நியூஸ் 18 தமிழ்நாடு நடத்திய விவாத்தின் நெறியாளர் குணசேகரன், ‘விக்டீம் மீதே பழிபோடுகிறீர்களே, மத்திய-மாநில அரசுகள் நீட் குறித்து இறுதிவரை சரியான வழிகாட்டுதலை தரவில்லையே? என்று மரு. கிருஷ்ணசாமியிடம் கேட்டார். அதற்கு கிருஷ்ணசாமி, ‘நீங்கள் ஏன் இந்த விஷயத்தில் நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள்?” எனக் கேட்டார்.

மருத்துவர் கிருஷ்ணசாமி, அனிதாவின் தற்கொலை குறித்தும் கேள்வி எழுப்பிய ஊடகங்களை அவதூறு செய்ததும் கடுமையான கண்டனங்களை எழுப்பியுள்ளது.

வெள்ளை கோட்டு போட்டுகிட்டு காலேஜுக்கு போக வேண்டிய புள்ளைய இப்படி, கட்டையில.. ஏத்திட்டீங்களே.?

எம். புண்ணியமூர்த்தி

எம். புண்ணியமூர்த்தி

அடேய்ய்ய்ய்ய்
பாருங்கடா இந்த முகத்த… மனசெல்லாம் பதறுதேடா…

வெள்ளை கோட்டு போட்டுகிட்டு காலேஜுக்கு போக வேண்டிய புள்ளைய இப்படி, கட்டையில.. ஏத்திட்டீங்களே.?

இன்னும் கூட உணராம
ஏழு லட்சமும்…ஒரு அரசு வேலையும்னு சொல்லி ஏழைங்க வாயை மூடுறீங்களே..

இவ்வளவு நாளா ஓட்டுக்கு விலை வைச்சி ஆண்டீங்க…
இப்போ உசுருக்கும் லட்சியத்துக்கும் கூட
விலைபேசி அடிக்கிறீங்க…

மூட்டைத் தூக்கி வளத்த புள்ள..
இப்போ மூச்சில்லாம கெடக்குறாளே…
தாயில்லா புள்ள…
தன்னையே கொடுத்துட்டாளே..

உங்க வீட்டு பிள்ளையானால்..
இப்படியெல்லாம் பேசுவீங்களா..?
நிவாரணம் வாங்கி ஒதுங்குவீங்களா?

அடேய்ய்ய்…
பாருங்கடா இந்த முகத்தை

மாணவி அனிதா தற்கொலை: முதலமைச்சர் எடப்பாடி பதவி விலக வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை:

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா நடந்து முடிந்த 12ஆம் வகுப்பில் 1176 மதிப்பெண்களையும், கட்ஆஃப் மதிப்பெண்னாக 196.5 பெற்றார்.

மருத்துவம் பயில இரவும் பகலும் படித்து அதிக மதிப்பெண்களைப் பெற்ற அனிதா நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்களை பெற்றார் என்பதால் மருத்துவக் கல்வி பயிலமுடியாமல் மனவேதனை அடைந்து இன்று தற்கொலை செய்துக் கொண்டார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அனிதா, விபரீத முடிவை எடுத்து தனது வாழ்வை முடித்துக்கொண்டுள்ளது வேதனைக்குரியது. பிரச்சினைகளுக்கு மரணம் முடிவாகாது என்பதை இளைய தலைமுறையினர் உணர வேண்டும். இதுபோன்ற செயலில் வேறு யாரும் ஈடுபடக்கூடாது என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

சமூக நீதியையும், ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களையும் பாதிக்கும் நீட் தேர்வுக்கு விலக்குபெற திராணியற்ற எடப்பாடி தலைமையிலான மாநில அரசும், விலக்கு அளிப்போம் என்று ஏமாற்றிவந்த மத்திய அரசும் இந்த தற்கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும். இந்த சோக சம்பவத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி தனது முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி கோருகின்றது.

மாணவி அனிதாவின் மரணம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய அரசு உடனே நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு முழு விலக்கு அளிக்க வேண்டுமென கோருகிறேன்.

மரணமடைந்த மாணவி அனிதாவின் குடும்பத்தில் ஒருவருக்கு மத்திய அரசு வேலை வழங்க வேண்டுமென்றும் அனிதாவின் குடும்பத்தினருக்கு கனிசமான இழப்பீட்டையும் வழங்க வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

மாணவி அனிதா தற்கொலைக்கு அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்!

அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்தும் மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டதயறிந்து அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“மாணவி அனிதாவின் தற்கொலை நடந்திருக்கக் கூடாத ஒன்றாகும். அனிதாவின் தற்கொலையை தடுக்கத் தவறியதற்காக சமூகம் வெட்கப்பட வேண்டும். மாணவி அனிதா 12-ஆம் வகுப்பில் மிகவும் சிறப்பாக படித்து 1176 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்திருந்தால் அனிதாவுக்கு தமிழகத்தின் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கக்கூடும்.

ஆனால், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்ததாலும், நீட் தேர்வில் அனிதா மிகவும் குறைந்த மதிப்பெண் எடுத்திருந்ததாலும் அவரால் மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்கவில்லை. ஆயிரக்கணக்கான கிராமப்புற மாணவர்களின் நிலை இது தான். நீட் தேர்வு குறித்த சரியான புரிதல் கூட ஏற்பட்டிருக்காத அனிதா போன்ற ஊரக ஏழை மாணவர்களை, நகர்ப்புற பணக்கார மாணவர்களுடன் நீட் தேர்வு என்ற பெயரில் போட்டியிட வைத்தால் அவர்களுக்கு தகுதியிருந்தாலும் ஏமாற்றமே மிஞ்சும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத் தான் நீட் தேர்வுக்கு எதிராக மிகக்கடுமையாக பாட்டாளி மக்கள் கட்சி போராடியது.

ஆனால், மத்திய, மாநில அரசுகள் நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு தற்காலிக விலக்காவது கிடைக்கும் என்ற நம்பிக்கையை விதைத்து கடைசி நேரத்தில் துரோகம் இழைத்தன. அதையும், அதனால் ஏற்பட்ட ஏமாற்றம் மற்றும் அதிர்ச்சியையும் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் கிராமப்புற ஏழை மாணவி அனிதாவின் தற்கொலைக்கு எடப்பாடி தலைமையிலான தமிழக அரசும், மத்திய அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

அதேநேரத்தில் துணிச்சலான மாணவி என்று அறியப்பட்ட அனிதா எப்படி இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்பதைத் தான் என்னால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்தால் தம்மைப் போன்ற கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அதற்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அனிதா இப்படி ஒரு முடிவுக்கு வந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதேநேரத்தில் இதற்கு சமூகத்தின் தோல்வியும் காரணமாகும்.

உச்சநீதிமன்றத்தில் அனிதா நடத்திய சட்டப் போராட்டம் தோல்வியடைந்ததாலும், அவருக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காததாலும் அவருக்கு கடுமையான மன உளைச்சல் ஏற்படுவது இயல்பானது தான். மிகவும் கடினமான அந்த சூழலில் அவருக்கு உளவியல் கலந்தாய்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். மருத்துவம் மட்டுமே கல்வி அல்ல. உலகில் சாதிப்பற்கு எத்தனையோ தளங்கள் உள்ளன என்பதை அவருக்கு உணர்த்தி, அவரை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும். அதை செய்யத் தவறியதற்காக ஒட்டுமொத்த சமுதாயமும் குற்ற உணர்வில் தலைகுனிய வேண்டும்.

எப்போதுமே தோல்வி என்பது வெற்றிக்கான படிக்கட்டு ஆகும். நீட் தேர்வில் தோற்றாலும் கூட, அடுத்த ஆண்டில் அதே தேர்வை வெற்றிகரமாக எழுதி மருத்துவப் படிப்பில் சேர முடியும். மருத்துவம் தவிர ஏராளமான படிப்புகள் உள்ளன என்பதால் இதற்காக தற்கொலை செய்து கொள்ளும் போக்கை கைவிட வேண்டும். நீட் தேர்வில் தோற்றவர்களுக்கு அரசு உளவியல் கலந்தாய்வு வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

நீட் : மாணவி அனிதா ‘ படுகொலை ’ மோடியும் எடப்பாடியும்தான் குற்றவாளிகள்: புமாஇமு ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வால் மருத்துவ கனவு பறிபோன நிலையில் தற்கொலை செய்துகொண்டார் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா. அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

கண்டன ஆர்ப்பாட்டம்
அண்ணாசாலை, பெரியார்சிலை, சிம்ப்சன், சென்னை
செப்டம்பர் – 2, காலை 11 மணி
புரட்சிகர மாணவர் இளைஞர் – முன்னணி
9445112675

வாதாட வேண்டியவர்கள் பேரம் பேசிக்கொண்டிருந்தால் எப்படி மக்கள் வாழ்வார்கள்?

வாதாட வேண்டியவர்கள் பேரம் பேசிக்கொண்டிருந்தால் எப்படி மக்கள் வாழ்வார்கள்? கமல்ஹாசன் என நடிகர் கமல்ஹாசன், மாணவி அனிதாவின் தற்கொலைக்கு தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார்.

மத்திய மாநில அரசுகள் மட்டும் அல்ல நீதிமன்றமும் மக்கள் அமைத்தது தான் என்றும் நடிகர் கமல் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், “நீட் விவகாரத்தில் தோழர் திருமாவளவன் போன்றோர் கட்சிகளைக் கடந்து வெகுண்டெழுந்து போராட வேண்டும்!” என்றும் தெரிவித்தார்.

 

 

அனிதாவுக்கு பிரேத பரிசோதனை செய்ய மிரட்டி கையெழுத்து வாங்கினர்: அனிதா தந்தை குற்றச்சாட்டு

அரியலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் உள்ள அனிதாவின் உடலை வாங்க அவருடைய தந்தை சண்முகம் மறுத்துள்ளார். அனிதாவின் உடலை அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்ய அதிகாரிகள் தன்னிடம் மிரட்டி கையெழுத்து வாங்கியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அனிதாவின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்துட்டதா? காவல்துறை விசாரித்து சொல்லிவிட்டார்களா?: டாக்டர் கிருஷ்ணசாமி

நீட் தேர்வால் மருத்துவ கனவு சிதைந்துபோனதை அடுத்து தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா குறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அனிதாவின் தற்கொலைக்கு நீட் காரணம் அல்ல என்றும் மருத்துவம் படிக்க முடியவில்லை என்றால் வேறு படிப்புக்கு முயற்சிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். டாக்டர் கிருஷ்ணசாமியின் கருத்து, சமூக ஊடகங்களில் பலத்த எதிர்ப்பை கிளப்பியது. டாக்டர் கிருஷ்ணசாமியின் கருத்தை ஒட்டி விவாதம் நடத்தியது நியூஸ் 7 தொலைக்காட்சி விவாதம் நடத்தியது.

இந்த விவாதத்தில் பேசிய திமுக பேச்சாளர் பிரசன்னா, ‘நக்கிக் கொடுப்பார்; அதையும் நல்லதென்று சொல்வார்’ என்ற பாரதிதாசனின் வரிகளை மேற்கோள் காட்டி கடுமையான கண்டனங்கள் தெரிவித்தார்.

விவாத்தின் தொடர்ச்சியாக டாக்டர் கிருஷ்ணசாமியை அழைத்து பேசிய நெறியாளர், அனிதாவின் தற்கொலை குறித்து மீண்டும் கேட்டார். அப்போது ஆவேசமாக பேசிய கிருஷ்ணசாமி, ‘நான் பேசியதை அப்படியே வெளியிட்டிருக்க வேண்டும். சர்ச்சை பேச்சு என அடைமொழியை ஊடகம் கொடுக்கக்கூடாது. அனிதாவின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்துவிட்டதா? காவல்துறை விசாரணை முடித்துவிட்டதா? அதற்குள் நீட்தான் அனிதாவின் தற்கொலைக்கு காரணம் என எப்படி சொல்வீர்கள்?’ என்றார்.

12 ஆண்டுகள் தொடர் முயற்சியை ஒரு உத்தரவில் பறித்துக் கொண்ட மத்திய, மாநில அரசுகள்!

மாணவி அனிதாவின் தற்கொலை தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்து +2 தேர்வில் 1176 மதிப்பெண் பெற்று, மருத்துவப் படிப்புக்கான கட்ஆப் மதிபெண் 196.5 பெற்றிருந்த அரியலூர் மாணவி அனிதா வின் தற்கொலை சாவு நெஞ்சை பிளக்கும் செய்தியாக கிடைத்து அதிர்ச்சியுற்றோம்.

சுமைப்பணித் தொழிலாளியான சண்முகம், தாயை இழந்த பிள்ளையான அனிதாவின் மருத்தவ கனவை நிறைவேற்ற அல்லும், பகலும் பாடுபட்டார். குடும்பக் கஷ்டத்தை உணர்ந்த அனிதா கருத்துடன் படித்து அவரது திறனை வெளிப்படுத்தினார். நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரையிலும் சட்டப்போராட்டத்தை நடத்தினார். ஆனால், ‘நீட் தேர்வு’ என நவீன குலக்கல்வித் முறை அமலாக்கப்பட்டதால் அனிதாவின் மருத்துவக் கல்வி வாய்ப்பு பலவந்தமாக பறிக்கப்பட்டுள்ளது.

12 ஆண்டுகள் தொடர் முயற்சியை ஒரு உத்தரவில் பறித்துக் கொண்ட மத்திய அரசும், தமிழ்நாட்டின் மாணவ சமூகத்தின் நலனை விட்டுக்கொடுத்து, அரசியல் ஆதாயம் தேடி, அலையும் மாநில அரசும் மன்னிக்க கூடாத குற்றவாளிகளாவர். மத்திய, மாநில அரசுகள் அனிதாவை தற்கொலைச் சாவுக்கு நெட்டித் தள்ளி நிர்பந்தித்த குற்றச் செயலுக்கு பொறுப்பேற்க வேண்டும். அனிதாவை இழந்துள்ள அவரது குடும்பத்தின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கான உதவிகளை அரசு செய்யவேண்டும். மருத்துவக் கனவோடு, கண்விழித்து படித்து, திறனை உலகுக்கு வெளிப்படுத்திய அனிதாவின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறது. அவரை இழந்து நிற்கும் அவரது தந்தைக்கும், குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

விவேகமும் ப்ளூ சட்டை அண்ணாச்சியும்

கார்த்திக்

யூடியூபில் எங்கு திரும்பினாலும் ப்ளூ சட்டை அண்ணாச்சியை வெளுக்கிறார்கள் அஜித் ரசிகர்கள் . அதுவும் சிறுவரிலிருந்து பெரியவர் வரை ஏன் பெண்கள் கூட ஸ்லீப்பர் செல் போல காணப்படுகின்றார்கள் . இவர்கள் தயாரிப்பாளர் போல வசூல் பற்றி எல்லாம் கதறுகிறார்கள் . நேற்று ஒரு சினிமா நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தேன் . 12 வருடமாய் உதவி இயக்குநர் நல்ல திறமையானவர் கடுமையான உழைப்பாளி . “அஜித் மட்டுமே தான் உழைக்கிராரா சினிமாவுல ” என்றார் அஜித் சம்பளம் 50 கோடி என்றார் காசு வாங்கியதற்கு தானே வேலை செய்கிறார் . அஜித் ரசிகர்கள் படம் நல்லா இருக்கானு கேட்டா “தல கடுமையாக உழைத்து இருக்கிறார் ” என்கிறார்கள் . மூட்டை தூக்குபவனிலிருந்து எல்லாரும் தான் உழைக்கிறார்கள் . மேலே செல்ல செல்ல காசு அதிகமாகி உழைப்பு கம்மி ஆகிறது . இஃது அஜித்துக்கு தெரியாதா ?

இந்த விமர்சகர்களும் லேசுப்பட்டவர்கள் அல்ல. நோகாமல் நோம்பு தின்பவர்கள். படக்குழுவில் இருந்து காசு வரும். youtube ஹிட்ஸ் வரும் அதிலிருந்து காசு. சினிமா பற்றி ஆனா ஆவ்வண்ண தெரியாது. எடிட்டிங் கேமரா என்பார்கள் வேகமாய் போனால் நல்ல எடிட்டிங் கலராய் இருந்தால் நல்ல காமெரா அவ்வளவு தான் சொல்லத்தெரியும்.

ஒரு தேர்ந்த விமர்சகர் எல்லாம் யாரும் கிடையாது. சிலருக்கு சினிமா தெரிந்தாலும் காசு வேலை செய்துவிடும். விமர்சனம் தப்பு என்று சொல்லமாட்டேன் விமர்சிக்கிறவருக்கு சினிமா தெரியாமல் எப்படி விமர்சிக்க முடியும். இதை வேண்டுமானால் ரசிகனின் பார்வை என்று சொல்ல முடியுமா? விமர்சகன் என்றால் சினிமா தெரிய வேண்டும். ஒன்னும் தெரியாதவர்களை விமர்சகர்களாக ஆக்கியது நம் மக்கள் அப்போ உலக சினிமா வருமா என்ன விவேகம் மெர்சல் காற்று வெளியிடை போன்ற படங்களே வரும் .

ஹாலிவுட் தரம் என்கிறார்களே உண்மையில் ஹாலிவுட் தரமானதா வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் தானே. ஹாலிவுட் தரமென்றால் விவேகம் தரமான படம் தான்.

மக்களுக்கு வேகம் தேவைப்படுகிறது. ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். யார் நமக்கு நெருக்கம் என்பதெல்லாம் கூட யோசிக்க நேரமில்லை. நிற்க நேரமில்லை, காதலிக்க நேரமில்லை, கவிதையை ரசிக்க நேரமில்லை, மக்கள் பிரச்சனை கேட்க நேரமில்லை. நான் நான் மட்டுமே போட்டோ எடுக்க கூட யாரையும் நம்புவதில்லை நாமே எடுப்போம். அந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க எடிட்டர் ஒரு காட்சி கூட மனதில் நிற்காமல் எடிட் செய்கின்றார்.
காமெரா நிற்காமல் பறக்கிறது அஜித் சுட்டுக்கொண்டே இருக்கிறார். முதலாளித்துவம் சொல்வது போல் நீ உன்னை மட்டுமே நம்பு என்கின்றார். உலகிலேயே ஓரே உத்தமர் அவர். எல்லாருமே முதுகில் குத்துபவர்கள்… இந்த கருத்தை இந்த முதலாளித்துவ கருத்தை சொல்வதால் தான் அஜித் இமேஜ் மக்களிடம் செல்லுபடியாகிறது.

எல்லாரும் தான் நல்லவர் மற்றவர்கள் முதுகில் குத்துபவர்கள் என்று நம்புகிறார்கள். அஜித் படங்களில் தொடர்நது தனி நபர் உழைப்பு யாரையுமே நம்பாதது முதுகில் குத்துவது தொடர்ந்து வருகிறது மக்களின் செல்ல பிள்ளை ஆகிறார்.

அதனால் ப்ளூ சட்டை ஆள் மீது வன்மத்தை காட்டுகிறார்கள். இது மன நோய். ஒரு நாயகனுக்கு கொடி தூக்குவது மன நோய். நானும் பைத்தியமாய் இருந்து தெளிந்தவன் தான். படத்தை ரசியுங்கள் வழிபடாதீர்கள்.

இருக்கும் கடவுள்கள் போதும் மக்களை சுரண்ட புது கடவுள் எதற்கு மக்களை மழுங்கடிக்கவா?

கார்த்திக், யூ ட்யூப் விமர்சகர்.

https://www.youtube.com/user/karthiparthi

மனைவியின் பிள்ளையும், கணவனின் குழந்தையும்!

அமுதா சுரேஷ்

அமுதா சுரேஷ்

கொடுங்கையூரில் மாற்றுக்காதலால் சேர்ந்து வாழ்ந்த ஜோடியில் ஆணொருவன், மனைவிக்கு முதல் கணவன் வழி இருந்த மூன்று வயது ஆண் குழந்தையை, விடாமல் அழுததற்காக சுவற்றில் அடித்து கொன்றுவிட்டு பின்பு படிக்கட்டில் தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடியிருக்கிறான் என்ற செய்தியும், இறந்து போன அந்தக் குழந்தையின் புகைப்படத்தையும் காண நேர்ந்தது! சிறிது நாட்களுக்கு முன்னர் இரண்டாம் திருமணம் செய்த பெண், கணவனின் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட செய்தியையும் படிக்க நேர்ந்தது, அவ்வப்போது “சித்தி” கொடுமை என்ற கண்ணீர் கதைகளையும் கேட்க நேர்கிறது, இவையெல்லாவற்றையும் சாதாரண செய்திகள் என்று கடக்க முடிவதில்லை!
அதிலும் இதுபோன்ற எல்லா திருமணங்களிலும், உறவுகளிலும், கணவனுக்கு முந்தைய வழி வந்த குழந்தையோ, அல்லது மனைவி வழி வந்த குழந்தையோ பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை!கொலை செய்யும் அளவுக்கு பெரும்பாலும் “சித்திகள்” செல்வதில்லை, ஆனால் கொலையையும் எளிதாக செய்ய முடிகிறது ஆண்களால், ராயப்பேட்டையில் இரண்டாவது கணவன், மனைவி, அவளது பெண் குழந்தைகள் என்று வரிசையாய் ஐந்துபேரை கொன்றது நினைவில் இருக்கலாம்!

இரண்டாவது மனைவி அவள் குழந்தையென்றில்லை, நடைபாதையில் வசிக்கும் ஒரு கூலித்தொழிலாளி, தன் ஒரு வயது ஆண் குழந்தை சாலையோரத்தில் தூளியில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், மனைவியுடன் உறவுக்கு முற்பட்ட நிலையில், உறங்கிய குழந்தை பசிக்கு அழ, அந்த எரிச்சலில் அந்தத் தூளியை மரத்தில் மோதி குழந்தையைக் கொன்ற செய்தியும் உண்டு!

“ஒருவனை காதலிப்பவள் திருமணம் ஆனதும் அவனின் குடும்பத்தையே மணம் செய்து கொண்டவள் ஆகிறாள் என்றும், ஒருத்தியை காதலிக்கும் ஆண், அவளை மட்டுமே திருமணம் செய்துகொள்கிறான்” என்று ஒரு முதுமொழி உண்டு! இதன் காரணம் என்ன? கலாச்சாரம் என்பதையும் தாண்டி, ஆண்களின் வளர்ப்பு மனநிலையே பெரும்பாலும் காரணம்!

குடித்தால், புகைத்தால், ஒழுக்கம் கெட்டால், திருடினால், கொலை செய்தால், வேறொரு திருமணம் செய்தால், பலதார உறவு கொண்டால், இந்த எல்லா “ல்” களையும் ஆண்கள் செய்யும்போது, சாதாரண அன்றாட நிகழ்வாகவும், இதில் எதை ஒன்றையாவது பெண் செய்தால், “கலாச்சாரம், ஒழுக்கம்” என்று பெண்ணுக்கு போதிக்க ஆரம்பிக்கிறோம்!

மனப்பொருத்தம் இல்லையென்றாலும், மணவாழ்க்கையை பலர் சகித்துக்கொண்டு கடப்பதற்கு காரணம் குழந்தைகளே, அதுபோன்ற பல தகப்பன்களின், தாய்களின் சகிப்புத்தன்மைக்குப் பின்னேதான் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது! குழந்தைக்கே அச்சுறுத்தலாகும் போது கணவனை விட்டு பிரிதலும், கொலை செய்யும் அளவுக்கும் பெண்கள் செல்வது உண்டு! “பாதுகாப்பு” என்ற வளையம் கூட பெரும்பாலும் “பொருளாதாரம்” “சமூகம்” என்ற இரண்டையுமே சுற்றி வருகிறது!

பெற்றவர்கள், பெண்ணுக்கு படிப்பெதற்கு, சுய காலில் நிற்பதெதற்கு என்று பல லட்சம் செலவு செய்து திருமணம் செய்து வைக்க, ஒருவேளை அவன் குடிகாரனாகவோ, மோசமானவனாகவோ இருக்க நேர்ந்தால், சுய சம்பாத்தியம் இல்லாத பெண்ணுக்கு எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு அவனையே சார்ந்து வாழும் நிலை ஏற்படுகிறது, சுய சம்பாத்தியம் இருந்தாலும், “போதனைகள் செய்யும் சமூகம்” என்ன சொல்லும் என்ற அச்சமும், தனியாக நின்றாலும் சீண்டும், இரண்டாவது திருமணம் செய்தாலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்ற எண்ணமும் அதே சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது! மும்பையில் கணவன் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்ட, குடும்பத்தைத் தாங்கிப்பிடித்த மனைவி சுயதொழில் செய்து குடும்பத்தைக் காப்பாற்ற, கணவனும் மனைவியும் குழந்தைகளும் என்று அருமையாய் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில், பெண் தனியே இத்தனை சம்பாதிப்பதா என்ற காழ்ப்பில், அவளின் கணவனின் அண்ணனே படுகொலை செய்திருக்கிறான், கிடைத்திருக்கும் சிறிய அளவிலான பெண் சுதந்திரம் கூட பல ஆண்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், கணவனை அண்டியோ, விவாகரத்து ஆகிவிட்டால் இன்னொருவனை கணவனாக அண்டியோ வாழும் நிலையே பெரும்பாலான பெண்களுக்கு! பெண்ணின் உணர்வை, உரிமையை, சுதந்திரத்தை மதிக்கும் பெரிய மனது வருங்கால ஆண்களுக்கு வரலாம், அப்போது இதுபோன்ற பிரச்சனைகள் குறையலாம்! அதுவரை வளர்ந்துவிட்ட ஆண்பிள்ளைகளின் மனதை மாற்றுவது கடினம்தான்!

குழந்தைகள் மீதான அன்பு, பாசம் எல்லாம், பெரும்பாலான ஆண்களுக்கு காமத்தின் சீற்றத்தில் மரித்துபோய்விடும், அதன் விளைவே இதுபோன்ற கொலைகள், குழந்தைகளின் மீதான வன்புணர்ச்சி குற்றங்கள்! இத்தனை காமச்சீற்றத்திலும், இதுதான் ஆண் இயல்பு என்று சப்பைக்கட்டினாலும், எந்த ஆணும் எத்தனை தேவையிலும் தன் தாயை புணர்வதில்லை, தாயென்றும் சகோதரியென்றும் இரத்தப்பாசமும், வளர்ந்துவிட்ட கட்டுப்பாடும் இருக்கிறது, குடித்துவிட்டால் எதுவும் தெரியாது, பாவம் என்பார்கள், என்ன குடித்தாலும் ஒருவன் சரியாய் தன் வீட்டிற்குச் சென்று தன் மனைவியை சாலையில் இழுத்துபோட்டு அடிக்கும் அளவுக்கு அவனுக்கு தெளிவு இருப்பதை கவனித்திருக்கிறீர்களா?
போதை, காமம் எதையும் கட்டுப்படுத்த பெண்களுக்கு முடியும்போது, முடியவேண்டும் என்று சமூகம் கட்டமைத்து வளர்த்துவிட்டிருக்கும்போது, ஆண்களுக்கு ஏன் அதுமுடியாது? பெண் கோபப்பட்டால் ஆகாது என்று அடக்கும் பெற்றோர், ஆண்பிள்ளை கோபப்பட்டால், அதே வார்த்தைகளைச் சொல்லாமல் ரசித்து மகிழும் நிலையில் வளர்ந்த அவன் இதுபோல் தன்பிள்ளையையோ, தன்னை நம்பி வந்தவளின் பிள்ளையையோ ஆத்திரத்தில் கொலைச்செய்வான்!

இங்கே மாற்றுக்காதல் சரியா, தவறா, பெண்ணுக்கு ஒழுக்கம் வேண்டுமா வேண்டாமா என்ற எந்த விவாதத்திற்கும் நான் வரவில்லை, அதுபோன்ற கேள்விகளை எழுப்பவும் இல்லை! எனக்கு நயன்தாராவையும், கமலையும் பிடிக்கும், இருவருமே அடுத்தடுத்து வேறு துணைகளை தேடிக்கொண்டதாலா என்று குதர்க்கமாய் கேள்வி எழுப்பாதீர்கள், இருவருமே வெளிப்படையானவர்கள், இருவருமே தான் பிரிந்த துணைகளை பற்றி எந்த அவதூறோ குறையோ சொல்லாதவர்கள், நீங்கள் வானாளவ போற்றினாலும், கழுவியூற்றினாலும் எல்லாவற்றையுமே ஒரு புன்சிரிப்பில் கடப்பவர்கள்!

உண்மையில் “என் வாழ்க்கை என் சுதந்திரம்” என்று வாழ்வது அத்தனை எளிதான காரியமல்ல, எனினும் குழந்தைகள் இருந்தாலும் கமலுக்கு கிடைத்த அந்தச் சுதந்திரம், குழந்தைகள் இருந்திருந்தால் நயனுக்கு கிடைத்திருக்குமா என்பது பெருத்த சந்தேகமே! பெண்ணின் குழந்தைகளை ஏற்றுக்கொள்ள ஆண்கள் இன்னமும் பக்குவபடவில்லை, இப்படிப்பட்ட சமூகத்தில், ஆணோ, பெண்ணோ, சேர்ந்து வாழும் நிலையை ஏற்படுத்திக்கொள்ளும் முன்னர், திருமணம் செய்ய முடிவெடுக்கும் முன்னர், முதல் திருமணம் என்றாலும் இரண்டாம் திருமணம் என்றாலும், “பிறக்கும் பிள்ளைகள்”, “பிறக்கப்போகும் பிள்ளைகள்” எல்லாம் பெரும் பொறுப்பு என்று உணர்தல் வேண்டும், நம்மால் உருவாக்கப்பட்ட உயிர்களுக்கு நாமே பாதுகாப்பு, பொறுப்பு என்று உணர்தல் வேண்டும், நாம் உருவாக்கியதில்லை என்றாலும், துணையென்று நாம் தேர்ந்தெடுத்தவரின் வழி வந்ததால், துணைக்கு எப்படி பொறுப்போ அதே பொறுப்பை அந்தக் குழந்தைக்கும் காட்டியாக வேண்டும் என்று உணர்தல் வேண்டும், துணையிடம் காட்டும் அன்பையும் பரிவையும் அவளின்/அவனின் குழந்தைகளிடமும் காட்ட வேண்டும்! தான் பெற்றதோ, துணை பெற்றதோ, குழந்தைகள் பாரம் என்று கருதினால் உங்களின் தேவை காமம் மட்டுமே என்றறிக! பரஸ்பர மரியாதையில்லாமல், காமம் மட்டும் தேவைப்படும் ஆண்களை நம்பி திருமணம் செய்துகொண்டால், குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்பதை உணர்க!
தெளிவாய் இருந்து உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் போது ஒன்றுமறியா பிஞ்சுகளின் உயிர் போகாது! அவர்களின் வாழ்க்கை அவர்களின் உரிமையும்தானே?!

அமுதா சுரேஷ்; ஐடி நிறுவனம் ஒன்றில் சென்டர் மானேஜராக பணியாற்றுகிறார்; இரண்டு குழந்தைகளின் தாய்; சமூக-அரசியல் விமர்சகர்.

முட்டையும் கூமுட்டையும்: ஹெச்.ஜி.ரசூலின் இறுதி விமர்சன பதிவு

ஹெச் ஜி ரசூல்

அவர் எப்படி பூனையை வாசிக்கலாம், சூறைப்புயல் கொளுத்தி விளாசிக்கொண்டிருந்தார். தொண்டரடி பொடியாழ்வார்களில் ஒருவன் தலைவரே அது பூனையை வாசிப்பதல்ல, வீணையை வாசிப்பது என்று சொல்லி முடிப்பதற்குள் சூறைப்புயல் சூஜே ஒரு போராட்டத்தை அறிவித்தார்…ஏவுகணை சிலையின் நெற்றியில் திருநீறைப் பூசும் போராட்டம் ..தொண்டர்கள் அதிர்ந்து போனார்கள்…

வெடிக்காத பட்டாசை வெடிக்க வச்சது யாரு – இதுதான் சூறைப் புயல் நேற்று பேசிய பொதுக்கூட்டத் தலைப்பு. தொண்டர்களின் ஆரவாரம் தாங்க முடியவில்லை. எங்க தலைவர் பத்துமணிநேரங்கூட நாண் ஸ்டாப்பா பதட்டமில்லாம பேசுவாரு. உங்களுக்கெல்லாம் பசிவந்து மாறி மாறி ஒருவரையொருவர் தின்னுவிடக்கூடாதேன்னுதான் எங்கத் தலைவர் பட்டுன்னு முடிச்சாரு. மற்றொரு தொண்டரடிப் பொடியாழ்வார் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

தலைமையகத்தில் பெருங்கூட்டம். பொதுக்கூட்டத்தில் பேசாத அதிரடி விசயத்த தலைவர் அறிவிக்கப் போறதா மைக்குல அறிவிச்சுகிட்டு இருந்தாங்க. நெட்டு பூராவும் ஒரே பேச்சுதான். எங்க கொள்கையை தடை செய்தா உலகத்துல ஒம்பது இடத்துல இடிவிழும் என முழங்கிக் கொண்டிருந்த சூறைப்புயல் சூஜே மாண்புமிகு நோடியாருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டக்கூடாதுன்னு ஆணை போட்டதுதான் எல்லோருக்கும் ஆச்சரியம்..

இப்போது என்னான்னா இட்துசாரிங்க தலித்துக, முற்போக்குக எல்லாரும் ஏவுகணை சிலையை காவியா மாத்தினதுக்கு கண்டனம் தெரிவிச்சுகிட்டு இருக்கும் போது மண்புமிகு நோடியார் ஏவுகணைசிலையை சரியாத்தான் வச்சிருக்காரு..நாங்க நோடியாருக்கு வலுசேர்க்க ஏவுகணை சிலை நெத்தியில் திருநீறு பூசும் போராட்டத்தை என் தலைமையிலே செய்யப்போறோம்னு சூறைப்புயல் அறிவிச்சாரு

சர்வதேச அளவில ஆட்சியைப் புடிக்கப் போகும் சூறைப்புயல் சூஜே கட்சிக்கு மாண்புமிகு நோடியார்தடை போட்டா கோடிக்கணக்கான டிரஸ்ட்டும் சொத்தும் பணமும் என்ன ஆவது? சூறைப்புயல் சூஜே கறுப்புக் கொடி காட்டாமல் வெள்ளைக்கொடி காட்ட தொண்டர்களை அழைத்ததிலேயே நூத்தி முப்பத்து ஒம்பது பொடியாழ்வார்கள் கட்சிக் கார்டை திருப்பிக் கொடுத்தாங்க

அசத்தியம் சேனலுக்கு சூறைப்புயல் சூஜே பேட்டிக் கொடுக்கப்போற விசயம் மிக பரபரப்பாக இருந்தது.
விசயம் வேறு ஒண்ணுமில்ல.. முந்தாநாள் ராத்திரி ரெண்டுமணிக்கு தூக்கத்தில இருந்து விழிச்ச பல்தாபி பக்கர் எல்லா நியூஸ்சேனலுக்கும் ஒரு அறிவிப்பை கொடுத்திருக்காரு.

பத்து முட்டையை போட்டா நாங்க அந்த காவிக் கோழியை ஆதரிப்போம்…வேணும்னா பாவம்பார்த்து திரும்பவும் ஆட்சியில அமர்த்துவோம்…இந்த முன்னோட்டத்தை கேட்டதும்தான் கலவரம் ஆரம்பிச்சிட்டுது.சூறைப் புயல் சூஜே கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது. பல கட்சிக்கொடிக்கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. பல்தாபிக்கு பீஸை புடுங்குனதால எரியாத லைட்டா ஆயிட்டாரு..

அன்றிலிருந்து சூறைப்புயல் சூஜே கூட ஆவேசம் மேலிட எதையும் பேசுவதுமில்லை. பேட்டிக் கொடுப்பதுமில்லை. ஆள் இருக்கும் இடமே தெரியாம போச்சு. என்றாலும் அவரது இப்போதைய ஒரே நோக்கம் பர்க் ஒழிப்பு போராட்டம்தான்…..கூடவே ஏவுகணை நெத்தியில திருநீறு பூசும் முஸ்லிம் அழிப்பு போராட்டம்….சூஜே..சூஜேதான்…

ஹெச். ஜி. ரசூல், கவிஞர்; விமர்சகர்.  மைலாஞ்சி, உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள், பூட்டிய அறைஉள்ளிட்ட ஐந்து கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. பல முக்கிய கவிதைகள் ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, மற்றும் மலாயா மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.இஸ்லாமியப் பெண்ணியம், தலித் முஸ்லிம் பின்காலனிய உரையாடல், சூபி விளிம்பின் குரல், ஜிகாதி பதுங்கு குழியில் மறைந்திருக்கும் ஒரு சொல்உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களும் வெளிவந்துள்ளன..

10 சதத்திற்கு மேல் நிரந்தரமற்ற தொழிலாளர்களை வைத்துக் கொள்வதை எதிர்த்து பேரணி

” சம வேலைக்கு சம ஊதியம் ” என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்தக் கோரி ஜூலை 28 அன்று சென்னை கோட்டை நோக்கி பேரணி நடத்த ஏஐடியுசி தொழிற்சங்கம் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு அரசின் நிரந்தரத் தகுதி அளிக்கும் சட்டப்படி இரண்டு ஆண்டுகளில் 480 நாட்கள் பணி முடித்த தொழிலாளர்களை தமிழக அரசின் தொழிலகப் பாதுகாப்பு சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 10 சதவீதத்திற்கு மேல் நிரந்தரமற்ற தொழிலாளர்கள்களை வைத்துக் கொள்ள கூடாது .6 மாதத்திற்கு மேல் பணி செய்பவர்களை பயிற்சியாளர் என்று கூறக்கூடாது என்ற தமிழக அரசின் சட்டத்திருத்தம் கறாறாக அமலாக்கப்பட வேண்டும். குறைந்த பட்ச ஊதியமாக மாதம் ஒன்றுக்கு ரூபாய் 18 ஆயிரம் என அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி இந்தபேரணியை நடத்துகிறது.

லட்சியவாதி ’அஃக்’ பரந்தாமனுக்கு அஞ்சலி!

திருவல்லிக்கேணியின் நெரிசலான ஒரு தெருவில் அஃக் பரந்தாமன் குடும்பத்துடன் வசித்துவந்தார். குங்குமத்தில் நான் எழுதிக்கொண்டிருந்த ‘நான்’ தொடருக்காக ஆசிரியர் கே.என்.சிவராமன், அஃக் பரந்தாமன் பற்றி எழுதுங்கள் என சொல்லியிருந்தார். குங்குமம் ஆசிரியர் குழுவில் பரந்தாமன் குறித்து சொல்லி அனுமதி வாங்கினேன்.

அஃக் பரந்தாமன் சென்னையில் இருக்கிறார்;ஆனால் அவர் முகவரி தெரியாது விசாரித்தவர்களிடமிருந்து பதில் வந்துகொண்டிருந்தது. அப்போது சந்தியா பதிப்பகம், அஃக் தொகுப்புகளை நூலாக்கியிருந்தது. அவர்களிடம் கேட்டு அவருடைய வீட்டின் முகவரியைப் பெற்றேன். ‘நான்’ தொடருக்காக இலக்கியத்தில் இயங்கிய பலரைத் தேடிச் சென்றதை சிறப்பான அனுபவமாகக் கருதுகிறேன். அதில் மறக்க முடியாத அனுபவம் அஃக் பரந்தாமனுடனானது. திருவல்லிக்கேணியின் நெரிசலான ஒரு தெருவில் அஃக் பரந்தாமன் குடும்பத்துடன் வசித்துவந்தார்.  அவர் வசித்த வீடு என் பால்ய காலத்தை நினைவுபடுத்தியது. எனக்குப் பிடித்திருந்தது.

என்னை வரவேற்றவர் பரந்தாமனின் மனைவி. அவர் பெயர் சத்யா . ஒல்லியான அவருடைய உருவமும் சிநேகமான அணுகுமுறையும் நினைவில் இருக்கின்றன. முதல் தளத்தில் இருந்த அவருடைய வீட்டின் நுழைவாயிலுக்கு அருகே இருந்த அறையில் பரந்தாமனின் அறை இருந்தது. ஒரு மரப்பெட்டியின் அருகே ஜன்னலிலிருந்து வந்துகொண்டிருந்த வெளிச்சத்தை பார்த்து அமர்ந்திருந்த பரந்தாமனின் அருகே போய் அமர்ந்து என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். பேட்டி எடுக்குமளவுக்கு என்ன இருக்கிறது…அதெல்லாம் வேண்டாம் என்றுதான் மறுத்தார். நான் அவரை ஒப்புக்கொள்ள வைப்பதில் தீவிரமாக இருந்தேன். முதலில் என்னைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள் என சொன்னார்.

அவருக்கு அப்போது பார்வை மங்கியிருந்தது. தன் அருகே இருந்த பெட்டியிலிருந்து சில கையெழுத்து பத்திரிகைகளை என்னிடம் காட்டினார். ‘அஃக்’ இதழ் தொடங்கப்படும் முன்பு அவர் முயற்சித்த கையெழுத்து இதழ்கள் அவை. வசீகரமான கையெழுத்தில் தாளின் விளிம்புகளில் விதவிதமான வடிவங்களுடன் இருந்த அவ்விதழ்கள். அஃக் பரந்தாமன், இதழ் வடிவமைப்புக்காக தேசிய விருது பெற்றவர். தேசிய விருது பெற்ற ஒரே தமிழ் இலக்கிய இதழ் அஃக் என்றும் பரந்தாமன் சொன்னார். நிறைய இலக்கிய விஷயங்களை, சர்ச்சைகளை, மோதல்களை பேசினார். நடுவே அவருடைய மனைவி எங்களுக்கு தேநீர் அளித்தார். மூன்று மணி நேரத்துக்கும் மேலாக அவர் பேசினார். சேலத்தை பூர்வீகமாகக் கொண்ட அவர், தன்னுடைய சொத்துக்களை விற்று அச்சுக்கூடத்தை வாங்கியது, அஃக் இதழ்களை பொருளாதார சிரமங்களைக் கடந்து கொண்டுவந்தது, ஒரு கட்டத்தில் அதில் அனைத்தையும் இழந்து சென்னை வந்து சேர்ந்தது வரை அனைத்தையும் சொன்னார். இருட்டத் தொடங்கியது நான் கிளம்ப வேண்டும் என சொன்னேன்.

’அஃக்’ பரந்தாமன்

சொல்லிக் கிளம்புவதற்காக சமையலறைக்குச் சென்றேன். பரந்தாமனின் மனைவி சத்யாவிடமும் சொல்ல ஏராளமான கதைகள் இருந்தன. வறுமையின் கதைகள் அவை; லட்சியக்காரனின் குடும்பத்தை பீடித்திருக்கும் தொடர் துன்பங்களின் கதைகள் அவை. தங்களுடைய ஒரே மகள்தான் தங்கள் குடும்பத்தின் தற்போதைய ஆதாரம் என்றும் மகன் சினிமாவில் உதவி இயக்குநராக இருக்கிறார் என்று சொன்னார். அவரை நான் நெருக்கமாக உணர்ந்தேன். அவரும் என்னை நெருக்கமாகவே உணர்ந்திருப்பார் போலும். பத்து நிமிடங்களில் எல்லா கதைகளையும் சொல்லிவிட வேண்டும் எத்தனிப்போடு பேசினார். அடுத்த தெருவில் உள்ள பூனைகளுக்கு தினமும் உணவிடுவது வரை சொன்னார். நான் அடுத்த வாரம் வந்து பார்ப்பதாகச் சொல்லிவிட்டு கிளம்பினேன்.

அஃக் பரந்தாமன் கொடுத்த கையெழுத்து பிரதிகளை பிரதியெடுத்துக்கொண்டு, அதை திருப்பித் தரவும்  அவர் பேசியவற்றை இதழில் எழுத ஒப்புதல் பெறும்பொருட்டும் அவர் வீட்டுக்கு மீண்டும் சென்றேன். இந்த முறை காலை நேரத்தில் சென்றேன். அப்போது என் ஊரிலிருந்து கொடுத்தனுப்பியிருந்த நிலக்கடலையையும் உடன் எடுத்துக்கொண்டு போனேன். பரந்தாமனுடன் எனக்கிருந்தது தொழில் முறையிலான அணுகுமுறை. ஆனால், அவர் மனைவியுடன் என் தாயைப் போன்றதொரு நெருக்கத்தை உணர்ந்தேன்.

அதன் பிறகு, அஃக் பரந்தாமனின் பேட்டி வெளியானது. மீண்டும் ஒரு முறை அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது அவருடைய மகள் அங்கே பார்த்த நினைவு. பேட்டி வெளியான சில மாதங்கள் கழித்து அதைப் படித்த ஒருவர் பரந்தாமனின் கண்சிகிச்சைக்காக உதவுவதாகச் சொல்லி இதழுக்கு எழுதியிருந்தார். அத்தோடு பரந்தாமன் – சத்யாவுடனான தொடர்ந்து முடிந்தது. சத்யா நினைவில் வந்துபோவார். ரெண்டு வருடங்களுக்கு முன் சத்யா இறந்துவிட்டதாகவும் பரந்தாமன் ஒரு இல்லத்தில் இருப்பதாகவும் முகநூலில் படித்தேன்.

வாழ்ந்து கெட்டவர்களின் கதைகளை எழுதுபவர்களுக்கு பொதுவாக இந்தச் சிக்கல் இருக்குமா என்று தெரியவில்லை… அவர்களுடைய துன்பங்களை, வறுமையை, தோல்வியை நமக்குள்ளே தேக்கிக்கொள்கிற நிலை. சில சமயம் சிக்கலான மனப்பிரச்னைகளைக்கூட இது ஏற்படுத்துவதுண்டு.

பரந்தாமன், தன்னை ஒரு கவிஞராக, ஓவியராக, பத்திரிகையாளராக, சினிமாக்காரராக சொல்லிக்கொண்டார். தான் ஒரு உலக சினிமாவை இயக்க வேண்டும் என விரும்பினார். உலகத் தரத்தோடு ‘அஃக்’ இதழை கொண்டு வர வேண்டும் என சொன்னார். சத்யாவுக்கு தன்னுடைய இறுதிகாலமாவது வறுமையில்லாமல் இருந்திருக்குமா? அவர்களுடைய மகள் என்ன ஆனார்? உதவி இயக்குநராக இருந்த அவர்களுடைய மகனின் நிலை என்ன? கனவுகளை சுமந்தபடியே வாழ்ந்த பரந்தாமனின் இறுதி கணத்தில் என்ன நினைத்திருப்பார்? என் மனம் கணத்துக்கிடக்கிறது…

படம்: புதூர் சரவணன்

நன்றி: குங்குமம்.

 

திராவிட இயக்கத்தை அசைத்துப் பார்க்க எந்தக் கொம்பனாலும் முடியாது: எஸ்.வி.சேகரின் பேச்சுக்கு ஸ்டாலின் விளக்கம்

தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் எழுத்தாளர் மதிமாறனுக்கும் பாஜக பேச்சாளர் நாராயணனுக்கும் இடையே நடந்த ‘பார்ப்பனர்’ தொடர்பான வாக்குவாதத்தில் எஸ்.வி. சேகர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். இதில் திமுக செயல்தலைவர் மு. க.ஸ்டாலினை தொடர்பு படுத்தி பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார் என சமூக ஊடகங்களில் பலரும் குரல் எழுப்பிய நிலையில், ஸ்டாலின் தனது முகநூலில் விளக்க அளித்துள்ளார். அதில்,

“தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாத நிகழ்ச்சி சம்பந்தமான சர்ச்சையினையடுத்து, நடிகரும் நண்பருமான எஸ்.வி.சேகர் அவர்கள் என்னிடம் அலைபேசியில் பேசினார். சட்டமன்ற நிகழ்வுகளில் பங்கேற்றிருந்த நிலையில், “நீங்கள் சொல்வதை கவனிக்கிறேன்” எனத் தெரிவித்து, அது பற்றிக் கவனம் செலுத்துமாறு கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. அவர்களிடம் தெரிவித்தேன். சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வந்தநிலையில், மக்கள் பிரச்சினைகளில் தொடர்ந்து கருத்தைச் செலுத்திட வேண்டிய அவசரமும் அவசியமும் ஏற்பட்டதால், இது குறித்து உடனடியாக கவனம் செலுத்த நேரமோ வாய்ப்போ நேர்ந்திடவில்லை. டி.வி. விவாதம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கழகத்தின் சார்பில் பங்கேற்கவிருந்த உறுப்பினரும் எனது கருத்தினை அறிந்தபின் பங்கேற்கலாம் என்பதால் அந்த நிகழ்வைக் கடமை உணர்வோடு தவிர்த்திருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக, தனிமனித நட்புக்கு அரசியல் வண்ணம் பூசப்பட்டு,சமூக ஊடகங்களில் விமர்சனங்களாகி வருவதை பின்னர் அறிந்தேன். நூறாண்டு கால திராவிட இயக்கம் எந்த சமூக நீதிக் கொள்கையையும் சமநீதியையும் சமத்துவத்தையும் முன்வைத்துப் பாடுபடுகிறேதா அந்தக் கொள்கைகளுக்கு குன்றிமணி அளவிலும் குந்தகம் ஏற்படாத வகையிலும் பகுத்தறிவுடனும் சுயமரியாதையுடனும் தி.மு.க. தொடர்ந்து செயல்படும் என்பதில் எவருக்கும் எள்ளளவும் சந்தேகம் ஏற்பட வேண்டியதில்லை. தந்தை பெரியாருக்கு மூதறிஞர் ராஜாஜியுடனும் நட்பு உண்டு, தவத்திரு குன்றக்குடி அடிகளாருடனும் நட்பு உண்டு. அதற்காகத் தனது கொள்கைகளை எப்போதும் அவர் விட்டுத் தந்ததில்லை. அதுபோலவே பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞர் அவர்களும் தனிப்பட்ட முறையில் பலருடனும் நட்பு பாராட்டினாலும் கொள்கைகளில் கொண்டிருந்த உறுதியை எதற்காகவும் தளர்த்தியதில்லை. அவர்களின் வழியில் இந்தப் பேரியக்கத்தின் செயல்தலைவர் என்ற பொறுப்பில் உள்ள நான், எந்தச் சூழலிலும் திராவிட இயக்கத்தின் உயிர் மூச்சான கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பேன். அதற்காக எதையும் யாரையும் எதிர்கொள்வேன். யாரிடமும் எனக்கு தனி மனித விரோதமில்லை; பேதமுமில்லை. அதேநேரத்தில், தனிப்பட்ட நட்புக்காக, திராவிட இயக்கக் கொள்கைகளை விட்டுக் கொடுப்பது-சமரசம் செய்து கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. திராவிட இயக்கத்தை அசைத்துப் பார்க்க எந்தக் கொம்பனாலும் எந்தத் தருணத்திலும் முடியவே முடியாது என்பதே எனது உறுதியான நிலைப்பாடு” என தெரிவித்துள்ளார்.

கோவை கலவரம் குறித்து நூல் எழுதியதற்காக முன்னாள் MLA மீது கெடுபிடி

அ. மார்க்ஸ்

அ. மார்க்ஸ்

‘கோவைக் கலவரத்தில் எனது சாட்சியம்’ எனும் நூல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.வி.அப்துல் நாசர் அவர்கள் எழுதி நண்பர் செந்தில்நாதன் அவர்களின் ஆழி பதிப்பகத்தால் இரண்டாண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது.

காவலர் ஒருவர் கொல்லப்பட்டதை ஒட்டி கோவையில் நடைபெற்ற கலவரத்தில் (Nov 1997) சுமார் 14 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இது குறித்து அகில இந்திய அளவில் அமைக்கப்பட்ட PUCL உண்மை அறியும் குழு அறிக்கை இந்தக் கலவரத்தில் காவல்துறையும் இந்துத்துவ அமைப்புகளும் இணைந்து இந்த வன்முறைகளை நிகழ்த்தின என்பதை மிக விரிவாக அம்பலப்படுத்தி இருந்தது.

அடுத்த இரு மாதத்தில் (Feb 1997) அங்கு நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 50 க்கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர். அதை ஒட்டி நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு அவர்களில் பலர் குறைந்தபட்சம் ஒன்பது ஆண்டுகள் வரை சிறைகளில் இருந்தனர். இன்னும் கூட சுமார் 40 க்கும் மேற்பட்டோர் சிறைகளில் உள்ளனர்.

இந்தத் தொடர் வெடி குண்டு தாக்குதலை ஒட்டி நடைபெற்ற போலீஸ் தேடுதலில் கோவை முஸ்லிம்கள் மீது பல அத்துமீறல்கள் நடைபெற்றன. ஓடி ஒளிந்த ஐந்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடுமையை நாங்கள் அமைத்த ஒரு உண்மை அறியும் குழு வெளிக் கொணர்ந்தது. கோவைக் கலவரங்கள் குறித்த இப்படியான மூன்று உண்மை அறியும் குழு அறிக்கைகள் தொகுக்கப்பட்டு என்னுடைய முன்னுரையுடன் ஒரு குறு நூலாகவும் வெளி வந்துள்ளது.

கலவரங்கள் நடந்தபோது சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.வி.அப்துல் நாசர் அவர்களை மகாத்மா காந்தியின் பேரரும், பத்திரிகையாளர் மற்றும் நூலாசிரியருமான துஷார் காந்தி அவர்கள் சந்தித்து போலீஸ் கெடுபிடிகளால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு உதவுமாறு வேண்டிக் கொண்டார். கல்லூரி நிகழ்ச்சி ஒன்றுக்காக துஷார் காந்தி சென்னை வந்தபோது இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.

இதை ஒட்டி நாசர் அவர்கள் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியைச் சந்தித்து அனுமதி பெற்று கோவைக்குச் சென்று அங்கு பலரையும் சந்தித்து வந்து முதல்வரிடம் தான் கண்டவற்றைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த அனுபவங்களை நாசர் அவர்கள் “கோவைக் கலவரத்தில் எனது சாட்சியம்” எனும் தலைப்பில் ஒரு நூலாக எழுதியுள்ளார். அவர் வாய் மொழியாகக் கூறியவற்றுக்கு இளம் எழுத்தாளர் பழனி ஷஹான் எழுத்து வடிவம் கொடுத்துள்ளார். ஆழி பதிப்பகம் அந்நூலை வெளியிட்டுள்ளது. அதற்கு நான் ஒரு விரிவான முன்னுரை எழுதியுள்ளேன்.

இந்ந்நிலையில், நூல் வெளிவந்து இரண்டாண்டுகளுக்குப் பின் இப்போது தமிழகக் காவல்துறை தன் கெடுபிடிகளைத் தொடங்கியுள்ளது. பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன் அவர்களை இந்த நூலை ஏன் வெளியிட்டீர்கள் என விசாரித்துள்ளனர். எழுத்து வடிவம் கொடுத்த காரணத்திற்காக ஷஹானையும் விசாரித்துள்ளனர். முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் நாசர் அவர்களை உங்கள் நூல் காவல்துறைக்கு எதிராக உள்ளது, உங்களை விசாரிக்க வேண்டும் என அழைத்துள்ளனர். முறையாகச் சம்மன் அனுப்புங்கள் வருகிறேன் என அவர் பதிலிறுத்துள்ளார்.

நூல் ஒன்றை எழுதியதற்காக இரண்டாண்டுகளுக்குப் பின் ஒரு முன்னாள் மக்கள் பிரதிநிதி விசாரிக்கப்படக் கூடிய அவலம் தமிழக எடுபிடி அரசு எங்கே போய்க் கொண்டுள்ளது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக
அமைகிறது.

இந்திய மற்றும் தமிழ்நாட்டுக் காவல்துறைகள் அத்துமீறல்களுக்குப் பெயர்போனவை. இவை நடத்தும் போலி என்கவுன்டர் படுகொலைகள் உலகப் பிரசித்தம். அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி முல்லா அவர்கள், தான் வழங்கிய தீர்ப்பு ஒன்றில் கிரிமினல் கும்பல்களைக் காட்டிலும் ஒருங்கு திரட்டப்பட்ட போலீஸ் கும்பல் மோசமானது எனக் குறிப்பிட்டார் (1961). போலீசில் நல்லவர்களும் உள்ளார்களே எனக் கூறி காவல்துறை தீர்ப்பை மறு பரிசீலனைச் செய்ய விண்ணப்பித்தபோது “ஒரு கூடை நாறிய மீன்களில் நல்ல மீனைத் தேடும் முட்டாள் நானல்ல” என அவர் அந்த மனுவைத் தள்ளுபடி செய்தார்.

எத்தனையோ நூற்றுக்கணக்கான வழக்குகளில் காவல்துறையை நீதிமன்றங்கள் இப்படிக் கண்டித்துள்ளன. ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட எத்தனையோ காவல் அதிகாரிகள் சிறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். நூற்றுக் கணக்கான உணமை அறியும் குழு அறிக்கைகளில் மனித உரிமை அமைப்புகள் காவல்துறையைக் குற்றம் சாட்டியுள்ளன. விமர்சித்துள்ளன. கண்ணியம் மிக்க காவல்டுறை அதிகாரிகளே இப்படியான கொடுமைகளைச் சுட்டிக்காட்டி நூல்களை எழுதியுள்ளனர்.

காவல்துறை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல.

மக்கள் பிரதிநிதி ஒருவர் முதல்வர் அனுமதி பெற்றுச் சென்று வந்த தன் அனுபவங்களைப் பதிவு செய்ததற்காக இப்படிக் கெடுபிடி செய்வது என்பது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

ஜனநாயக உரிமைகளில் நம்பிக்கை உடைய அனைவரும் தமிழகக் காவல்துறையின் இந்தக் கெடுபிடிகளைக் கண்டிப்போம்.

அ. மார்க்ஸ், எழுத்தாளர்; மனித உரிமை செயல்பாட்டாளர்.

”பெருமாள் முருகனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்!”

”எழுத்தாளர் பெருமாள் முருகனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்!” என இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் கூறினார்.

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் நாவலை தடை செய்யக்கோரி நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள அண்ணா சிலை முன்பு கொங்கு மக்கள் முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாவலை தீயிட்டு கொளுத்தப்பட்டது. மேலும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அர்ஜுன்சம்பத் பேசுகையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள அர்த்தநாதரிஸ்வரர் கோவிலின் வழிப்பாட்டு கலாச்சாரம் மற்றும் குறிப்பிட்ட சமுதாய பெண்களையும் இழிவுப்படுத்தி எழுதியுள்ள மாதொருபாகன் நாவலின் ஆங்கில பதிப்பை தடை செய்திட வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த நாவலுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதினை திரும்ப பெறவேண்டும் மேலும் நாவலை எழுதிய பெருமாள் முருகனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

“என்னை பதவி விலக கட்டாயப்படுத்தினார்கள்; மக்கள் விரும்பினால் முதலமைச்சராக பதவியேற்பேன்”: ஓ.பி. எஸ் அதிரடி

காபந்து முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் 40 நிமிடத்துக்கும் மேலாக திடீர் தியானத்தில் ஈடுபட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், சில முக்கிய விஷயங்களை நாட்டு மக்களுக்கும் அதிமுக கழக தொண்டர்களுக்கும் தெரிவிப்பதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஜெயலலிதாவின் ஆன்மா என்னை உந்துதல் படுத்தியது. ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தபோது,என்னை அழைத்து மதுசூதனனை பொதுச்செயலளாராகவும் என்னை முதல் அமைச்சராகவும் இருக்குமாறு கூறினார். ஜெயலலிதா வாக்குறுதியை நிறைவேற்றவே தொடர்ந்து பதவியில் இருந்தேன். வருவாய் துறை அமைச்சராக இருக்கும் ஆர். பி. உதயகுமார், சசிகலா முதலமைச்சராக வேண்டும் என பேட்டி கொடுத்தார். இதுகுறித்து சசிகலாவிடம் நான் தெரிவித்தேன். ஒருவர் முதலமைச்சராக இருக்கும்போது வேறொருவரை முதலமைச்சராக நியமிக்கச் சொல்வது நீதி, நியாயத்திற்கு, தர்மத்திற்கு சரிதானா? என்றுகேட்டபோது ஆர். பி. உதயகுமாரை அழைத்து கண்டிப்பதாக சசிகலா தெரிவித்தார். சட்டத்துக்கு புறம்பாக இப்படி பேசுகிறாரே என என்னிடம் சொன்ன செல்லூர் ராஜுவு மதுரை சென்று சசிகலா முதலமைச்சராக வேண்டும் என சொன்னார். தம்பிதுரையும் சொன்னார். என்னை அசிங்கப்படுத்துகிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள். மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மாநாட்டு மக்கள் சாதனைவுக்கு புகழ் சேர்க்கும் வகையில் ஆட்சியை தரவேண்டும் என உறுதியாக இருந்தேன். வேறுபாடு இல்லாமல் பொறுப்போடு கட்சி சீனியர்கள் இருக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் என்னை உட்கார வைத்துக்கொண்டு அவமானப்படுத்தினார்கள். பொதுவாழ்க்கைக்கு வந்தால் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். என் மனநிலை பாதிக்கப்பட்டது. பொறுமையாக இருந்தேன். சரித்திரத்தில் வேறுமாதிரி உருவகப்படுத்திவிடும் என பொறுமையாக இருந்தேன். நான் முதலமைச்சராக செய்த நற்பணிகள் சிலருக்கு எரிச்சலூட்டியது.

எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது எனக்குத் தெரியாது. அங்கு எல்லோரிடமும் கையொப்பம் பெற்றுக்கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். எண்ணெய் கசிவு குறித்த நேரடி ஆய்வுக்கு சென்றுவிட்டு போயஸ் இல்லத்திற்குச் சென்றேன். அங்கே இருந்தவர்கள் சின்னம்மா முதலமைச்சர் ஆவதற்கு ஏற்பாடு செய்யச் சொன்னார்கள். போயஸ் இல்லத்தில் நீங்கள்தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். நீங்கள் ஒத்துழைக்கவில்லை என்றால் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக ஆகிவிடுவேன்.. அம்மா ஆன்மா இருக்கிற இடத்தில் சொல்கிறேன். தொண்டர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் இதையெல்லாம் தெரியபடுத்துகிறேன். மக்கள் விரும்புகிறவர்கள்தான் தமிழகத்தை ஆள வேண்டும். எதிர்கால நலனுக்கு அதுதான் நல்லது. ஓ.பி. எஸ் அல்ல யாரோ ஒருவர் ஆளலாம். அதிமுக வைக் காப்பாற்ற தன்னந்தனியாக இருந்து போராடுவேன். இயக்கத்தின் தொண்டர்கள் விரும்பினால், மக்கள் விரும்பினால் , சட்டமன்ற உறுப்பினர்கள் விரும்பினால் மீண்டும் முதல்வராவேன்”.

“புத்தாண்டு பிறந்தாலும் தமிழக விவசாயிகளுக்கு இன்னும் விடிவுகாலம் ஏற்படவில்லை”

“புத்தாண்டு பிறந்தாலும் தமிழக விவசாயிகளுக்கு இன்னும் விடிவுகாலம் ஏற்படவில்லை” என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கருகிய பயிர்களைக் கண்ட அதிர்ச்சியில் ஏற்பட்ட மரணங்களும், தரிசாகிப் போன நிலங்களைப் பார்த்து நிகழும் தற்கொலைகளும் இன்னும் தொடர்கிறது. இதுவரை உயிரிழந்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 100-ஐ தாண்டி விட்டது. வேதனை தீயில் விவசாயிகளை தள்ளி விட்ட சாதனையைத்தான் மாநிலத்தை ஆட்சி செய்து வரும் அதிமுக செய்து காட்டியிருக்கிறது என்று விவசாயப் பெருமக்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர்.

தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை நேற்று நேரில் சந்தித்து விவசாயிகளின் துயர் துடைக்கும் நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்களின் நலன் காக்கும் விவாதங்கள் நடத்தி, “தமிழகத்தை வறட்சி மாநிலமாக” அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்த தீர்மானம் நிறைவேற்ற, தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என அவரிடம் வலியுறுத்தினேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வைத்த கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை முதலமைச்சர் உணர்ந்திருந்தாலும், அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத, ஏதோ ஒரு நெருக்கடியில் அவர் இருக்கிறார் என்பதை அந்த சந்திப்பில் என்னால் உணர முடிந்தது.

அதிகாரத்தை திரைமறைவில் இருந்து வழிநடத்துபவர்களின் அலட்சியத்தால், நாட்டின் அச்சாணியாகத் திகழும் விவசாயிகளின் வாழ்வு பாலைவனமாகி விடக்கூடாது. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற முடியாததாலும், பருவமழை பொய்த்ததாலும், அரசின் நிவாரண உதவிகள் கிடைக்காததாலும், அனைத்துத் தரப்பு விவசாயிகளும் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். விவசாயிகள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் எனத் தி.மு.கழகம் உள்பட எதிர் கட்சிகள் அனைத்தும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதிமுக அரசு மீளா தூக்கத்தில் இருக்கிறது

திமுக சார்பில் நான் முதல்வரிடம் விவசாயிகள் பிரச்சனை குறித்து விவாதிக்க நேரம் கேட்டவுடன், அவசர அவசரமாக மாநில அரசின் சார்பில் வறட்சி நிலவரத்தைப் பார்வையிட ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் தாமதமான இந்த நடவடிக்கை இன்னும் எத்தனை விவசாயிகள் உயிரை பலி வாங்க போகிறதோ தெரியவில்லை.

அதே நேரத்தில், அண்டை மாநிலமான கர்நாடகத்தில் கடுமையான வறட்சியின் பிடியில் விவசாயிகள் தவிப்பதாகவும், அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 176 தாலுகாக்களில், 139 தாலுகாக்களில் கடும் வறட்சியின் காரணமாக ரூ.12000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும், ஒரு அறிக்கையை தாக்கல் செய்து, ரூ.4702 கோடி வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம், அம்மாநில முதல்வர் சித்தராமையா கோரிக்கையே வைத்து விட்டார். மத்திய அரசின் ஆய்வுக்குழு நேரில் பார்வையிட்டு அறிக்கை அளித்த நிலையில், கடந்த வாரம் டெல்லியில் பிரதமரை நேரில் சந்தித்த கர்நாடக முதல்வர், வறட்சி நிவாரண நிதி வழங்கக்கோரி வலியுறுத்தினார். முதலில் 1000 கோடி ரூபாய் அளவில் நிவாரணம் தருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்களுடனான பேச்சுவார்த்தையில் தெவிக்கப்பட்டாலும், கூடுதல் நிவாரணம் தேவை என்பதை, கர்நாடக அரசுத்தரப்பில் கடுமையாக வலியுறுத்தி வந்தனர். இந்தநிலையில், இன்று மத்திய அரசு கர்நாடகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1788.44 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுபோலவே, பருவமழை பொய்த்ததால் பாதிப்புக்குள்ளான கேரளாவும் வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி, ஆய்வுகளை மேற்கொண்டு, மத்திய அரசிடம் நிதியினைக் கேட்டுள்ளது. அண்டை மாநிலங்கள் எல்லாம் அசுர வேகத்தில் தங்களின் மாநில விவசாயிகளுக்காக பாடுபட்டு மத்திய அரசிடம் உதவிகளை கோரிப்பெறுகின்ற நிலையில், அதிமுக அரசு மட்டும் ஆமை வேகத்தில் செயல்பட்டு, விவசாயிகள் நலன் பற்றி அக்கறை காட்டாமல் இருக்கிறது. அண்டை மாநிலங்களை விட மிகவும் அதிகமான, கடுமையான வறட்சியை தமிழகம் சந்தித்து வருகிறது. பாசனத்துக்குத் தேவையான தண்ணீர் பிரச்சினை மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் குடிநீர் பஞ்சமும் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. சென்னை மாநகரத்தில் ஒரு மாதத்திற்கு கூட குடிநீர் இருப்பு இல்லை என்று அதிர்ச்சி செய்திகள் வெளி வருகின்றன. ஆனால், தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ள மறுக்கிறது.

தமிழக அரசு இப்போது தாமதமாக அமைத்துள்ள ஆய்வுக்குழுவின் அறிக்கைக்குப் பிறகு, மத்திய குழு வருகை தரவேண்டும். அதன்பிறகு, மத்திய அரசிடமிருந்து உரிய வறட்சி நிவாரணம் பெற வேண்டும். இதற்குள் இன்னும் எத்தனை விவசாயிகளின் உயிர்களை பலி கொடுக்க வேண்டியிருக்குமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. ஆனால் அதிமுகவிலோ இருக்கின்ற முதல்வரை மாற்ற, அவருக்கு நெருக்கடி கொடுக்க எப்படி பேட்டி கொடுக்கலாம் ? என்ன மாதிரி அறிக்கை கொடுக்கலாம் ? என்பதில் அதீத அக்கறை காட்டி விவசாயிகள் நலனைப் புறக்கணித்து விட்டார்கள். நான் தயவுகூர்ந்து அதிமுக அரசை கேட்டு கொள்வது எல்லாம், தமிழகத்தில் இனி ஒரு விவசாயி கூட வறட்சியின் காரணமாக உயிரிழக்கக் கூடாது என்பது தான். ஆகவே, ஆளும் அ.தி.மு.க அரசு விரைந்து செயல்பட்டு, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, உரிய வறட்சி நிதியை உடனடியாக பெற வேண்டும். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையும், கருகும் பயிரால் வாடி வேதனையில் தவிக்கும் விவசாயிகளுக்கு இழப்பீடும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

மகனுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் ராம மோகன ராவுக்கு திடீர் உடல்நலக்குறைவு!

தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராம மோகன ராவ் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். முன்னதாக ராம மோகனராவின் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்ற நிலையில் அவருக்கு தற்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ராம மோகன ராவ் வீடு, அலுவலகம் மற்றும் அவரது மகன் விவேக் இல்லம், அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் 2 நாட்களாக சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைபற்றப்பட்டுள்ளன. அவருடைய மகன் விவேக்கை நேரில் ஆஜராக வருமான வரித்துறை சம்மன் அனுப்பியிருந்தது. விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில் ராம மோகன ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது விசாரணையை பாதிக்கக்கூடும் என்றே சொல்லப்படுகிறது.

ராம் மோகன்ராவ் உறவினர் வீட்டில் 40 கிலோ தங்கம் பறிமுதல்

தமிழக தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாலை முதல் சோதனை செய்து வருகிறது. அவருக்கு நெருக்கமானவர்களின் 13 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. விஜயவாடாவில் உள்ள ராம்மோகன் ராவின் உறவினர் வீட்டில் நடந்த சோதனையில் 40 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.

நீட் தேர்வு எந்த நிலையிலும், எந்த மொழியிலும் ஏற்க முடியாது: இரா. முத்தரசன்

நீட் தேர்வு எந்த நிலையிலும், எந்த மொழியிலும் ஏற்க முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியான அறிக்கையில்,

“தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு கிடையாது. +2 தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த கல்வியாண்டில் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் கொண்டு வரவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இதனை தமிழக அரசு, அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் ஆகியவற்றின் எதிர்பால் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு கடந்த ஆண்டு விலக்கு அளிக்கப்பட்டது. இந்த நீட் தேர்வை மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா கடுமையாக எதிர்த்து வந்த நிலையில், தற்போது நீட் தேர்வு எழுத மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என தமிழக கல்வி அமைச்சர் அறிவித்திருப்பது வியப்பளிக்கிறது. தற்போது தமிழில் எழுதலாம் என வஞ்சகமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நீட் தேர்வு எந்த நிலையிலும், எந்த மொழியிலும் ஏற்க முடியாது என்கிற நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

இதன் மூலம் நீண்ட காலம் போராடி பெற்ற சமூக நீதியை பாதுகாக்கும் விதமாக தமிழக அரசின் நிலைபாடு இருக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.” என தெரிவித்துள்ளார்.

முன்னாள் துணை வேந்தர் திரு.வ.செ.குழந்தைசாமி காலமானார்; தலைவர்கள் அஞ்சலி

கல்வியாளரும், முற்போக்கு சமூக சிந்தனையாளரும், மொழி சீர்த்திருத்த ஆய்வு அறிஞரும், கவிஞருமான, முன்னாள் துணை வேந்தர் திரு.வ.செ.குழந்தைசாமி 10.12.2016 அன்று சென்னையில் காலமானார்.

கல்வியாளர் வா.செ.குழந்தைசாமியின் மறைவுக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின்: முன்னாள் துணை வேந்தர் திரு வா.செ.குழந்தைசாமி அவர்களின் மறைவு கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து வைத்து அஞ்சலி செலுத்தினேன்.

கல்வி உலகத்திற்கும், தமிழகத்திற்கும் அவரது மறைவு பேரிழப்பு ஆகும். அண்ணா பல்கலைக் கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் துணை வேந்தராக இருந்த அவர், கல்வி துறைக்கு மகத்தான சேவை ஆற்றினார். கழக அரசின் கல்வி கொள்கைகளுக்கும், உலக செம்மொழி மாநாட்டிற்கும் உற்ற துணையாக இருந்தவர். தமிழக மாணவர்கள் சிறந்த அறிவாளிகளாக உருவாக்க அரும்பாடு பட்டவர். துணை வேந்தர் பதவிக்கே பெருமை சேர்த்தவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், கல்வியாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

வைகோ: தமிழ்நாட்டின் தலைசிறந்த கல்வியாளரும், ஈடற்ற தமிழ்ப் பற்றாளரும், பல்கலைக் கழகங்களின் முன்னாள் துணைவேந்தருமான முனைவர் வா.செ.குழந்தைசாமி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.

அண்ணா பல்கலைக் கழகத்திற்கும், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திற்கும், இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைக் கழகத்திற்கும் துணைவேந்தராக நிர்வகித்து அப்பல்கலைக் கழகங்களின் தரத்தையும், பெருமையையும் உயர்த்திய இப்பெருமகனார், தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தை நிறுவி, தமிழ் மொழிக்கும், தமிழகத்துக்கும் ஈடு இணையற்ற சேவை செய்தார்.

தமிழ் இனத்தின் மீதும், குறிப்பாக மரண பூமியிலே தவிக்கும் ஈழத் தமிழர்கள் மீதும் எல்லையற்ற வாஞ்சையும், பரிவும் கொண்டிருந்தார்.

‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்ற குறள்மொழிக்கு ஏற்ப, ‘நிறைகுடம் ததும்பாது’ என்ற பழமொழிக்கு ஏற்ப தன்னடக்கத்தோடும், அனைவரிடத்திலும் அன்பு காட்டும் மனிதநேயத்தோடும் வாழ்ந்த உத்தமர்தான் முனைவர் குழந்தைசாமி அவர்கள் ஆவார்கள்.

அவர் கல்வித்துறைக்கும், தமிழகத்திற்கும் ஆற்றிய தொண்டுகள் காலத்தால் மறையாதவை ஆகும். அவரது மறைவால் கண்ணீரில் துயர்ப்படும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ராமதாஸ்: தமிழகத்தின் தலைசிறந்த நீரியல் வல்லுனரும், முன்னாள் துணைவேந்தருமான வா.செ. குழந்தைசாமி சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

தமிழ்நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களான அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தராகவும், இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும் பணியாற்றியவர். தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தை நிறுவி தலைமையேற்று நடத்திய பெருமையும் இவருக்கே உண்டு. மதிப்புமிக்க பொறியியல் வல்லுனராகவும், கல்வியாளராகவும் விளங்கியவர். தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களை வகுத்துக் கொடுத்தவர்.

தனிப்பட்ட முறையில் என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர். பாட்டாளி மக்கள் கட்சியின் கல்விக் கொள்கையை மனம் திறந்து பாராட்டியவர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட கல்வி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் 2005-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5,6,7 தேதிகளில் சென்னையில் நடந்த ‘‘இன்றைய தேவைக்கேற்ற கல்வி முறை’’ என்ற தலைப்பிலான 3 நாள் கருத்தரங்கத்தில் பங்கேற்று யோசனைகளை தெரிவித்தார்.

பொதுவாக பொறியியல் வல்லுனர்கள் தமிழ் ஆர்வலர்களாக இருப்பது அரிது. ஆனால், கல்வியாளர் வா.செ. குழந்தைசாமி தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் பற்று கொண்டிருந்தார். ஈழத்தமிழர் பிரச்சினைக்காக குரல் கொடுத்தார். அவரது மறைவு கல்வித்துறைக்கு பெரும் இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜி.ராமகிருஷ்ணன்:  கரூர் மாவட்டம் வாங்கலாம்பாளையத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த வா.செ.குழந்தைசாமி, கரக்பூர் ஐஐடியில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். ஜெர்மனி, மற்றும் அமெரிக்காவில் உயர் கல்வி முடித்து, நீர்வளத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். தமிழகத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், நீர்வளத்துறை பேராசிரியர் போன்ற பொறுப்புக்களிலும் சென்னை அண்ணா, மதுரை காமராஜர், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மொத்தம் 15 ஆண்டுகள் துணைவேந்தராகவும் செயல்பட்டுள்ளார். யுனெஸ்கோ நீர்வளத் துறைத் திட்டக் குழு உறுப்பினராகச் செயல்பட்டார். நீர்வளத் துறையில் ’குழந்தைசாமி மாதிரியம்’ என்ற கண்டுபிடிப்பை மேற்கொண்டார்.

தமிழகத்தில் பிறந்து, தனது அறிவாற்றலால் சிறந்த கல்வியாளராக உயர்ந்து நம் அனைவருக்கும் சிறப்புச் சேர்த்தவர் குழந்தைசாமி. நீரியல், நீர்வளம், கல்வி போன்றவை தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழ் இலக்கிய ஆர்வமும், படைப்பாற்றலும் மிக்கவர். குலோத்துங்கன் என்ற பெயரில் பல கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழில் பத்து கவிதைத் தொகுப்புகள், 12 உரைநடை நூல்கள், ஆங்கிலத்தில் ஆறு உரைநடை நூல்கள், ஒரு கவிதை நூலும் வெளிவந்துள்ளன. இவரது அனைத்துக் கவிதைகளின் தொகுப்பு ‘குலோத்துங்கன் கவிதைகள்’ என்ற தலைப்பில் 2002-ஆம் ஆண்டு வெளிவந்தது.

தமிழக அரசின் திருவள்ளுவர் விருது, தமிழ் இலக்கியப் பங்களிப்புக்காகச் சாகித்ய அகாதெமி விருது, கல்வி, அறிவியல் துறை பங்களிப்புக்காகப் பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருது பெற்றவர். தமிழில் அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைப் படைத்தல், தமிழ் மொழியை நவீனப்படுத்துதல், தமிழ் கற்பதை எளிமையாக்குதல் ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டவர். இவர் எழுதிய நூல்கள் பல பல்கலைக்கழகங்களில் பாட நூல்களாகவும், இவரது கட்டுரைகள். கவிதைகள் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, பல்கலைக்கழக வகுப்புகளில் பாடமாகவும் இடம் பெற்றுள்ளன.

தமிழ் எழுத்துச் சீரமைப்பில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார், கடந்த 35 ஆண்டுகளாக வரிவடிவ சீரமைப்பைப் பற்றி முழு ஈடுபாட்டுடன் எழுதியும், பேசியும் வந்தார். தமிழ் இணையப் பல்கலைக்கழக நிறுவனத் தலைவரான இவர், தற்போது தமிழ் மெய்நிகர்ப் பல்கலைக்கழகச் சமூகத்தின் தலைவராகவும், சென்னை தமிழ் அகாதெமி தலைவராகவும், உலகத் தமிழ் ஆய்வுக்கழகத் துணைத் தலைவராகவும், தமிழ் மொழி மேம்பாட்டு வாரியத் தலைவராகவும் பல பொறுப்புகளை வகித்த முனைவர் வா.செ.குழந்தைசாமியின் மறைவு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தாருக்கும், அவரது மறைவால் வாடும் அனைவருக்கும்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

இரா.முத்தரசன்: தமிழ்மொழி மேன்மைக்காகவும், தமிழ் எழுத்துகளைச் சீர்த்திருத்தவும், ஓய்வறியா முயற்சிகளை மேற்கொண்ட வா.செ.கு., தனது படைப்புகள் மூலம் என்றென்றும் வாழ்வார். இவர் குலோத்துங்கன் என்ற புனை பெயரில் எழுதியுள்ள கவிதைகளும், ஏராளமான கட்டுரைகளும் மனித குலத்தின் சகல பிரச்சனைகளையும் பேசியுள்ளன. இவர் மழைநீர் சேகரிப்பு குறித்தும் நிலத்தடிநீர் ஆதாரத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆக்கபூர்வமான கருத்துகளை தெரிவித்துள்ளார்.

தமிழ்மொழி மேன்மைக்காகவும், தமிழ் எழுத்துகளை சீர்த்திருத்தவும், ஓய்வறியா முயற்சிகளை மேற்கொண்ட இவர் தனது படைப்புகளில் என்றென்றும் வாழ்ந்திருப்பார். எனினும் அன்னாரது மறைவு ஆய்வுத்துறைக்கு ஏற்பட்ட இழப்பாகும். அன்னாரது மறைவுக்கு அஞ்சலியை தெரிவிப்பதுடன், அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

கி.வீரமணி: தமிழ்நாட்டின் தலைசிறந்த கல்வியாள ரும், தமிழ்மொழி அறிஞரும், நீரியல் (Hydrology) துறையில் உலக நிபுணர்களில் ஒருவரும், நம் தமிழர்களின் பெருமைக் குரிய செம்மொழிச் சிந்தனையாளரும் ஆன ‘டாக்டர் வி.சி.கே.’ என்று அனைவ ராலும் அழைக்கப்படும். அருமை நண்பர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் இன்று (10.12.2016) விடியற்காலை 4.30 மணிக்கு சென்னையில் காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு, நாம் கலங்கிப் போனோம் (அவருக்கு வயது 87).

ஒரு கிராமத்தில் (வாங்கலாம் பாளையம்) ஓர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தமது உழைப்பாலும், ஆற்றல் – அறிவுத் திறனாலும் எவரும் எளிதில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்திற்கு கல்வித்துறையில் வளர்ந்த தமிழ்க்குடி பெருமையடையத் தக்க சான்றோர் பெருமகனாவார்.

அவர் அடக்கமான ஒரு பகுத்தறிவுவாதி மாணவப் பருவம் தொட்டே!

பல்துறை தொழில் கல்வித்துறையில் பல பதவிகள், பிறகு மதுரை, அண்ணா பல்கலைக் கழகம், இந்திரா காந்தி பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர் பதவிகள், பல்கலைக் கழக மான்யக் குழு இவைகளோடு, செம்மொழித் தமிழ் அமைப்பில் அது வருவதற்கும் வந்த பின்பும் பெரிதும் பெரும் பங்காற்றிய பெம்மான்.

தந்தை பெரியார் அவர்களது தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை வரவேற்று ஆதரித்ததோடு அதற்கு அடுத்தக் கட்டத்திற்கும் நாம் அதை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இருந்தவர் தமிழ்ப் புலமை, தொழிற் கல்வித் துறைப் புலமை, ஆங்கிலப் புலமை – இவைகளை இணைத்தவர் – தமிழ்கூறு நல்லுலகத்தில் டாக்டர் வி.சி.கே. என்ற வா.செ.கு. அவர்களேயாவர்!

“குலோத்துங்கன்” என்ற புனைப்பெயரில் அவர் சீரிய கவிஞராகவும் திகழ்ந்தவர்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், கல்வி வள்ளல் காமராசர் போன்ற தலைவர்களிடம் மிகுந்த அன்பு செலுத்தியவர்.
தந்தை பெரியார் அவர்கள்பற்றி அவர் எழுதிய கவிதையில் உயிரோட்டமான பகுதியின் துடிப்பை எவரும் மறக்கவே முடியாது.
நீரெல்லாம் அவன் வியர்வை; தமிழகத்தின்
நிலமெல்லாம் அவன் நடந்த தாரை; வாழும்
ஊரெல்லாம் அவன் மூச்சின் காற்று; எம்மோர்
உயர்வெல்லாம் அவன் தந்த பிச்சை அன்றோ?
என்பதுதான் அவரின் பொன்னான பொருள் பொதிந்த வரிகள்.

நம்மிடம் அன்பு பாராட்டிய குடும்ப நண்பராவார். சீரிய பண்பாளர்.

அவரை இழந்து தவிக்கும் அவரது வாழ்விணையர் டாக்டர் திருமதி சவுந்தரவல்லி, அவரது பிள்ளைகள், உறவுகள் ஆகிய குடும்பத்தினருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். எளிதில் ஆறுதல் அடைய முடியாத, ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்!

அந்த மாமேதைக்கு நமது வீர வணக்கம்.

மாநிலங்களின் உரிமைக்கான போராட்டத்தில் ஜெயலலிதாவின் பங்கு; தி இந்து கட்டுரைக்கு எதிர்வினை

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்
அருண் நெடுஞ்செழியன்

தோழர் ஆழி செந்தில் நாதனின் “மாநிலங்களின் உரிமைக் குரல்!” என்ற தலைப்பிலான தமிழ் இந்து கட்டுரை மீதான விமர்சனக் குறிப்புகள்:

http://tamil.thehindu.com/…/%E0%AE%AE%E…/article9417205.ece…

கட்டுரையின் சாரம்சத்தை தொகுத்தோம் என்றால் மத்திய அரசின் மாநில உரிமைப் பறிப்பிற்கு எதிராக மறைந்த தமிழக முதல்வர் ஜெயா அம்மையார் பணியாமல் எதிர்த்து பேசிவந்தார். மத்திய அரசின் கொள்கை அமுலாக்கத்திற்கு எதிரான மறைந்த முதல்வரின் குறிப்பான எதிர்ப்புகளையும் ஜெயா அம்மையாரின் சொந்த வாக்கியங்களையும் இதற்கு ஆதரவாகத் தருகிறார்.

அவரது கட்டுரையில் இருந்து சில மேற்கோள் காட்டுவதென்றால்
//”மாநில உரிமைகள் தொடர்பான ஜெயலலிதாவின் ஈடுபாடு ஆத்மார்த்தமானதோ இல்லையோ, தொடர்ச்சியானது என்பதை நாம் உறுதியாகச் சொல்ல முடியும். எல்லா முதல்வரையும்போல அவரும் டெல்லிக்குக் கட்டுப்பட்டவர்தான். ஆனால், அவரை எல்லாச் சமயங்களிலும் டெல்லியைக் கண்டு பயந்து நடுங்கியவர் என்று சொல்ல முடியாது. எந்தப் பிரதமரையும் ஆளுநரையும் அவர் தள்ளித்தான் வைத்திருந்தார். அவரது எதிர்ப்பைவிட அவரது ஆதரவைக் கண்டுதான் டெல்லிக்காரர்கள் அதிகம் பயந்தார்கள்! அவருக்கு டெல்லியின் அரசியலும் உள்நோக்கமும் நன்றாகத் தெரிந்திருந்தது”//

அதேநேரத்தில் மத்திய அரசின் அதிகாரக் குவிப்பிற்கு எதிரான ஜெயா அம்மையாரின் சமரை முன்மாதிரியாகக் கொள்ளவும் முடியாது, அதில் சில குறைகளும் உள்ளன, ஆனாலும் அவரது சமரை தவிர்க்க முடியாது எனக் கூறி கட்டுரையை முடிக்கிறார். அவரது சொற்களில் சொல்வதென்றால்

//“நாம் மேற்கொள்ள விரும்புகிற மாநில உரிமைகளுக்கான போராட்டத்தின் முன்மாதிரியாக ஜெயலலிதா திகழ்கிறார் என்று ஒருபோதும் கூற முடியாது. இத்தகைய ஆட்சிகளோ கட்சிகளோ டெல்லி ஏகாதிபத்தியத்துக்கு உண்மையான சவால் என்றும் கூற முடியாது. ஆனால், டெல்லியை நோக்கிச் சவாலான ஒரு பார்வையை வீசியதிலும் “நீ மகாராஜா என்றால், நான் மகாராணி” என்று அட்டகாசமாகச் சிரிப்பதிலும் பல மாநில முதல்வர்களிடையே மற்ற பல தமிழக முதல்வர்கள் உட்பட – அவர் வித்தியாசப்பட்டுதான் இருந்தார் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். அதனால், மாநில உரிமைகளுக்கான போராட்டத்தில் நிச்சயம் அவருக்கு ஒரு இடம் இருக்கவே செய்யும்”//

ஆக, மாநில அரசுகளின் அரசியல்-பொருளியில் அதிகார நலனைப் பறிக்கிற மத்திய அரசின் அதிகாரக் குவிப்பிற்கு எதிராக (ஆனாலும் சில குறைகள் இருப்பினும்!) போராடிய ஜெயா அம்மையாரின் போராட்டத்தை தொடர்வதே அவருக்கான அஞ்சலியாக இருக்க முடியும் என்கிற தோழரின் ஆதங்கம் நியாமானதே.

ஆனாலும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதையாக ஆளும் வர்க்கத்தின் மைய மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகார குவிப்பிற்கும் அதிகார பரவலுக்குமான முரண்பாட்டிற்கான அரசியல் பொருளியில் காரணிகளை கூற மறந்துவிடுகிறார். ஆளும்வர்க்கத்தின் முதலாளித்துவ ஜனநாயக அமைப்பினில், மத்திய மாநில அரசுகளின் “சேம நல அரசு” முறையானது பாட்டாளி வர்க்க, உழைக்கும் வர்க்க நலனுக்கு சேவை செய்யாத சூழலில் இந்த அம்மைப்பின் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே எழுகிற முரண்பாடுகளை வர்க்க நலன் கொண்டே விளக்கே வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில், அவரது விளக்கம் நேரடியாக ஆளுவர்க்கத்தின் முதலாளித்துவ ஜனநாயக முறைக்கே சேவை செய்யும். இந்த அம்மைப்பின் சீர்திருத்தமே தீர்வு என்று பேசும். கட்டுரையின் போதாமை இரண்டு அம்சங்களில் வெளிப்படுகிறது. ஒன்று மத்திய அரசு ஏன் இதற்கு முன் இல்லாத வகையில் அதிகாரக் குவிப்பை தீவிரமாக மேற்கொள்கிறது? இரண்டாவது தமிழ்நாட்டின் அதிமுக அரசு (சில இடங்களில்) ஏன மத்திய அரசுடன் முரண்பட்டன?

1
மத்திய அரசு கடந்து அறுபது ஆண்டுகளில் இல்லாத வகையில் ஏன் மாநில அரசுகளின் உரிமையை பறிப்பதில் தீவிரம் காட்டுகிறது? கடந்த 30 ஆண்டுகளில் எந்தக் கட்சிக்கும் இல்லாத வகையில் முழு பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரமும் இன்று பிரதம மந்திரியின் அலுவலகத்தில் குவிமையப்படுத்துப்பட்டுள்ளது. முன்னதாக செல்லாக் காசு அறிவிப்பின் ஊடாக, நாட்டின் பொருளியில் அலகுகளை வங்கிகளில் மையப்படுத்த முனைவது, சிறு குறு வணிகத்தை ஏகபோக நிறுவனங்கள் விழுங்கச் செய்வது, வரி வசூலிப்பை மையப்படுத்துவது என ஏகாதிபத்திய சகாப்தத்தின் “தாராளமய இந்துத்துவ சர்வாதிகார அரசு” என்ற தனது முழு வடிவத்தை பாஜக வெளிப்படுத்துகிற பண்பு மாற்றப் போக்கின் குறிப்பான வெளிப்பாடாகும்.

அதாவது மத்திய அரசின் வேகமான இப்பண்பு மாற்றப் போக்கானது ஏகாதிபத்திய கட்டத்தைய பெருமுதலாளிய வளர்ச்சிப் போக்கின் தவிர்க்கவே இயலாத தன்மைகளின் குறிப்பான வெளிப்பாடாகும். ஆளும்வர்க்கத்தின் மைய மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகார குவிப்பிற்கும் அதிகார பரவலுக்குமான இந்த முரண்பாடானது, இதற்குமுன் இல்லாத வகையில் இந்திய முதலாளித்துவ அமைப்பின் பசகாவால் தீவிரப்படுத்துவருகிறது. ஒரே நாடு ஒரே சந்தை, பொது அரசியல் பொருளியில் கொள்கை என்ற முழக்கத்தின் அடிப்படையில் முன்வைக்கப்படுகிற பொது சேவை வரி மசோதாவானது, மாநில அரசுகளின் உரிமையை பறிக்கிற முக்கிய பொருளாதார நடவடிக்கையின் வெளிப்பாடாகும். மாநிலங்களின் குரலை பிரதிபலிக்கிற மேலவை அமைப்பையும் தற்போது நீர்த்துப்போக செய்கிற நடவடிக்கைகளை பசக மேற்கொண்டுவருகிறது. இதன் தொடர்ச்சியானது பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது அல்லது முழுவதும் தனியார்மயப்படுத்துவது,குறிப்பாக வங்கிகள், ரெயில்போக்குவரத்து, நீர் விநியோகம் என அரசின் வசமுள்ள அனைத்து நிறுவன அலகுகளும் முதலாளிய வர்க்கத்தின் கைகளில் வழங்கப்படும். சுகாதாரம், கல்வி போன்ற மக்கள் தேவைகளுக்கான அரசின் செலவுகள் கட்டுப்படுத்தப்படும். நிலவுகிற பெயரளவிலான பாராளுமன்ற ஜனநாயகமும் பறிக்கப்படும். போராடிப் பெற்ற தொழிலாளர்களின் உரிமைகள் நசுக்கப்படும். ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்கன்ட் போன்ற மாநிலங்களின் கனிமவளங்களை சூறையாடத் தடையாக நிற்கிற மாவோயிச அரசியல் சக்திகளை வேகமான வகையில் போலி மோதலில் அழித்தொழிக்கிற பணிகள் துரிதப்படுத்தப்படும். காடுகளில் இருந்து பலவந்தமாக பழங்குடிகள் வெளியேற்றப்படுவார்கள். எதிர்ப்புகளை கட்டுப்படுத்த இராணுவம்,போலீஸ் துறைகள் நவீனமயப்படுத்தப்படும். இவையெல்லாம் சமூகப் பொருளியில் அரசியல் அரங்குகளில் ஏற்படுவுள்ள அரசின் பண்பு மாற்றப் போக்குகள்

2
மைய அரசின் இந்த அதிகார-பொருளியில் ஒன்றுகுவிப்பிற்கு எதிரான மாநில அரசுகளின் எதிர்ப்பரசியலில் திருணாமுல் காங்கிரசும், அதிமுகவும் முக்கிய தடை சக்தியாக நின்றுவருகிறது. குறிப்பாக மைய அரசின், தீவிரவாதத்திற்கு எதிரான தேசிய மைய உருவாக்கம், உணவுப் பாதுகாப்பு மசோதா, உதய் திட்டம், சேவை வரி மசோதா போன்ற முடிவுகளுக்கு அதிமுக தீவிரமான எதிர்ப்பைக் காட்டிவந்தது. பெரும் மக்கள் திரளை வோட்டு வங்கி அரசியலுக்கு திரட்டுவது, அதிகாரத்தை தக்க வைப்பதற்க்கான செயலுக்திகளை வகுப்பது,  நடைமுறைப்படுத்துவது, நிலவுகிற அமைப்பின் சட்ட வரம்பிற்குட்பட்ட சீர்திருத்தல் அரசியலை சமூக முரண்பாடுகளுக்கு இறுதியான தீர்வாகப் பேசுவது, பெரு முதலாளிகளுக்கு சேவை செய்வது என்கிற நிலவுகிற முதலாளித்துவ ஜனநாயக அமைப்பு நலனுக்கு சேவை செய்கிற அரசியல் கட்சிகளின் பண்புகளில் அதிமுகவும் திருணாமுல் காங்கிரசும் விதி விலக்கல்ல. மாறாக மாநிலங்கள் மீதான மத்திய அரசின் நிதி மூலதன பறிப்பின் பாற்பட்ட அர்த்தத்திலும் வோட்டு வங்கி அரசியல் நலனுக்குமே எதிர்த்து வந்தன.

……..
ஆக,முதலாளித்துவ அமைப்பிற்கு சேவை செய்வது என்ற உள்ளடக்கம் மாறாமல் மத்திய அரசும் மாநில அரசும் மேற்கொள்கிற சண்டையில் உழைக்கும் வர்க்கத்திற்கு அணு அளவிலும் லாபம் இல்லை. மாறாக துன்பத்தை யார் வழங்குவதே யார் பொறுப்பேற்பது மட்டுமே கேள்வி. உழைக்கும் வர்க்கத்தை சுரண்டுகிற கும்பலில் யார் ராஜாவாக இருந்தாலும் யார் ராணியாக இருந்தாலும் பாட்டாளி வர்க்க சுரண்டலை, இயற்கை வள சுரண்டலை மேற்கொள்கிற கும்பல்கள் வீழ்த்தப்பட வேண்டியவர்களே.

மாறாக ஆளும்வர்கதிற்கு இடையிலான முரண்பாட்டில் ஒரு பக்கத்திற்கு நின்று முட்டுகொடுப்பது உழைக்கும் வர்க்க அரசியலுக்கு செய்கிற பச்சைத் துரோகம். இந்தப் பிரச்சனையை அதாவது முதலாளித்துவ ஜனநாயக அரசியல் எல்லைக்கு உட்பட்ட மாநில அரசின் சுயாதின செயல்பாட்டை முடக்குகிற இந்து தேசியவாதத்தை அதன் அதிகார சுற்றுவளைப்பை,நலன்களை இழக்குற பெரும்பாலான உழைக்கும் மக்கள் திரள் அரசியல் ஊடாகவே முறியடிக்க இயலும். இப்போராட்டமானது அரசியல் சட்டகத்திற்கு உட்பட்டும் வெளியேவும் நடைபெற்றேத் தீரவேண்டும்.பிற தேசி இனங்களை ஒடுக்குவது போல, தமிழ்ச்சமூகத்தை ஒடுக்குகிற மைய இந்து தேச அரசின் பிரதிநிதியான பசகவின் ஒடுக்குமுறையையும் அதன் அங்கங்களாக திகழ்கிற சந்தர்ப்பவாத சக்திகளையும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான உறுதியான சோசலிச, ஜனநாயக போரட்டத்தாலேயே தீர்க்கமுடியும்.

 அருண் நெடுஞ்செழியன், சூழலியல் செயற்பாட்டாளர்; அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர்.

“அண்ணா நாமம் வாழ்க என்ற இடி முழக்கத்தை இனி நாம் எங்கு கேட்கப்போகிறோம்”

ஜெயநாதன் கருணாநிதி:

ஒன்றே என்னின் ஒன்றேயாம்,
பல என்று உரைக்கின் பலவேயாம்
அன்றே என்னின் அன்றேயாம்,
ஆமே என்னின் ஆமேயாம்
இன்றே என்னின் இன்றேயாம்,
உளது என்று உரைக்கின் உளதேயாம்
நன்றே நம்பி குடி வாழ்க்கை
நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா!

இறைவன் ஒன்று என்று சொன்னால் ஒன்றுதான்; பல என்றால் பலவேதான்; அப்படி அல்ல என்றாலும் அல்லதான்; அப்படித்தான் என்றால் ஆம் அப்படித்தான்; இல்லை என்றாலும் இல்லைதான்; உண்டு என்றாலும் உண்டுதான்; எல்லாம் நமது நம்பிக்கையில்தான் இருக்கிறது. இதனை உணர்ந்து கொண்டால் நம் வாழ்வு நன்று!

  • யுத்த காண்டம், கம்ப இராமாயணம்.

நிற்க .

அண்ணா நாமம் வாழ்க என்ற இடி முழக்கத்தை இனி நாம் எங்கு கேட்கப்போகிறோம். யார் வழி கேட்கப்போகிறோம், தெரியவில்லை.

நிற்க .

அன்று அண்ணா சொன்னார், “வாசலிலே உள்ள பூனையை விரட்டப்போகிறோம் ! புறக்கடைக் கதவு திறந்திருக்கிறது. அங்கோர் ஓநாய், இரத்த வெறியுடன் நிற்கிறது! அது உள்ளே நுழையக்கூடாதே”.

 

குழப்பங்களுக்கு முடிவு: ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்பு

முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலமானார். குழப்பங்களுக்கு முடிவு கட்டும் வகையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அதில், கட்சியின் சட்டமன்ற தலைவராக ஓ.பன்னீர்செல்வம் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதத்துடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சராக பதவியேற்க உரிமை கோரினார். இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் நடந்த எளிமையான நிகழ்வில் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரான வித்யாசாகர் ராவ் அவருக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து 31 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்புக்கு முன்னர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

“ஜெயலலிதா மரணச் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது”: மு.க.ஸ்டாலின்

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் குறிப்பு:`

தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மையார் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் மரணச் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அரசியல் களத்தில் மாறுபட்ட கருத்துகள் கொண்டிருந்தாலும் ஜனநாயக நெறியிலேயே அதனை எதிர்கொண்டு வந்தோம் என்ற நிலையில், முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மரணம் தமிழகத்திற்கு பேரிழப்பாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்துவதுடன், அவரை இழந்து தவிக்கும் அ.தி.மு.க.வின் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும்,தமிழக மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“இனிமேல் இப்படி ஒரு மரணம் எந்தத் தலைவருக்கும் நடக்கக் கூடாது”: சுப. உதயகுமாரன்

பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் இரங்கல் அறிக்கை:

மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு எங்களின் ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது கொள்கைகள், செயல்பாடுகள் குறித்து ஏராளமான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர் எண்ணிறந்த தமிழ் மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றவர் என்பதை உணர்ந்திருக்கிறோம், அதனை மதிக்கிறோம்.

இவ்வளவு பெரிய ஒரு மக்கள் தலைவரை ஒரு சிறு கூட்டம் தனிமைப்படுத்தி, தங்கள் கைகளுக்குள், கட்டுக்குள் வைத்து, அவரது முகத்தைக்கூட சுமார் எழுபது நாட்களாக தமிழ் மக்களுக்குக் காட்டாமல், ரகசிய மருத்துவம் பார்த்த விதம், தன்மை போன்றவை பெரும் நெருடலை, ஏன் ஒருவித அச்சத்தையே உருவாக்குகின்றன. முதல்வர் உண்மையில் எப்போது இறந்தார், எப்படி இறந்தார் என்பது கூட யாருக்கும் சரியாகத் தெரியாத நிலை ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. இறந்ததை அறிவிப்பதில் எழுந்த குழப்பங்கள், இறப்பு நாளை டிசம்பர் ஆறுக்கு இழுத்த சூழ்ச்சிகள் (அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள், பாபர் மசூதி இடிப்பு நாள்) என பல சந்தேகங்கள் எழுகின்றன. ஒரு சனநாயக நாட்டில் இப்படி நடப்பது நமது அரசியல் கட்டமைப்புக்கும், நமக்காக செயல்படும் அரசியல் ஆளுமைகளுக்கும் உகந்ததல்ல. இனிமேல் இப்படி ஒரு மரணம் எந்தத் தலைவருக்கும் நடக்கக் கூடாது, நடக்கவிடக் கூடாது என்று சூளுரைப்போம்.

செல்வி. ஜெயலலிதா அவர்களின் மறைவு தமிழக அரசியல் அரங்கில், குறிப்பாக அ.இ.அ.தி.மு.க. கட்சியில் ஒரு மாபெரும் வெற்றிடத்தை உருவாக்குகிறது. அதை இயன்றவரை நிரப்புவதும், அந்தக் கட்சியின் ஆட்சியை உரிய தலைவர் ஒருவரின் வழிகாட்டுதலின்படி நடத்துவதும் அந்த கட்சித் தலைவர்களின், தொண்டர்களின் பெரும் பொறுப்பு. இதை அவர்கள் அமைதியாகவும், திறம்படவும் செய்து முடிக்க உதவுவது பிற அரசியல் கட்சிகளின், பொதுமக்களின் கடமை. இந்த சனநாயக அமைப்பில் அதிகார துஷ்பிரயோகம் செய்து, குழப்பங்களை ஏற்படுத்தி, சில தன்னலவாத சக்திகள் குளிர்காண முயல்வது முற்றிலும் தவறானது. முழுவதுமாக முறியடிக்கப்பட வேண்டியது.

அ.இ.அ.தி.மு.க. தோழர்கள் தங்கள் தலைவிக்குச் செய்யும் நன்றி இந்த ஆட்சி மாற்றத்தை அமைதியாகச் செய்து முடிப்பதும், பிற தேசிய, மாநில அரசியல் சக்திகள் உள்ளுக்குள் புகுந்து குழப்பங்கள் ஏற்படுத்த அனுமதிக்காமல் இருப்பதும்தான். தமிழ் மக்கள் அரசியலை தமிழ் மக்களாகிய நாம் சாதி, மதம், கட்சி பேதங்கள் கடந்து நடத்துவோம். இங்கே அன்னியருக்கு, மதவாதிகளுக்கு, சாதி வெறியர்களுக்கு, பெண் வெறுப்பாளர்களுக்கு, பெரு முதலாளிகளுக்கு, பாசிஸ்டுகளுக்கு கடுகளவும் இடம் கிடையாது என்பதை உரக்கச் சொல்வோம்.
செல்வி. ஜெயலலிதா அவர்கள் மீது அன்பும் மரியாதையும் கொண்ட அவரது கட்சிக்காரர்கள் கண்ணியமாக நடந்து அவருக்கு, அவரது நினைவுக்கு பெருமை சேர்க்க வேண்டும். ஒரு மாபெரும் மக்கள் தலைவரை இழந்திருக்கும் தமிழ் மக்கள் கட்டுப்பாட்டோடு நடந்து, அடுத்த அரசியல் மாற்றம் அமைதியாக நடந்தேற ஆவன அனைத்தும் செய்ய வேண்டும்.

செல்வி. ஜெயலலிதா அவர்கள் அமைதி பெறட்டும்!
தமிழும், தமிழரும், தமிழகமும் என்றென்றும் வெல்லட்டும்!!

#நிகழ்வுகள்: ‘ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா – நளினி சந்திப்பும்’ நூல் வெளியீட்டு விழா

பத்திரிகையாளர் பா.ஏகலைவன் எழுதியுள்ள ‘ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா – நளினி சந்திப்பும்’ நூல் வெளியீட்டு விழா வியாழக்கிழமை சென்னை வடபழனி ஆர்கேவி ஸ்டுடியோவில் நடைபெற்றது. நூலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பெற்றுக்கொண்டார். விழாவில் எழுச்சித்தமிழர் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பத்மாவதி அம்மாள், சீமான், திருச்சி வேலுசாமி, வேல்முருகன், புகழேந்தி தங்கராஜ் போன்ற தலைவர்களும் பங்கேற்றனர்.

மகிஷாசுரன் அரக்கனா? அரசனா?

மைசூர் அல்லது மகிஷ மண்டலா ராஜாங்கத்தின் மிகச் சிறந்த ஆட்சியாளராக இருந்தவர் மகிஷா. புத்தமத கலாச்சாரத்திலும் மரபிலும் வந்த மகிஷா, மனிதநேயத்தையும் ஜனநாயக கொள்கைகளையும் தனது ஆளுடையில் பின்பற்றினார். ஆனால், கர்நாடகத்தின் கலாச்சார மற்றும் அறிவுசார் தலைநகரமான மைசூரை, புராணங்கள் மூலம் பார்ப்பன சக்திகள் திட்டமிட்டே புதைத்தனர் என்கிறார் பேராசிரியர் மகேஷ் சந்திர குரு. விரைவில் வெளிவரவிருக்கும் Mahishasur: Brahmanizing a Myth என்ற நூலிலிருந்து இந்த கட்டுரையை ஃபார்வர்டு பிரஸ் வெளியிட்டுள்ளது. அதன் தமிழாக்கம் இங்கே:

மைசூரு, கர்நாடகத்தின் இரண்டாவது மிகப் பெரிய நகரமாக இருக்கிறது. பெங்களூருவிலிருந்து 130 கிமீ தென்கிழக்கில் அமைந்துள்ளது. பண்டைய வரலாற்றில் அசோக அரசரின் காலத்தில் அதாவது கிமு 245ல் மைசூர் அல்லது மகிஷூர் என குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாவது புத்தமத பட்டமேற்பு விழாவுக்குப் பிறகு, மகாதேவா என்னும் பெயர் கொண்ட புத்தத்துறவியை அசோகர், புத்தமத கொள்கைகளைப் பரப்பி மக்கள் நலன்சார்ந்த அரசை நிறுவும் படி அனுப்பிவைத்தார். மகாதேவா, மகிஷா என பின்னர் அழைக்கப்பட்டு, மகிஷ மண்டலா எனும் ராஜ்ஜியத்தை நிறுவினார். கர்நாடகாவின் வடக்குப் பகுதிகளில் அசோகரின் சில அரசாணைகள் கிடைத்துள்ளன. மகிஷனின் அரசாட்சிக்கு சான்றாக வரலாற்று நினைவுச் சின்னங்கள், காப்பக ஆவணங்கள் இந்தப் பகுதியில் கிடைத்துள்ளன.

கிபி 1399 ஆம் ஆண்டு மைசூர் யது வம்சம் ஆட்சியின் கீழ் வந்தது. விஜயநகர அரசின் எதிரிகளாக யது வம்சத்தினர் இருந்தனர். மைசூர் மாகாணத்தின் வளர்ச்சியில் அவர்களும் முக்கிய பங்காற்றியுள்ளனர். மைசூரின் ராஜாவாக இருந்த பெட்டத காமராஜ உடையார், கிபி 1584ஆம் ஆண்டு சிறிய கோட்டை ஒன்றைக் கட்டினார். தனது தலைநகரமாக மைசூரை மாற்றிய ராஜா, அதை மகிஷாசுர நகர என அழைத்தார். 17 -ஆம் நூற்றாண்டின் காப்பக ஆவணங்கள் பலவற்றில் மைசூர், மகிஷுரு எனவே குறிப்பிடப்படுகிறது. ராஜா உடையார் தனது தலைநகரை மைசூரிலிருந்து ஸ்ரீரங்க பட்டணாவுக்கு கிபி 1610-ஆம் ஆண்டில் மாற்றினார்.

ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் மைசூரின் சிறந்த ஆட்சியாளர்களாக இருந்தார்கள். ஹைதர் அலி, மைசூர் ராஜாங்கத்தை விரிபடுத்தினார். அவருடைய மகன் திப்பு சுல்தான், தனது சர்வதேச தொடர்புகள் மூலம் ராஜாங்கத்தை மேலும் முன்னேற்றினார். இந்தியாவை ஆண்ட பிரிட்டீசாருடன் அவர் எவ்வித சமரங்களையும் செய்துகொள்ளவில்லை. ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போரிட்டு 1799-ஆம் ஆண்டு அவர் உயிர் துறந்தார். அவருடைய பெயர் நவீன இந்திய வரலாற்றில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. திப்பு சுல்தான் இறந்த பிறகு, மைசூர், உடையார்களின் தலைநகராக மீண்டும் உருவானது. பிரிட்டீசார், உடையார்களை அரியணை ஏற்றி, தங்களுடைய கூட்டாளிகளாக ஆக்கிக் கொண்டார்கள். மைசூர் சுதேசி மாகாணமாக மாறியது.

சிறுநகரமாக இருந்த மைசூர், நவீன நகரமாக உருமாறியது 2-ஆம் கிருஷ்ணராஜா உடையார் காலத்தில். 4-ஆம் கிருஷ்ணராஜா உடையார், புதிய கட்டுமானங்களை நிர்மாணித்து, பொருளாதாரா ரீதியில் விரிபடுத்தி மைசூரை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுவந்தார். அவர் ஜனநாயகவாதி, மனிதநேயம் மிக்கவர், வளர்ச்சியை முன்வைத்து நிர்வாகி. 1947-ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடையும் வரையிலும் உடையார்களின் ஆட்சி இங்கே தொடர்ந்தது. அதன் பிறகு ஒருங்கிணைந்த இந்தியாவின் அங்கமானது மைசூர்.

பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்ட புத்தரின் சிற்பம், பொஜ்ஜனகொண்டா, விசாகப்பட்டணம்.
பவுத்தத்துக்கும் பிராமணியத்துக்கு இடையேயான மோதலின் வரலாறே இந்திய வரலாறு என அம்பேத்கர் இந்திய வரலாறு குறித்து சொல்லுவார். பிராமணியம், சாதி அமைப்பையும் சாதிய ஆதிக்கத்தையும் வலியுறுத்தியது. பவுத்தம், மனிதநேயத்தை அறம் சார்ந்த ஜனநாயகத்தையும் பேசியது. ஆரியர்கள், இந்தியாவின் மீது படையெடுத்து மண்ணின் மைந்தர்களை ஜனநாயகமற்ற முறைகளில் ஒடுக்கினார்கள். அதுபோல, பவுத்த அடித்தளத்தை சிதைத்து பிராமணியத்தை நடைமுறைப் படுத்தினார்கள். ஆரியர்களின் புரட்டுகள் மூலம் மண்ணின் மைந்தர்களான, மகிஷா போன்ற ஆட்சியாளர்கள் தூக்கி எறியப்பட்டார்கள்.

மைசூர், மகிஷ மண்டலா, மகிஷாசுரநாடு, மகிஷநாடு, மகிஷபுரா என பலப் பெயர்களில் வழங்கப்பட்டது. வேளாண்மையை முதன்மையாகக் கொண்ட மாகாணமாக திகழ்ந்த மகிஷ மண்டத்தில் எருமைகள் உழவுக்கும் பால் தேவைக்கும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. மைசூர், எருமைகளின் நாடு எனப் போற்றும் வகையில் எருமையூர் (பேரா.குரு எருமையூரன் என்கிறார், ‘அன்’ விகுதி மகிஷனை குறிக்கலாம்) என்று அழைக்கப்பட்டது. பவுத்த மற்றும் ஹொய்சால இலக்கியங்களில் மகிஷ மண்டலம் குறித்து ஏராளமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அந்தக் காலக்கட்டத்தில் இந்த மாகாணத்தில் ஏராளமான நகரங்கள் இருந்திருக்கின்றன.

பிறப்பில் திராவிடர்களாக இருந்த நாகர்கள், தென் இந்தியாவை ஆண்டனர். பேராசிரியர் மல்லேபுரம் ஜி. வெங்கடேஷ் நாகர்களுக்கு மகிஷ மக்களுக்கும் தொடர்பிருப்பதை கண்டறிந்திருக்கிறார். நாகர்கள் தங்களுடைய கலாச்சாரம் மதிப்புமிக்கது என்பதை உணர்ந்து ஆரிய ஊடுருவலைத் தடுக்க போரிட்டார்கள். மானுடவியலாளர் எம் . எம். ஹிராமத், கர்நாடகத்தில் நாகர்கள், மகிஷர்கள் என்ற இரண்டு மிகச் சிறந்த இனங்கள் இருந்ததாகச் சொல்கிறார்.

ஆரியர்கள் புராணங்கள் மூலம், பவுத்த அரசர்களை சிறுமைப் படுத்தினார்கள். அவர்கள் விட்ட ஒரு புரட்டுதான் இந்தக் கதை: ஒரு மனிதன், எருமையுடன் உறவுகொண்டதால் பிறந்தவனே மகிஷன் என்ற கதை. வரலாற்றாசிரியர் மஞ்சப்ப ஷெட்டி(The Palace of Mysor நூலின் ஆசிரியர்)யின் கூற்றுப்படி, மக்களைக் காப்பாற்றும் பொருட்டும் நீதியை நிலைநாட்டும் பொருட்டும் சாமுண்டி என்ற பெண்கடவுள், மகிஷனைக் கொன்றதாக பூசாரிகளே பொய்க்கதையைப் பரப்பினர் என்கிறார்.

மகிஷன் ஒரு அசுரன் என்பதை வேண்டுமென்றே ஊன்றினார்கள். சாமுண்டீஸ்வரிதான் மகிஷனைக் கொன்றாள் என்கிற இந்து புராணக் கதைக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. மகிஷன் உண்மையில் பவுத்த-பகுஜன் அரசன்; நீதி, சமத்துவத்தின் குறியீடு. ஒரு கையில் வால் ஏந்தியும் மற்றொரு கையில் பாம்பொன்றை பிடித்திருப்பதாகவும் உள்ளது மகிஷனின் உருவம். மகிஷனின் வீரத்தை வாளும் நாகா கலாச்சாரத்தில் பவுத்தம் வலியுறுத்திய இயற்கையின் மீதான அன்பை பாம்பும் குறிக்கின்றன.

நாட்டுப்புறவியல் நிபுணர் காலேகவுடா நாகாவார், “தற்போது மைசூரு என வழங்கப்படும் மகிஷ மண்டலத்தை மகிஷன் ஆண்டார். அவர் ஓர் உன்னதமான பவுத்த அரசராக இருந்தார். முற்போக்கான நிர்வாகியாகவும் சமூகத்தின் எல்லா பிரிவினரின் அதிகாரத்தை நிலைநாட்டியவராகவும் இருந்தார். உண்மைகள் திரிக்கப்பட்டன. மக்கள் உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்து புராணங்கள் மகிஷனை எதிர்மறையாகக் காட்டின. இந்த மாகாண மக்கள் தசரா விழாவை மகிஷ மண்டலத்தின் கீழ் வேறுவிதமாகக் கொண்டாட வேண்டும்” என்கிறார்.

பிரபல எழுத்தாளர்(கன்னட) பன்னூர் ராஜா, “சாமுண்டி மலை முன்பு மகாபலேஸ்வரம் என அழைக்கப்பட்டது. இப்போதும் இந்தக் குன்றின் மீது, மகாபலேஸ்வரா கோயில் உள்ளது. யது வம்ச ஆட்சியின் போது சாமுண்டி என இந்த மலை பெயர் மாற்றம்பெற்றது. பூசாரிகளுடன் ஆட்சியாளர்களும் சேர்ந்துகொண்டு சாமுண்டீஸ்வரி, மகிஷாசூரனைக் கொன்றாள் என்ற கதையைப் புனைந்தார்கள். இது ஆதாரமற்றது; கண்டிக்கத்தக்கது” என்கிறார்.

முற்போக்கு சிந்தனையாளரும் மகிஷ மண்டலா என்னும் நூலின் ஆசிரியருமான சித்தஸ்வாமி சொல்கிறார்: “மகிஷா என்பதே மைசூரு என்பதன் வேர்ச்சொல். அசுரன் என்று எழுதிய குழுவாத எழுத்தாளர்களின் சூழ்ச்சிக்கு அவர் இறையானார். புத்தர் மற்றும் அசோகரின் கொள்கைகளை நடைமுறைப் படுத்திய மகிஷா, ஓர் சிறந்த ஆட்சியாளர்”.

வரலாற்றை மீட்டெடுத்தல்:

மைசூர் மகாணாத்தின் மண்ணின் மைந்தர்கள், மகிஷாசன ஹப்பா (மகிஷனின் விழா) என்கிற பெயரில் இந்த நகரத்தின் வரலாற்றை மாற்றி எழுத ஒன்றிணைந்திருக்கிறார்கள். இந்நகரத்தைச் சேர்ந்த பகுத்தறிவாளர்கள் சாமுண்டி மலையில் தசரா கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோது மகிஷனுக்கு அக்டோபர் 11, 2015 அன்று விழா எடுத்தோம். இந்நிகழ்வு கர்நாடாக தலித் வெல்ஃபேர் டிரஸ்டின் மூலமும் மேலும் பல முற்போக்கு அமைப்புகளின் துணையுடனும் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான சிந்தனையாளர்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், செயற்பாட்டாளர்கள் பங்கேற்றனர். கர்நாடாக தலித் வெல்ஃபேர் டிரஸ்டின் தலைவரான சாந்தராஜு, மைசூர் மக்கள் தங்களுடைய நகரத்தின் தோற்றம் குறித்தும் வரலாற்றின் படி இந்த நகரத்தைத் தோற்றுவித்தவரான மகிஷனுக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். விழாவின் போது மகிஷனின் சிலை மீது சரமாரியாக கற்களை வீசினார்கள். ஆனால் மண்ணின் மைந்தர்கள் மகிஷனை உயர்விக்கும் வகையில் தசராவைக் கொண்டாடுவார்கள்.