ரோஹித் வெமுலா உயிரிழந்து 12 நாட்கள் ஆன நிலையில், அவரின் மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் ஐதராபாத் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்களை சந்தித்ததுடன், அவர்களின் போராட்டத்தில் இரவு முழுவதும் கலந்து கொண்டார். மெழுகுவர்த்தி ஏந்திய ஊர்வலத்திலும் ராகுல் காந்தி பங்கேற்றார்.
தொடர்ந்து, இன்று தொடங்கியுள்ள உண்ணாவிரத போராட்டத்திலும் ராகுல் காந்தி காலை முதல் கலந்து கொண்டுள்ளார்.
மாணவர்களின் போராட்டம் ஒருபுறம் தீவிரமடைந்து வரும் நிலையில், அவர்களுடன் ராகுலும் போராட்டத்தில் இறங்கி உள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது
இதனிடயே ராகுல் காந்தியின் ஐதராபாத் வருகைக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இளைஞர் பிரிவான ஏபிவிபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தெலுங்கானாவில் உள்ள அனைத்து கல்லூரிகளையும் மூடி விட்டு போராட்டம் நடத்தவும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் வருகையை அடுத்து, பல்கலைகழகத்தின் இடைக்கால துணைவேந்தர் ஸ்ரீவட்சவா நீண்ட விடுப்பில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு பதில் பொறுப்பு துணைவேந்தராக பெரியசாமி பொறுப்பேற்றுள்ளார்.