இதில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழக அரசின் முத்திரையாக திருவள்ளுவர் படம் பொறித்த முத்திரையும், தமிழ்நாட்டு கொடியாக சேர, சோழ, பாண்டியர்களின் கொடியான மீன், புலி, வில்அம்பு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக தலைநகர் ஐந்தாக பிரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சென்னை, திருச்சி, கோவை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய ஐந்து நகரங்கள் இதில் அடங்கும்.
இதில் திரைகலை, துறைமுகம், கணினி தொழில்நுட்பத்தின் தலைநகராக சென்னை விளங்கும். செயலாண்மை வசதிக்கான தலைநகராக திருச்சியும், தொழில் வர்த்தக தலைநகராக கோவையும், மொழி கலை பண்பாட்டுக்கான தலைநகராக மதுரையும், தமிழர் மெய் இயலுக்கான தலைநகராக கன்னியாகுமரியும் விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் அன்பான சர்வாதிகாரன் என்ற திட்டம் சர்ச்சையை எழுதியுள்ளது.
அரசியல் விமர்சகர் த. கலையரசன்,
“தமிழ்நாட்டில், நாம் தமிழர் கட்சி ஆட்சி நடத்தினால், அது சர்வாதிகார ஆட்சியாகத் தான் இருக்கும் என்பதை வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள். செயற்பாட்டு வரைபில் இது குறிப்பிடப் பட்டுள்ளது. தமது சர்வாதிகார ஆட்சிக்கு உதாரணமாக லீகுவான்யூவின் சிங்கப்பூரை காட்டுகிறார்கள்.
“தன்னலமற்ற”, “அன்பான” சர்வாதிகாரம் என்று சொல்லிக் கொண்டாலும், அது முதலாளித்துவ வர்க்க நலன் சார்ந்தது தான் என்பதில் ஐயமில்லை. அதை நாம் தமிழர் கட்சி மறைக்கவில்லை. “எல்லோரும் முதலாளிகள் ஆகலாம்” என்றும் ஆசை காட்டுகிறார்கள். இது ஏற்கனவே பல முதலாளித்துவ ஆதரவாளர்களிடம், கேட்டுக் கேட்டு புளித்துப் போன வாதம்.
“ஒரு நிறுவனத்தின் பங்கு வாங்கி வைத்திருக்கும், ஒரு தனி நபரும் முதலாளி தான்!” இந்தக் காலத்தில், அந்தக் கூற்றை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளும் அளவிற்கு காலம் மாறி விட்டது. ஆனால், புதிய மொந்தையில் பழைய கள் மாதிரி, நாம் தமிழர் கட்சி அதனை தமது செயற்பாட்டு வரைவில் எழுதியுள்ளது” ந்ன் தெரிவித்திருக்கிறார்.