பொதுவுடமைவாதிகள் சுயநல அடிப்படையில் முடிவு எடுப்பதில்லை: திமுக தலைவருக்கு ஜி. ராமகிருஷ்ணன் பதில்

திமுக தலைவர் கருணாநிதி கம்யூனிஸ்டுகளின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கவில்லை என வருத்தப்படுவதாக கேள்வி பதில் அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் பதில் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். 

“திமுக தலைவர் கலைஞர் அவர்கள் 27.7.2016 முரசொலி ஏட்டில் “பொதுவுடமைவாதிகள் ஒரு சிலரின் சுயநலம் காரணமாக தமிழக சட்டமன்றத்தில் எத்தனையோ ஆண்டு காலமாக ஒலித்து வந்த கம்யூனிசக் கொள்கைகளின் வாய் மூடப்பட்டுவிட்டதே” என்று கேள்வியெழுப்பி, அதற்கு பதிலாக, “அதைப்பற்றி நாம் கூறினால் நம்மை கடுமையான வார்த்தைகளால் தாக்குவதில் தான் அந்த ஒரு சிலர் கவனம் செலுத்துகிறார்கள். கம்யூனிசக் கொள்கைகள் சட்டமன்றத்தில் எதிரொலிக்கப்படாமல் இருக்கிறதே என்று நாம் தான் வருத்தப்படுகிறோமே தவிர அக்கட்சியின் தலைவர்கள் வருத்தப்படுவதாக தெரியவில்லை” என்றும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கம்யூனிஸ்ட்டுகள் வளராமல் பார்த்துக் கொண்டேன் என்று கடந்த காலத்தில் குறிப்பிட்ட கலைஞர் தற்போது சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட்டுகள் இல்லையே என்று வருத்தப்பட்டிருக்கிறார்.

ஆனால், சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் இல்லாமல் போனதற்காக கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் வருத்தப்படவில்லையே என்றும் அவர் மட்டும் தான் வருத்தப்படுவதாகவும், அவர் அப்படி வருத்தப்படுவதற்காக அவரை தாக்குவதில் தான் ஒரு சிலர் கவனம் செலுத்துவதாகவும், அந்த ஒரு சிலரின் சுயநலம் காரணமாகத் தான் கம்யூனிஸ்ட்டுகள் சட்டமன்றத்தில் இல்லை என்றும் அவர் கூறியிருப்பது வியப்பளிக்கிறது.

ஒருசில சீட்டுக்களுக்காக கொள்கையை அடகு வைக்க தயாராக இருப்பதுதான் சுயநலம். ஆனால் வெற்றி தோல்வியைப் பற்றி மட்டும் கவலைப்படாமல் ஒரு கொள்கை அடிப்படையில், மாற்று அரசியலை முன்வைத்து தேர்தலை சந்திப்பது பொதுநல நோக்கத்தின் அடிப்படையில்தான் இருக்க முடியும்.

1998ம் ஆண்டு அதுவரை பாஜக அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துவிட்டு ஒரே நாள் நள்ளிரவில் வாஜ்பாய் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்தது போன்று கம்யூனிஸ்ட் கட்சியில் எந்தவொரு தலைவரும் தனது சுயநலத்தின் காரணமாக எந்தவொரு முடிவையும் எடுத்து விட முடியாது. கம்யூனிஸ்ட் கட்சியில் சுயநலவாதிகள் இருக்க முடியாது; அதிலும் குறிப்பாக அரசியல் முடிவை ஒருவரின் சுயநலத்திற்காக எடுத்துவிட முடியாது என்பதை கலைஞர் அறிவார்.

உயர்ந்தபட்ச உட்கட்சி ஜனநாயகம் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியில் சுயநலமிக்க ஒரு சிலர் முடிவெடுத்துவிட்டார்கள் என்று கூறுவது, கம்யூனிஸ்ட்டுகள் சட்டமன்றத்திற்குள் இல்லையே என்ற ஆதங்கத்தை சொல்லுவது போன்று போக்கு காட்டி இந்த கட்சியில் ஒரு சிலர்தான் முடிவெடுக்கிறார்கள்; அவர்கள் சுயநலத்தால் முடிவெடுக்கிறார்கள் என்று அவதூறு பொழிய பயன்படுத்தியிருக்கிறார்.

2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக இவற்றிற்கு மாற்றாக ஒரு அணியை உருவாக்குவது என்று முடிவெடுத்தது. மாநில மாநாடு சம்பந்தப்பட்ட  மாநிலத்தில் அரசியல் முடிவெடுப்பதற்கு அதிகாரம் படைத்த உயர்ந்த அமைப்பாகும். அதில் எடுத்த முடிவை சில தலைவர்களின் முடிவாக கலைஞர் அவர்கள் சித்தரிப்பதன் நோக்கமென்ன?. ஒரு சில தலைவர்களின் அல்லது குடும்பத்தின் நலன் அடிப்படையில் மட்டும் முடிவு எடுப்பது என்பது கம்யூனிஸ்டு கட்சிகளின் வழக்கம் அல்ல.

ஒரு பிரச்சனையில் விமர்சித்து விட்டதாலேயே, தீக்கதிர் நாளிதழுக்கு கொடுத்து வந்த அரசு விளம்பரம் கடந்த கால திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது உண்டு. இது முதல்வராக இருந்த கலைஞருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பு இல்லை. அப்படி நிறுத்தப்பட்ட போதே அவரிடமே முறையீடு செய்திருக்கிறோம். விமர்சனத்தை கூட தாங்கிக் கொள்ள முடியாமல்தான் திமுக அரசு அந்த முடிவை எடுத்தது. அதிமுகவும் இதே பாணியைத்தான் பின்பற்றுகிறது.

கம்யூனிஸ்ட்டுகளின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கவில்லையே என்று ஆதங்கப்படுகிறார் கலைஞர். இது அக்கறையின் பாற்பட்ட  ஆதங்கமாக தெரியவில்லை. அவதூறு செய்ய ஒரு வாய்ப்பாக இதை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் கலைஞர்.

சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் இல்லையென்பதில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முதல், தொண்டர்கள், ஆதரவாளர்கள், நடுநிலையாளர்கள் வரை அனைவருக்கும் வருத்தமிருக்கிறது. ஆனால் அந்த வருத்தத்தை விட ஊழல் மலிந்த கட்சிகளோடும், பொதுவுடமை இயக்கத்தினரும், பெரியாரும், அண்ணாவும் எந்த சமூக நீதிக்காக போராடினார்களோ அந்த சமூக நீதியின் ஒரு அங்கமான இட ஒதுக்கீட்டை சிதைக்கும் வகையில் நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும் பொதுத்துறை நிறுவனங்களையெல்லாம் அடிமாட்டு விலைக்கு விற்ற போது அதற்கு ஆதரவு தெரிவித்தவர்களோடும், தமிழகத்தில் இயற்கை வளங்கள் முழுவதையும் தாது மணல், ஆற்று மணல், கிரானைட் ஆகியவற்றை சில தனிநபர்கள் கொள்ளையடிப்பதற்கு ஆதரவு அளித்த கட்சிகளோடும், தலித்துகள் தாக்கப்படும் போது பாராமுகம் காட்டிய, ஆணவக் கொலைகள் நடக்கும் போது அதுபற்றி வாய் திறக்காத, சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படும் போது அந்த குற்றவாளிகளை, குற்றத்திற்கு துணை போன கட்சிகளை மயில் இறகால் அடித்து கடுமையாக தாக்கி அறிக்கை விட்டது போல் பொதுமக்களிடம் தோற்றம் காட்டும் கட்சிகளோடும், கூட்டணி வைத்து தான் சட்டமன்றத்திற்குள் எங்கள் குரல் ஒலித்தே ஆக வேண்டும் என்ற நிலையிருந்தால் அதை விட வீதியில் நின்று மக்களோடு இணைந்து போராடி மக்கள் நலன் காக்க நிற்போம் என்கிற சபதம் தான் 2015 பிப்ரவரியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் மேற்கொண்ட அரசியல் தீர்மானமாகும்.

சட்டமன்றத்திற்குள் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் இல்லாமல் போனது சில தலைவர்களின் சுயநலமென்றால், சமூக நீதிக் கோட்பாடு சிதைக்கப்படும் போதும் அமைதியாய் இருப்பதற்கும், ஆற்று மணலோ, தாது மணலோ, கிரானைட் மலைகளோ கொள்ளையடிக்கப்பட்ட போது அதை ஆட்சியிலிருந்த போது அதை தடுக்காமல் விட்டதற்கும், எதிர்கட்சியாக இருக்கும் போது அதை எதிர்த்தும் பேசாமல் இருந்ததற்கும் என்ன பெயர்? நிச்சயமாக பொதுநலம் இல்லை” என அறிக்கையில் கூறியுள்ளார் ஜி.ராமகிருஷ்ணன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.