வாழ்தலைப் பற்றி மகளுடன் ஒரு தந்தையின் உரையாடல்!

அறிவழகன் கைவல்யம்
அறிவழகன் கைவல்யம்
அறிவழகன் கைவல்யம்
பெரிய கரப்பான் பூச்சி கழிப்பறையில் இருக்கிறதென்று அழுதுகொண்டே ஓடி வருகிறாள் அன்பு மகள்,

“கரப்பான் பூச்சி ஒரு சின்ன உடல் பொருந்திய உயிர், மனிதர்களைக் கண்டு ஓடி ஒளிந்து கொள்கிற, மனிதர்களின் கழிவுகளைத் தின்று வாழ்கிற ஒரு சிறிய பூச்சியைக் கண்டா நீ அஞ்சுகிறாய் மகளே” சமாதானம் செய்துவிட்டுச் சொல்கிறேன்.

“அம்மா, கரப்பான் பூச்சிகளும் வாழ்ந்தாக வேண்டுமே!”

“அப்பா, வாழ்தல் என்பது என்ன?”

மிகச் சிக்கலான கேள்விதான், கொஞ்ச நேரம் நானும் யோசித்துப் பார்க்கிறேன், ஆமாம், வாழ்தல் என்பது என்ன?

வலியும், வேதனையும் நிரம்பிய இருத்தலுக்கான போராட்டமா? சக மனித உடலை வீதியில் எடுத்துச் செல்ல முடியாத இன்னொரு மனிதனின் வன்மமா? சற்று நேரத்துக்கு முன்னர் கேட்ட அற்புதமான பாடலா? பொருந்தாத வண்ணங்களைத் தாங்கியபடி சுவற்றில் தொங்க விடப்பட்டிருக்கிற வண்ணத்துப் பூச்சி ஓவியமா?

சாளரத்தில் தெரியும் வானத்தின் ஒளிரும் விண்மீன்களா? கண்களுக்கும் வெளிக்கும் இடையே நிகழும் இடைவிடாத தொடர் சந்திப்பா? பொது வெளியில் கொடுக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட முத்தங்களா? உடலை இரட்டையாய் மடித்து நமக்கு நாமே ரகசியமாய்க் கொடுத்துக் கொள்கிற முத்தங்களா? எதை வாழ்க்கை என்று சொல்வது…

அவள் புத்தம் புதிதாய் மகிழ்ச்சியின் சுவடுகளை வாழ்க்கை என்று நம்புகிறாள், அவளுடைய உலகின் உயர்ந்த மலைச் சிகரங்கள், தண்ணீர்ச் சீவலை உதிர்க்கும் அருவிகள், வண்ணப் பறவைகள், தீயவற்றை அழிக்கும் சோட்டா பீம்கள், கொடுவாட்களால், துயரின் துப்பாக்கி முனைகளால் அழிக்க முடியாத கரடிகள்.

மரக்கிளைகளை நிரப்பியபடி அவ்வப்போது இலைகளை அதிரவைக்கும் வண்ணப் பறவைகள், உலகெங்கும் பூக்கும் மலர்கள், நீல வானத்தின் கீழே படர்ந்திருக்கும் பசும்புல்வெளிகள், எப்போதும் முத்தமிட்டபடி அரவணைத்துக் கொள்ளும் அம்மா, அவள் விரும்பியதை வாங்கிக் கொடுத்துவிடும் அப்பா, சின்ன அதட்டலுக்கும் கண்ணீர் சுரக்கும் குட்டிக் கண்கள் என்று ஒரு பாதுகாக்கப்பட்ட உலகம் இருக்கிறது.

நில நடுக்கங்களாலும் நேற்று வரை வாழ்ந்த வீட்டை இழந்துவிட்டுக் கடுந்துயரம் கொண்ட சில குழந்தைகள் அவளுடைய வகுப்பில் இல்லை, பசியின் கொடுங்கரங்கள் நசுக்கிப் பிழிந்து பச்சை இலைகளை வேகவைத்து தின்னும் ருவாண்டாவின் கறுப்புக் குழந்தைகளை அவள் இன்னும் சந்திக்கவில்லை, அவளுடைய உலகத்தில் பதன்கோட்டில் இறந்து போன போர் வீரனின் உடலை ஒட்டியபடி கண்கள் சிவக்க அழுதுகொண்டிருக்கும் இன்னொரு மகளைப் பற்றிய நினைவுகள் இல்லை.

சாக்லேட்டின் சுவையை ஒருமுறை கூட அறிந்திராத நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் நைஜீரியாவின் குச்சிக் குழந்தைகளை அவள் இன்னும் தனது தெருக்களில் சந்திக்கவில்லை, போரில் இறந்துபோன தனது குழந்தைகளின் நினைவாக ஒரு தந்தை எழுதிய குருதி கசியும் கவிதையின் வரிகளை அவள் இன்னும் படிக்கவில்லை, பொது வீதியில் பள்ளிக் குழந்தைகளின் மிதிவண்டிகளை அனுமதிக்காத கொடூர மனம் கொண்ட மனிதர்களோடு அவள் இன்னும் உரையாடத் துவங்கவில்லை,

பள்ளியின் எல்லாத் தட்டுகளும் உணவைப் பரிமாறவே அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்று நம்பி அதில் ஒன்றைத் தன் பிஞ்சு விரல்களால் துழாவி எடுத்து ஒரு கவளம் சோற்றை விழுங்கிய கணத்தில் உடைக்கப்பட்ட சின்னஞ்சிறு குழந்தையின் கைவிரல்களை பாவம் அவள் பார்க்கவில்லை, புதைக்கக் கொண்டு செல்ல முடியாத பிணங்களின் கண்ணீரை, உயிரற்ற உடலின் அழுகுரலை அவள் இன்னும் பார்க்கவில்லை.

“வாழ்தல் என்றால் என்ன அப்பா?”

பதிலை எதிர்நோக்கிக் காத்திருக்கும் அவளது விழிகளைப் பார்க்கிறேன், அந்த விழிகளில் வாழ்க்கையைக் குறித்து அறிந்து கொள்ளத் துடிக்கிற எல்லாக் குழந்தைகளின் துடிப்பும், படபடப்பும் இருக்கிறது. உயிர் வாழ்க்கை குறித்த வரலாற்றை, உலகின் பௌதீகத் தோற்றத்தை அவளுக்கு நான் சொல்லி இருக்கிறேன், ஆகவே இம்முறை அவள் கேட்கிற வாழ்க்கை குறித்த கேள்வி வேறானது.

“வாழ்தல் என்பது இப்போதைக்குக் நீ கழிப்பறைக் கரப்பான் பூச்சியைப் பற்றி அறிந்து கொள்ளுதல் அம்மா, அதன் குழந்தைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுதல், அதன் மீசையின் நீளத்தை அளத்தல், அவற்றின் 320 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலான இருத்தலுக்கான கழிப்பறைப் போராட்டத்தைப் பற்றிப் புரிந்து கொள்ளுதல் அம்மா”.

“ஐ லவ் யு” அப்பா, என்று சொல்லிவிட்டு ஒரு முத்தம் கொடுக்கிறாள், அந்தக் கணத்தில் அதிரும் செல்களின் அலைவரிசை தான் வாழ்தல் மானுடர்க்கு… அந்த அலைவரிசையை சொற்களால் சொல்லிவிடவோ, எழுதிவிடவோ முடியாது. வாழ்தல் என்பது கண்ணாடியின் முன்பு நின்று நம்மை நாமே பார்த்து சிரித்தல் அல்லது அழுதல்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.