“கழுத்தை அறுக்கறதுக்கு ரொம்ப நேரம் ஆகாது” பெண் பதிப்பாளரை மிரட்டிய ஓலா கார் ஓட்டுநர்

தனியார் கேப் நிறுவனங்கள் குறித்து நாடு முழுக்கவும் அவ்வவ்போது புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. குறிப்பாக ஓட்டுநர்கள், பெண் பயணிகளை நடத்தும் விதம், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, சீண்டுவது, மிரட்டுவது என தொடர்ந்து ஊடகங்களில் செய்திகள் வந்தபடி இருக்கின்றன. இதற்கொரு உதாரணமாகியிருக்கிறது, பிரக்ஞை என்ற பெயரில் பதிப்பகம் நடத்திவரும் விலாசினி ரமணிக்கு நடந்த சம்பவம். இந்த சம்பவம் குறித்தி விலாசினி முகநூலில் எழுதியுள்ள பதிவு:

“இரண்டு தினங்கள் முன்பு திருவான்மியூரிலிருந்து வளசரவாக்கம் வருவதற்கு (தனியாக) ஓலா கேப் கார்த்திக் பதிவுசெய்து கொடுத்தான். நல்ல வேளையாக வீட்டிலிருந்து ஏறாமல், பக்கத்தில் ஒரு கடையிலிருந்து ஏறினேன். கார் எடுத்த எடுப்பிலேயே படு வேகம். உடல் நலம் சரியில்லையென்று மெதுவாகப் போகச் சொன்னேன். ட்ரைவர் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. மத்ய கைலாஷ் கடந்து கிண்டி மேம்பாலத்தில் கார் மேலேறியதும், கீழிறங்கியதும் முன்பைவிட மோசமான வேகத்தில்தான். மீண்டும் ட்ரைவரிடம் நிதானமாகப் போகச் சொன்னதற்கு மரியாதையின்றி குரலை உயர்த்திப் பேசினான். நான் அதைச் சுட்டிக்காட்டி இப்படி வாடிக்கையாளரிடம் பேசுவது சரியல்ல, கம்பெனியில் புகார் செய்ய வேண்டிவரும் என்றதற்கு வண்டியை நிறுத்தி, பின்னாடி மாட்டு வண்டி ஓட்டிக்கொண்டு எவனாவது வருவான், அவனுடன் போ என்று ஒற்றையில் விளித்ததோடல்லாமல் இரவு பத்து மணிக்கு அண்ணா பல்கலைக்கழகம் எதிரில் வண்டியிலிருந்து இறக்கிவிட்டான். நானும் அவனுடன் வாக்குவாதம் செய்ய விரும்பாமல் இறங்கிவிட்டு வேறு வாகனத்திற்காகக் காத்திருந்தேன்.

இதற்கிடையில் கார்த்திக்கை அழைத்து நடந்ததை விவரித்து ஓலா அப்ளிகேஷனில் ‘சேவை மோசம்’ என்று புகார் அளிக்கச் சொன்னேன். இதெல்லாம் நடந்தபொழுதும் அந்தக் கார் அங்கேயே நின்றுகொண்டிருக்கவும் எனக்கு லேசாக பயமெழ ட்ரைவர் காரிலிருந்து இறங்குகிறானா என்று அடிக்கடி திரும்பிப்பார்த்துக்கொண்டிருந்தேன்.

பத்து நிமிடங்களுக்குப் பிறகு ஒரு ஆட்டோ வரவும் அவருடன் சவாரி பற்றி பேசிக்கொண்டிருந்தபோது அந்த ட்ரைவர் என்னருகில் வந்து நின்றதை கவனிக்கவில்லை. வந்தவன் எந்த மரியாதையுமின்றி ‘காசு எவ தருவா’ என்று ஆரம்பித்தான். நான் அவனிடம் சற்று கடுமையாக ‘இறக்கிவிட்டது நீதான். ஒழுங்காகவும் வண்டி ஓட்டவில்லை. கம்பெனியில் புகார் அளித்தாகிவிட்டது, வம்பு செய்யாமல் போய்விடு,’ என்றதற்கு அசிங்கமாக என்னைப் பார்த்துக் கை ஓங்க வந்தான். உடனே நான் அந்த ஆட்டோக்காரரிடம் வண்டியை வேகமாக எடுங்கள் என்று சொல்லிக்கொண்டே ஏறுவதற்குள் , ‘கழுத்தை அறுத்துடுவேன், தெரியுமா?’ என்று படு பயங்கரமாக முகத்தை வைத்துக்கொண்டு மிரட்டினான். அவன் கையில் ஆயுதம் எதுவும் இருந்ததா என்றுகூட கவனிக்கத் தெம்பில்லாமல், அந்த அரையிருளில் கவனிக்கவும் முடியாமல், ‘அப்படி எதுவும் செய்துவிட முடியாது, நான் நேராக போலீசிடம் புகார் அளிக்கப்போகிறேன்,’ என்றதற்கு, என்ன வேண்டுமானாலும் செய்துகொள், போடி என்று அசிங்கமாக சைகை காண்பித்தான். அதற்குள் ஆட்டோவில் ஏறி கிளம்பிவிட்டேன். பின்னாலேயே அவனும் காரைக் கிளப்பி வந்துகொண்டிருந்தான்.

மணி பத்தரை போல் இருக்கும். வழியில் தென்படும் பேட்ரோலிங் போலீஸ் யாராவது கண்ணில் பட்டால் உடனே அங்கேயே புகார் அளிக்கலாம் என்றால் ராமாவரம் சிக்னல் வரை யாரும் கண்ணில் படவில்லை. வீடு வரை தனியாகச் செல்வது பாதுகாப்பில்லை என்று போலீஸிடம் சென்றால் அவர்களும் அக்கறை இருப்பதுபோல் பத ட்டமடைந்து உடனேயே என்னை பத்தரை மணிக்கு நந்தம்பாக்கம் காவல் நிலையத்திற்கு போகச் சொன்னார்கள். அங்கு சென்றால், ‘சம்பவம் நடந்த இடம் கிண்டி, நீங்கள் இப்பொழுதே அங்கு செல்லுங்கள்’ என்று ஆட்டோ ட்ரைவரிடம் வழியெல்லாம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கும் கிண்டிக்கும் எத்தொடர்புமில்லை, ஏன் அந்த கார் ட்ரைவரும்கூட அங்கிருக்க மாட்டான் என்று கெஞ்சியும், நடந்த விஷயத்தின் பயங்கரத்தை எடுத்துரைத்தும் எப்பலனுமில்லை. துணைக்கு ஒரு ஏட்டை வீடு வரை அனுப்புகிறோம் என்று கடைசியாகக் கூறிவிட்டு ஆட்டோ ட்ரைவரிடம் ஏட்டை மறுபடியும் ஸ்டேஷனில் கொண்டுவந்துவிட கட்டளையிட்டார்கள்.

கிட்டத்தட்ட பதினோரு மணிக்கு ‘கழுத்தை அறுத்துடுவேன்’ என்கிற வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்க வேறு ஏதேதோ கடந்தகால செய்திகளும் சம்பவங்களும் மண்டைக்குள் குடைய அவனை மாதிரி கிரிமனல்களை கோர்ட் கேஸ் என்று அலைந்து திரிந்து எஞ்சியிருக்கும் வாழ்க்கையையும் தொலைக்க மனமில்லாமல் ஒருவித அருவருப்புடனும் மனக்கொந்தளிப்புடனும் எஞ்சிய இரவு கழிந்தது.

நாளை அவனை மாதிரி பொறுக்கி எவனாவது நிஜமாகவே கழுத்தை அறுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்தக் கொடிய சாவின் பயத்தை விடவும் சாவுக்குப் பின்னான காரணங்களை கட்டவிழ்த்துவிடவிருக்கும் கற்பனைகள் அதைவிடவும் கோரமானதாக இருக்கப்போகிறதோ என்றெல்லாமும் சிந்தனைகள் சிதறிய வண்ணம் இருக்கிறேன். ஒவ்வொரு ஆணுடனுமான, தெரிந்தவன், தெரியாதவன் யாராயினும், வாக்குவாதங்களில் எந்தளவு உடலளவிலும் மனதளவிலும் காயப்பட்டிருக்கிறேன் என்று நினைத்தால் சோர்ந்துதான் போகிறது மனம்.

இங்கு காவற்துறை இருக்கிறதுதான். தன் கடமையையும் செய்கிறதுதான். ஒருவேளை அவர்கள் அகராதியில் கடமையென்பது செத்ததற்குப் பிறகான அக்கறையாக இருக்கலாம். நான் அதற்கு இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்கவேண்டும் என்று தெரியவில்லை.”

இந்தப் பதிவு எழுதப்பட்டது 11-ஆம் தேதி அன்று. 13-ஆம் தேதி நாளிதழ், செய்தி ஊடகங்களில் இதுகுறித்து வெளியானது. இதன் பிறகே, நந்தம்பாக்கம் காவல் நிலையத்திலிருந்து வந்து விலாசினியிடம் புகார் வாங்கிச் சென்றிருக்கிறார்கள்.

“நந்தம்பாக்கம் காவல் நிலையத்திலிருந்து ஒரு பெண் காவலாளர் இரண்டு ஆண் காவலாளர்கள் வீட்டிற்கு வந்து புகார் எழுதி வாங்கிச் சென்றிருக்கின்றனர். ஓட்டுனர் மீது மட்டுமல்லாமல் ஒலா கம்பெனியிலும் விசாரணை மேற்கொள்ளக் கேட்டிருக்கிறேன். பெண் காவலாளர் தன் கைப்பேசி எண்ணைக் கொடுத்துவிட்டு, ‘எதுவாக இருந்தாலும் அழையுங்கள் நிச்சயம் நடவடிக்க எடுக்கப்படும்,’ என்று கூறிச் சென்றிருக்கிறார்” என்கிறார் விலாசினி.

இந்த சம்பவத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியது காவல்துறையினரின் அலட்சியம். அதாவது குற்றம் நடக்கும்வரை நாங்கள் எவ்வித நடவடிக்கையில் இறங்க மாட்டோம் என்பதாக உள்ளது. புகார் எழுதவே இரண்டு நாட்கள் ஆன நிலையில், இனி நடவடிக்கை எடுக்க எத்தனை நாள் ஆகும் என்பதை அறியாமலேயே புகார் கொடுத்தவர் காத்திருக்க வேண்டியிருக்கிறது. விலாசினி போல், தனக்கு நிகழ்ந்தவற்றை பொதுவெளியில் சொல்ல முனைந்தவர்களுக்குக் கூட இத்தகைய அலைகழிப்புகள் உள்ளதை கண்கூடாகப் பார்க்கிறோம். காவல்துறையின் இத்தகைய அலட்சியம் கண்டனத்துக்குரியது.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.