நடிப்புங்கிறது கிட்டத்தட்ட மனுசன் வாழ்க்கையை வாழ்றதுக்கான ப்ராசஸ்: தம்பிச் சோழனுடன் உரையாடல்

நடிப்பு குறித்த பிரத்யேக விடயங்களைத் தாங்கி ‘நடிப்பு’ என்கிற பெயரில் ஓர் இதழ் வருகிறதென்று நான் அறிந்திருக்கவில்லை. ஸ்ரீப்ரியாவின் ‘அவள் அப்படித்தான்’ படத்தைத் தாங்கி வந்திருந்த ‘நடிப்பு’ என்ற இதழின் முன் அட்டைப் படத்தை முகநூலில் பார்த்தேன். அட்டைப்படத்தின் வடிவமைப்பு என்னை ஈர்த்தது. தம்பிச் சோழன், அதைத் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த முகப்புப் படம், தனித்துத் தெரிந்தது, அது ஆவலைத் தூண்டியது. தம்பிச் சோழன் நடிப்புக்கென பிரத்யேகமாக வெளியிட்டு வரும் இதழ் என்பதையும் இது மூன்றாவது இதழ் என்பதையும் அறிந்தேன். வெகுஜென சினிமா இதழ்கள், தீவிர சினிமா இதழ்கள் என சினிமா தொடர்பான இதழ்கள் கணிசமாக வந்துகொண்டிருக்க, ‘நடிப்பு’ என்கிற இதழை கொண்டுவர சோழனை தூண்டியது எது? நடிப்புக்கென ஓர் இதழ் அவசியமா? வாசகருக்கு ஆர்வத்தை ஏற்படுத்துமா? நாடகத்திலிருந்து சினிமாவுக்கான பயணம்; பயணங்களின் கதைகள், அனுபவங்கள் என தம்பிச் சோழனுடன் நீண்ட உரையாடலிலிருந்து…

உங்க ஊர் எது? உங்களைப் பற்றிய அறிமுகத்திலிருந்து பேசலாமா?

“தேன்கனிக் கோட்டை(கிருஷ்ணகிரி மாவட்டம்) உச்சனபள்ளி சொந்த ஊர். என்னோட பேர் ராஜ்குமார். காரணம் அப்பா கன்னட நடிகர் ராஜ்குமார் ரசிகர். வீட்ல தெலுங்கு பேசுவோம். ஊர்ல கன்னடம் பேசுவாங்க. படிச்சது தமிழ். எங்க அப்பா ஒரு பொறுப்பில்லாத மனிதர். நிறைய வசதி இருந்து, ஊதாரித்தனமா இருந்ததால, வீட்டுக்குள்ள பிரச்சினை. எங்க அம்மா மூன்றாவது மனைவி. இவர் இப்படியே இருந்தா நான் செத்துதான் போனேன்னு சொல்லிட்டிருந்தாங்க. எங்க அம்மா என்கிட்ட அப்படி சொன்ன மூணு மாசத்துல செத்துட்டாங்க. என்னோட ஒன்பது வயசுல கிணத்துல் குதிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டாங்க.. இதுக்குக் காரணம் எங்க அப்பாதான்னு தெரிஞ்சதால அவர் மேல வெறுப்பு வந்தது. அது கடைசி வரையிலும் மாறலை. அப்பாவும் செத்த பிறகுதான் நான் ஏன் அப்படி இருந்தேன்னு தோணுச்சி.

எங்க அம்மா இறக்கிறவரைக்கும் நான் நல்ல படிப்பாளியா இருந்தேன். எங்க ஸ்கூல்ல நானும் இன்னொருத்தனும்தான் தெளிவா, தப்பில்லாம படிப்போம். ஆனா அம்மா இறந்த பிறகு படிப்புல ஆர்வம் வரலை. ஏழாவதுல வாத்தியார் வேணும்னே ஃபெயில் பண்ணிட்டாரு. அதுக்கப்புறம் அப்பாவுக்கு எனக்கும் நிறைய பிரச்சினை. மூணு தடவை தற்கொலைக்கு முயற்சி பண்ணேன். இங்க இருக்க முடியாது. என்ன கொண்டுபோய் ஹாஸ்டல்ல சேர்த்துடுங்கன்னு சொன்னேன். கிறிஸ்டியன் ஹாஸ்டல் எதுலேயும் என்னை சேர்க்கலை. அப்புறம் படிக்க வைக்கிறதுக்கு வசதியில்லன்னு சொல்லி கூர்நோக்கு இல்லத்துல சேர்த்துவிட்டாங்க. அடுத்து ராணிப் பேட்டையில 9-வது படிச்சேன். ஞாநியும் நாசரும் படிச்ச ஸ்கூல்ல பத்தாவது பரிட்சை எழுதினேன்.

அதுக்கப்புறம் பள்ளி படிப்பு மேல ஒருவித வெறுப்பு. அதுக்கு பல காரணங்கள்…அப்ப 17, 18 வயசிருக்கும் ஆம்பூர்ல இருந்த அக்கா வீட்டுக்குப் போயிட்டேன். அக்காவுடைய குடும்பம் கள்ளு காய்ச்சுற குடும்பம். எம் ஜி ஆர் காலத்துல வந்த தடையில சாராயம் காய்ச்சுனாங்க.  பட்டை, வெல்லம்லாம் போட்டு நல்ல சாராயம்தான் காய்ச்சுவாங்க. அடுத்தவன் வயித்தெரிச்சலுக்கு ஆளாகி நாம சம்பாதிக்க வேண்டாம்பாங்க. அந்த சாராயத்தையே அளவில்லாம குடிச்சி அக்கா வீட்டு ஆண்கள் அடுத்தடுத்து சாய்ஞ்சாங்க. நல்லா பணம் சம்பாதிப்பாங்க, திடீர்னு ரெய்டு வரும் சம்பாதிச்ச எல்லாத்தை கெணத்துல தூக்கிப் போட்டு போயிடுவாங்க. இளைஞனுக்கான கோபம் இருந்தாலும் ஒன்னு முடியாது.

இந்த நேரத்துலதான் என்னை திசை மாத்திக்க புத்தகம் படிக்கிறது கைக் கொடுத்துச்சி. ஸ்கூல வார இதழ்கள் படிப்பேன்.  இரவு சாராய வியாபாரம், பகல்ல சோடா பாட்டில் மிதிக்கிறது. அப்பா வேலைப் பார்த்தா தோல் ஃபேக்டரில வேலைன்னு போக, கிடைக்குற நேரத்துல புத்தகம் படிக்க ஆரம்பிச்சிருவேன்.

என் அப்பாவும் அக்காவும் பெருச்சாளிங்க. சம்பாதிக்கிற மொத்த பணத்தையும் வீட்டுக்குக் கொடுத்துடும்னு சொல்லுவாங்க. நான் பள்ளிக்கூடத்த விட்டு நிக்கிறதுக்கு அக்காவும் ஒரு காரணம்.  அக்கா பிளான் பண்ணிதான் என்னை நிறுத்தியிருக்கு. சம்பாதிக்கிறதுக்கு ஒரு ஆள் வேணும். வீட்ல பொண்ணு இருந்தது. அப்படியே கட்டிக் கொடுத்திடலாம்னு அவங்களுக்கு ஒரு எண்ணம். ஒரு நேரத்துல அப்பாவுக்கும் எனக்கும் சண்டை வந்தது.  என் மேல மண்னெண்ணெய் ஊத்தி கொளுத்த வந்துட்டாரு. அப்போ அங்கிருந்து சென்னை வந்தவந்தான். 3, 4 வருசத்துக்கு எங்கிருக்கின்னுகூட சொல்லலை.”

சினிமாவில் பெரிய ஆளாகணும்கிற லட்சியத்தோட வந்தீங்களா?

“பாலகுமாரனை படிச்சிட்டு நானும் எழுதணும்னுதான் சென்னைக்கு வந்தேன். எழுத்து நமக்கு சோறு போடாதுன்னு தெரிஞ்சது. அப்போ அந்த மாதிரி ஒரு நிலைமை இருந்தது. இப்பவாயிருந்தா வேறமாதிரி யோசிச்சிருப்பேன். சமையல் கேண்டீன்ல கொஞ்ச நாள் வேலைப் பார்த்தேன். அங்க இருந்த பெரியவர் ஒருத்தர் பெரிய அனுபவசாலியா தெரிஞ்சாறு. அவர் பேசிதான் சினிமான்னு திசை திரும்பிட்டேன். இதையெல்லாம் நடக்கும்போது 19 வயசு இருக்கும்.

முருகதாஸ்கிட்ட ட்ரை பண்ணிட்டிருந்தேன். மூணுமாசம் கழிச்சு வான்னு சொல்லிட்டாரு. ஊருக்குப் போயிட்டேன். ஆம்பூர் ஆடியோன்னு உள்ளூர் எஃப் எம் அதுல வேலை செஞ்சேன். கவிஞர் யாழன் ஆதி அதுல இன்று ஒரு தகவல் மாதிரி ஒரு நிகழ்ச்சில பேசுவாரு. அப்புறம் லெண்டிங் லைப்ரரி வார, மாத இதழ்களை கடைகளுக்கு கொடுக்கிறதை செஞ்சேன். நல்ல போயிட்டிருந்தது. ரமணா படம் பார்த்த உடனே நமக்கு சினிமா தான்னு முடிவு பண்ணி திரும்பவும் சென்னை வந்தேன்.

அப்போதான் தீவிர அரசியல் இயக்கங்களோட அறிமுகம் ஏற்பட்டது. ரெண்டு வருசம் அவங்களோட இருந்தேன். ஒரு கட்டத்துல யுகபாரதி அறிமுகமானார். அமைப்புல சிக்கல் வந்தது. அப்புறம் அங்கிருந்து விலகினேன். கணையாழிலேர்ந்து வெளியே வந்து யுகபாரதி  படித்துறைன்னு ஒரு இதழ் நடத்திக்கிட்டு இருந்தாரு. அவர்தான் ஆசிரியர். மத்த வேலையெல்லாம் நான் தான் பார்த்தேன். அஞ்சு இதழ்கள்லேயும் வேலைப்பார்த்தேன்.

படித்துறையில் சம்பளம் சம்பளம் கம்மிங்கிறதால, படித்துறையை வெளியிட்ட விஜயராகவன், கூத்துப்பட்டறையில பகுதி நேர வேலை வாங்கிக் கொடுத்தார். கூத்துப் பட்டறையில இருக்க வேண்டிய ஆள்னு விஜயராகவனுக்கு என்னைப் பற்றிய ஒரு எண்ணம். கோடம்பாக்கத்துல யுகபாரதியோட அறையில் சனி, ஞாயிறுகள்ல பிரியாணி சமைப்பேன். கூத்துப்பட்டறையில் சமைச்சிக்கிட்டிருந்த அம்மா வேலையை விட்டுப் போயிட்டாங்க. அப்பதான் அந்த வேலைக்கு விஜயராகவன் என்னை அழைச்சுட்டுப் போனார்.”

தம்பிச் சோழன்
தம்பிச் சோழன்

ஸோ..நடிப்பு சமயலறையிலிருந்து தொடங்கினதா?

“ஆமாம்…ஆறு மாதத்துல பட்டறையில என் சமையல் எல்லோருக்கும் பிடிச்சிருந்தது. சமைச்ச நேரம் போக, யோகா பண்ணுவேன், வெளிநாடுகள்லேர்ந்து வந்து யாராவது ஒர்க்‌ஷாப் நடத்தினா அதுல கலந்துக்குவேன். அந்தக் கட்டத்துல செம்பட்டை பாலான்னு ஒரு கோ ஆக்டர். செம்பட்டைங்கிற ஒரு படத்துல ஹீரோவா நடிச்சாரு. அவருக்கும் எனக்கும் கிளாஷ். நா. முத்துசாமி என் மேல வெச்சிருந்த அபிப்ராயத்துல சமையல் வேலையிருந்த என்னை ஆக்டரா ஆக்கிட்டாரு. அதுக்குக் காரணம் படித்துறையில நான் எழுதின சார்லி சாப்ளின் பத்தின ‘மகா கலைஞன்’ங்கிற 11 பக்க கட்டுரை. இதுவரைக்கும் நான் எழுதினதிலேயே மிகப் பெரிய கட்டுரை. பேசப்பட்ட கட்டுரை. இவனுக்கு எழுதவும் வருதுங்கிற அபிப்ராயம் என்னை ஏத்துக்க வெச்சது. நான் முழு நேர நடிகனாயிட்டேன்.”

கூத்துப்பட்டறை அனுபவம் எப்படி இருந்தது?

“கூத்துப்பட்டறை அனுபவம் வேறமாதிரி. மெடிடேசன், யோகான்னு எல்லாத்தையும் மாத்தி விட்டிடும். என்னை நான் செதுக்கிக்க முத்துசாமி முக்கியமான காரணம். இவ்ளோ அனுபவங்கள் உனக்கு இருக்கு. இங்க இருக்க  20 ஆக்டர்ல உனக்கு நடந்தமாதிரி யாருக்காவது நடந்திருக்கான்னா இல்ல. அத நீ சாபமா பார்க்கப் போறியா? உரமா பார்க்கப் போறியா, சுமையா நினைச்சிக்கிட்டு இருக்கப் போறீயான்னு ஒரு நாள் கேட்டாரு. அது ஒரு தெறிப்பு. அன்னியிலேர்ந்து நான் வேறமாதிரி ஆகிட்டேன். கூத்துப் பட்டறையில கத்துக்கிட்டதோட வயலின் கத்துக்கிட்டேன்; பாட்டு கத்துக்கிட்டேன்; எடிட்டிங் கத்துக்கிட்டேன்.

கூத்துப்பட்டறையில கத்துக்கும்போது குறிப்பிட்ட அளவுக்கு பணம் கட்ட வேண்டியிருந்தது. அது என்னால முடியாதப்போ டாடா நிறுவனத்திலிருந்து என் ஜி ஓ ஒர்க் வருது அதுல போய் வேலைப்பாருன்னு முத்துசாமி சொன்னாரு. இளைஞர்கள் மத்தியில் நாடகத்தை பத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தறது. தமிழ்நாட்டுல முக்கியமான கல்லூரிகள் துணையோட இந்த ப்ராஜெக்ட் நடந்தது. திருச்சி பிஷப் ஹுபர் கல்லூரியில இரண்டு வருசம் இப்போது நாம் நம்மைப் பற்றி பேசலாம் ங்கிற பேர்ல கிட்டத்தட்ட  350 -400 வீதி நாடகங்கள் போட்டோம். சமூக அரங்குன்னு இந்த வகை நாடகங்கள சொல்வாங்க.

முதல்ல நடிகர்களா எங்க பிரச்சினையை பேச ஆரம்பிப்போம். பிறகு, ஆடியன்ஸும் அவங்க பிரச்சினையை பேசுவாங்க. பிரச்சினைகளை யோசிக்க,  பொதுத்தளத்துல வெச்சி பகிர்ந்துக்கறதுக்கு இது தூண்டுகோளா இருக்கும். பகிர்ந்துக்க முடியாதவங்களுக்கு கவுன்சிலிங் ஏற்பாடு பண்ணுவாங்க. என்னோட பார்வையை மாத்துனது இந்த ஆண்டுகள்ல கிடைச்ச அனுபவம்தான். அப்பதான் நான் நடிகனா இருக்க விரும்பாம, மனித உணர்வுகளை ஒருங்கிணைக்கிற இயக்குநரா ஆகலாம்னு முடிவு செஞ்சேன்.

கூத்துப் பட்டறைல நடிகனா, பயிற்சியாளனா இருந்தேன். அங்க இருந்த அஞ்சு வருசத்துல உள்ள இருந்த நேரம் குறைவுதான், ஏதோ ஒரு கிராமத்துக்கோ, தள்ளியிருக்கிற பள்ளிக்கோ போயிடுவேன். அதுவும் ஒரேமாதிரியா சிஸ்டமாயிடுது.. 2010 வெளியே வந்தேன். தங்கர் பச்சான், ஜேடி-ஜெர்ரியோட வேலைப்பார்த்தேன். அது ஒருவகையான அனுபவம்”

திரைப்படம் இயக்கும் முயற்சிகள்ல இருக்கீங்க, இல்லையா?

“நாடகம் சோறு போடும்ங்கிற நிலைமை இங்க இல்ல. ஒருவேளை அதுபற்றி படிச்சிருந்தா சாத்தியமாகியிருக்கலாம். தனிப்பட்ட முறையில் எனக்குக் கிடைச்ச நட்புகளாலேயும் கூத்துப்பட்டறை அனுபவத்தினாலேயும்தான் எனக்கு நாடக வாய்ப்புகள் கிடைச்சது. அது போதுமானதா இல்லை.  அப்போ நடிப்பு தொடர்பான ஒர்க்‌ஷாப்களை எடுத்தேன். ‘நிழல்கள்’ நடத்தின  பயிற்சி பட்டறைகளை நிறைய வகுப்பு எடுத்திருக்கேன். அதுல கலந்துக்கிட்ட சிலர் பேர் சினிமாவுல வேலைப் பார்க்கிறாங்க. அசோஷியேட் டைரக்டரா இருந்த ஒருத்தர் ஆக்டரை ட்ரெயின் பண்ணனும்னு விஜய் ஆண்டனியோட ‘நான்’ படத்துக்கு பரிந்துரை பண்ணாரு. அதுதான் ஆக்டர் ட்ரையினரான என்னோட முதல் படம். படம் ஹிட்டானதால பேசப்பட்டது.

விஜய் சேதுபதி அவர் எங்க போனாலும் நானும் இருக்கணும்னு விரும்புவார். விஜய் சேதுபதியோட நான், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, காக்கா முட்டை மணிகண்டன், எனக்குள் ஒருவன் டைரக்டர் எல்லோரும் சேர்ந்து ‘ஓம்காரா’ படத்தோட தமிழ் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிக்கிட்டு இருந்தோம். அது பல காரணங்களால கைவிடப்பட்டது. இது நடந்தது பீட்சா, காக்கா முட்டை வர்றதுக்கு முன்னாடி. அதுக்கப்புறம் தானே புயல் வந்தப்போ தங்கர்பச்சனோட ஆவணப்படம் எடுக்கப் போயிருந்தேன்.

நடுவுல விஜய் சேதுபதி சர்ப்ரைஸா, ஒரு டைரக்டர்கிட்ட அழைச்சிட்டுப் போனாரு. அது கார்த்திக் சுப்புராஜ்தான். பீட்சா படத்தோட கிளைமேக்ஸ் தவிர்த்த முழு ஸ்கிர்ப்டும் கொடுத்து, இதுல விஜய் சேதுபதி அந்தக் கட்டிடத்தை விட்டு வெளியே வரும்போது வெவ்வேறு விதமான எமோஷனைக் காட்டுவாரு, அதுக்கு உதவி வேணும்னு பேசினாங்க. ஒர்க்‌ஷாப் நடத்தி அத செஞ்சி கொடுத்தேன். பீட்சா வெற்றிக்குப் பிறகு, என்னோட ஒர்க் பத்தி மீடியாவுல பேசினாரு விஜய் சேதுபதி. அது இண்டஸ்ட்ரில என்னை ஆக்டர் ட்ரெயினாரா ஆக்கியது.

இப்போதைக்கு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிக்கிட்டு தயாரிப்பாளர தேடிக்கிட்டிருந்தாலும், இன்னொரு பக்கம் பர்சனல் கோச்சரா இருக்கேன். மத்தாப்பூ, சோழன்குடி, விளையாடவா உள்ளிட்ட சில படங்கள் செய்திருக்கேன்”

இது ரொம்ப புதுசான துறை இல்லையா?

“ஆரம்பத்துல ஸ்கிரிப்டைக் கொடுத்து ட்ரெயின் பண்ண சொல்லாங்க. இப்ப கேரக்டரை டிசைன் பண்ண சொல்றாங்க. வளர்ந்திருக்கு. வெஸ்ட்ல காஸ்டிங் டைரக்டர்னு ஒருத்தர் இருப்பார். அவர்தான் ஸ்கிர்ப்டுக்கு ஏத்தமாதிரி நடிகர்களை தேர்வு செய்வார். இங்க முழுக்க டைரக்டர்கிட்ட அந்தப் பணி விடப்படுது. ‘நீங்களும் நடிகராகலாம்’னு ஒரு புத்தகம் எழுதியிருக்கேன். அதைப் படிச்சிட்டு இயக்குநர் பாலாஜி சக்திவேல், என்னை வரவழைச்சு ஸ்வீட் கொடுத்து, “இப்படி நான் பண்ணும்போது ஒருத்தர் இல்லாம போயிட்டாரே”ன்னு பாராட்டினார். தொழில் முறை அல்லாத நடிகர்களோட வேலை பார்க்கிறது பெரிய தலைவலின்னு சொன்னார்.  அந்த வகையில எனக்கு வாய்ப்பு இருக்கு”

nadippu
நடிப்பு இதழ் : 3

வெவ்வேறு விதமான பணிகள்…இந்த சரடோட அடுத்த இணைப்புதான் ‘நடிப்பு’ இதழ் பணியா?

“நாடகத்துல நடிகன் தான் கருவி; சினிமாவுல நடிகனும் ஒரு கருவி. கேரக்டரை கவனிச்சி, உள்வாங்கி நடிப்பை வெளிப்படுத்தறது பெரிய ப்ராசஸ். பொதுவா நாடகத்துக்கு ரிவ்யூ எழுதும்போது நாடகத்துல இருக்க மத்த விஷயங்களைப் பத்தியெல்லாம் எழுதுவாங்க. லைட்டிங்க இப்படியிருந்தது, மேடை அமைப்பு நல்லாயிருந்தது, டைரக்டர் அப்படி பண்ணியிருந்தாரு இப்படித்தான் எழுதுவாங்க. ஆனா எல்லாத்தையும்  தன்னகத்துல வெச்சிருக்கிறது நடிகன்தான். கிட்டத்தட்ட அது மனுசன் வாழ்க்கையை வாழ்றதுக்கான ப்ராசஸ்போல. அதை ஏன் பேசாமலே இருக்கோம்? மூணு நாலு நாடகங்களுக்கு இப்படி வொர்க் பண்ணி பார்த்தேன். எப்படி ஆக்டர், ஸ்ரிப்டை வாங்கிக்கிறான். டைரக்டர் எப்படி ஸ்கிர்ப்டை வாங்கிக்கிறார். அங்க சுத்தியிருக்கிற சூழல் நடிகனை எப்படி பாதிக்குது. இந்த எல்லா மாற்றங்களையும் உள்வாங்கி நடிகன் நடிப்பை வெளிப்படுத்தறான். வொர்க் ஒவ்வொரு ஸ்டேஜைலேயும் மாறிக்கிட்டேயிருக்கு. நடிகன் ஒரு டயலாக்கை எப்படி வாங்கிக்கிறான்; எப்படி வெளிப்படுத்தறான்ங்கிறது மாறிக்கிட்டே இருக்கு. அதுவொரு மாஜிக் தான். இதையெல்லாம் பேசறதுக்குத்தான் ‘நடிப்பு’ இதழ் ஆரம்பிச்சோம்.

ஆனா இதையெல்லாம் பேசறோமான்னா இல்ல. ஏன்னா நடிப்பைப்பத்தி எழுதறதுக்கு ஆள் இல்லை. பொத்தாம்  பொதுவா சினிமாவைப் பத்தி, பொத்தாம் பொதுவா நாடகத்தைப் பத்தி எழுத ஆட்கள் இருக்காங்க. அதுல ‘அந்த நடிகர் அற்புதமா செய்தார்’னு ஒரு வரில எழுதிட்டுப் போயிடுவாங்க. ஆனா என்ன பண்ணான்னு சொல்லமாட்டாங்க. அதை இப்பதான் ட்ரைப் பண்ணிக்கிட்டு இருக்கோம். அதுல யார் டீப்பா எழுதறாங்களோ அவங்களைக் கேட்டுக் கேட்டு எழுத வெச்சிக்கிட்டு இருக்கோம். இன்னும் நிறைய செய்யணும்.

முதல் இதழ்ல என்ன வரணும்னு ஒரு பொருளடக்கம் போட்டிருந்தோம். அதுபத்தி 20 வருசமா நாடகத்துறையில இயங்கிக் கிட்டு இருக்க ராமானுஜன் போல பலபேர்கிட்ட காட்டினேன். கமர்ஷியலா கே. என். சிவராமன், அப்பணசாமி போல சிலருக்கிட்டே காட்டினேன். எல்லோரும் நல்லாருக்குன்னு சொன்னாங்க. ஆனா அது வரல. முதல் இதழ் வெளியிடும்போதே மேடையில என்ன சொன்னேன்னா, நான் சொன்னது வந்துடுச்சின்னா அதோட இதழை நிறுத்திடுவேன். ஏன்னா ஒரு ட்ரெண்டை நாம கிரியேட் பண்ணிட்டோம்னா அதுக்கப்புறம் எல்லோரும் எழுதுவாங்க. அப்படீன்னு சொன்னேன். அதுதான் என்னோட விருப்பமாவும் இருக்கு”

நடிப்பு இதழ்:2
நடிப்பு இதழ்:2

நடிப்பு’க்கு வரவேற்பு எப்படியிருக்கு…?

“இதை பிஸினஸா பண்ணலைன்னு சொல்ல வறலை. ஆனா பிஸினஸா எனக்குப் பண்ணத் தெரியல. படித்துறையில கிடைச்ச அஞ்சு வருஷ எக்ஸ்பீரியன்ஸ் மட்டும்தான். ஒரு வருசத்துக்கு முன்னாடி முதல் இதழ் வந்தது. ரெண்டாவது இதழ் சிவாஜி ஸ்பெஷலா வந்தது. ரொம்ப பெரிய வரவேற்பு கிடைச்சது. சிவாஜி ரசிகர் மன்றம் இப்பவும் இயங்கிட்டு இருக்குன்னு அப்பதான் தெரிஞ்சது. அவங்க மாதாமாதம் கூடுறாங்க. சினிமா பத்தி பேசறாங்க. எங்களுக்குத் தொடர்ந்து இதழ் அனுப்பனும்னு சொல்லி பணத்தையும் அனுப்பி வெச்சாங்க.

மூணாவது இதழ் ‘அவள் அப்படித்தான்’ சிறப்பிதழா வந்திருக்கு. நடிப்பு மாறுகிறது போல, எழுத்துருவும் மாத்திக்கிட்டே இருன்னு ட்ராஸ்கி மருது 10 எழுத்துருக்களை எழுதுக்கொடுத்தார். அட்டைப்பட வடிவமைப்பு இதழுக்கு இதழ் மாத்திக்கிட்டு இருக்கேன். முதல் இதழ் தலித் முரசுல செஞ்சோம். ரெண்டாவது இதழ் அட்டைப்படம் இயக்குநர் நண்பர் வடிவமைச்சது. மூன்றாவது இதழ் சந்தோஷ் நாராயணன் வடிவமைச்சது. இது அடுத்த கட்ட பாராட்டைப் பெற்றிருக்கு.

இப்போதைக்கு சந்தா வசூலிக்கலை. ஆயிரம் பிரதிகள்தான் ஆச்சடிக்கிறோம். என்னுடைய தொடர்புகள் மூலமா தமிழகத்துல இருக்க சில கடைகளுக்கு அனுப்புறேன். தொழில் முறை விநியோகம் செய்யலை. என்னுடைய மெண்டர், ஜென் மாஸ்டர் அவர், நடிப்புக்குன்னு ஒரு மேகஸின் இந்தியாவுல இல்ல, இப்போதைக்கு பண்ணு, பிறகு அடுத்தடுத்த கட்டங்களுக்கு போகலாம்னு சொன்னார். ஐந்து இதழ்களுக்குப் பிறகு, இன்னும் வேற லெவலுக்குக் கொண்டுப் போகலாம்னு இருக்கேன்.”

தம்பிச் சோழன், ஷீலா
தம்பிச் சோழன், ஷீலா

 ஷீலாவை எங்க சந்திச்சீங்க?

“இமையத்தோட ‘பெத்தவன்’ நாவலை படமா எடுத்தேன். எடிட்டிங் வரை போய் அந்தப்படம் ட்ராப் ஆகிடுச்சு. அதுல ஷீலா என்னோட ஒர்க் பண்ணாங்க. செம்மனார் கோயில்ல ஷூட்டிங். ஒரு வாத்தியார் வீட்ல பஞ்சாயத்து சீன் எடுத்தோம். பஞ்சாயத்துல உட்கார தலித்துகளை அழைச்சுட்டு வந்திருந்தோம். அது பெரிய பிரச்சினையாகிடுச்சு. எங்க தெருவுக்குள்ளேயே நாங்க அவங்களை விடமாட்டோம். நீ என்னடான்னா வீட்டுக்குள்ள விட்டுருக்கன்னு, இனிமே ஷூட்டிங் நடத்த முடியாதுன்னுட்டாரு. அவரைக் கெஞ்சி, பேசி ஷூட்டிங் செஞ்சோம். இப்படி 10 நாள்ல முடிக்க வேண்டியது 17 நாள் ஆயிடுச்சி.

இந்த 17 நாட்கள்ல நானும் ஷீலாவும் ஒருத்தரை பத்தி ஒருத்தர் நல்லா தெரிஞ்சிக்கிட்டோம். என்னோட ஃபீமேல் வெர்ஷனா அவங்களும் அவங்களோட மேல் வெர்ஷனா நானும் இருந்தோம். ஒரேமாதிரியான வளர்ப்பு, ஒரேமாதிரியான மனப் பிரச்சினை, சிக்கல் எல்லாம் இருந்தது. அவங்க அகாடமிக்கா போயிட்டாங்க. நான் இப்படி இருந்தேன். எங்க காதலுக்கு எதிர்ப்பு வந்து, கோர்ட், கேஸுன்னு ஆகி இரண்டு வருடத்துக்கு  முன்ன திருமணம் செஞ்சிக்கிட்டோம். அவங்க பரதநாட்டியம் படிச்சவங்க. பள்ளிகள்ல பரதநாட்டிய வகுப்பு எடுக்குறாங்க. நான் மவுலிவாக்கத்துல ஆக்டிங் ஸ்கூல் வெச்சிருக்கேன். ஒஹோன்னு இல்லாம ச்சீ ப்போன்னு இல்லாம போயிட்டிருக்கு”

ஆக்டிங் ஸ்கூல்னா நாடகத்துக்கான நடிப்பு பயிற்சியா? சினிமாவுக்கான பயிற்சியா?

“இல்ல நான் நாடகத்துக்கான பயிற்சிகளை எடுக்கிறதில்லை. சினிமாவுக்காக மட்டும்தான். நாடகத்துக்கான நடிப்பு பத்தி சொல்லித்தர பல்கலைக்கழகங்கள் இருக்கு. சினிமாவுக்கான பயிற்சிகளையும்கூட நான் தனித்தனியாதான் எடுக்கிறேன். குழுவா எடுக்கிறதில்லை. காரணம் இப்ப இருக்க சமூகமே தனித்த சமூகமா இருக்குங்கிறதும், தனியா எடுக்கும்போது தனிப்பட்ட நபரின் திறமைகளை அறிந்து அதுக்கேத்த பயிற்சிகளைக் கொடுக்க முடியும் என்பதும்தான். குழுவா எடுக்கும்போது அதுல விருப்பம் இல்லாத ஒருத்தனால அந்த குழுவோட மொத்த திறனும் வீணடிக்கப்படும். விருப்பம் இல்லாதவனை ஒழுங்குபடுத்துறதுல என்னோட கவனம் போயிடும். வெளியில நடிப்பு பயிற்சி எடுக்க கூப்பிடறவங்ககிட்ட நான் இதைத்தான் சொல்றேன். பட்டறைங்கிற பேர்ல நடிப்பு சொல்லித்தர்றவங்க  பிராய்லர் கோழி பண்ணை மாதிரி காலையில் 40 பேர், மாலையில 40 பேருக்கு சொல்லித் தர்றாங்க. நாங்க இருந்த காலக்கட்டம் வேற. இப்போதைய நிலைமை வேறயா இருக்கும். சினிமாவில் மாஸ்டர் ஷாட்ல மட்டும்தான் கலெக்டிவ்வா நடிக்க வேண்டியிருக்கும். மத்தபடி தனிப்பட்ட நடிப்புத் திறனை வெளிப்படுத்துற வாய்ப்புதான் அதிகம்.”

முகப்புப் படம்:மார்டின் தன்ராஜ்

One thought on “நடிப்புங்கிறது கிட்டத்தட்ட மனுசன் வாழ்க்கையை வாழ்றதுக்கான ப்ராசஸ்: தம்பிச் சோழனுடன் உரையாடல்

  1. செவ்வி எடுக்கப்பட்டவரைப் பற்றிய ஒரு கதையை, படத்தைப் போலவே சொல்லவைத்திருக்கும் உரையாடல். நன்றாக இருக்கிறது. இது போன்ற உயிரோட்டமான நேர்காணல்/ உரையாடல்களைத் தொடர்ந்து பதியுங்கள். வெல்க!

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.