இந்திய விவசாயத்தில் உணவு தானியத்திற்கான விவசாயம் பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதனால் அதற்கு மாற்றாக மரபணு மாற்றுப்பயிர்கள் குறித்த பரிசோதனைகளை 6 மாதங்களுக்குள் முடித்துநாடு முழுவதும் விரிவாக அமல்படுத்தப்படும் எனவும் மோடி அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தீக்கதிர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் வந்துள்ள தகவல்கள்…
பல ஆண்டுகளாக பெரும்பான்மையான இந்திய விவசாயத்தில் உணவுக்கான உற்பத்தியே நடந்து வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மட்டும் பணப்பயிர்களும் ஆடம்பரப் பயிர்களும் நமது விவசாயத்தில் திணிக்கப்பட்டன. இதன் விளைவாக கடுமையான நட்டமும், பஞ்சமும் வறட்சியும் ஏற்பட்டதால் பல மாநிலங்களில் இவ்விவசாயம் பரவலாக கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. அதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த பாரம்பரிய விவசாய முறைகளான ஏர்பூட்டி உழுதல்,பாரம்பரிய விதைகள், உரங்கள் ஆகியவை நீக்கப்பட்டு டிராக்டர்கள் மூலம் உற்பத்தியை அதிகரிக்க, இராசயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் மற்றும் புதிய ரக விதைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. இது விவசாயத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது. விவசாய நிலங்கள் இராசயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளால் நஞ்சாகிப் போகின. இதன்பின்னர் உலகமயமாக்கல் மற்றும்புதிய தாராளமயக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டபின்னர் மரபணு தொழில்நுட்ப புரட்சி என்ற பெயரில் மரபணுரீதியாக மாற்றி அமைக்கப்பட்ட விதைகள் அறிமுகப் படுத்தப்பட்டன.
இவை உலகளவிலான உணவு கார்ப்பரேட்டுகளால் உற்பத்தி செய்யப்பட்டவையாகும். இவை மறுஉற்பத்தி செய்யாத மலட்டு விதைகள் மட்டுமின்றி அந்தவிதைகளில் சேர்க்கப்படும் பூச்சி கொல்லிகளால் நிலம் மற்றும் மற்ற தாவரங்களும் நஞ்சாகி விடுகின்றன. இந்த அடிப்படையில் பி.டி. பருத்தி, தக்காளி, கத்திரிக்காய் மற்றும் சோயா பீன்ஸ் ஆகியவற்றினால் விவசாயிகள் கடும் நட்டத்திற்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் சமீபத்தில் மரபணு கடுகு விதைகளை களப்பரிசோதனையின்றி அறிமுகப்படுத்த மோடி அரசு முயற்சி செய்தது கடுமையான எதிர்ப்புக்குள்ளானதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மோடி அரசினால் நாடாளுமன்றத்தில் வெள்ளியன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில், அப்படியே தலைகீழாக பசுமைப்புரட்சி பற்றி விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை நடந்துள்ள விவசாயத்தின் வெற்றிதான் அதன் பாதிப்புக்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, இந்திய விவசாயம் உணவு தானிய விவசாயமாக இருந்ததினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய விவசாயம் குறித்த கலப்படமில்லாத பொய்களை கூறியுள்ள ஆய்வறிக்கை, உணவுதானிய விவசாயத்தைக் கைவிட்டு மாற்றாக விவசாயத்தில் பெரும் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த மாற்றம் என்பது மரபணு மாற்றுப் பயிர்களை 6 மாதத்திற்குள் அறிமுகப்படுத்துவதுதான் என்றும் குறிப்பிட்டுள்ளது.மிகக் குறைவான இடுபொருள்கள், குறைவான நீர்த்தேவை உடைய தானிய உற்பத்தி எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி நடக்க வேண்டும்; அப்போதே உணவுக்கான பற்றாக்குறை தீர்க்கப்படும். அதற்கு ஒரே வழி இன்றை உணவுக்கான விவசாய முறைகளை பெருமளவில் மாற்றி மரபணு விவசாய முறைகளை, அதற்கான அச்சங்களை போக்கி, 6 மாதங்களுக்குள் நாடு முழுவதும் அறிமுகப்படுத்துவதுதான் என்றும் கூறப்பட்டுள்ளது. மரபணு மாற்று முறை பயிர்களே அதிகலாபம்அளிக்கும் என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளதாகக் கூறியுள்ள ஆய்வறிக்கை, இம்முறையால் மட்டுமே விவசாயத்திற்கான சந்தை விரிவடையும், ஏற்றுமதியும் அதிகரிக்கும்; எனவே மரபணு மாற்று பயிர்களுக்கான பரிசோதனைகளை விரைவு படுத்தப்பட வேண்டும். தற்போதைய மரபணு மாற்று பயிர்களுக்கான மதிப்பீட்டு ஒழுங்குமுறை அமைப்பிலும் ‘சீர்திருத்தங்கள்’ மேற்கொள்ளப்பட்டு இது தொடர்பான அச்சங்கள் போக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.மோடி அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் விவசாயம் குறித்த பார்வை மிகவும்அச்சத்தை தருவதாக உள்ளது. அது விவசாயத்தை அழித்து பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான மரபணு மாற்று பயிர்களை நாடு முழுவதும் திணிக்க முயற்சிப்பதாக உள்ளது.