விருது மறுப்பின் அரசியல்:தானே வெட்டிய குழிக்குள் விழுந்த ஜெயமோகன்…

ஜி.கார்ல் மார்க்ஸ்
கார்ல் மாக்ஸ்
கார்ல் மாக்ஸ்

ஜெயமோகன் பத்மஸ்ரீ விருதை மறுத்தவுடன், எனது நண்பர்கள் சிலர் கண்ணீருடன் நெகிழ்ந்திருந்தனர். ஜெமோவின் மாமனாருக்கும் மாமியாருக்கும் கூட விருதை மறுத்ததில் வருத்தம்தான் என்று அவரே பதிவு செய்திருந்ததால், அந்த ஈரத்தில் நானும் நனைந்து போனேன். விருதுக்காக முயற்சி செய்த நண்பர்களுக்கு கூட ஜெமோ வருத்தம் தெரிவித்திருந்த பண்பு என்னை மிகவும் கவர்ந்தது. நான் இந்த அரசு தரும் எந்த விருதையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று அவர் முன்பே அறிவித்திருந்தார். பிறகு ஏன் அவரது நண்பர்கள் அது தெரியாமல் விருதுக்கு முயன்றார்கள் என்று ஆச்சர்யமாக இருந்தது.

விருதுகளை கலைஞர்களோ, எழுத்தாளர்களோ மறுப்பது வரலாற்றில் புதிதொன்றும் இல்லை. விருது மறுப்பு என்பது அதிகார எதிர்ப்பாகவும், ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியல் செயல்பாடாகவும் பயன்படுத்தப்படும் காத்திரமான கருவி.

ஆனால் ஜெமோ என்ன சொல்கிறார்?

அரசை அண்டி வாழும், அரசை மிரட்டி சுயலாபங்களை அடைந்து திரியும் ஒட்டுண்ணிகள் இதற்காகவே நான் பணியாற்றுகிறேன் என்பார்கள். தேசவிரோதக்கருத்துக்களுக்காக தரகுவேலை செய்பவர்கள், அதிகாரத் தரத்தரகர்களான அறிவுஜீவிகள் நானும் அவர்களைப்போன்றவனே என்பார்கள். அவர்களுக்கு எதிரான என் விமர்சனங்களை இதைக்கொண்டே எதிர்கொள்வார்கள். அந்த வாய்ப்பை நான் அளிக்கலாகாது, நான் கலைஞன். கலைஞன் மட்டுமே என்கிறார்.

மேலே சொல்லியிருக்கும் காரணமென்பது முழுக்க முழுக்க ஒரு வலதுசாரி அமைப்பைக் காப்பாற்றும் முயற்சி தான். ஒற்றைப்படையான பண்பாட்டு வெறிக்கும், அவர் சொல்லும் பன்மைத்துவப் பண்பாட்டுக்கும் நடுவில் நின்று கொண்டு ஜெமோ ஆடும் நடனம் அது. ஆனால் இந்த தந்திர நடனத்துக்கு இப்போது வந்திருப்பது ஒரு சோதனை. இந்த விருதை ஜெயமோகன் பெற்றுக்கொள்வது அவரை அம்பலப்படுத்திவிடும் என்பது ஒரு புறம் இருக்க, மாற்றுக் கருத்துடையவர்கள் மீது, அவர் சுமத்தும் அவதூறுகளுக்கு ஒரு தடையை ஏற்படுத்தும். இந்த விருதை விட அந்த வெளி அவருக்கு முக்கியம். அது தான் அவரது அரசியல்.

ஜெயமோகனின் அரசியலை, மிக எளிமையான வாக்கியங்களில் புரிந்து கொள்ள முயன்றால், ”இந்த தேசத்தின் பண்பாட்டின் மீதும் கலாசாரத்தின் மீதும் நம்பிக்கையுள்ள எழுத்தாளன். அந்த பண்பாட்டை அதன் மீதுள்ள புரிதல்கள் இல்லாமல் நிராகரிக்கிற இடதுசாரிகள், பெரியாரிஸ்ட்கள் மற்றும் வேறு இயக்கங்கள் மீது கடும் விமர்சனத்தை வைக்கிற ஒரு எழுத்தாளன். இந்து பண்பாடு என்பது ஒற்றைப்படையானது அல்ல, அது பன்மைத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது என நம்பும் எழுத்தாளன்.” இது தான் அவர் தன்னைக்குறித்து கட்டமைக்க விரும்பும் பிம்பம். இப்போது இந்த அடிப்படையில் அவரது விருது மறுப்புக்கான காரணங்களை ஆராய்வோம்.

”தேசவிரோதக் கருத்துகளுக்காக தரகுவேலை செய்பவர்கள், அதிகாரத் தரகர்களான அறிவுஜீவிகள் நானும் அவர்களைப் போன்றவனே என்பார்கள், அதனால் தான் விருதை மறுக்கிறேன்” என்று பதட்டமாக எதற்கு கையை உதறுகிறார் ஜெயமோகன்??

“நான் கலைஞன், கலைஞன் மட்டுமே” என்று சொல்கிறார் இல்லையா? அது நிஜமென்றால்அவர் இவ்வாறு சுட்டுவது யாரை என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்க வேண்டும். யார் அவர்கள்? கம்யூனிஸ்ட்களா?? பெரியாரிஸ்ட்களா? தலித்தியவாதிகளா? என்ஜிவோக்களா? இதை ஏன் வெளிப்படையாக அவரால் சொல்ல முடியவில்லை?

காரணம் இதுதான்:

அதை வெளிப்படையாகச் சொன்னால், அவர் நம்பும் இந்த ”தேசத்தின் பன்மைத்துவத்தை” சிதைப்பவர்கள் யார் என்பதையும் அவர் சொல்ல வேண்டியிருக்கும். எம்.எஃப் ஹுசைனை இந்த நாட்டை விட்டுத் துரத்திய ”கலாச்சார தலிபான்கள்” யார் என்று சொல்ல வேண்டும். கல்புர்கியைக் கொன்ற ஒற்றைப்படையான மதவாதம் எது, அதை முன்னெடுப்பவர்கள் யார் என்றும் சொல்ல வேண்டும். இஸ்லாமியர்களை எதிராகக் கட்டமைத்து, ஒற்றைப் பண்பாட்டை அவர்கள் மீது வன்முறையாகத் திணிப்பவர்கள் யார் என்றும் சொல்லவேண்டும். இதை அவரால் சொல்ல முடியாது. ஒரு அரசியலாளன் ஜெயமோகன் எழுத்தாளன் ஜெயமோகனிடம் தோற்றுத் தலைகுனியும் இடம் அது.

ஆனால் அந்தக் கசப்பை மிகவும் தந்திரமாக, மற்றவர்கள் மீது சுமத்துகிறார். ‘எளிய எழுத்தாளன்’ என்பது முதல் ‘குடும்பத்தின் கண்ணீர்’ என்பது வரைப் பயன்படுத்துகிறார். இதில் என் நண்பர்களின் கண்ணீரும் இருக்கிறது என்பது தான் என்னை எழுதத் தூண்டுகிறது.

இந்த விருது மறுப்புக்குப் பின்னால் கலைஞனின் குரலே இல்லை என்பது தான் துயரம். இது ஜெயமோகனின் வாழ்நாள் அபத்தம். ஆமாம். ஜெயமோகன் இந்த விருதைப் பெற்றிருக்க வேண்டும். அந்த மேடையில் தனது அரசியல் என்ன என்பதை மிகத் தெளிவாகப் பிரகடனப்படுத்தியிருக்க முடியும்.

நான் இந்த தேசத்தின் பண்பாட்டை நம்புகிறேன். அதன் பன்மைத்துவத்தை மதிக்கிறேன். அதை மூர்க்கமாக நிராகரிக்கும் அறிவு ஜீவிகளை எதிர்க்கிறேன். அதே சமயம், இந்த பண்பாட்டை ஒற்றைப்படையான பண்பாடாக சுருக்கி எதிர்களைக் கட்டமைக்கும் மத வெறியையும் எதிர்க்கிறேன்என்று சொல்லியிருக்க வேண்டும்”.

அதை அவரால் சொல்ல முடியவில்லையே ஏன்??

இங்கு தான் அவர் கலைஞனைக் கைவிட்டு ஒற்றைப்படையான கலாச்சார தேசியத்தைக் கட்டமைக்க முயலும் வலதுசாரி அமைப்பைக் காப்பாற்றும் அவலம் நேர்கிறது. இது ஒரு விவாதமாக மாறுகிறபோது “நான் கலைஞன் அல்லவா” என்ற சொல்லாடலை முன்னிறுத்தி, கண்ணீர்த் திரைக்குப் பின்னால் ஒளிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

இங்கு அவர் செய்வது, “தேசத்தை காட்டிக்கொடுப்பவர்கள்” என்ற சொல்லாடலை உருவாக்குவதன்  மூலம், தன்னை நம்பி வாசிக்கும் எளிய வாசகனை ஹிந்துத்துவத்திற்குள் பிணைப்பதுதான். அதற்காகத் தான் இந்த விருது வழகப்படுகிறது என்று அவருக்குத் தெரியும். அதுதான் அவரை  தத்தளிப்புக்கு உள்ளாக்குகிறது. அதே நேரத்தில் நான் அரசை எதிர்க்கவில்லை என்றும் அரற்ற வைக்கிறது. இது இந்த தேசம் எனக்களிக்கும் விருது என்று பசப்ப வைக்கிறது.

எல்லாக் கலாச்சார மையங்களிலும் இடது சாரிகள் ஆக்கிரமித்திருந்தார்கள், இப்போது அது மாறத் தொடங்குகிறது என்று சொன்ன ஜெயமோகன், அந்த இடம் இப்போது காவிகளால் நிரம்பத் தொடங்குகிறது என்பதை மறைக்க விரும்புகிறார்.

அதனால்தான் விருதுகள் குறித்து,  தான்  இதுவரை எழுதியதன்  முன்னே அவர் சரணடைய நேர்கிறது. தானே வெட்டிய குழிக்குள் ஜெயமோகன் வீழ்ந்த இடமது. விருது மறுப்புக்கான செண்டிமெண்ட் காரணங்கள் முளைக்கும் இடமும் அதுதான்.

குழப்பமான சொல்லாடல்களால் தனது அரசியலை மறைத்துக் கொள்வது அவருக்கு ஒன்றும் புதிதல்ல. ”பெரியாரிய மூர்க்கம்” என்று சொல்லிக்கொண்டே அவரைக் கண்டால் விழுந்து வணங்குவேன் என்று சொல்வது, பிராமணர்களால் எதையும் உருவாக்க முடியாது, ஆனால் அவர்கள் நல்ல தொகுப்பாளர்கள் என்று “இனவாதம்” பேசிக்கொண்டே, அவர்கள் மீதான விமர்சனங்களை ”இனவெறி” என்று வரையறுப்பது, கம்யூனிஸ்ட்கள் தான் இந்த தேசத்தின் பண்பாட்டை அழித்தவர்கள் என்று கூறிக்கொண்டே அவர்கள் தான் ”மனசாட்சியின் குரல்” என்று மருகுவது என நிறைய உண்டு.

இந்த விருது மறுப்பிலும் அது தான் நடந்திருக்கிறது. தான் நம்புவது ”பன்மைத்துவப் பண்பாடு” என்று சொல்லிக்கொண்டே, ஒற்றைப்படையான பண்பாட்டை வலியுறுத்தும் ஒரு வலதுசாரி அமைப்புக்கு முட்டுக்கொடுத்தபடி, விருதை மறுத்து ஜெமோ புரிந்திருப்பது ஒரு சாகசம். அவரைப்போலவே நமக்கும் வெற்று சாகசத்தில் ஆர்வம் இல்லையென்பது தான் இதில் முரண். அவர் இப்போது மறுத்த இந்த விருதுக்காகவும், வரும்காலங்களில் மறுக்கப்போகும் விருதுகளுக்காகவும் வாழ்த்துக்கள் !!

ஜி. கார்ல் மார்க்ஸ், அரசியல்சமூக விமர்சகர்.

 

One thought on “விருது மறுப்பின் அரசியல்:தானே வெட்டிய குழிக்குள் விழுந்த ஜெயமோகன்…

  1. சுமார் முப்பது நார்பது ஆண்டுகLuக்கு முன்பே அவருடைய வேஷத்தை கலைத்தவர்கள்.த..மு..எ .ச
    வினர். சங்கத்திற்குள் புகுந்து குட்டையை குழப்பினார். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கமுயன்றார், உஷாராக இருக்கும் தலைமை அவருடைய இந்தப்பணியை தடுத்து நிறுத்தியது. அது அந்த அருணசலெசுவருக்கே தெரியும் .ஜொமோ என்ற அரசியல் வாதியை should not touch with a barge poll. —kaashyapan.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.