இந்தியாவில் பில்லியனர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு; என்ன காரணம்? பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா எழுதுகிறார்

பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

athyeya
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

பணக்காரர்கள் மீது வரியும் போடமாட்டோம், பொதுத்துறை பங்குகளையும் சகாய விலையில் அவர்களிடம் ஒப்படைப்போம் என்ற அரசின் கொள்கை பொதுத்துறையை பற்றி வைத்துள்ள அணுகுமுறை இதுதான்: ‘லாபத்தில் செயல்பட்டால் விற்று விடு, நட்டத்தில் இருந்தால் மூடி விடு’

வழக்கம் போல் மத்திய நிதி அமைச்சர் ஜெட்லி பிப்ரவரி இறுதி நாள் பட்ஜெட்டை சமர்ப்பித்தார். ஆனால் இதற்கு ஒருமாதம் முன்னதாகவே, முதலாளித்துவ பத்திரிகைகளிலும் தொலைக் காட்சி மற்றும் சமூக ஊடகங்களிலும் இந்த பட்ஜெட் எப்படி இருக்கவேண்டும் என்று பல ஆலோசனைகள் பெருமுதலாளிகள் சார்பாக முன்வைக்கப்பட்டன. பொதுவாக அவை அனைத்துமே (இதுவும் வழக்கம்போல் தான்!) உணவு எரிபொருள் மற்றும் உரமானியங்கள் வெட்டப்பட வேண்டும், பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்கப்படவேண்டும், கார்ப்பரேட்டுகளுக்கு வரி சலுகைகள் தரப்படவேண் டும் என்ற பாணியில் இருந்தன. ஓரிருவர் அரசு முதலீடுகளை மேற்கொண்டு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வேண் டும் என்று சொன்ன பொழுதும், இதற்கான வளங்களை வரி விதித்து திரட்டக்கூடாது என்றும் மானியங்களை வெட்டியே வளங்கள் திரட்டப்படவேண்டும் என்றும்கூறினர். ஜெட்லியின் பட்ஜெட் இத்தகைய எதிர்பார்ப்புகளை நிறைவு செய்வதாகவே, பெருமுதலாளிகள் மற்றும் அந்நிய நிதி மூலதனத்தை தாஜா செய்வதாகவே அமைந்துள்ளது.

வரி விதிப்பு : வரி ஏய்ப்போருக்கு அழைப்பு

பாஜக அரசின் மூன்றாம் பட்ஜெட் இது. தங்களது தேர்தல் பிரச்சாரத்தில் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் வங்கிக் கணக்குகளிலும் வேறுவகைகளிலும் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் பல லட்சம் கோடி ரூபாய்களை இந்தியாவிற்கு திருப்பிக் கொணர்ந்து, ஒவ்வொரு வாக்காளர் வங்கிக் கணக்கிலும் பல லட்சம் ரூபாய் போடுவது என்ற வாக்குறுதியை மோடி துவங்கி அனைத்து பாஜக தலைவர்களும் தேர்தல்மேடைகளில் உரக்க முழங்கினர். ஆனால் தேர்தல் முடிந்து சில மாதங்களிலேயே அடிக்கடி நம்மை எல்லாம் பாகிஸ் தானுக்குப் போகச்சொல்லிவரும் பாஜக தலைவர் அமித் ஷா இந்த வாக்குறுதியின் குட்டை உடைத்துவிட்டார். ஒரு பேட்டியில், `தேர்தலில் தரப்பட்ட இந்த வாக்குறுதி “ஜூம்லா” தான் – அதாவது, ஒரு பேச்சுவழக்காக சொல்லப்பட்டது தான் – இதை யெல்லாம் அமல்படுத்திட முடியாது’ என்று மிகத்தெளிவாக கூறிவிட்டார்.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் அமித் ஷாவிற்கு ஒருபடி மேலே போய், ஜெட்லி ‘மறைத்தபணத்தை அரசிடம் ஒப்புக்கொண்டுவிட் டால், அந்த தொகையில் நாற்பத்தி ஐந்து சதமானம் வரியாக கட்டினால் போதும். மீதி பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளலாம். உங்கள் மீது எந்த வழக்கும் தொடரமாட்டோம், நீங்கள் சட்டத்தை மீறி, அதனை ஏமாற்ற முயன்றதை நாங்கள் கண்டுகொள்ளமாட்டோம். நீங்கள் வருமானத்தை வேண்டுமென்றே மறைத்துள்ள போதிலும் உங்களை தண்டிக்கமாட்டோம்’ என்று பொருள்பட தனது பட்ஜெட் உரையில் கருப்புப் பணக்காரர்களை அன்புடன் அழைத்துள்ளார். தனிநபர் வருமானத்தின் மீது வரி விதிப்பை பொறுத்தவரையில் பட்ஜெட் பெரிதாக மாற்றம் செய்யவில்லை. ஆனால் ஐந்து லட்சம் ரூபாய் அல்லது அதற் குகுறைவாக ஆண்டு வருமானம் பெறுவோருக்கு வருமான வரி ரத்து செய்யப்பட வேண்டும் என்று கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கிய ஜெட்லி, தனது மூன்றாவது பட்ஜெட்டிலும் அதை செய்யவில்லை.

அதேசமயம், தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மற் றும் தொழிலாளர்களின் வைப்பு நிதியில் இருந்து பணத்தை அவர்கள் எடுக்கும் பொழுது அதை வருமானமாக கருதி அதன் மீது வரி விதிக்கப்படும் என்று முன்மொழிந்திருப்பது உழைப்பாளி மக்க ளுக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது. கடும் எதிர்ப்பு காரணமாக இது திரும்பப் பெறப்பட்டுள்ளது. மொத்தத்தில், நேர்முக வரியான, கொடுக்கும் திறன் அடிப்படையிலான, வருமான வரி தொடர்பாக பட்ஜெட் முன்மொழிவுகளின்படி அரசுக்கு 1000 கோடிரூபாய் வருமான இழப்பு ஏற்படும் என்று ஜெட்லி கூறியுள்ளார். மறுபுறம், சாதாரண மக்கள் மீது கடும் சுமையாக உள்ள மறைமுக வரிகள் கலால் வரி, சுங்க வரி, சேவை வரி- ஆகியவை தொடர்பான பட்ஜெட் முன்மொழிவுகளால் அரசுக்கு ரூ.20,000 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றும் பட்ஜெட் உரை கூறுகிறது.

இதில் கவனிக்க வேண்டிய விசயம் ஒன்று உள்ளது. கார்ப்பரேட் வருமான வரி, தனி நபர் வருமான வரி, கலால் வரி, சுங்க வரி, சேவை வரி ஆகிய வரி இனங்களின் மூலம் அரசுக்கு எவ் வளவு வரி வருமானம் கிடைக்கும் என்ற மதிப்பீட்டை கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஜெட்லி கொடுத்தார். இம்முறை தனது பட்ஜெட் உரையில் இவ்வரி இனங்கள் மூலம் கிடைத்துள்ள வருமானம் பற்றிய திருத்தப்பட்ட மதிப்பீட்டை கொடுத்துள்ளார். அதன்படி, கார்ப்பரேட் வருமான வரி வசூல் பட்ஜெட் மதிப்பீட்டைவிட ரூ .18 ஆயிரம் கோடி குறைவாகவும் தனி நபர் வருமான வரி வசூல் ரூ.28 ஆயிரம் கோடி குறைவாகவும் தான் இருக்கும் என்று பட்ஜெட் உரை தெரிவிக்கிறது. ஆக மொத்தம், செல்வந்தர்களிடம் இருந்து வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட வரி வருமானத்தில் அரசுக்கு விழுந்துள்ள துண்டு 46ஆயிரம் கோடி ரூபாய். ஆனால்,கலால் வரி மூலம் பட்ஜெட்டில் கடந்தஆண்டு மதிப்பிடப்பட்டதை விட 55 ஆயிரம் கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது.

இதன் சூட்சுமம் என்ன? பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 130 அமெரிக்க டாலரில் இருந்து 30க்கு குறைந்த பொழுது மீண்டும் மீண்டும் கலால் வரியை உயர்த்தி பெட்ரோல், டீசல் விலை குறையாமல் மத்திய அரசுபார்த்துக் கொண்டது. இதனால் அரசுக்குகலால் வரி வருமானம் பட்ஜெட் மதிப்பீட்டை விட பெருமளவு கூடியுள்ளது. அதாவது, அரசின் மொத்த வரிவரு மானத்தில் மக்களை வாட்டி வதைக்கும் மறைமுக வரிகளின் பங்கு கணிசமாக கூடியுள்ளது. ஆனால் செல்வந்தர்கள் தர வேண்டிய வரி வருமானம் உரிய அளவு வரவில்லை. சென்ற ஆண்டு ஜெட்லி தனது பட் ஜெட்டில் சொத்துவரியை அறவே நீக்கி விட்டார். நூறு டாலர் சீமான்கள் கையில் தலா 1 பில்லியனுக்கு அதிகமாக சொத்து குவிந்துள்ள நாடு நமது இந்தியா. அதாவது, 130 கோடி மக்கள் வசிக்கும் இந்தியாவில் 100 பெரும் செல்வந்தர்கள் கையில் தலா ரூ.7ஆயிரம் கோடிக்கும் அதிகமாக சொத்து உள்ளது. இவர்களின் மொத்த சொத்து நாட்டின் ஆண்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட நாலில் ஒரு பங்கு. இத்தகைய நாட்டில் தான் சொத்து வரி வேண்டாம், வாரிசு வரி வேண்டாம், வருமான வரியை குறைக்கவேண்டும் என்று செல்வந்தர்கள் கூவுகின்றனர்.

அவர்கள் ஊதுகுழலாக உள்ள ஊடகங்களும் இதையே உரக்கச் சொல்லுகின்றன. மத்திய, மாநில அரசுகள் திரட்டும் மொத்த வரிப்பணத்தில் 65 சதவீதத்திற்கும் கூடுதலாக ஏழை மக்களை தாக்கும் மறைமுக வரிகளே உள்ளன. (தீப்பெட்டி வாங்கும் பொழுதும் மண்ணெண்ணெய் வாங்கும் பொழுதும் எந்த ஒருபொருளையோ சேவையையோ வாங்கும் பொழுதும் சாதாரண மக்கள் மறைமுக வரி கட்டுகின்றனர். இந்த வரி வாங்கும் பொருளின் விலையில் ஒளிந்திருப்பதால் மறைமுக வரி என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய வரிகள் அம்பானிக்கும் ஒன்றுதான் ஆண்டிக்கும் ஒன்றுதான். ஏழைகளின் வருமானம் குறைவாக இருப்பதால், ஏழைகள் மீது இவை பெரும் சுமையாக ஆகின்றன. செல்வந்தர்களுக்கு இது ஒரு கொசுக்கடிதான். வருமான வரி சலுகைகளை செல்வந்தர்களுக்கு அளித்தது மட்டுமின்றி, வரிஏய்ப்போருக்கு சாதகமாக இருப்பது மட்டுமின்றி, பட்ஜெட் வரி தொடர்பான தாவா அரசுக்கும் பணக்காரர்களுக்கும் இருக்கும்பட்சத்தில் அதனை பரஸ்பர பேரம் மூலம் பைசல் செய்துகொள்ளவும் வலியுறுத்தி, பணக்காரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அரசின் வரவு-செலவு கொள்கை

மத்திய பட்ஜெட் என்பது அடிப்படையில் மத்திய அரசின் ஒரு ஆண்டுக்கான வரவுகள் மற்றும் செலவுகள் பற்றிய மதிப்பீடுகள் தரும் அறிக்கை. இதன் அடிப்படையாக இருப்பது நாட்டின் பொரு ளாதார நிலையும் அரசின் வரவு மற்றும் செலவு தொடர்பான கொள்கைகளும் தான். அரசின் நடப்பு வரவுகளில், வரிகள் தவிர, பொதுத்துறை நிறுவனங்கள் ஈட்டும் லாபங்கள், மற்றும் அரசு தான் வழங்கும் சேவைகளுக்கு வசூலிக்கும் கட்ட ணங்களும் ஆகியவையும் சேரும். மூலதனவரவு என்பது அரசு பொதுத்துறை சொத்துக்களை விற்று பெறும் தொகையும் அரசு கடன் வாங்கி பெறும் தொகையும் தான். கடந்த ஆண்டு பட்ஜெட் சமர்ப்பித்த பொழுது பொது துறை சொத்துக்களை விற்று அரசு அறுபத்தெட்டாயிரம் கோடி ரூபாய் பெறும் என்று மதிப்பிடப்பட்டது.

ஆனால் சுமார் 25,000 கோடி ரூபாய் தான்கிடைத்துள்ளது. இந்த ஆண்டு 56,500 கோடி ரூபாய் அளவிற்கு பொதுத்துறை சொத்துக்களை விற்று பெறப்போவதாக பட்ஜெட் கூறுகிறது. இப்படி, பெரும்பன்னாட்டு, இந்நாட்டு கம்பெனிகள் மீதும் செல்வந்தர்கள் மீதும் உரிய வரி விதித்து வசூலித்து வளங்களை திரட்டு வதற்குப்பதில், மக்கள் சொத்துக்களாகிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று வருமானம் ஈட்ட முனை கிறது அரசு. கடன் மூலம் அரசின் வரவைகூட்டுவதற்கு முதலாளிகளும் பன் னாட்டு மூலதனமும் உலக வங்கி, ஐ.எம்.எப். போன்ற அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. எனவே, தாராளமயக் கொள்கைகளை பின்பற்றும் மத்திய அரசுவளங்களை திரட்டுவதற்குப்பதில், செலவுகளை குறைப்பதில் தான் அழுத்தம் அளிக்கிறது. அதிலும் உணவு, உரம், எரிபொருள் போன்ற மக்களுக்கும் வேளாண்மைக்கும் அவசியமான மானியங்களை வெட்டி செலவை சுருக்கிக்கொள்ள அரசு விழைகிறது. இது தான் இந்த ஆண்டும் நடந்துள்ளது.

அரசின் ஒதுக்கீடுகள்

ஊடகங்களில் அரசு இந்த பட்ஜெட்டில் வேளாண்மை, கல்வி, ஆரோக்கியம் ஆகிய துறைகளுக்கு மிகவும் கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளதாக பொய்பிரச்சாரம் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட் ‘வறுமை ஒழிப்பு’ பட்ஜெட் என்றெல்லாம் அபத்தமாக சொல்லப்படுகிறது, எழுதப் படுகிறது. உண்மை என்ன? சில முக்கிய தகவல்களை பார்ப்போம். வேளாண்துறைக்கு இந்த ஆண்டு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையைப்போல் இரண்டுமடங்குகும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தம்பட்டம் அடிக்கப்படுகிறது. ஆனால் வேளாண்மைமற்றும் விவசாயிகள் நலன் என்ற தலைப்பின் கீழ் முப்பத்து எட்டாயிரத்தி ஐந்நூறு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதில் விவசாயிகள் செலுத்த வேண்டிய வங்கி கடன் வட்டிக்கு அரசு அளிக்கும் மானியமும் அடங்கும்.

சுமார் 15,000 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ள இந்த மானியம் கடந்த ஆண்டும் கொடுக்கப்பட்டது. ஆனால் நிதி அமைச்சகத்தின் செலவாக அது காட்டப்பட்டது. இந்த ஆண்டு பட் ஜெட் கணக்கில் அதே தொகையை விவசாயிகள் நலன் என்ற இனத்தின் கீழ் கொண்டு வந்துள்ளனர். அவ்வளவு தான்விசயம். உண்மையில், சென்ற ஆண்டு ஒதுக்கீட்டை விட இந்த ஆண்டு வேளாண்துறைக்கான ஒதுக்கீடு சுமார் 33சதவீதம் தான் கூடியுள்ளது. விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டால் உண்மையில் அதைவிட குறைவாகத்தான் அதி கரிப்பு உள்ளது. கடும் வறட்சி, விளைப்பொருளுக்கு நியாய விலை இல்லை,நாளும் நிகழும் ஏராளமான விவசாயி களின் தற்கொலைகள் என்ற பின்புலத்தில் பார்த்தால் இந்த ஒதுக்கீடு உயர்வு, நிலவும் வேளாண் நெருக்கடியை எதிர்கொள்ள யானை பசிக்கு சோளப்பொரி என்பது தான் உண்மை. அதேபோல் ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான ஒதுக்கீடு முப்பத்தி எட்டாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய். இது கடந்த ஆண்டை விட சுமார் 10சதவீதம் அதிகம். ஆனால் சென்ற ஆண்டுக்கான கொடுபடா கூலித்தொகையே பல ஆயிரம்கோடி ரூபாய். அவற்றை கொடுத்த பிறகுமிஞ்சுவது சென்ற ஆண்டை விட பணஅளவிலும் உண்மை அளவிலும் குறைவாகவே இருக்கும்.

அது மட்டுமல்ல. 2009-10 ஆம் ஆண்டிலேயே இத்திட்டத் திற்கு, நாற்பதாயிரம் கோடி ரூபாய் ஒதுக் கப்பட்டது. இன்றைய விலைவாசியில் அதன் மதிப்பு 63,000 கோடி ரூபாயாகும். உண்மையில், மக்கள் இடதுசாரிகள் தலைமையில் போராடிப்பெற்ற ரேகா திட்டத்தை பாஜக அரசு தொடர்ந்து வெட்டிச் சுருக்கி வருகிறது. இதை வெளிப்படையாகவே நிதி அமைச்சகத்தின் 2014 நடு ஆண்டு பொருளாதார பரிசீலனை அறிக்கை கூறுகிறது. கல்வி, ஆரோக்கியம், குழந்தைகள் நலன் என்று ஒவ்வொரு சமூக நலத்துறையிலும் இது தான் கதை. பெண்கள் மற்றும் சமூக நலத்துறையின் ஒதுக்கீடு சென்றஆண்டைவிட குறைந்துள்ளது. ஆரோக்கியத்தை பொறுத்தவரையில், அரசே மக்களுக்கு மருத்துவ வசதிகளை உறுதிபட அளிப்பதற்குப் பதிலாக, காப்பீட்டு ஏற்பாடுகள் மூலம் மக்கள் தனியார் மருத்துவ மனைகளுக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் அதிகம் பயனடைவது தனியார் மருத்துவத்துறையும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் தான். அதிலும் கூட ஒதுக்கீடு மிகக் குறைவாகவே உள்ளது. அடுக்களை புகையிலிருந்து பெண்களை விடுவிப்பதாக தம்பட்டம் அடிக்கும் அமைச்சர், ஏழை மக்களுக்கு எரிவாயு இணைப்புக்கு வெறும் 2000 கோடி ரூபாய்ஒதுக்கி இருப்பது அரசின் அணுகு முறையை அம்பலப்படுத்துகிறது. அதேசமயம், உணவு மானியமும், உரமானிய மும் இரண்டும் சேர்ந்து 7000 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற அடிப்படையில் நாம் வேறு சில அம்சங்களுக்குச் செல்லலாம். .

பட்ஜெட்டும் பொருளாதார வளர்ச்சியும்

தனது பட்ஜெட் உரையில் பன்னாட் டுப் பொருளாதாரம் மந்தமான நிலையில் இருந்தும் இந்தியா சிறந்த வளர்ச்சி பெற்றிருப்பதாக நிதி அமைச்சர் மார் தட்டிக்கொள்கிறார். உண்மையில் இவர் தரும்வளர்ச்சி விகிதப் புள்ளி விவரங்களைப் பற்றி அரசின் அங்கமாக செயல்படும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அடிப்படை ஆண்டு மாற்றம், மறைமுக வரிகளைக் கூட்டி சந்தை விலைகள் அடிப்படையில் உற்பத்தி மதிப்பை கணக் கிடுதல், கணக்கிடும் வழிமுறைகளில் பல மாற்றங்கள் இவையெல்லாம் அரசின்வளர்ச்சி “சாதனை” யின் பின் உள்ளன. இவை ஒரு புறமிருக்க, மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது, பன்னாட்டு சந்தையில் பெட்ரோலியம் கச்சா எண் ணெய் விலைகள் பெருமளவிற்கு சரிந்ததால், அயல் வர்த்தகத்தில் அந்நியச் செலாவணி பற்றாக்குறை பிரச்சனை எழ வில்லை என்பது தான். வரும் ஆண்டில் கச்சா எண்ணெய் விலைகள் உயரக் கூடும் என்பதும் அமெரிக்க மத்திய வங்கி வட்டிவிகிதங்களை உயர்த்தவுள்ளது என்பதும் கூடுதல் சவால்களாக அமையும். பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான அம்சம் இந்த வளர்ச்சியின் தன்மை. அரசுதரும் புள்ளி விவரப்படியே, வேளாண் துறை வளர்ச்சியும் தொழில் வளர்ச்சியும் மிக மந்தமாக உள்ளன. வேலை வாய்ப்புகள் மேலும் சுருங்கி, கடும் வேலையின்மை நிலவுகிறது. விவசாயிகள் தற் கொலை முடிவின்றி தொடர்கிறது. சட்டப்படி ஒவ்வொரு கிராம குடும்பத்திற்கும் ஆண்டுக்கு நூறு நாள் வேலை தர வேண்டிய சட்ட நிபந்தனை இருந்தும் சராசரி ரேகா வேலை நாட்கள் நாற்பதுக்கும் கீழே உள்ளன. பல ஆயிரம் கோடி ரூபாய்கூலி பாக்கி வைக்கப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் மறைத்துவிட்டு, வளர்ச்சி பற்றி பேசப்படுகிறது.இதுமட்டுமல்ல. பன்னாட்டு சூழல் மேலும் மந்தமாகும் என்று தனது பட்ஜெட் உரையில் குறிப்பிடும் அமைச்சர் தனது பட்ஜெட்டில் அரசின் ஒட்டுமொத்த ஒதுக்கீடுகளை போதுமான அளவு உயர்த்தியுள்ளாரா என்றால் இல்லை.

மாறாக, அரசின் நிதிப்பற்றாக்குறையை கட்டுக்குள் வைக்கவேண்டும் என்ற தாராளமய தாரகமந்திரத்தை முன்வைத்து முதலீடுகள் உள்ளிட்ட அரசின் செலவுகள் சுருக்கப்பட்டுள்ளன. நிதிப்பற்றாக்குறை என்பது அரசின் மொத்த செலவுகளில் இருந்துகடன் அல்லாத வரவுகளைக் கழிப்பதால் கிடைக்கும் தொகை. இதனை குறைப்பதை இலக்காக ஆக்குவதன் பொருள்எ ன்னவெனில், நாட்டு வளர்ச்சிக்கு அரசு கடன் வாங்கி முதலீடுகளை மேற்கொள்ளக்கூடாது என்பதாகும். முதலீடுகளை லாப நோக்கு அடிப்படையில் முதலாளிகள் செய்யட்டும், தொழிலாளிகளை கட்டுப்படுத்தி, அவர்கள் உரிமைகளை மறுத்து, சட்டம்- ஒழுங்கை முதலாளிகள் சார்பாக அரசு பாதுகாக்கட்டும் என்பது தான் தாராளமயத்தின் அடிப்படை வர்க்கஅரசியல். நமது வாதம் அரசு கடன் வாங்கித்தான் முதலீடு செய்ய வேண்டும் என்பது அல்ல. முறையாக பெரும் கம்பெனிகள், செல்வந்தர்கள் மீது வரி விதித்து வசூல் செய்தாலே, அரசு கட்ட மைப்புகளை மேம்படுத்தவும், கல்வி, ஆரோக்கியம் ஆகிய துறைகளை வலுப்படுத்தவும் கூடுதல் முதலீடுகளை மேற்கொள்ள முடியும். அதற்குப் பதிலாக, பொதுத்துறை பங்குகளை அடிமாட்டு விலைக்கு பெருமுதலாளிகளுக்கு விற்று தனது செலவுகளை அரசு செய்துகொள்கின்ற தாராளமய அணுகுமுறை தான் பட்ஜெட்டில் தொடர்கிறது.

கடந்த ஆண்டிலும் இதே தான் செய்யப்பட்டது. பணக்காரர்கள் மீது வரியும் போட மாட்டோம், பொதுத்துறை பங்குகளையும் சகாய விலையில் அவர்களிடம் ஒப்படைப் போம் என்ற அரசின் கொள்கை பொதுத்துறையை பற்றி வைத்துள்ள அணுகு முறை இதுதான்: “ லாபத்தில் செயல்பட் டால் விற்று விடு, நட்டத்தில் இருந்தால் மூடி விடு ” கட்டமைப்பு முதலீடுகள் பற்றி பட்ஜெட் உரை பேசுகிறது. ஆனால், கடந்த ஆண்டு அரசின் மூலதனச்செலவு தேச உற்பத்தியில் 1.8 சதவீதமாக இருந்தது, இந்த ஆண்டு 1.6 சதவீதமாக ஆக குறைக்கப்பட்டுள்ளது. கட்டமைப்பை கட்டும் பாணி பொது – தனியார் இணை பங்கேற்பு என்ற முறையில் நடத்தப்படும். இது பெரிய கம்பெனிகள் கொள்ளை லாபம் ஈட்ட உதவுமே தவிர அரசின் பணம் முறையாக, மக்களுக்குப் பயன்தரும் வகையில் செலவிடப்படுவதை உத்தரவாதம் செய்யாது.இறுதியாக ஒருவிசயம். மத்திய, மாநில உறவுகளில் சமஷ்டி போக்கை கடைப்பிடிப்பதாக சொல்லிக்கொள்ளும் பாஜகஅரசு, தொடர்ந்து மாநிலங்களின் வரி வருவாய்களை குறைத்துவருகிறது. வருமான வரிகளில் அரசு செல்வந்தர்களுக்கும் பெரும் கம்பெனிகளுக்கும் அளிக்கும் சலுகைகள், மாநிலங்களின் வரி வரு மானத்தை பாதிக்கிறது. பதினான்காவது நிதி ஆணையம் பகிரப்படும் வரி தொகையில் மாநிலங்களின் பங்கை அதிகரித் துள்ள போதிலும், சர்ச்சார்ஜ், செஸ் போன்றவழிகளில் மாநிலங்களுடன் பகிராத வகையில் மத்திய அரசு தனது வரிப்பங்கைகூட்டிக் கொள்கிறது.

திட்ட அடிப்படை யிலான மாநில ஒதுக்கீடுகள் குறைந்துள்ளதால், நிகரமாக மாநிலங்கள் பெரும் வரவு தேச உற்பத்தியின் சதவிகிதமாக பார்த்தால் குறைந்து வருகிறது. மாநில முதலாளித்துவ கட்சிகள் இதை எதிர்த்து வலுவாக குரல் கொடுப்பதில்லை.மொத்தத்தில் “அச்சே தின்“ என்ற நல்ல நாட்கள் கருப்புப் பணக்காரர்கள், வரி ஏய்ப்போர், பன்னாட்டு, இந்நாட்டு பெரும் கம்பெனிகள், கோடி டாலர் கனவான்கள், அந்நிய மூலதனம் ஆகியோருக்கு மட்டுமே தொடரவுள்ளன.

நன்றி: தீக்கதிர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.