தேர்தலுக்கு பின் கேரளா முழுவதும் மோதல்கள் உண்டாயின. முஸ்லீம் லீக், பிஜெபி ஒரு புறமும் மறுபுறத்தில் சி.பி.எம்முக்கும் இடையில் தான் இந்த மோதல்கள் நடந்தன. இந்த மோதல்களில் சி.பி.எம்மின் இரண்டு உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். ஒரு ஆர்.எஸ்.எஸ்காரரும் கொல்லப்பட்டார். மோதல்களை தவிர்க்க வேண்டும் என்றும், அமைதியான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் சி பி எம் மாநில செயற்குழு தீர்மானம் எடுத்துள்ளது. ஆட்சியதிகாரத்தில் ஏறப்போகும் கட்சி என்ற நிலையில், இதனுடைய முதல் முயற்சி எங்களிடமிருந்து துவங்கும். ஆனால், பிஜெபியின் நடவடிக்கை ஆபத்தான ஒன்றாகவே உள்ளது. மோதல்கள் மூலம் புதிய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதே அவர்கள் லட்சியம்.
ஓ.ராஜகோபாலின் வெற்றியை கொண்டாட, எல்லா இடங்களிலும் பி.ஜெ.பி, ஆர்.எஸ்.எஸ்காரர்கள் தெருவில் இறங்கியிருந்தனர். அப்போது வெற்றி பேரணிகளை நடத்தி கொண்டிருந்த எல்.டி.எப் ஊழியர்களுடன் நடந்த சிறு சிறு உரசல்கள் நடந்தன. சில இடங்களில் இது மோதலாகவே வெளிப்பட்டது. இந்த மோதல்கள் திட்டமிட்டபடி நடந்தவை தானோ என்று, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் பேச்சின் மூலம் சந்தேகப்பட வேண்டியுள்ளது. “ நாட்டை ஆள்வது, பிஜெபி என்பதை சிபிஎம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும். ஆர்எஸ்எஸுக்கு எதிராக உள்ள மோதல்கள் தொடர்ந்தால், பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் நாங்கள் எதிர்கொள்வோம்.” என்று தான் இந்த மனிதர் அறிவித்துள்ளார்.
ஆலப்புழையில் எனது தேர்தல் வெற்றி பேரணியின் போது, பிஜெபியினர் இரண்டு முறை ஆத்திரமூட்டும் வகையில் குறுக்கே வந்து கோஷம் எழுப்பவும், கொடிகளை வீசவும் செய்தனர். மண்ணஞ்சேரியில் மோதல்களும் உண்டாயின. நிஷாந்த் என்ற மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினரின் கடையை தீக்கிரையாக்க முயற்சித்தனர். நேற்று இரவு மூன்று வீடுகளை தகர்த்து எறிந்தனர். இன்று காலையில், இப்பகுதிகளில் எல்லாம் நான் சென்று, போய் பார்வையிட்டதுடன், கட்சி ஊழியர்களை அமைதிப்படுத்தவும் செய்தேன். கண்ணார்காட்டேயில் தேசாபிமானி படிப்பகத்தின் ஜன்னல்களை எல்லாம் பிஜெபியினர் அடித்து நொறுக்கியிருந்தனர்.1944 இல் இந்த படிப்பகம் துவங்கப்பட்டது. கௌரியம்மாவின் மூத்த சகோதரர் சுகுமாரன் தலைமையில் தான் இந்த படிப்பகம் செயல்பட துவங்கியது. அன்று முதல் இன்று வரை இப்பகுதியில் இந்த படிப்பகம் ஒரு முக்கிய கலாச்சார மையமாக இந்த படிப்பகம் இருந்து வந்தது. இதற்கு எதிராக தான் ஆர்.எஸ்.எஸ் வன்முறையில் இறங்கியது. ஆர்.எஸ்.எஸிற்கு படிப்பகங்கள் மீது தனி விரோதம் உள்ளதாக நினைக்கிறேன்.
தமிழில்: Nandha Kumaran