இலங்கையின் செய்தித் தொடர்பாளர் ஆகிப் போன ஐநா மனித உரிமைகள் ஆணையர்!


ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் செயத் ராஅட் அல் ஹுசேனின் நான்கு நாள் இலங்கை சுற்றுலா இன்று முடிவடைந்தது. அவர் பயணத்தின் விளைவாக தமிழர்களுக்கு எதாவது நன்மை நடக்கும் என்று நாம் எதிர்பார்த்த எந்தவொரு நிகழ்வும் நடக்கவில்லை. மாறாக இலங்கை அரசு மேற்பார்வையில் நடத்தப்பட்ட மற்றுமொரு சடங்கு போல இந்த பயணம் அமைந்துள்ளது.

தமிழர்களின் மிகமுக்கிய கோரிக்கைகளில், ஐநாவுக்கு எந்த பங்கும் கடமையும் இல்லாதது போல கைகழுவி உள்ளது. தனது பயணத்தின் இறுதியில் அல் ஹுசேன் வெளியிட்டுள்ள 8 பக்க அறிக்கை நமக்கு இவற்றை தெளிவுபடுத்தியுள்ளது. இன்னும் சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர் நிலங்கள் பற்றியோ, தமிழர் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள சிங்கள ராணுவத்தை வெளியேற்றுவது பற்றியோ, காணாமல் போயுள்ள ஆயிரக்கணக்கானோர் தொடர்பாகவோ சிங்கள அரக்கு அழுத்தம் தரும் அளவிற்கு உறுதியான எந்த பார்வையும் இல்லாமல், இந்த விடயங்களில் அரசுக்கு வெற்று கோரிக்கைகளை மட்டும் வைக்கிறார்.

அரசியல் கைதிகளின் விடுதலையில் ‘எல்லோருக்கும் பொது மன்னிப்பு சாத்தியமில்லை’ என்று இரண்டு நாட்களுக்கு முன்பு பேசியவர், தனது பயண அறிக்கையில் அரசியல் கைதிகளின் விடுதலையை பற்றி பேசாமல் அதையும் இலங்கை அரசே முடிவு செய்ய வேண்டும் என்று கைவிரித்துள்ளார். பொய்யான குற்றச்சாட்டுகள், சித்திரவதை செய்து வாக்குமூலம் பெறப்பட்டது, பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் துஷ்பிரயோகம் பற்றியெல்லாம் பேசிவிட்டு, அவற்றால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை முன்பு அவர் குற்றம்சாட்டிய அதே சிங்கள அரசிடம் ஒப்படைப்பது எந்த விதத்தில் சரியாகும்?

ஐநா மனித உரிமைகள் ஆணையம் கொண்டு வந்த இலங்கை பற்றிய தீர்மானத்தை ‘இந்த தீர்மானம் மற்ற நாடுகள் இலங்கை மீது திணித்த நவீன காலனியாதிக்க செயலாக பார்க்கக் கூடாது’ என்று சிங்களவர்களுக்கு அறிவுறுத்துகிறார். ஆம் இலங்கை அரசே ஏற்று, இணைந்து கொண்டு வந்த தீர்மானம் அவர்களுக்கு எப்படி எதிராக இருக்க முடியும். ஆனால் தமிழர்களின் தேசிய இன விடுதலை போராட்டத்தை நசுக்கும் திட்டத்தோடு சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து முன்மொழிந்தது அந்த தீர்மானம் என்பதை நாங்கள் புரிந்தே வைத்திருக்கிறோம்.

அவர் சொல்லும் ஒரேயொரு கருத்தில் மட்டுமே நாம் உடன்படலாம். அதாவது பாதிக்கப்பட்டுள்ள மக்களின் கோரிக்கைகளை ஆளும் அரசு உதாசீனப்படுத்தினாலோ அல்லது தவறாக கையாண்டாலோ, அது புதிதாக பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்கு ஏதுவாக தீர்க்கப்பட முடியாத மனக்கசப்பை மக்களிடையே உருவாக்கும் என்று எச்சரிக்கிறார். தொடர்ந்து அந்த அறிக்கையில் மற்றொரு இடத்தில், இப்போது பல தரப்பிலும் நம்பிக்கையை நான் பார்த்தாலும் எல்லாரிடத்திலும் ஒரு சோர்வும் காணப்படுகிறது. இது மக்களின் நம்பிக்கையை நீர்த்துப்போகச் செய்யும் என்று குறிப்பிடுகிறார்.

2015ல் கொண்டு வரப்பட்ட இலங்கை தீர்மானத்தை தொடர்ந்து அங்கு ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், பின்னடைவுகள், அந்த தீர்மானத்தை செயல்படுத்துவதற்குரிய செயல்திட்டம் போன்றவற்றை வரும் ஜூன் மாதம் அல் ஹுசேன் தலைமையிலான மனித உரிமைகள் ஆணையம் ஐநாவில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். அதற்கான முன்னோட்டமாக, ஒரு சடங்காக அல் ஹுசேனின் இந்த இலங்கை பயணம் அமைந்துள்ளது. இலங்கைக்கான ஒரு சர்வதேச பி.ஆர்.ஓ போலத்தான் அவருடைய இலங்கை பயணத்தை பற்றிய அறிக்கையும் இருக்கிறது, அதை படித்தாலே வரும் ஜூன் மாத அறிக்கையில் என்ன தகவல் வரும் என்பதை இப்போதே நம்மால் யூகிக்க முடியும்.

வன்னிஅரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர்.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.