சென்னை புத்தக விழா தொடங்கியுள்ளது. எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் வாசகர்களும் பரபரப்பாகியுள்ள நிலையில் எழுத்தாளர் சாரு நிவேதிதா, புத்தக விழாவால் எந்த பிரயோசனமும் இல்லை என்கிறார்.
வீடியோ பேட்டி ஒன்றில், “புத்தக திருவிழா என்ற பெயரில் இப்போது இருக்கிற நடைமுறையில் எனக்கு நம்பிக்கையில்லை. புத்தக திருவிழாவில் இருக்கும் கடைகளில் ஜோசியம், சமையல் புக், பல்ப் ஃபிக்ஷன், காமிக்ஸ் புத்தகங்கள்தான் அதிகமாக விற்கப்படுகின்றன. வெறும் 10% கடைகளில்தான் இலக்கிய புத்தகங்கள் கிடைக்கின்றன. மற்ற மாநிலங்களில் எல்லாம் 95% கடைகளில் இலக்கியம்தான் விற்கப்படும்.
கோடிக்கணக்கான ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பதாக சொல்கிறார்கள். என்னமாதிரியான புத்தகங்கள் விற்கின்றன என்பது விவாதத்துக்குரியது. பிரபல இலக்கிய ஜாம்பவான்களின் புத்தகங்களே 100, 200 தான் விற்கின்றன.
சமூகத்தில் குழந்தைகள் புத்தகம் படிப்பதை ஏதோ குற்றமாகப் பார்க்கிற போக்குதான் இருக்கிறது. குடிப்பதைப் பற்றி கூட வீட்டில் உள்ளவர்கள் கவலைப்படுவதில்லை, படிக்கிற புத்தகங்கள் வாங்கினால் திட்டுகிறார்கள் என்று பல ஆண்கள் சொல்கிறார்கள். பெண்கள் புத்தகங்கள் வாங்குவதற்கும் படிப்பதற்கும்கூட இதே போன்ற தடைகள் வருகின்றன.
தமிழ் சமூக இன்னமும் 17-ஆம், 18-ஆம் நூற்றாண்டில் தான் இருக்கிறது. மகாபாரதத்தைத் தாண்டி அவர்கள் வரவில்லை. அதையும்கூட அவர்கள் படிப்பதில்லை. காதால் கேட்கவே விரும்புகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் வாசகரை எதிர்பார்த்து புத்தகத் திருவிழாவுக்கு எழுத்தாளர்கள் காத்திருப்பதெல்லாம் பைத்தியக்காரத்தனம். இங்கே வந்தால் பதிப்பாளரைப் பார்க்கலாம். நான்கு வாசகரைப் பார்க்கலாம், அவ்வளவுதான்” என்று பேசியிருக்கிறார்.
வீடியோ இணைப்பு கீழே