எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமாரின் ‘உப்புநாய்கள்’ மிகவும் பேசப்பட்ட நாவல். வெளியான நான்கு ஆண்டுகள் கழித்தும் வாசகர்களால் கொண்டாடப்படும் நாவல். இது வெளியான ஆண்டிலேயே சாகித்ய அகாடமி இளம் படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் ‘யுவபுரஸ்கார்’ விருதைப் பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், எவரும் எதிர்பாராத ‘கானகன்’ நாவலுக்காக ‘யுவபுரஸ்கார்’ தற்போது வழங்கப்பட்டிருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் காஞ்சா தோட்டங்களில் உழலும் அடித்தள மக்களின் வாழ்க்கையைச் சொல்லும் இந்த நாவலும் வரவேற்பைப் பெற்றதே.
இந்த விருது குறித்து எழுத்தாளர் Lakshmi Saravanakumar தன்னுடைய முகநூலில் இப்படிச் சொல்கிறார்:
கெட்ட விஷயம் அடுத்தடுத்து நடக்கறப்போ எப்டி வருத்தப்படறமோ நல்ல விஷயம் நடக்கறப்போ அதக் கொண்டாடவும் செய்யனும். இந்த வருஷம் யுவபுரஸ்கார் விருதுக்கு கானகன் தேர்வாகி இருக்கு. எப்பவும் என்னோட பலமா இருக்கும் என் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் அன்பும் முத்தங்களும்.
கானகனை வாசிக்க விரும்பும் வாசகர்களுக்கு ஒரு நல்ல செய்தியையும் அறிவித்திருக்கிறார் சரவணகுமார்,
கானகன் மக்கள் பதிப்பாக..
நண்பர்களுக்கு வணக்கம். வழமையாக ஒரு நாவல் விருது பெறும் போது அந்நாவலின் முந்தைய பதிப்பு விலையோடோ அல்லது சிறிது விலை உயர்த்தப்பட்டு புதிய பதிப்புகள் வருவது வழக்கம். கானகன் நாவல் முதல் பதிப்பு விலை 200 ரூபாய். ஆயிரம் பிரதிகள் எட்டு ஒன்பது மாதங்களிலேயே விற்றுத் தீர்ந்த நிலையில் இப்பொழுது அதே மலைச்சொல் பதிப்பகத்திலிருந்து குறைந்த விலையில் மக்கள் பதிப்பாக வர இருக்கிறது. விலை 99 ரூபாய் மட்டும். நிறைய பேருக்கு புத்தகம் கிடைக்க வேண்டுமெண்பதற்காகவே நண்பர் பால நந்தகுமார் எடுத்த முடிவு. சில சமயங்களில் நமக்கு சரியானதை எப்படி செய்ய வேண்டுமென்பது நம்மை விடவும் நம் நண்பர்களுக்கு தெரியும். நாம் இசைந்து கொடுத்தால் போதுமானது.
இரண்டு நாட்களில் புத்தகம் கடைகளில் கிடைக்கும். அனைவருக்கும் அன்பு.
இந்த ஆண்டு சிறுவர் இலக்கியத்துக்கான பங்களிப்பாக பால புரஸ்கார் விருதைப் பெறுகிறார் குழ. கதிரேசன். ஐந்திணை பதிப்பக உரிமையாளரான குழ. கதிரேசன், 30 வருடங்களுக்கும் மேலாக குழந்தைகளுக்கான பாடல், கதை எழுதி வருபவர்.
“இது உண்மையில் ஆச்சரியமாகத்தான் இருந்தது. நான் என் படைப்புகளை விருது தேர்வு குழுவுக்கு அனுப்பவில்லை. ஏனெனில் ஐந்து வருடங்களுக்கு முன் இந்த விருது கிடைக்கும் என நினைத்தேன். அதற்குப் பிறகு அது குறித்து சிந்திக்கவில்லை” என்கிறார்.