அமுதா சுரேஷ்

தினந்தோறும் செய்திகளை வாசிக்கும்போது, பெண்ணுக்கெதிரான ஏதோ ஒரு வன்முறை நிகழ்வை படிக்க நேர்கிறது! அரிதாகப் பெண்கள் நிகழ்த்தும் கொலைகளை விட, ஆண்கள் நிகழ்த்தும் கொலைகளை பார்க்கும்போது ஆண் இனம் மனதளவில் மிருக குணத்தை இன்னும் தாண்டி வரவில்லை என்றே தோன்றுகிறது!
“நீ அம்பளைடா, அவளை வெட்டுடா” போன்ற சினிமா வசனங்கள், பெற்றோரின் காசில் வெட்டியாய் திரியும் நண்பர்களின் போதனைகள் என்று உடலளவில் பலம் பொருந்தியதாகக் கருதப்படும் ஆண்மக்கள், மனதளவில் பிறழ்ந்து தங்கள் பலத்தை எப்போதும் ஒரு தலையாய் தான் நேசித்த அல்லது ஏதோ ஒரு சூழ்நிலையில் காதலித்துத் தன்னை ஏமாற்றியதாய் கருதும் தன் இணையை, துரோகம் செய்துவிட்டாள் என்று மனைவியை, குடிக்க காசு தரவில்லை என்று அன்னையை, யாரையோ காதலித்து ஓடி விட்டாள் என்று மகளை, பேத்தியை, சண்டைப் போட்டாள் என்று பக்கத்து வீட்டுப் பெண்ணை, தன்னுடைய இச்சைக்காக யாரோ ஒருவரின் குழந்தையை, பணத்துக்காக என்று கண்ணில் படும் பெண்களை என வகைதொகையில்லாமல் கொல்ல இந்த ‘பலம்’ பொருந்திய ஆண்மக்களுக்கு பெண் ஒரு இரை!
இருவேறு நிகழ்வுகள்!
நான் முதலாமாண்டு இளங்கலை படித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு மாலை நேரம், புத்தக நகலுக்காக, அருகில் இருந்த ஜெராக்ஸ் கடைக்கு சென்றிருந்தேன், அது ஒரு பொதுத் தொலைபேசி நிலையமும் கூட, அங்கே இருபந்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு அழகிய இளம்பெண், அந்தத் கடையில் இருந்த இளைஞனிடம், “அண்ணா கொஞ்சம் ட்ரைப் பண்ணிப் பாருங்கண்ணா” என்று யாருக்கோ போன் செய்யச் சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தார்! அந்த இளைஞன் அந்தப் பெண்ணுக்கு தெரிந்தவனாய் இருக்க வேண்டும், மிகுந்த கருணையோடு, ஆறுதல் சொல்லி, தொலைபேசி இணைப்பை ஏற்படுத்திக் கொடுத்தான், போனில் சில நிமிடங்கள் பேசியப் பெண், திடீரென்று ஓவென்று அழத் தொடங்கினார், எங்கள் மூன்றுப்பேரைத் தவிர அங்கே யாரும் இல்லை, அந்தப் பெண்ணின் கண்ணீர் பல வருடங்கள் கடந்தபின்னும் கண்ணில் நிற்கிறது! “ராஜ் என்னை மோசம் செய்யாதே ப்ளீஸ்,…..!” என்று அவரின் அந்தரங்கத்தைச் சொல்லி அழுதார். மறுமுனையில் போனை அவன் வைத்திருக்க வேண்டும், போனை வைக்க மனமில்லாமல் அதையே நெஞ்சில் வைத்துக் கொண்டே அந்தப் பெண் அழுததைப் பார்க்க எங்கள் இருவருக்கும் கண்ணீர் வந்துவிட்டது, “இந்தா வைஜெயந்தி அழாதே” என்று அந்த இளைஞனும், யாரென்றே தெரியாத அந்தப் பெண்ணை பார்த்து, “அக்கா அழாதீங்க ப்ளீஸ்!” என்று ஏதோ ஒரு உள்ளுணர்வு அசைத்துப் பார்க்க நானும், அவரின் கையைப் பிடிக்க, சட்டென்று அந்த அக்கா கையைப் பற்றிக்கொண்டு, போன் ரீசிவரை எறிந்துவிட்டு ஓவென்று என் மேல் சாய்ந்துக்கொண்டு, மீண்டும் மீண்டும், “அவர் இப்படி செய்வாருன்னு நான் நினைக்கலியே, நான் இப்போ என்ன செய்வேன், அண்ணா எனக்கு பயமாயிருக்கு” என்று ஆராற்றிக் கொண்டேயிருந்தார், அத்தனை கண்ணீரிலும் தன் காதலனை அவர் தூற்றவோ சபிக்கவோ இல்லை! அன்று இரவு அந்த முகம் தெரியாத ராஜின் மனதை மாற்றி வைஜெயந்தியின் கண்ணீர் துடைக்கும்படி நான் கடவுளிடம் வேண்டிக்கொண்டேன்!
அதே நிலையம், வேறு வருடம் வேறு நாள், அங்கே தொலைபேசியில் நான் கேரளாவிற்கு ஒரு எஸ்.டி.டி கால் பேசிக்கொண்டிருக்க, பக்கத்து போனில் விடாமல் ஒரு எண்ணை அழுத்திக் கொண்டிருந்த ஒரு இளைஞன், இணைப்பு கிடைத்த நொடியில், இங்கே சொல்ல முடியாத வார்த்தைகளில் மறுபுறம் ஒரு பெண்ணைத் திட்டி தீர்த்தான், நிலையத்துக்கு முதலாளியான இளைஞன், அவனை ஆட்சேபிக்க, போனில் திட்டிக் கொண்டிருந்தவனின் உடன் வந்தவன், “அய்ய சும்மாயிரு, அவன் லவ்வரோட அவன் பேசுறான், இப்போ பொண்ணு கழண்டுக்கலாம்னு நினைக்குது, விட்டுடுவோமா” என்று சொல்லிவிட்டு “நீ பேசு மாமே” என்று எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றினான்.
அந்த செந்தமிழ் வார்த்தைகளின் காதலன், “யேய் குணா, தே&@%^*, உனக்கு கொலுசெல்லாம் வாங்கிக் கொடுத்தேனடி, மவளே விட்டுட்டு நிம்மதியா வாழ்ந்துடுவியா நீ?” என்று தொடர்ந்துக் கொண்டே போக அங்கே ஒரு கைகலப்பு உருவாகும் சூழ்நிலை உருவானது, அது போன்ற வார்த்தைகளை அப்போதுதான் நான் முதன்முறையாக கேட்டேன், மேலும் சில பேர் போன் செய்ய வர, நான் போன் காலை கட் பண்ணிவிட்டு வீடு வந்துவிட்டேன்! கடவுளே குணாவைக் காப்பாற்று என்று வேண்டிக்கொண்டேன்.
பெரும்பாலும் பெண்ணை ஆண் ஏமாற்றும் போது அவளுக்கு தன்னிரக்கம் வருகிறது, அதன் தொடர்ச்சியாக அழுகை வருகிறது, ஏமாற்றத்தின் அளவைப் பொறுத்து, அவள் வாழ்நாள் முழுதும் துயரில் உழல்கிறாள், அல்லது கிடைக்கும் வாழ்க்கையை ஜீரணிக்கிறாள், அல்லது தன்னையே மாய்த்துக் கொள்கிறாள், தன்னை ஏமாற்றியவனை எப்படி சிதைக்க வேண்டும் என்று அவள் யோசிப்பதில்லை, கெட்டவன், சுயநலமிக்கவன் என்று தெரிந்தாலும் திருத்திவிடலாம் நம் காதலால் என்று முட்டாள்தனமாய் மட்டுமே யோசிப்பாள்! புத்திசாலிகளாக சில பெண்கள் விலக நினைத்தால், பல ஆண்கள் அவ்வளவு எளிதில் தம் இணையை விட்டுவிடுவதில்லை, குறைந்தபட்சம் அவளை அவமானப்படுத்துவது அதிகபட்சம் அவள் உருவத்தை உயிரை சிதைப்பது என்று அவர்கள் அந்தக் காதலையும் கொன்று புதைப்பார்கள்!
யோசித்துப் பார்த்தால், பெண்கள் மட்டும் ஏமாற்றுகிறார்கள் என்பது போன்ற ஒரு பிம்பத்தையே வெள்ளித்திரைகள், கதைகள், கட்டுரைகள், காவியங்கள் உருவாக்கிக் கொண்டு வந்திருக்கின்றன!
பெண் கோழை, ஒருவனிடம் ஏமாறுவது அவளின் தலையெழுத்து, அவளால் ஆணை ஒன்றும் செய்யமுடியாது என்றே வைத்துக் கொள்ளலாம், தன்னை ஏமாற்றினாள் என்றும் வேறு பல காரணங்களுக்காகவும் வீரமிக்க ஆண்கள் தாங்களை சார்ந்த பெண்களை கொலை செய்வதில் வரும் வீரம் இந்த சமுதாயத்தை சுரண்டித் தின்னும் ஊழலில், கண்முன்னே நிகழும் அக்கிரமங்களை தடுப்பதில் ஏன் வருவதில்லை? பலம் குறைந்த மான்களிடம் மட்டுமே ஆணின் வேட்டை!
குழந்தை வெளிவரும் போது பெண் சகிக்கும் வலியை கடவுள் ஆணுக்கு கொடுத்தால் உயிர்களின் மதிப்பை உணரலாம்! ஆணோ பெண்ணோ கொலை செய்வது எதற்கும் தீர்வாகாது, ஆணின் மனநிலை மாற்றப்பட வேண்டும், காதலித்த ஒருவர் ஏமாற்றினால் அந்தக் காதலில் உண்மையில்லை, காதல், நட்பு, உணவு இவை மூன்றையும் எப்போதும் பிச்சையாக யாருக்கும் அளிக்கவும் கூடாது, ஏற்றுக்கொள்ளவும் கூடாது! வற்புறுத்தி வாங்கவும் கூடாது!
இந்த வன்முறை நிலை மாற, ஒன்று ஆணின் மனநிலை மாறவேண்டும், வளர்ப்பில் மாற்றம் வேண்டும், இல்லையென்றால் பெண் பிள்ளைகளுக்கும் வன்முறையை எதிர்க்க பலத்தையும், ஆயுதத்தையும் கொடுத்து வளர்க்கும் காலம் வரும்!
அமுதா சுரேஷ் தன்னைப் பற்றி: ஒரு ஐ டி கம்பெனியில் சென்டர் மானேஜர், திருமணமாகி இரண்டு குழந்தைகள், மூன்று முதுநிலை பட்டங்களோடு படிப்பு இன்னமும் தொடருகிறது, சமூகப்பணியில் பள்ளியில் இருந்தே ஈடுபட்டு வருகிறேன், எழுத்தில் ஆர்வம், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் என்று எழுதிக் கொண்டு வருகிறேன், பொதுவில் அதிகம் வெளிகாட்டிக் கொண்டது கிடையாது! ஆர்வமாய்ப் படித்த அரசியல் முதுகலை பட்டத்தை விட நிகழ்கால அரசியலில் அதிக ஆர்வம் உண்டு! எந்த ஏமாற்றமும், முன்னேற்றமாய் மாறும் என்று மாற்றத்தில் நம்பிக்கை வைத்து ஓடிக்கொண்டிருக்கும் ஒரு பெண்!