வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கான உங்கள் முயற்சிகளில் நாங்கள் உங்களோடு இருப்போம். மனத் தைரியத்தோடு இருங்கள் என்று தற்கொலை முயற்சி மேற்கொண்ட உடுமலைப்பேட்டை கௌசல்யாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த சங்கர் மற்றும் கௌசல்யா ஆகியோர் காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, கூலிப்படையை வைத்து மார்ச் 13 ஆம் தேதியன்று சங்கரை, கௌசல்யாவின் பெற்றோர் ஆணவக் கொலை செய்தனர். தனது காதல் கணவன் படுகொலை செய்யப்பட்ட நிலையில், கணவனின் குடும்பத்தோடு தொடர்ந்து வாழ்வேன் என்று முடிவெடுத்த கௌசல்யா தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான பணிகளில் இறங்கினார். பல்வேறு அமைப்புகள் அவருக்கு உதவி செய்ய முன்வந்தன. இந்நிலையில் அவர் வியாழனன்று காலை தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை தரப்பட்டு, பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுகிறது. இதனிடையே, இதுகுறித்த தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கோவை அரசு மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கௌசல்யாவிடம், இதுபோன்ற முயற்சிகளில் இறங்க வேண்டாம். எந்த நிலையிலும் நாங்கள் உங்களோடு இருப்போம். வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கான உங்கள் பணிகளுக்குத் துணையாக நிற்போம். தைரியமாக இருங்கள் என்று குறிப்பிட்டார். மேலும், அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார்.
அப்போது, கௌசல்யா அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதன்பின் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சங்கர் கொலையான பிறகு, உறுதியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் கௌசல்யாவுக்கு உளவியல் ஆலோசனை (கவுன்சிலிங்) வழங்கினோம். அவரது படிப்பைத் தொடரும் வகையில் அதற்கான அத்தனைச் செலவுகளையும் தாங்களே ஏற்றுக் கொள்வதாக இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் அறிவித்தது. தற்போது, இத்தகைய தற்கொலை முயற்சியில் அவர் இறங்கியது வருந்தத்தக்கதாகும். கடந்த 3 ஆண்டுகளில் 82 சாதி ஆவணக் கொலைகள் தமிழகத்தில் நடந்துள்ளன.
காதல் திருமணம் செய்து கொள்வது அரசியல் சட்டத்தில் தரப்பட்டுள்ளஅடிப்படைஉரிமையாகும். அந்த உரிமையைப் பறிக்கும் வகையில் சாதி ஆணவ சக்திகள் நடந்துகொள்வதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மக்கள் நலக்கூட்டணி கண்டிக்கிறது. சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனி சட்டம் தேவை என்று கூட்டணி கோருகிறது. சாதி மறுப்புத் திருமணங்கள் செய்து கொண்டவர்களுக்கு அரசு பாதுகாப்பு தர வேண்டும் என்று அண்மையில் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. சொல்லப்போனால், சாதி மறுப்புத் திருமணங்களுக்காக காவல்துறையில் தனிப்பிரிவு தேவைப்படுகிறது என்று தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் துணை பொதுச் செயலாளர் யு.கே.சிவஞானம், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஆ.ராதிகா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நன்றி: தீக்கதிர்