“லூப்பு தரான் சரிதானா? போடலன்னா விடுறானா”:குடும்பக் கட்டுப்பாட்டை எதிர்த்தார்களா கம்யூனிஸ்டுகள்?

தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கத் தலைவர் மணி மதிவண்ணன்,  திமுக குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தியபோது, அதை கம்யூனிஸ்ட்டுகள் கடுமையாக எதிர்த்ததாக தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு எழுதியிருந்தார்.

“மேற்கு வங்கச் செயல்பாடுகளை வைத்து கம்யூனிஸ்டுகளை விமர்சிப்பது ஒருபுறம் இருக்கட்டும். தமிழ்நாட்டுச் செயல்பாடுகளைப் பார்ப்போமா? புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி புரட்சிக் கலைஞர் இவர்களை தமிழ்நாடு முழுக்க பரப்பியதிலும் வளர்த்து விட்டதிலும் அன்னாருக்கு என்ன பங்கு? தமிழ்நாட்டின் முன்னேற்றத்திலும் நல்வாழ்விலும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்திற்கு முக்கியமான இடமுண்டு. அதை வெற்றிகரமாக்கியதில் திராவிட இயக்கத்திற்கு முக்கியமான பங்குண்டு.

கருணாநிதி எம்.ஆர்.ராதா கூட்டில் வெளிவந்த இருவர் உள்ளம் படம் நல்ல உதாரணம். அதைக் கூட கிண்டல் செய்த பிற்போக்குத்தனம் நம்முடைய கம்யூனிஸ்டு நண்பர்களுடையது. பாவலர் வரதராஜன் கம்யூனிஸ்டு மேடைகள் தோறும் லூப்பு தரான் சரிதானா மாடடிக்கலேன்னா விடுறானா எனப் பாடினார். தமிழ்நாடு இன்றைக்கு கொஞ்சம் முன்னேறிய மாநிலமாய் இருப்பதற்கு மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்தியதே காரணம். அதையும் கெடுக்கப் பார்த்த கம்யூனிஸ்டுகளின் செயல் சரிதானா அவர்கள் திரும்பிப் பார்க்கா விட்டால் போகிறது. நாம் அதை எப்படி மதிப்பிடுகிறோம்?” என்ற மணி மதிவண்ணனின் கருத்துக்கு, எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா  ஒரு விளக்கம் அளித்திருந்தார்.

எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா
ஆதவன் தீட்சண்யா

“மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தினால் நாடு முன்னேறிவிடும் என்பதும் ஒரு மூடநம்பிக்கைதான். இதற்காக ஆட்சியாளர்கள் கருத்தடைச் சாதனங்களையும் கொடுத்தார்கள், காயடிக்கவும் துணிந்தார்கள். அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் “கேஸ்” பிடிக்க மாதாந்திர இலக்கு நிர்ணயித்து விரட்டினார்கள். இந்திரா காந்தியும் அவரது மகன் சஞ்சய் காந்தியும் திருமணமாகாத இளைஞர்களுக்கும் கூட கட்டாய குடும்பக் கட்டுப்பாடு செய்தார்கள். இஸ்லாமியர்கள் குறிவைக்கப்பட்டார்கள். இதன் பொருட்டு நடந்த மனித உரிமை மீறல்கள் உலகளாவிய கண்டனத்தைப் பெற்றது. திட்டமிட்ட குடும்பம் தெவிட்டாத இன்பம் என்கிற முழக்கம் மக்களின் மீது ஒரு வன்முறை போல ஏவப்பட்ட காலத்தில், “லூப்பு தரான் சரிதானா? போடலன்னா விடுறானா” என்று பாடுகிறார் பாவலர் வரதராஜன். அப்பட்டமான இடதுசாரி எதிர்ப்பை யாருக்கோ எதன்பொருட்டோ சமிக்ஞை போல தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்கும் மதிவண்ணன் போன்றவர்கள் இதிலென்னவோ பிற்போக்கை கண்டுபிடித்து கதறுகிறார்கள்” 

இந்த விளக்கத்துக்கு மணி மதிவண்ணனின் கேள்வி,

மணி மதிவண்ணன்
மணி மதிவண்ணன்

“ எமர்ஜென்சி கட்டாயக் கருத்தடைக் காலம் 1976 செப்டம்பர் என்று படித்திருக்கிறேன். பாவலரின் அந்தக் குறிப்பிட்டப் பாடல் 1969இல் வெளிவந்த ஆராதனா படப் பாடலின் மெடடில் என்பதால் அதை ஒட்டிய வருடங்களில் இருந்திருக்க வேண்டும். இளைய ராஜாவின் அன்னக் கிளி 1976. பாவலர் அப்போது உயிருடன் இல்லை என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன். பிறகெப்படி எமர்ஜென்சி கட்டாயக் கருத்தடையை எதிர்த்துப் பாடியிருக்க முடியும்? மற்றபடி சமிக்ஞை கதறல் என்பதெல்லாம் நண்பனின் சின்னப் பிறாண்டல் என எடுத்துக் கொள்கிறேன்.”

 ஆதவன் தீட்சண்யா,

“1.தமிழகத்தைப் பொருத்தவரை தி.மு.க. அரசின் குடும்பக் கட்டுப்பாட்டை எதிர்த்துவந்த ஆதித்தனார் அரசியல் ஆதாயத்திற்காக அதை ஆதரிக்கத் தொடங்கினார். இதை பகடி செய்யவே பாவலர் “”லூப் தர்றான் – சர்தானா மட்டலனா விட்றனா- ஆதித்தனாரு போதித்ததென்ன -போதித்தபின்னே சாதித்ததென்ன” என்று பாடினார். ஒரு கருத்து வெளிப்படும் காலத்தை இணைத்துப் பார்க்காமல் தேவைப்பட்ட வரிகளை வைத்துக்கொண்டு விமர்சிப்பது சரிதானா?

2. பாவலர் 1973 இறுதியில் காலமாகிவிட்டார்.

3. எமர்ஜென்சி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதுதான் 1975 ஜூன் 26. அவர்களது அட்டூழியங்கள் அதற்கும் முன்பாகவே தொடங்கிவிட்டன.

கருத்தடைச் சாதனங்களை பயன்படுத்துவதன் சாதகபாதகங்களை அறிவியல்பூர்வமாக விளக்காமல் திணித்ததன் தொடர்ச்சியாக கட்டாய க்கருத்தடை வந்து சேர்ந்தது. சஞ்சய் காந்திக்கு இருந்த இஸ்லாமிய வெறுப்பை சங் பரிவாரங்கள் பயன்படுத்திக்கொண்டன. இப்போதுகூட இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் கட்டாயக் கருத்தடை செய்யவேண்டும் என்று கொக்கரிக்கிறார்கள். இதையும் முற்போக்கு என்று ஆதரிக்கும் நிலைக்குப் போய்விட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்” என்று முடித்திருக்கிறார்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.