திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கீழவடகரையைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவரது மகன் செந்தூர்பாண்டியன் (30). கேரளாவில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கும், புளியங்குடி அருகே உள்ள கீழதிருவேட்டநல்லூர் காலனியைச் சேர்ந்த ஈஸ்வரன் மகள் முத்துராணிக்கும் (23)கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம்நடந்தது. செந்தூர்பாண்டியனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் தினமும் குடித்து விட்டு வந்து முத்துராணியை கொடுமைப் படுத்துவாராம்.
ஊர்ப்பெரியவர்கள் செந்தூர்பாண்டியனை கண்டித்தும் அவர் திருந்தாததால் முத்துராணி சில நாட்களுக்கு முன் பெற்றோர் வீடான திருவேட்டநல்லூருக்கு வந்து விட்டார். இந்நிலையில் செவ்வாயன்று கேரளாவிலிருந்து செந்தூர்பாண்டியன் ஊருக்கு வந்தார். பின்னர், திருவேட்டநல்லூர் வந்த அவர் புதனன்று அதிகாலை ஐந்து மணிளவில் முத்துராணியின் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் முத்துராணியின் தாய் சுப்புலட்சுமி (47), தங்கை முத்துப்பிரியா(21), அண்ணன் முத்துக்குமார் (31), அக்காள் மாலதி (29),அவரது கணவர் பூவையா (31), பூவையா மகள் சுபாஸ்ரீ (8), மகன் சுதர்சன பிரபு (7) ஆகிய ஏழு பேரும் தூங்கிக் கொண்டிருந்தனர். முத்துராணி இராஜபாளையம் மில்லுக்கு இரவுப்பணிக்குச் சென்றுவிட்டார்.
இந்நிலையில் செந்தூர்பாண்டியன், முத்துராணியின் வீட்டின் முன்புறக் கதவைத் தள்ளியுள்ளார். உட்புறமாக கதவு பூட்டப்படாததால் கதவு திறந்துகொண்டது. இதைத் தொடர்ந்து தாம் கேனில் வாங்கி வந்திருந்த பெட்ரோலை அறைக்குள் ஊற்றிதீயை பற்ற வைத்துள்ளார். பின்னர் கதவை வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். சில வினாடிகளில் வீட்டுக்குள்ளிலிருந்து அலறல் சத்தம் கேட்கவே பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் ஓடிவந்து கதவைத் திறந்து ஏழு பேரையும் தீக்காயங்களுடன் மீட்டனர்.
அவர்கள் அனைவரும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். செல்லும் வழியிலேயே சுப்புலட்சுமி பலியானார். ஆபத்தான நிலையில் இருந்த முத்துப்பிரியா (21), முத்துக்குமார் (31), பூவையா (31), சுபாஸ்ரீ (8)ஆகிய நான்கு பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்குதீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் சுபாவும், முத்துக்குமாரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். மாலதி, சுதர்சனபிரபு ஆகியோர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்ததும் திருநெல்வேலி காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தப்பியோடிய செந்தூர்பாண்டியனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தீக்கதிர்