ஒரு பொது எதிரியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்தால் வெற்றி உறுதி என்பது இத்தேர்தலில் நிரூபணமானது. இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதற்கு தமிழகத்தில் செயல்பட்டு வந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டு சேர்ந்து பாடுபட்டு காங்கிரஸ் அரசை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்கிய தேர்தல். அதற்குப்பின் காங்கிரஸ் கடந்த 49 ஆண்டுகளாக ஆட்சியில் அமர்வதற்கு படாதபாடு படுகிறது.
ஒன்பது ஆண்டுகள் முதல்வராக இருந்த காமராஜ் 1963ஆம் ஆண்டில் கட்சிப்பணி முக்கியம் என்று கூறி அவரே கொண்டு வந்த காமராஜ் திட்டத்தின் கீழ் முதல்வர் பதவியை விட்டு விலகினார். பின்னர் இவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவியேற்றார். அவருக்குப் பின் முதல்வரான பக்தவச்சலம் தலைமையில் காங்கிரஸ் 1967 தேர்தலைச் சந்தித்தது. மக்கள் மத்தியில் இவருக்கு செல்வாக்கும் இல்லை. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இவர் கையாண்ட அடக்குமுறை மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்புக்காளானது.
1964ஆம் ஆண்டில் கடும் உணவுப்பஞ்சம் நிலவியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். அரசின் கையாலாகாத்தனத்தை எதிர்த்து இடதுசாரிகள், திமுக ஆகிய கட்சிகள் போராட்டம் நடத்தின. மத்திய அரசின் ஆட்சி மொழி இந்தி என்ற அறிவிப்பு தமிழகத்தில் பெரும் போராட்டத்தைக் கிளப்பிவிட்டது. காவல்துறையின் அடக்குமுறையும், மத்திய அரசில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர்களின் இந்தி ஆதரவு நிலைபாடும் கடும் வெறுப்பையும், எதிர்ப்பையும் கிளப்பிவிட்டது. இந்த போராட்டம் எதிர்க்கட்சிகளை ஒற்றுமைப்படுத்தியது. தேர்தல் நெருக்கு வட்டத்தில் எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டார். இதுவும் திமுகவின் மீதிருந்த ஆதரவை அதிகரிக்க உதவியது. 1963ஆம் ஆண்டில் பிரிவினை பேசுவோர் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் வகையில் ஒரு பிரிவினைத் தடைச் சட்டத்தை நேரு கொண்டு வந்து நிறைவேற்றினார். அதையடுத்து, திமுக திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டது.
1963 ஜூன் 8,9,10 தேதிகளில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் “தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய நான்கு மொழிவழி மாநிலங்களும் இந்திய அரசுரிமை, ஒருமைத்தன்மை, அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்குள் இயன்ற அளவு கூடுதலான அதிகாரங்களைப் பெற்று நெருங்கிய திராவிடக் கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது” என்று கட்சியின் ‘குறிக்கோள்’ பகுதியில் மாற்றம் செய்யப்பட்டது.
ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தத்துவார்த்தப் போரின் காரணமாக இரண்டாக பிளவுபட்ட பின் நடந்த முதல் தேர்தல் இது. இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) என்ற பெயருடன் தொடங்கப்பட்ட கட்சி மக்களிடையே கணிசமான செல்வாக்குடன் விளங்கியது.
“இந்திரா காந்தியை தலைவராகக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு, 20 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியினர் வகித்து வந்த ஏகபோகத்தை முறிப்பதையே முதற் கடமையாக-உடனடி கடமையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதியது” என்று பி.ஆர். குறிப்பிடுகிறார். காங்கிரஸ் கட்சியின் ஏகபோகம் முறியடிக்க முடியாதது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் இருந்து அகற்ற வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இதர ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து இந்த தேர்தலைச் சந்தித்தன. இந்த தேர்தலில் திமுக, சிபிஎம், நாம் தமிழர், சம்யுக்த சோசலிஸ்ட் கட்சி, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி, இந்திய குடியரசுக்கட்சி, பிரஜா சோசலிஸ்ட் கட்சி, தமிழரசுக்கழகம், சுதந்திர கட்சி ஆகியவை உடன்பாடுகண்டு தேர்தல் களம் கண்டன. பெரியார் தலைமையிலான திராவிடர் கழகம் மீண்டும் காங்கிரசுக்கு ஆதரவு அளித்தது.காங்கிரசோடு கூட்டு சேர விரும்பிய சிபிஐ தேர்தல் நெருக்கு வட்டில் திமுக கூட்டணியில் சேர விரும்பியது. காங்கிரசை எதிர்க்க விரும்பும் சிபிஐயை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் சிபிஎம் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய தொகுதிகளை அதற்கு விட்டுக் கொடுக்க சம்மதித்தது. ஆனால் சிபிஐ ஏராளமான இடங்களைக் கோரியது. அவர்கள் கோரும் திண்டுக்கல், வேடசந்தூர், மதுரை மேற்கு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களை அவர்களுக்கு ஒதுக்காவிட்டால், தனித்தே போட்டியிடப் போவதாகவும் அறிவித்தனர். இதனால் அது தனித்து போட்டியிட்டது.
தேர்தல் முடிவுகள்
189 பொதுத்தொகுதிகள், 45 தனித்தொகுதிகள் என 234 தொகுதிகளுக்கு 1954 பிப்ரவரி 15,18,21 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 76.57 விழுக்காடு வாக்குகள் பதிவாயின. திமுக அபார வெற்றி பெற்றது. பக்தவச்சலம் அமைச்சரவையில் இருந்த அமைச்சர்களில் பூவராகன் மட்டுமே வெற்றி பெற்றார். அகில இந்திய காங்கிரஸ் தலைவரான காமராஜ் விருதுநகர் தொகுதியில் தோற்றார். 174 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 137 தொகுதிகளில் வென்றது. சிபிஎம் 22 தொகுதிகளில் போட்டியிட்டு 11ஐக் கைப்பற்றியது. சுதந்திரா(20), பிரஜா சோசலிஸ்ட் கட்சி(4), முஸ்லீக் லீக்(3), சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சி(2), சிபிஐ(2), பார்வர்ட் பிளாக்(1), சுயேச்சைகள்(2) ஆகியவை வெற்றி பெற்ற மற்ற கட்சிகளாகும். காங்கிரஸ் 232 தொகுதிகளில் போட்டியிட்டு 51 இடங்களில் வென்று மிகப்பெரும் சரிவைச் சந்தித்து ஆட்சியை இழந்தது.
நன்றி: தீக்கதிர்.