“என் புள்ளங்க, ‘அப்பா… பசிக்குதுன்னு’ கேட்டு அழுவுதுங்க.. பால் வாங்கிக் குடுக்க காசில்ல.. பிச்சையெடுக்க மனசில்ல..” நாகராஜின் வாழ்க்கையை படியுங்கள்!

வினவு

நாகராஜ் திருப்பூரைச் சேர்ந்த ஒரு தொழிலாளி, முன்னாள் குடி அடிமை, பள்ளிக்குச் செல்லும் இரண்டு குழந்தைகள் உண்டு. “குடி அடிமை” என்கிற இரண்டே இரண்டு வார்த்தைகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் எவ்வளவு தெரியுமா? தான் சம்பாதித்த கூலி அத்தனையையும் குடித்தே தீர்ப்பது நாகராஜின் வழக்கம். இதன் காரணமாக மனைவியோடு தொடர்ந்து சண்டை.

நாகராஜின் குடிப்பழக்கத்தை எத்தனை போராடியும் மனைவியால் நிறுத்த முடியவில்லை. ஒரு நாள் வழக்கம் போல கையிலிருந்த கூலிக் காசு மொத்தத்திற்கும் குடித்து விட்டு வந்து வீட்டுக்குள் நினைவிழந்து விழுந்துள்ளார். வெறுத்துப் போன மனைவி  மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தன்னையே கொளுத்திக் கொள்கிறார். நெருப்பின் ஆங்காரம் அலறலாக பீறிட்ட போது தட்டுத் தடுமாறி விழித்துப் பார்த்த நாகராஜுக்கு என்ன செய்வதென்று தெரியாத அளவுக்குப் போதை தலையிக்கேறியிருந்தது.

மனைவி நெருப்பில் உருகிக் கொண்டிருப்பதைக் கண்டு என்ன செய்வதென்று தெரியாமல் அருகே சென்று நெருப்பை அணைக்க முற்பட்டுள்ளார்… தீச் சூவாலைகளின் தீவிரத்தில் தன்னைத் தொட்ட ஏதோவொன்றை இறுக்கியணைத்துள்ளார் அந்தப் பெண். அது நாகராஜின் உடல் தான். அடுத்து என்ன நடந்ததென்று நாகராஜுக்குத் தெரியவில்லை. கண் விழித்துப் பார்த்த போது அவர் அரசு மருத்துவமனையின் படுக்கையில். நெருப்பு அவரையும் உருக்குலைத்துப் போட்டிருந்தது; அவரது விரல்கள் மெழுகைப் போல் உருகிப் போயிருந்தன. ஐந்து விரல்கள் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் இரண்டு விரல்கள்.. கூட்டத்தைப் பார்த்து அந்தக் கையை உயர்த்திக் காட்டினார். அத்தனை பேர்களின் கண்களிலும் கண்ணீர்.. மூன்று மாதங்கள் கழித்தே அவரது மனைவி இறந்து விட்டதை அறிகிறார். இந்த செய்தியைக் கேட்பதற்காகவே அந்த மூன்று மாதங்களாக அவர் மனப்பிறழ்வுக்கு ஆளாகிய நிலையில் நெருப்பால் வெந்த உயிரை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தார்.

நிறுத்தி விட்டுத் தேம்பினார். சரியாக அந்த நேரத்தில்.. கூட்டத்திலிருந்த மக்கள் பொன்மனச் செல்வியாம் புரட்சித் தலைவின் பொற்கால ஆட்சியைக் குறித்து ஆவேசக் குரலில் சொன்ன சங்கதிகளுக்கு  ஏழெட்டு தேச துரோக வழக்குகள் உறுதி. நாகராஜ் தொடர்ந்தார்.“ஒரு காலத்திலே கையில இருந்த காசு தீர்ற வரைக்கும் குடிச்சவனுங்க. எம்பட கிட்ட வாங்கிக் குடிச்சவன் எத்தனையோ பேரு.. இன்னிக்கு என்னோட கை இப்படியாகிப் போச்சு.. என்னால வேலை செஞ்சி சம்பாரிக்க முடியாது.. என்ற புள்ளங்க, ‘அப்பா… பசிக்குதுன்னு’ கேட்டு அழுவுதுங்க.. பால் வாங்கிக் குடுக்க காசில்ல.. பிச்சையெடுக்க மனசில்ல..”

“என்னோட புள்ளைக்கு ஒடம்பு சரியில்லெ.. ஆசுபத்திரிக்கி கூட்டிட்டுப் போக வர அஞ்சு ரூபா ஆகும்… அதுக்கு காசில்லாதனா போயிட்டேன்” மீண்டும் உடைந்தார் நாகராஜ்.. ஒரு சிறிய மௌனத்திற்குப் பின் டாஸ்மாக்கை எப்படியாவது மூடி விடுங்களென்று மக்களிடம் கேட்டு விட்டு அமர்ந்தார்.

திருச்சியில் 2016 பிப்ரவரி 14-ம் தேதி “மூடு டாஸ்மாக்கை சிறப்பு மாநாடு” நடைபெற்றது. மாநாட்டில் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் நாகராஜ். மாநாடு குறித்த முழுமையான பதிவு இங்கே…

முகப்புப்படம்: வினவு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.