அதென்ன “லோ பட்ஜெட்’ அடித்தட்டு சிந்தனை? தினமணி சினிமா விமர்சனத்தில் பா. ரஞ்சித் மீது ஏன் இத்தனை காழ்ப்பு?

அண்மைக்காலமாக ‘தினமணி’  தலித் விரோதத்தை வெளிப்படையாக வன்மத்துடன் வெளிக்காட்டிக்கொண்டிருக்கிறது. ஸ்வாதி கொலை தொடர்பில் கைதான ராம்குமார் தலித் என்ற ஒரே காரணத்துக்காக அவரை விசாரணை, தீர்ப்பு இன்றியே குற்றவாளியாக்கி தூக்கில் ஏற்ற எழுதியது. இப்போது பா. ரஞ்சித், தலித் என்ற ஒரே காரணத்துக்காக அவர் இயக்கிய ‘கபாலி’ படம் குறித்து மிக வன்மமான முறையில் ஒரு விமர்சனத்தை எழுதியுள்ளது.

இதற்கு முன் இப்படியான விமர்சனங்கள் வெளிவந்த எவ்வித சுவட்டையும் நாம் காணவில்லை. கபாலியை தொழிற்நுட்ப ரீதியாக விமர்சிக்க எல்லோருக்கும் உரிமை உண்டு. கபாலி டிக்கெட் முறைகேடு ஏராளமானோர் பேசுகிறார்கள். படத் தயாரிப்பாளரின் வியாபார யுத்தியை பலர் விமர்சிக்கிறார்கள். பா. ரஞ்சித்தின் இயக்கத்தைக் கூட பலரும் கேள்வி கேட்கிறார்கள். ஆனால், தினமணி ‘விமர்சனம்’ என்ற பெயர் வெளியிட்ட கட்டுரை, பா. ரஞ்சித் மீதான தனிப்பட்ட காழ்ப்பாகவே முந்தி நிற்கிறது.

இந்துமதத்தின் அம்பாஸிடராக இருக்கும் ரஜினிகாந்த் என்ற ஸ்டாரை, எப்படி முற்போக்கு, புரட்சி பேசும் மனிதராக சினிமாவில் காட்டலாம் என்பது இந்த ‘விமர்சன’த்தின் மூலம் வெளிப்படுகிறது.

“ஆயிரம் ரூபாய், ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் என்று டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது, கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் திரைப்படம் பார்ப்பதற்காக விடுமுறையே அளிக்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் பரப்பப்பட்ட நிலையில், ரஜினிகாந்தின் “கபாலி’ திரைப்படம் ஏதோ சிசில் பி. டெமிலியின் “பைபிள்’; வில்லியம் வைலரின் “பென்ஹர்’; ஜோசப் மான்கிவிஷின் “கிளியோபாட்ரா’, பிரான்சிஸ் போர்டு கொப்போலாவின் “காட்பாதர்’, ஜேம்ஸ் கேமரோனின் “டைடானிக்’; ஸ்டீபன் ஸ்பீல்பெர்கின் “ஜுராஸிக் பார்க்’ வரிசையில் சர்வதேச அளவில் பேசப்படப் போகிற “மேக்னம் ஓபஸ்’ என்று எதிர்பார்த்துப் போய் அமர்ந்தால், பா. ரஞ்சித் இதற்கு முன் இயக்கிய “மெட்ராஸ்’ திரைப்படம் அளவுக்குக்கூட ரசிகர்களைத் திருப்திப்படுத்தாததாக அமைந்திருக்கிறது. இந்தத் திரைக்கதையில் நடிப்பதற்கு ரஜினிகாந்த் எதற்கு?” என்று ஆரம்பப் பத்தியில் கேட்கிறார் கட்டுரையை எழுதியவர். இந்த பத்தியில் கொடுத்திருக்கும் ‘பில்டப்’புகள் எல்லாம் தினமணி போன்ற ஊடகங்கள் கொடுத்தவைதான். ரஜினியோ, பா. ரஞ்சித்தோ அப்படி சொல்லவில்லை.  பத்தியில் முடிவில் பா. ரஞ்சித் எல்லாம், ரஜினி படத்தை இயக்கலாமா? என்கிற தொனி வருகிறது.

kaba

 

கபாலி  வெளியான நாளில் கிஷோர் கே. சாமி என்பவர் முகநூலில் ‘எவன் எவன் எந்த வேலையைச் செய்யணுமோ அதைச் செய்யணும்’ என எழுதியிருந்தார். இப்படியான மனுதர்மம் போதிக்கும் கருத்துடன் தினமணியின் கருத்தும் ஒத்துப்போவது இயல்பாக இருக்கிறது.

மேலும் இப்படி தொடர்கிறது அந்த ‘விமர்சனம்’…

“ரஜினிகாந்தின் தோற்றமும் சரி, ரசிகர்களைச் கவர்ந்திருக்கும் அவரது இயல்பான சுறுசுறுப்பும் சரி இப்போது “மிஸ்ஸிங்’. இதை அவரும், இயக்குநரும் உணர்ந்து செயல்பட்டிருந்தால் இப்படி ஒரு திரைப்படத்தை எடுக்கத் துணிந்திருக்க மாட்டார்கள்.

அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகிறார் என்பதால், பாராட்டுப் பெற்ற பா. ரஞ்சித் என்கிற இயக்குநரை, “சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தை வைத்து அவரது இமேஜும் கெடாமல், இவரது “லோ பட்ஜெட்’ அடித்தட்டு சிந்தனையும் மாறாமல் படமெடுக்கச் சொன்னதன் விளைவு, ரஜினி ரசிகர்களையும் திருப்பிப்படுத்தாத, நல்ல சினிமா பார்த்த திருப்தியும் ஏற்படாத ஒரு அரைவேக்காட்டு, கலவையாகக் “கபாலி’ உருவாகி இருக்கிறது”.

‘லோ பட்ஜெட் அடித்தட்டு சிந்தனை’ என்பதன் பொருள் என்ன? சேரி மக்களின் அடித்தட்டு வாழ்க்கையை சொல்வதை சுட்டுவதற்காகவா? ‘அடித்தட்டு சிந்தனை’ வாவ் என்ன சாதி வெறி!

பா. ரஞ்சித், தன்னை  முற்போக்குவாதி என்று சொல்லிக்கொள்வதில் தினமணிக்கு என்ன பிரச்சினை?  இப்படி சினிமா எடுத்தால் முற்போக்குவாதி என்ற பட்டத்தை யார் தருகிறார்கள்? 

“தமிழ் சினிமாவில் ஆண்டாண்டு காலமாக அரைத்துக் கொண்டிருக்கும் அரதப் பழசான நல்ல தாதாவுக்கும் கெட்ட தாதாவுக்குமான மோதல்தான் கதை. அந்த தாதாக்களின் கதையை அப்படியே படமாக்கினால் “முற்போக்குவாதி’ பட்டம் கிடைக்காது என்பதனால், அதில் தமிழ் உணர்வையும், ஜாதிக் கொடுமையையும் கலந்து படமாக்க முற்பட்டிருக்கிறார் பா.ரஞ்சித்”. ஆக, ஜாதிக் கொடுமையைப் பேசியது மட்டும் தான் தினமணியின் மனுதர்ம சிந்தனைக்குப் பிடிக்கவில்லை எனத் தெரிகிறது.

“மலைகளாகக் கிடந்த மலேசியாவை சீராக்கி பொன் விளையும் பூமியாக மாற்றிய தமிழர்களுக்குத் தலைமை தாங்குகிறார் கபாலியாக வரும் ரஜினி. அந்த முன்னேற்றம் பிடிக்காத மலாய் முதலாளிகள் ரஜினியையும், அவரது குடும்பத்தையும் சிதறடிக்கிறார்கள். பின் அந்த முகாமுக்குள் நடக்கும் தீப்பொறி உரசலில் வெடித்துக் கிளம்பி, “தமிழன் முன்னேறினா பிடிக்காதா..! ஒரு தமிழன் ஆளக் கூடாதா? நான் ஆளப் பிறந்தவன்டா…’ என ரஜினி தரும் பதிலடிதான் கபாலியின் கதைக் களம்.

தமிழனுக்கு சம்பள உயர்வு பெற்றுத்தரும் கபாலி, அங்கிருக்கும் தமிழர் தலைவரான நாசருக்குப் பின் தலைமை இடத்துக்கு வருகிறார். நிறைமாத கர்ப்பிணியாய் தன் மனைவி ராதிகா ஆப்தேவை பறிகொடுத்துவிட்டு சூழ்ச்சி வலைகளில் சிக்கி சிறைக்குப் போகும் அவர், 20 வருடங்களுக்குப் பின் திரும்புகிறார். அதன் பின் நடக்கும் அரசியலும், அதைச் சுற்றி நடக்கும் ஆட்டங்களும்தான் கதை. சில உணர்வுப்பூர்வமான பக்கங்கள் இருப்பது மட்டுமே பொறுமை இழக்காமல் நம்மை உட்கார வைக்கின்றன” படத்தின் முழுக்கதையும் சொல்லிவிட்டு ஏதோ, ஒரு சில காட்சிகள்தான் ரசிக்க வைப்பதாக சொல்கிறது தினமணி. படத்தில் உள்ள குறைகளையும்கூட உருப்படியாக சொல்லத் தெரியவில்லை.

“சிறைக்குள்ளிருந்து 20 வருடங்கள் கழித்து வெளியே வரும் கபாலியைப் பார்த்ததும் நிமிர்ந்து அமர்ந்தது தவறு. விறுவிறுப்பாக அடுத்த கட்டம் ஆரம்பிக்கப் போகிறது என்று எதிர்பார்க்கும் ஒவ்வொரு கட்டத்திலும், பொங்கிவரும் பாலில் தண்ணீரை ஊற்றுவதுபோல திடீர் தொய்வை வலுக்கட்டாயமாக ஏற்படுத்தும் திரைக்கதை அமைப்பு. தாதாக்களின் கிராஸ் ஃபயரில் பலியாகும் அப்பாவி பொதுமக்களின் கதிதான் ரசிகர்களுக்கும்!

கோட் சூட், கூலிங் கிளாஸ், ஒரு கத்தி, பல துப்பாக்கிகளைக்கொண்டு அதைச் சாதிப்பதுதான் ரஜினி ஸ்பெஷல். அது மட்டுமே, ரஜினி இல்லையே. ஆக்ஷனும் இருந்தால்தானே அது ரஜினி. ரஜினியின் பேச்சில் வேகம் இல்லை. நடையில் சுறுசுறுப்பில்லை. நடிப்பில் அவருக்கே உரித்தான தனித்தன்மை இல்லை. அவரை ரொம்பவும் சிரமப்படுத்தி இருக்கிறார்கள்.

ஒவ்வொரு இடத்தையும் “மகிழ்ச்சி’ என்று சொல்லி முடித்து வைக்கும் ரஜினியின் உச்சரிப்பில், அதற்குப் பின் சிலபல இடங்களில் “மகிழ்ச்சி’ என்பது மட்டுமேதான் ஒலிக்கிறது. அப்படிப் பேசாத சமயம், ஒன்று சுடுகிறார்… அல்லது நீண்ட வசனங்களைப் பேசுகிறார்.

மாறிப்போன மலேசியாவை பிரமிப்போடு பார்க்கிற காட்சி. அந்த வெண்தாடியும், அந்த தாடிக்குள்ளிருந்து அவ்வப்போது கசிந்து வரும், அந்த அலட்சிய சிரிப்பும், பழைய “பாட்சா’ ரஜினியுடன் ஒப்பிட்டுப் பார்த்து வேதனைப்பட வைக்கிறது.

மலேசியாதான் கதைக்களம். ஆனால், மலேசியாவை ஒழுங்காகக் காட்டியிருக்கிறார்களா என்றால் இல்லை. கோலாலம்பூரில் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்தை, சென்னை என்றால் அந்தக் காலத்தில் எல்.ஐ.சி. கட்டடத்தையோ, சென்ட்ரல் ரயில் நிலையத்தையோ காட்டுவதுபோலக் காட்டுகிறார்கள். அவ்வளவுதான்.

மலேசியா, சென்னை, தாய்லாந்து என்று அடுத்தடுத்து கதையை நகர்த்திச் செல்லும், “செயின் ரியாக்ஷன்’ எத்தனை சுவாரஸ்யமானதாக அமைந்திருக்க வேண்டும்? சர்வதேச நிழல் உலக தாதாக்கள் ஒவ்வொரு சவாலையும் எவ்வளவு மதியூகத்துடன் கடக்க வேண்டியிருக்கும்? ஆனால், ரஜினி கையாளுகிற ஒவ்வொரு சவாலும்… அடப் போங்க சார்… சலிப்பூட்டுகிறது…

வழக்கமாக ரஜினிக்கு இணையான ஆளுமைகள் அவரின் படத்தில் இருப்பார்கள். அப்படி இந்தப் படத்தில் யாரும் இல்லாதது பெரும் குறை. தன்ஷிகா, கிஷோர், ஜான் விஜய், கலையரசன், தினேஷ், ரித்விகா, மைம் கோபி என காட்சிகள் எங்கும் தெரிந்த முகங்கள். இருந்தும், செயற்கைத்தனம்.

படத்தில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் யாருமே கதையுடன் பொருந்திப்போகவில்லை. “மெட்ராஸ்’ படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின் தவிர எல்லோரும் இதில் நடித்துள்ளனர். தனது முந்தைய படத்தில் நடித்தவர்களை இந்தப் படத்திலும் பயன்படுத்த நினைப்பதைப் பாராட்டலாம். அதற்காக பொருத்தமில்லாத கதாபாத்திரங்களில் அவர்களை நடிக்க வைத்தது சரியா…?

ராதிகா ஆப்தே வரும் ஒரு சில இடங்கள் மனதை ஆக்கிரமிக்கிறது. ரஜினியும், ராதிகாவும் சந்தித்துக் கொள்கிற அந்த காட்சி உருக்கம். “உன் கருப்பு கலரை அப்படியே எடுத்து பூசிக்கணும்’ என்று பேசுகிறபோது ராதிகாவின் கண்கள் உதிர்க்கிற வெட்கம் பேரழகு.

பின்னணி இசையில், “நெருப்புடா தீம்’ மட்டுமே ஒலிக்கிறது. படம் முழுக்கவே சந்தோஷ் நாராயணனை நினைக்க வைப்பது அது மட்டுமேதான். “பாபா’ தோல்விப்படமாக இருந்திருக்கலாம். ஆனால், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் கவிஞர் வாலியும், கவிஞர் வைரமுத்துவும் எழுதிய அத்தனை பாடல்களும் ரசிகர்களைக் கட்டிப் போட்டன. பாடல் காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தன. இதில் அப்படிச் சொல்ல ஒரு பாட்டுக்கூடத் தேறாது”.

இந்த இடத்தில் ரஜினி படங்களில் எத்தனையோ படங்கள் இருக்க, ‘பாபா’ என்ற ஆகச் சிறந்த மொக்கை இந்துத்துவ ஆன்மீக படத்தை, இந்து முன்னணி ராமகோபாலன் பாராட்டிய படத்தை ‘கபாலி’யுடன் ஒப்பிடுவதையும் பாருங்கள். அடுத்து இப்படிப் போகிறது ‘விமர்சனம்’

“வசனங்களில் இயல்பு இருந்தாலும், தனித்துவம் இல்லை. சம்பந்தமே இல்லாமல் திடீரென்று “நான் ஆண்ட பரம்பரை கிடையாதுடா. ஆனால், ஆளப்பிறந்தவன்டா’ என்று வசனம் பேசுகிறார் கபாலியாக வரும் ரஜினி. கோட் சூட் போட்டா உங்களுக்கு ஏன் எரிகிறது என்று கேட்பது சரி, அதற்காக மகாத்மா காந்தியை ஏன் ஏளனப்படுத்திக் கொச்சைப்படுத்த வேண்டும் என்று புரியவில்லை.” இது தான் தினமணி போன்ற மனுதர்மத்தைத் தூக்கிப் பிடிக்கும் பத்திரிகைகளை மிகவும் நோகடித்திருக்கிறது; பயம் கொள்ள வைத்திருக்கிறது. பா. ரஞ்சித் வைத்த விமர்சனம், அம்பேத்கர் வைத்த விமர்சனம். அதை வெகுஜென தளத்தில் ரஞ்சித் நினைவுபடுத்திருக்கிறார்.  காந்தியை கொச்சைப் படுத்துவதாக தினமணி ஏன் சீறுகிறது. அடுத்ததுதான் வன்மம்..

“ஒரு கலைஞன் எந்த வயதிலும், நிலையிலும் நடிக்க விரும்புவதிலும், நடிப்பதிலும் தவறில்லை. ஆனால், அதற்கு அவர் தேர்ந்தெடுத்திருக்க வேண்டிய இயக்குநர் பா. ரஞ்சித் அல்ல. அவரை நன்றாகத் தெரிந்திருக்கும், அவரை வைத்துப் பல நல்ல படங்களை இயக்கி இருக்கும் எஸ்.பி. முத்துராமன், சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ். ரவிக்குமார், மகேந்திரன் போன்றவர்கள்.

இயக்குநர் பா. ரஞ்சித்தின் களம் வேறு. பார்வை வேறு. எந்தவித இமேஜ் சுமையும் இல்லாத நடிக – நடிகையர்தான் அவரது படங்களுக்குப் பொருத்தமானவர்கள். குறைந்த பட்ஜெட் படங்கள்தான் அவரது களம். அவரை ரஜினியைக் கதாநாயகனாக வைத்துப் படம் இயக்கச் சொன்னது, குருவி தலையில் பனங்காயை வைத்த கதையாகி விட்டிருக்கிறது.

எல்லாம் போகட்டும். எந்த ஒரு முடிவும் இல்லாத ஒரு உப்புச்சப்பே இல்லாத கிளைமாக்சுடனா ஒரு ரஜினிகாந்தின் படத்தை முடிப்பது? இது ரஜினிகாந்த் படமல்ல, பா. ரஞ்சித் படம் என்றால், இத்தனை பெரிய பட்ஜெட்டிலா இந்தப் படத்தை எடுப்பது?” எவ்வளவு வன்மம். தலித் மீதான அன்றாட தாக்குதலுக்கும் சினிமா இயக்குநராக உள்ள ஒரு தலித் மீதான தாக்குதலுக்கும் வேறுபாடு இல்லை. பா. ரஞ்சித், ரஜினியை இயக்கத் தகுதியானவர் இல்லை என சொல்ல நீங்கள் யார்? கே. எஸ். ரவிக்குமார் இயக்கி படுதோல்வி அடைந்த ‘லிங்கா’ படத்துக்கும் இவர்கள் இப்படித்தான் விமர்சனம் எழுதினார்களா? பாபா, லிங்கா படுதோல்விக்குப் பிறகு சுரேஷ் கிருஷ்ணா, கே. எஸ். ரவிக்குமார் போன்ற மத, சாதியை பெருமைப்படுத்தும் இயக்குநர்கள்தான் ரஜினியை இயக்க சரியான நபர்கள் என பரிந்துரைப்பது அப்பட்டமான பார்ப்பனத்தனம்.

“வெறும் கற்சிலையைப் பார்க்கக் கோயில்களில் சிறப்பு தரிசன டிக்கெட் வசூலிக்கும்போது, மனிதக் கடவுளான ரஜினி படத்திற்கு ரூ.1,000 வசூலிப்பதில் தவறில்லை என்று நியாயப்படுத்துகிறீர்களாமே, ரஞ்சித்? சபாஷ்! என்னே உங்களது முற்போக்கு சிந்தனை! ரஜினியை மனிதக் கடவுளாகக் கருதும் நீங்கள், அவரை அவரது பாணியிலேயே நடிக்க வைத்துப் படம் இயக்கி இருக்கலாமே. பிறகு எதற்காக “ரஞ்சித் படம்’ என்கிற போலித்தனம்?

மொத்தத்தில் வழக்கமான ரஜினிகாந்த படமாகவும் இல்லாமல், பா. ரஞ்சித் படமாகவும் இல்லாமல், தொய்வில்லாத விறுவிறுப்பான திரைக்கதையும் அமைக்கப்படாமல், துண்டு துண்டான காட்சிகளை வெட்டி ஒட்டியதுபோல உருவாக்கப்பட்டிருக்கிறது “கபாலி’ திரைப்படம்.

அட்டகாசமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மலேசிய நடிகர் வின்ஸ்டன் சாவோ அல்ல இந்தப் படத்தின் வில்லன். ரஜினியின் மேஜிக் துளிக்கூட இல்லாத கதைதான் கபாலிக்கு வில்லன்.

நமது மனத்திரையில் ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டாராகவே தொடரவிடுங்கள். அவரை இனியும் நடிக்கச் சொல்லி சிரமப்படுத்தி, அவருக்கு இருக்கும் இமேஜையும், ரசிகர்களின் பேரன்பையும் வேரறுத்து விடாதீர்கள். “கபாலி’ ஒரு கெட்ட கனவாக இருந்துவிட்டுப் போகட்டும்!”  வார்த்தைக்கு வார்த்தை ரஞ்சித்தை சுட்டிக்காட்டுவதன் மூலம் ரஞ்சித் மீதான காழ்ப்பு வெளிப்படையாகவே தெரிகிறது. கபாலியை விமர்சிக்க நிறைய காரணங்கள் கிடைக்கலாம். தலித் அடையாள அரசியலை மறைமுகப் பேசினார் என்பதற்காகவே அதை கெட்ட கனவு என்கிறது தினமணி. உண்மையில் உங்களுக்கு இது கெட்ட கனவுதான்.

தினமணியில் விமர்சனம் குறித்து வந்துள்ள சில சமூக ஊடக கண்டனங்களை கீழே தந்திருக்கிறோம்:

பிரேம் பிரேம்

வீரன் சுந்தரலிங்கம்-வீழ்ந்தது சாதிப் பெயர்!

1996-ஆம் ஆண்டுக்கு முன் தமிழ் நாட்டின் மாவட்டங்களுக்கு படையாட்சியார், பசும்பொன் தேவர், சம்புவரையர்,கொம்புவரையர் என்று சாதிப் பெயர்களின் சங்கீத அணிவகுப்பு. போக்குவரத்துக் கழகங்களுக்கும் பட்டுகோட்டை அழகிரி, தீரன் சின்னமலை, மருது பாண்டியர், வீரன் அழகு முத்துகோன், கட்டபொம்மன், நேசமணி என சாதிகள் மகிழும் பெயர்கள். இவை அனைத்தும் சாதிக் குழுக்களின் சம்மேளனங்களாகக் காட்சி தந்தன. இது சரியில்லையே என்று தலித் இயக்கத் தலைவர்கள் (அப்போது உள்ளூர்இயக்கங்கள்) சொல்லி வந்தனர். ஆனால் அதனை நீக்க முடியவில்லை.
வந்தான் வீரன் சுந்தரலிங்கம், வாளொடு எழுந்தனர் மறத்தமிழர், இனி சாதிப் பெயர்களை ஏற்க முடியாது என்று வீறு கொண்டு எழுந்தது வேங்கைப் படை. தமிழகம் எங்கும் சாதி அடையாளங்களை அழிக்கும் போராட்டம், புரட்சி. சாதியற்ற தமிழகம், நீதி பெற்ற தமிழினம் என்ற கோஷம் வானைப் பிளந்தது.

அனைத்து போக்கு வரத்துக் கழகங்களும் பெயர் மாற்றப்பட்டன. மாவட்டங்கள் சாதி இழிவு அற்ற சமத்துவபுரங்களாக மாறின. பள்ளர், பறையர், அருந்ததியர்களின் சாதிவெறி, தீண்டாமை ஆணவம் முடிவுக்கு வந்தது. ஆணியே புடுங்க வேண்டாம் என அரசு முடிவு செய்தது. (வீரன் சுந்தரலிங்கம் வென்றான்).

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் பணியை இன்று நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது.
இயக்குநர். பா.ரஞ்சித் தன் கபாலி வழியாக ஒரு மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார். வன்முறையை இனி ஏற்க முடியாது, திரைக்கதையில் முழுமையான எதார்த்தம் வேண்டும், கனவுகளை விற்றுக் காசாக்க நினைக்கும் கயவர்களை திரைநேசம் கொண்ட தமிழர்கள் இனி ஏற்க முடியாது என்று பெரும் எழுச்சி படம் வந்த இரண்டாம் நாளே தமிழகம் எங்கும் பொங்கிப்பாய்கிறது.

இனி படம் என்றால் மெட்ராஸ் போல இருக்க வேண்டும் என்று தலையங்கங்கள், தகவல் பலகைகள் திரைப்பட அறிவை ஊட்டி வளர்க்கின்றன.

உலகத் திரைப்படம் அறிஞர்கள், உள்ளூர் திரைப்பட ஆய்வாளர்கள், முன்னோடிகள், பினனோடிகள் யாரும் செய்ய முடியாத செயற்கரிய செயலை ரஞ்சித் தன் கபாலி வழி செய்து விட்டார்.

இனி இதனை ஒவ்வொரு தமிழனும் தன் வாழ்க்கைப் பணியாக முன்னெடுத்துச் செல்வான். இதுதான் உனது சாதனை.

அதனால் கபாலியை ‘ஒரு கெட்ட கனவாக’ (நன்றி தினமணி) மறந்து விட்டு மீண்டும் ஒரு மெட்ராஸ் வகை படத்திற்கான வேலையைத் தொடங்கு ரஞ்சித்.

உனது உண்மையான திரைப்படத்தை இனி யாருக்காகவும் ஒத்தி வைக்காதே. (இந்தவரி நேரடிப்பொருளில்)

மு கந்தசாமி

எந்தவொரு திரைப்படத்தையும் விமர்சிப்பதற்கு எல்லா பத்திரிகைகளுக்கு உரிமை உண்டு. அந்த வகையில் கபாலி படம் குறித்து தினமணி விமர்சனம் செய்துள்ளது என்று வைத்துக்கொள்வோம். ஆனால், பா.ரஞ்சித்துக்கு ரஜினியை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கக்கூடாது என்று தினமணி ஏன் சொல்கிறது? அதன் நோக்கம் என்ன? பா.ரஞ்சித் களம் வேறு, பார்வை வேறு என்று தினமணி சொல்கிறது. அதன் உள்அர்த்தம் என்ன?

ரஞ்சித்தை வைத்து ரஜினி படத்தை எடுக்கச் சொன்னது குருவி தலையில் பணங்காயை வைத்தது போல என்றெல்லாம் தினமணி எரிச்சலைக் கொட்டுவது ஏன்? ரஜினியை வைத்து பல நல்ல படங்களை இயக்கி இருக்கும் எஸ்.பி.முத்துராமன், சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமார், மகேந்திரன் போன்றவர்களே ரஜினி படங்களை இயக்க வேண்டும் என்றும், ரஜினியை இயக்க வேண்டிய இயக்குனர் ரஞ்சித் அல்ல என்றும் தினமணி சொல்கிறது. படுதோல்வி அடைந்த பாபா படத்தை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா என்பது தினமணிக்குத் தெரியுமா தெரியாதா?
கபாலி படத்தை ஒரு கெட்ட கனவு என்று முடித்திருக்கிறது தினமணி. எல்லாவற்றுக்கும் காரணம் சேரியில் இருந்து வந்த ஒருவன், சூப்பர் ஸ்டாரை இயக்குவதா என்ற வயிற்றெரிச்சல் தானே தவிர வேறு ஒன்றுமில்லை.

Rabeek Raja

தினமணியில் “கபாலி” விமரிசனம் வந்திருக்கிறது. விமரிசனமா இது? ரஞ்சித் மீதான வக்கிரம் ; வன்மம். விகடனின் விமரிசனமும் வரட்டும்.

Senthil Kumar

“ஹிந்துத்துவ” ரஜினி அசல் “தலித்” தமிழ் படைப்பாளியான பா.ரஞ்சித்தின் படைப்பாற்றலுக்கு உடன்பட்டு நடித்ததை “தினமணி” வைத்தியநாத ஐயரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை போல… “தினமணி” வரலாற்றில் இல்லாத வகையில் ஒரு திரைப்படத்துக்கு எதிராக வன்மம் கக்கியிருக்கிறார்கள்…
( இதற்கு வணிக காரணங்களைச் சொன்னாலும், முன்பு இது போல நடந்ததே இல்லையா?.. அப்போது உங்கள் அறநெறி என்ன மணியாட்ட போயிருந்ததா?..)..

இதற்கு எதிர்வினை நான் மட்டுமே பார்த்த “கபாலி”யை என் குடும்பம், என் அக்கா குடும்பம், திரையரங்குக்கு சென்றே வெகு வருடங்களான மூதாதையர்களையும் அழைத்து செல்ல முடிவெடுத்திருக்கிறேன்…

மகிழ்நன் பா.ம

ரஜினிய சூப்பர் ஸ்டாரா இருக்க விடணுமாம்…ஒரு பாட்டு கூட நல்லா இல்லையாம்….கபாலி கெட்ட கனவுன்னு தினமணி காரன் எழுதிருக்கான்..

தூக்கம் தொலைஞ்சிடுச்சுனு சொல்ல வேண்டியதுதானடே…..அரிப்பின் உச்சம் இல்லையா இது

Kavin Malar

கபாலி திரைப்படத்தை ஒட்டி எழுந்துள்ள ஆரோக்கியமான விவாதங்கள் மிகவும் அவசியம். ஆனால், திரைப்படத்தைப் பிடித்தவர்களிடம் ‘உனக்கு எப்படிப் பிடிச்சுது?’ என்று சண்டை பிடிப்பதும் பிடிக்காதவர்களை பிடித்தே ஆகவேண்டும் என்று சொல்வதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. அவரவர் கருத்து அவரவருக்கு. எத்திரைப்படமும் the perfect film ஆகி அனைவரையும் திருப்திப்படுத்த முடியாது. ஆனால் இங்கு ஒவ்வொருவரின் ரசனைக்கும் பின் அவரவரின் வாழ்சூழல், வளர்ப்பு, சாதி, வர்க்கம் என அனைத்தும் பங்கு வகிக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. கர்நாடக சங்கீதம் எப்படி வறுமையில் வாழும் ஒடுக்கப்பட்டவருக்கு அந்நியமாய் இருக்கிறதென நாமறிவோம். இந்தப் புரிதல் நமக்குள் இருந்தாலும், கபாலியை குறை சொல்லும் அனைவரையுமே ஆதிக்க சாதி வெறியர்கள் என விமர்சிப்பதில் சிக்கல் இருக்கிறது. ஒரு வாட்ஸப் செய்தி படித்தேன்.

“கபாலியை விமர்சிப்போர் எல்லோரும் சாதிவெறியர் அல்ல. ஆனால் சாதிவெறியர்கள் எல்லோரும் விமர்சிக்கின்றனர்”

இது உண்மை. இந்த உண்மையை அனைவருமே புரிந்துகொள்வது நலம் பயக்குமென நினைக்கிறேன்.

உண்மையில் சினிமா மீது அக்கறைகொண்ட பலர் இருக்கின்றனர். திரைக்கதை, உள்ளடக்கம், தொழில்நுட்பம் சார்ந்து சிலர் கபாலி மீது பொருட்படுத்தத் தகுந்த விமர்சனங்கள் வைத்தால் அதைப் பரிசீலிப்பதில் ரஞ்சித்துக்கு எச்சிக்கலும் இருக்காது. ஆனால் பொருட்படுத்தத் தகுந்த நபர்களின் விமர்சனங்களையும் சாதியச் சிமிழுக்குள் அடைத்துவிடவேண்டாமென நண்பர்களைக் கேட்டுக்கொள்ளத் தோன்றுகிறது.

இது ஒருபுறம் இருந்தாலும், இப்படி சாதியச் சிமிழுக்குள் அடைக்க நேரும்படியான பதிவுகளையே சமூக ஊடகங்களிலும், சில ஊடகங்களிலும் காண முடிகிறது. இச்சமயத்தில், சாதிய வன்மத்துக்கும் நியாயமான விமர்சனத்துக்கும் ஒரு சிறிய கோடுதான் இடைவெளியாக இருக்கிறது. ஏனெனில் நம் மக்களின் மொழி அப்படியாக மாறி இருக்கிறது. படம் சரியில்லை என்று கருதினால் அதைச்சொல்லும் விதமிருக்கிறது. நம் சொல்முறை எல்லாம் கைத்தட்டலுக்காகப் பேசும் பட்டிமன்றப் பேச்சாளரின் அபத்தங்கள் போல் மாறிவிட்டிருக்கும் நிலையில் ‘பிடிக்கவில்லை’ என்பதை எப்படிச் சொன்னால் அதிக லைக் வாங்கலாம் என்று யோசித்து அதை வன்மமாகவே வெளிப்படுத்தும் தொனியைத் தேர்ந்தெடுப்போர் சாதியச் சிமிழுக்குள் அடைக்கப்படும் ஆபத்தை சந்திக்க நேர்கிறது. ஏனெனில் ஒடுக்கப்பட்டோர் இவ்வன்மமான மொழியை ஆதிக்கசாதியினரிடமிருந்து கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். எவ்வித வன்மமும், வசையும் சாதிவெறியாகத்தான் அவர்களுக்குத் தெரியும். அதன் பின்னாலுள்ள நியாயத்தை விமர்சிப்போரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இதையெல்லாம் சொன்னாலும் மிக உன்னிப்பாக ஒரு விஷயத்தை கவனிக்கிறேன்.
பியுஷ் மனுஷ் விஷயத்தில் கிருபாவின் சாதியையும் நிறத்தையும் சொல்லி இழிவுபடுத்துவதைப் பார்க்கிறேன். கிருபா போல் செயற்பாட்டாளராய் இருந்தாலும், ரஞ்சித் போன்ற படைப்பாளியாய் இருந்தாலும் தலித்துகள்மீது மட்டும் இவ்வளவு வன்மம் ஏன்?

இன்றைய தினமணியின் கபாலி விமர்சனம் போன்றதொரு கேவலத்தை சாதிய வன்மம் என்றுதான் சொல்லவேண்டும். ரஜினிகாந்தை வைத்து இயக்க ரஞ்சித்துக்குத் தகுதியில்லை என்கிறது. வரிக்கு வரி வன்மமும் காழ்ப்புணர்ச்சியும் வெளிப்படும் அவ்விமர்சனத்துக்கு சற்றும் குறையாமல் அதே போல, அதைவிடவும் மேலாக விமர்சனம் என்கிற பெயரில் இங்கு கரித்துக்கொட்டுவதையும் காண்கிறேன்.
“ஊருக்கு வெளியே இருக்கும் நூறு பேரை திருப்திப்படுத்த படம் எடுத்தால் இப்படித்தான்” என ஒரு முகநூல் விமர்சனம் பார்த்தேன். இதற்கும் தினமணி கூறும் தகுதியின்மைக்கும் என்ன வேறுபாடு உள்ளது? இத்தகைய சாதிய வன்மம் தகிக்கும் விமர்சனங்களை அறவே வெறுக்கிறேன். எது விமர்சனம் எது வன்மம் என்பதைக் கண்டறிய ரஞ்சித்தால் முடியும். படக்குழுவினராலும் முடியும்.
பிரபாகரன், முத்தையா போன்ற சுந்தரபாண்டியன்களுக்கும், கொம்பன்களும் நிறைந்த திரை உலகமிது. இந்நிலையில், தமிழின் உச்ச நடிகர் ஒருவரை ரஞ்சித் இயக்குகிறார் என்பதே கொண்டாட்டத்துக்குரிய விஷயம்தான் என்னைப் பொறுத்தவரை. யாரும் ரஜினியை இங்கே தலித் காவலராகப் பார்க்கவில்லை. அப்படிப் பார்க்கிறார்கள் தலித்துகள் என்று விமர்சித்தால் நீங்கள் தலித்துகளை குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என பொருள்.
தினமணி போன்ற காழ்ப்புணர்வுடன் கூடிய சாதிய வன்மத்துக்காக குரல்கொடுக்க, ரஞ்சித்துடன்தான் சமூக அக்கறை கொண்டோர் நிற்கவேண்டும்.
இதன் பொருள் கபாலியை ஆதரித்தாக வேண்டும் என புரிந்துகொள்ளப்படாதென நம்புகிறேன்.
# i support Director Ranjit

Ramamurthi GK

மதுரைவீரனுக்கு படையல் போடற கபாலிடா

அமீரை என்ற இசுலாமிய கதாபத்திரத்தை கடைசிவரை கம்பீரமாக காட்டுகின்ற கபாலிடா

Protagonist வாரிசாக மகனை காட்டாது
மகளை காட்டும் கபாலிடா

பென்ஹர்
காட்பாதர்
டைட்டானிக்
என்றெல்லாம் எழுதி
வயிற்றெரிச்சல
வார்த்தையில கொட்டினா
அது விமர்சனமா தினமணி?

காந்தியின் கோவணத்தையும்
அம்பேத்கரின் கோட்டையும் ஒப்பிட்டு எழுதிய வசனத்த மாத்த சொல்லமா அப்படியே ஸ்டைலாக Deliver பண்ணி தினமணிகளுக்கு Abortion ஏற்படுத்திய

ரஜினியின் கபாலிடா
ரஞ்சித்தின் கபாலிடா

ப. செல்வகுமார்

கபாலி மோசடிக் குறித்து தலையங்கம் தீட்டியுள்ளதினமணி அப்படியே மல்லையா மோசடிக் குறித்தும் , ஜெயேந்திரர் கோர்ட் சீட்டிங்க் குறித்தும் எழுதி தனது ஆண்மையை நிரூபிக்க வேண்டும்.

# தலைக்கனம்.

John Prabu

இலைமறைகாயா சாதி வெறிய வெளிக்காட்டிக்கிட்டு இருந்த தினமணியோட சாதி வெறிய ‘கபாலி’ மொத்தமா தட்டி எழுப்பிடுச்சா? பொலம்பி தீத்துருக்கானே இந்த தினமணிகாரன்.

இதுல கொடும என்னன்னா, ரஜினியோட ‘பாபா’ படத்துல பாட்டு எல்லாம் ரசிகர்கள கட்டி போட்டுச்சாம். கபாலில அந்த அளவு எதுவும் இல்லையாம். அடேய்தினமணி. புளுகுறதுக்கு ஒரு அளவு இல்லையா?

Rajanna Venkatraman

இன்றைய தினமணியின் கடைசி பக்கத்தில் வந்திருக்கும் கபாலி திரைப்படம் குறித்த கட்டுரை யார் எழுதியது என்று தெரியவில்லை. இது எழுதியவரின் கருத்தா இல்லை ஒட்டுமொத்த தினமணி குழுமத்தின் கருத்தா என்று அறிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன்.

பைபில், காட்பாதர் , டைடானிக் எதிர்பார்த்து கபாலி பார்க்க போனானாம்.. உனக்கு ரஜினி பிரச்சனையா இல்லை ரஞ்சித்தின் வளர்ச்சி பிரச்சனையா?? உன் நிறம் ஜெயா கைதை பற்றி நாலாம் பக்கம் பெட்டி செய்தி போட்டபோதே வெளுத்து விட்டது !! ‪#‎தினமணி‬‪#‎கபாலி‬ ‪#‎Kabali‬

வைகை சுரேஷ்

கபாலி-ஒரு கெட்ட கனவு என்ற தினமணி விமர்சனம். விமர்சனம் என்ற பெயரில் இவ்வளவு வன்மமாதினமணி?
தினமணியின் விமர்சனத்தை பார்க்கையில் ரஞ்சித் ரஜினியை இயக்கியதே பாவச்செயல் என்பது போல்உள்ளது.
ரஜினி அமிதாப் போல் நடிக்கனும்னு சொல்வீங்க… ; ஆனால் அதற்கான ஒரு அடி முன் வைத்தாலும் ஆதரிக்க மாட்டீங்க.
அத…விட… ரஜினி எஸ்.பி.முத்துராமன் போன்ற இயக்குநரை கூப்பிட்டு அவர்களின் இயக்கத்தில் நடிக்க வேண்டுமாம். பேசாமல் தினமணியே ரஜினியை வைத்து படம் இயக்கலாம். கடந்த 25 வருடத்தில் முத்துராமனின் பாண்டியன் படத்தையடுத்து ரஜினியை இயக்கியவர்கள்
சுரேஸ்கிருஷ்ணா
வாசு
கே.எஸ் ரவிக்குமார்
சங்கர். இடையில் செளந்தர்யாவின் கோச்சடையன் தவிர்த்து வெளியில் ஒரு புதுமுக இயக்குநருடன் இனைந்த்திருப்பது காபலியில். மாற்றத்தை ரஜினி என்ற நடிகரே விரும்பினாலும்…. ; விரும்பாத தினமணியின் ஆதங்கத்திற்கு ஒரே தீர்வு…. ரஜினி நடித்த எத்தனையோ பட டிவிடி பாண்டிபஜாரில் கிடைக்கும் . கவலை பட வேண்டம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.