குஷ்புவால் முடிவது ஏன் மற்றவர்களால் முடியவில்லை?

LR Jagadheesan

நடிகை குஷ்பு. வடநாட்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு தொழில் வாய்ப்பு தேடி வந்தவர். அவரது ஆரம்பம் calendar girl model. அதாவது கேலண்டரின் கவர்ச்சிக் கன்னியாக புகைப்படங்களுக்கு மாடலிங் செய்வதில் ஆரம்பித்த வாழ்க்கை சினிமா நடிகையாக வளர்ந்தது. அதற்காக தமிழ்நாட்டுக்கு குடிவந்தவர் ரசிகர்கள் கோவில்கட்டிக் கும்பிட நினைக்கும் அளவுக்கு பிரபலமடைகிறார். அவரது அரசியல் பிரவேசம் திமுகவில் துவங்குகிறது. திமுகவில் சேர்ந்தது முதல் அவரை வெளியேற்ற திமுகவுக்குள் ஒரு கும்பலும், திமுகவுக்கு வெளியே ஒரு கும்பலும் முழுநேரமாக உழைத்தது. ஒரு பெண் பொதுவாழ்வில் சந்திக்கக்கூடிய அனைத்துவிதமான அசிங்கமான, தரக்குறைவான தாக்குதல்களையும் இந்த இரு தரப்பாரும் குஷ்புவுக்கு எதிராக முழுநேரம் நடத்தினார்கள். தமிழ்நாட்டு ஊடகங்களும் இதில் சேர்ந்துகொண்டன. பொறுமை இழந்தவர் திமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சிக்குள் சேர்ந்து அரசியலில் தொடர்கிறார்.

கடுமையான மனக்கசப்பு காரணமாக திமுகவில் இருந்து விலக நேர்ந்த பின்னரும் திமுக தலைவரைப்பற்றியும் அந்த கட்சியைப்பற்றியும் இந்த நிமிடம் வரை அவர் எதிர்வினைகள் அதிகபட்ச கண்ணியத்துடனே அமைந்திருக்கின்றன. அதைத்தாண்டியும் குஷ்புவின் அரசியல் பேச்சுக்களில் கடுமை இருக்கும். விமர்சனம் இருக்கும். எதிர்தரப்பின் மீது தாக்குதல் இருக்கும். ஆனால் கண்ணியக்குறைவு இருந்ததில்லை. ரசக்குறைவான சொற்கள் இருந்ததில்லை. தனிப்பட்ட இழிவான தாக்குதல்களோ தனிமனித அந்தரங்கத்தை மேடையேற்றும் அசிங்கமோ இருந்ததில்லை. அதுவும் தனக்கு எதிரான தரக்குறைவான தனிமனித தாக்குதலை அனுதினமும் சந்தித்த பிறகும்கூட அவரால் எப்படி இந்த நிதானத்தை கடைபிடிக்க முடிகிறது? அதுவும் தமிழைக்கூட இன்னமும் சிரமப்பட்டு உச்சரிக்கும் ஒரு வடநாட்டுப்பெண் நடிகையால் எப்படி இது சாத்தியமாகிறது?

பெரியாரின் பேரன்கள், திராவிட இயக்கத்திலேயே ஊறித்திளைத்தவர்கள், அண்ணாவால் ஆகர்ஷிக்கப்பட்டவர்கள், காமராஜரை தொழுபவர்கள், பிரபாகரனை பின்பற்றுபவர்கள், இன்னும் இப்படியான “குலப்பெருமை, குணப்பெருமைகள்” எல்லாம் தமக்கு இருப்பதாக பீற்றிக்கொள்ளும் ஆண் அரசியல் ஆளுமைகள் நினைத்த மாத்திரத்தில் எதிரியின் ஜாதியையும் அவர் வீட்டுப்பெண்ணின் சீலத்தையும் சந்திக்கு இழுத்து இழிவாய் பேசும் தமிழக அரசியல் சூழலில் குஷ்புவால் மட்டும் எப்படி இது சாத்தியமாகிறது? அதுவும் அவர் விரும்பி சேர்ந்த கட்சிக்காரர்களே அவரை அதிகபட்ச இழிவாக நடத்தி விரட்டிய பின்னரும் கூட அவரால் எப்படி பதிலுக்கு அவர்களின் தரத்துக்கு இறங்காமலே அரசியலில் தொடர்ந்தும் பயணிக்க முடிகிறது? ஒருவரின் உண்மையான தராதரம் என்பது உள்ளிருந்து சுரப்பது. வெளிப்பூச்சுக்களால் வடிவமைக்கப்படுவதில்லை.

குஷ்பு என்னும் முன்னாள் கவர்ச்சிக் கன்னியிடம் அது இயல்பாகவே இருந்திருக்கிறது. அது அப்படியே அரசியலிலும் நீடிக்கிறது. ஆனால் ஆனப்பெரிய (ஆண்) தமிழகத்தின் அரசியல் ஆளுமைகளால் அத்தகைய குறைந்தபட்ச நாகரிகத்தையும் கண்ணியத்தையும் ஏன் அரசியலில் கடைபிடிக்க முடியவில்லை?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.