
காலனியாட்சிக்கு முந்தைய இந்திய சமூக அமைப்பை ஆய்வு செய்வதில் மார்க்ஸிய அடிப்படையிலான ஆய்வாளர்களிடயே கூட இரண்டு ஆழமான முரண்பாடுகள் இருந்துவருகின்றன. என்ற குறிப்போடு நூல் தொடங்குகிறது.
1. மார்க்ஸ் சுட்டிக்காட்டிய ஆசிய பாணி உற்பத்திமுறையை அடிப்படையாகக் கொண்டது.
2.நிலவுடைமை அடிப்படையில் அமைந்த சமுதாய அமைப்பு.
உண்மையில் இந்தக் குழப்பம் இந்தியாவைப் பற்றி மாரக்ஸின் குறிப்புகளில் உள்ள போதாமையிலிருந்தே எழுகின்றன. ஏற்கனவே சுனிதி குமார்கோஷ் பாேன்ற பலரும் இது குறித்து எழுதி உள்ளார்கள்.
நூலின் முக்கியமான அம்சம் யாதெனில் , இந்திய நிலவுடைமை குறித்த கருத்தாக்கத்தில் நிலவும் பல்வேறு முரண்பாடுகளை சுட்டிக் காட்டுவதுதான்.
இந்தியாவில் ஆசிய பாணி ஊற்பத்தியின் அடிப்படையை மறுக்கும் அதேவேளை நூலாசிரியர் இந்தியாவுக்கான தனித்துவம் வாய்ந்த நிலவுடமை தோற்றம் குறித்து நுணுக்கமாக ஆராய்கிறார்.
1.டி.டி.கோசாம்பி( பண்டைய முடியாட்சியின் இறுதிக்காலம்)
2.ஆர்.எஸ்.சர்மா(குப்தர் ஆட்சியின் தொடக்க காலம்)
3. இர்பான் ஹபீப்( இஸ்லாமியர் ஆட்சியின் தொடக்க காலம்)
என இந்திய நிலப் பிரபுத்துவத்தின் வளர்ச்சி கட்டங்களை வரலாற்றுப் பொருள்முதல்வாத பார்வையில் அணுகுவதற்கான வழிமுறையை நூல் முன்வைக்கிறது.
ஆண்டான் அடிமைச் சமுதாயத்தில் இந்தியாவின் தனித்துவமான போக்கையும், அது மாற்றமடைந்து நிலப்பிரபுத்துவ சமூகமாக முன்னேறுவதில் ஏற்பட்ட தாமதத்தையும், அதில் சாதியம் எனும் கருத்தாக்கத்தின் பங்களிப்பு குறித்தும் நூல் தொட்டுச் செல்கிறது.
நிலவுடைமை உறவுகளில் இந்தியாவுக்கான விசேச வேறுபாடுகளைப் பற்றி நூல் குறிப்பிடும் அதே வேளை, அத்தகு வேறுபாடுகளுக்கான புறவயக் காரணிகளை நம்பகமான வார்த்தைகளில் குறிப்பிடவில்லை.
என்றாலும் பாதகமில்லை. அதற்கான தேடலை உருவாக்குவதே இச் சிறு நூலின் வெற்றிதான்.
மேலும்,வரலாற்றியலின் தேவைகுறித்தும், அதில் இயக்கவியல் பொருள்முதல் வாதத்தின் அவசியம் குறித்தம் குறிப்பிடும் நூலின் ஆழமான முன்னுரை கவனிக்கத் தக்கது.
நூலின் முன்னுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது போல “நிகழ்காலப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு நாம் கடந்தகாலத்தில் இருந்து தொடங்க வேண்டும்.”