#சர்ச்சை: ஞாநி, ஆனந்த விகடன், திமுக மிரட்டல், மனுஷ்யபுத்திரன், சமஸ்

 விஜயகாந்த் செய்தியாளர்களிடம் நடந்துகொண்ட விதம் குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செவ்வாய்கிழமை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான நேர்படப் பேசு நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. அதில் பத்திரிகையாளர்கள் ஞாநி, விஜயசங்கர், மணி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விவாதத்தில் ஞாநி கூறிய கருத்து சர்ச்சையைக் கிளப்பியது.
தற்போது திமுகவில் இணைந்திருக்கும் எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன், இதுகுறித்து வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில்,

“கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது ‘ அவருக்கு வயதாகிவிட்டது. அவரை அவரது குடும்பத்தினர் இம்சித்து அரசியலில் நீடிக்க செய்கிறார்கள். இது மனிதாபிமானமல்ல’ என்றெல்லாம் இன்றளவும் தமிழக அரசியலில் மைய விசையாக செயல்படும் தலைவரை பார்த்து தனது குரூரப்பார்வையை வெளிப்பட்டுத்திய நடுநிலை நாயகர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து எழுப்பப்டும் கேள்விகளைப் பற்றி ஏன் எதுவும் எழுத மறுக்கிறார்.? அந்தக் கேள்விய எழுப்பியதற்காக தமிழக அரசு பத்திரிகையாளர் மணி மேல் அவதூறு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இன்றைய தமிழக முதலவர் ஏன் பொது அரங்குகளில் தோன்ற மறுக்கிறார் என்பது குறித்து ஒரு நடுநிலை நாயகர் கவலப்பட வேண்டாமா?

கலைஞருக்கு ஓய்வு தேவை என்று வலியுறுத்திய நடுநிலை நாயகர் ஓய்வெடுப்பதையே தனது ஆட்சியதிகாரத்தின் முக்கிய செயல்பாடக கொண்ட மற்றொருவரைப் பற்றி ஏன் அலட்டிக்கொள்வதில்லை? நடக்காத விழாக்களை நடந்ததாக காட்டும் கிராபிக்ஸ் ஆட்சி பற்றி ஏன் அதிர்ச்சி அடைவதில்லை? கலைஞரிடம் காட்டும் இந்த குரூரமான ‘ மனிதாபிமானத்தை’ மற்றவர்களிடம் ஏன் காட்டுவதில்லை?

இந்த வயதிலும் வெள்ளம் பாதித்த இடஙக்ளை நேரில் வந்து பார்வையிடும் தலைவரை பல ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு என்ற பெயரில் அரசியலைவிட்டு வெளியேற சொன்னவர் இந்த வெள்ளப் பேரழிவை இன்னும் மறைந்திருந்தே பார்த்துக்கொண்டிருக்கும் இன்றைய ஆட்சியாளரின் மர்மத்தை பேசுவதற்கு பதிலாக பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பத்திரிகையில் தனது பத்தி நின்று போனதற்காக கலைஞரை எந்த ஆதாரமும் இல்லாமல் குற்றம்சாட்டி அதன் வழியே ஊடக சுதந்திரத்தின் பிரச்சினைககளை விவாதிக்க விரும்புகிறார்.

இதில் கலைஞர் எதிர்கட்சி தலைவராக சட்டமன்றத்திற்கு வந்ததே இல்லை என்ற பொய் வேறு” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பத்திரிகையாளர் சமஸ் கீழ்கண்ட எதிர்வினையை ஆற்றியிருந்தார்.

“ஞாநி மீது வன்மத் தாக்குதல் நடத்துபவர்களுக்குள் இருக்கும் அப்பட்டமான / கள்ளத்தனமான கட்சி அரசியல் உறவு கவனிக்க வேண்டியது. ஞாநியின் சில கருத்துகளில் எனக்கும் முரண்பாடு உண்டு. ஆனால், அவர் மீது சுமத்தப்படும் உள்நோக்கங்கள் மிகுந்த விமர்சனங்கள் குரூரமானவை. ஒரு பத்திரிகையாளராக ஞாநி அடைந்த தோல்விகள் யாவும் இங்கு அறவுணர்வுடன் போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு பத்திரிகையாளனுடையதுமான தோல்விகள். தங்கள் அம்மணத்தை அறியாதவர்களாலும் மனசாட்சியைத் தொலைத்தவர்களாலுமே ஞாநி போன்ற ஒருவர் மீது இப்படியான குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியும் என்று தோன்றுகிறது” இந்தப் பதிவுக்கு பத்திரிகையாளர் ஞாநி சங்கரன் எழுதிய பதிவு…

“என் மீது அன்பும் பரிவும் வன்மமும் பகையும் கொண்டிருக்கும் இரு தரப்பு கருத்துகளுக்கும் நன்றி. விகடன் இதழில் என் ஓ பக்கங்கள் நிறுத்தப்பட்டதற்கு ஆளுங்கட்சியின் அழுத்தம்தான் காரணம் என்பது எனக்கு நேரடியாகவே தெரியும். சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட கட்டுரையைக் கண்டித்து பல லட்சம் ரூபாய் செலவில் நடத்தப்பட்ட கண்டனக் கூட்டத்தின் பின்னணி கலைஞர் குடும்ப வாரிசு சண்டைதான்.

அந்தக் கட்டுரையின் எந்த தகவலையும் எந்த கருத்தையும் இன்று வரை ஸ்டாலின் கண்டித்ததும் இல்லை. மறுத்ததும் இல்லை. தொடர்ந்து அவர் என்னுடன் நட்புடனே இருந்து வந்திருக்கிறார். அந்தக் கூட்டத்தில் என்னை சாதியைச் சொல்லி இழிவாகப் பேசிய கும்பலில் மனுஷ்யபுத்திரனும் ஒருவர்.
அந்தக் கூட்டத்தில் தலைமை வகித்தவர் ஞாநி 200 பிரதிகள் விற்கும் எதிலாவது எழுதிவிட்டுப் போகட்டும். சகித்துக் கொள்ளலாம். ஆனால் அவரை லட்சக்கணக்கான பிரதிகள் விற்கும் விகடன் போன்ற இதழ்களில் எழுத நாம் அனுமதிக்கவே கூடாது என்று தலைமையுரையில் முழங்கினார். அந்த முழக்கத்துக்கு சில வாரங்களுக்குப் பின்னர்தான் திட்டமிடப்பட்டு என் பத்தி நிறுத்தப்பட்டது. அதன் பின்னணி பேரங்களையும் நான் உள்வட்டாரங்கள் வழியே அறிவேன். எனவே என் பத்தி நிறுத்தப்பட்டதற்கு அரசியல் அதிகார அழுத்தம் இல்லை என்பது தவறானது. என் கட்டுரையை திரித்தே சொல்லி வருவோரில் மனுஷ்யபுத்திரனும் ஒருவர். முழுக்கட்டுரையை அவர் தைரியமிருந்தால் வெளியிடட்டும்.
அதை இப்போது படித்தால் நண்பர் சமஸ் கூட தன் முரண்பட்ட கருத்தை மாற்றிக் கொள்ளக்கூடும். நான் சாரு நிவேதிதாவைப் பற்றி வக்கிரமாக எழுதியதாக மனுஷ்யபுத்திரன் சொல்வது ஒரு தொடர் பொய். இதை நான் முன்பே மறுத்துவிட்டேன். பிழைப்புவாத அரசியலில் இருக்கும் மனுஷ்யபுத்திரனுக்கு என்னை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை. பொது வெளியில் அவர் கருத்துகள் உலவுவதால் மட்டுமே என் எதிர்வினை.
என் மீது அன்பு காட்டும் இளைய தலைமுறை இதழாளர்களை மதித்து மட்டுமே இந்த எதிர்வினையும் கூட. நான் வாழ்க்கையில் எதிலும் தோற்றவனாக என்னைக் கருதவில்லை. தொடர்ந்து முயற்சிப்பவனாகவே கருதுகிறேன். சில முயற்சிகள் வெல்லும். சில தளரும். அது முக்கியமல்ல. தொடர்ந்த முயற்சியே முக்கியம். எல்லாருடைய அன்புக்கும் மீண்டும் நன்றி” 
ஞாநியின் பதிவுக்கு எதிர்வினையாற்றிய மனுஷ்யபுத்திரனின் பதிவு இதோ…
“ஞாநியின் பொய்கள்

ஞாநி தன்னுடைய பொய்கள் அம்பலப்பட்டதும் மனப்பிறழ்வின் உச்சத்திற்கே செல்கிறார். கீழே அவர் எனக்கு ஆற்றியிருக்கும் எதிர்வினையைப் பாருங்கள்:

//“என் ஓ பக்கங்கள் நிறுத்தப்பட்டதற்கு ஆளுங்கட்சியின் அழுத்தம்தான் காரணம் என்பது எனக்கு நேரடியாகவே தெரியும். சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட கட்டுரையைக் கண்டித்து பல லட்சம் ரூபாய் செலவில் நடத்தப்பட்ட கண்டனக் கூட்டத்தின் பின்னணி கலைஞர் குடும்ப வாரிசு சண்டைதான். அந்தக் கட்டுரையின் எந்த தகவலையும் எந்த கருத்தையும் இன்று வரை ஸ்டாலின் கண்டித்ததும் இல்லை. மறுத்ததும் இல்லை. தொடர்ந்து அவர் என்னுடன் நட்புடனே இருந்து வந்திருக்கிறார். அந்தக் கூட்டத்தில் என்னை சாதியைச் சொல்லி இழிவாகப் பேசிய கும்பலில் மனுஷ்ய புத்திரனும் ஒருவர். அந்தக் கூட்டத்தில் தலைமை வகித்தவர் ஞாநி 200 பிரதிகள் விற்கும் எதிலாவது எழுதிவிட்டுப் போகட்டும். சகித்துக் கொள்ளலாம். ஆனால் அவரை லட்சக்கணக்கான பிரதிகள் விற்கும் விகடன் போன்ற இதழ்களில் எழுத நாம் அனுமதிக்கவே கூடாது என்று தலைமையுரையில் முழங்கினார். அந்த முழக்கத்துக்கு சில வாரங்களுக்குப் பின்னர்தான் திட்டமிடப்பட்டு என் பத்தி நிறுத்தப்பட்டது.அதன் பின்னணி பேரங்களையும் நான் உள்வட்டாரங்கள் வழியே அறிவேன். எனவே என் பத்தி நிறுத்தப்பட்டதற்கு அரசியல் அதிகார அழுத்தம் இல்லை என்பது தவறானது. என் கட்டுரையை திரித்தே சொல்லி வருவோரில் மனுஷ்ய புத்திரனும் ஒருவர். முழுக்கட்டுரையை அவர் தைரியமிருந்தால் வெளியிடட்டும். அதை இப்போது படித்தால் நண்பர் சமஸ் கூட தன் முரண்பட்ட கருத்தை மாற்றிக் கொள்ளக்கூடும். நான் சாரு நிவேதிதாவைப் பற்றி வக்கிரமாக எழுதியதாக மனுஷ்யபுத்திரன் சொல்வது ஒரு தொடர் பொய். இதை நான் முன்பே மறுத்துவிட்டேன். பிழைப்புவாத அரசியலில் இருக்கும் மனுஷ்யபுத்திரனுக்கு என்னை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை. ? //

ஞாநியின் இந்த எதிர்வினையில் இருக்கும் அத்தனையும் முழுப்பொய்.

முதல் பொய், அந்தக் கூட்டம் பல இலட்சம் ரூபாய் செலவில் கூட்டப்பட்டது என்று சொல்வது. தி.நகர் வாணிமஹாலில் ஒரு கூட்டம் நடத்த எவ்வளவு செலவாகும் என்று வேறு யாரையும்விட ஞாநிக்குத் தெரியும். அன்று கூட்டத்திற்கு வந்திருந்தவர்களுக்கு ஒரு காஃபிகூட தரப்பட்டதாக நினைவு இல்லை. ஆயினும் தனக்கு எதிராக பல இலட்ச ரூபாய் செலவில் மாநாடு நடத்தப்பட்டதாக ஞாநி நம்ப விரும்புகிறார். இதில் கலைஞரின் குடும்பச் சண்டையில் தான் பலிகடா ஆக்கப்பட்டதாக கூடுதல் கிளுகிளுப்பு வேறு.. அவ்வளவுக்கெல்லாம் நீங்க ஒர்த் இல்ல சாமி.

இரண்டாவது பொய், விகடனில் ஞாநியை எழுதவே விடக்கூடாது என்று கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் முழங்கினாராம். அந்த முழக்கத்திற்கு பிறகுதான் பல பின்னணி பேரங்களின் வழியே அந்தப் பத்தி நிறுத்தப்பட்டதாம். . ஆனால் விகடனில் அந்தப் பத்தி ஏன் நிறுத்தப்பட்டது என ஞாநியே அளித்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலம் இதோ:

//‘’இந்தக் கட்டுரை [ஜல்லிக்கட்டு] 23-1-2008 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளிவருவதற்காக லே அவுட் செய்யப்பட்டது. நான் அந்தப் பக்கங்களைப் பார்த்து ஓகே செய்த பின்னர், கடைசி நிமிடத்தில் அவை ஆசிரியரால் நீக்கப்பட்ட தகவல், மறு நாள் அச்சாகி வந்த இதழைப் பார்த்தபோதுதான் எனக்குத் தெரிந்தது.

இணை ஆசிரியர் கண்ணனிடம் கேட்டேன். அவர் தனக்கும் தெரியாது என்றார். பிறகு ஆசிரியர் அசோகனிடம் பேசினார். அந்தக் கட்டுரை பப்ளிக் செண்ட்டிமெண்ட்டுக்கு எதிராக இருப்பதால் நிறுத்தியதாக ஆசிரியர் தன்னிடம் கூறியதாக எனக்குத் தெரிவித்தார்.

பப்ளிக் செண்ட்டிமெண்ட்டுக்கு இசைவாகத்தான் எல்லா கட்டுரைகளும் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை; என் பல ‘ஓ பக்க’க் கட்டுரைகள் அதற்கு முரண்பட்டோ இசைந்தோ இதற்கு முன்பும் இருந்திருக்கின்றன என்று நான் கண்ணனிடம் சொன்னேன். இதுதான் காரணம் என்றால், பாலியல் அறிவு தொடர்பாக அதே சமயத்தில் நான் எழுதி வரும் ‘அறிந்தும் அறியாமலும்’ தொடர் கூட சில பப்ளிக் செண்ட்டிமெண்ட்டுகளுக்கு எதிராகத்தானே இருக்கிறது; அதையும் நிறுத்திவிடவா என்று கேட்டேன். ஜல்லிக்கட்டு கட்டுரையை அடுத்த இதழில் வெளியிடமுடியாது என்றால், ‘அறிந்தும் அறியாமலும்’ தொடரையும் இனி எழுதப்போவதில்லை என்று தெரிவித்தேன். இந்தத் தகவலை அவர் ஆசிரியரிடம் தெரிவித்துவிடுவதாகக் கூறினார்.

இதே சமயத்தில் நான் விகடன் ஆசிரியர் குழுவினரின் திறன் மேம்பாடு தொடர்பான மனிதவள ஆலோசகராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். மாதம் ஏதேனும் 15 தினங்கள் அலுவலகம் சென்று பணியாற்ற வேண்டும் என்றும் அதற்கு எனக்குக் குறிப்பிட்ட ஊதியம் என்றும் ஒப்பந்தம் செய்திருந்தோம். ‘ஓ’ கட்டுரை நிறுத்தப்பட்டால் ‘அறிந்தும் அறியாமலும்‘ தொடரையும் நான் நிறுத்துவதாகத் தெரிவித்த மறு நாள் அன்றைய மாலையோடு என் ஆலோசகப் பணி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக நிர்வாக இயக்குநர் பா.ஸ்ரீனிவாசன் ஓர் உத்தரவில் கையெழுத்திட்டிருக்கிறார்….

…. அப்போது வெளியிடத் தயார் நிலையில் இருந்த இந்த ஓ பக்கங்கள் மூன்றாம் தொகுதி, ஓராண்டு கழித்து இப்போது வெளியாகிறது….

இப்படியாக விகடன் பாலசுப்ரமணியனும் நானும் 1974 முதல் பரஸ்பர அன்பும் மதிப்பும் கொண்டு பேணி வந்த என் 33 வருட கால விகடன் உறவு துண்டிக்கப்பட்டது….//

– ’ஓ’ பக்கங்கள் நூலில் ஞாநி.)//

ஆனால், நேற்று திமுகவின் மிரட்டலைத் தொடர்ந்து ‘ஓ’ பக்கங்கள் நிறுத்தப்பட்டதாக புதிய தலைமுறையில் பொய் சொன்ன ஞாநி, இன்று அப்போது திமுகவிலேயே இல்லாத நான் பேசிய பேச்சால்தான் அழுத்தம் கொடுக்கப்பட்டது என்கிறார். அது உண்மை என்றால் ஏன் ஞாநி இந்த உண்மையை இவ்வளவு காலம் மறைத்து வைத்திருந்தார்?

“நான் சாரு நிவேதிதாவைப் பற்றி வக்கிரமாக எழுதியதாக மனுஷ்யபுத்திரன் சொல்வது ஒரு தொடர் பொய்’’ என ஞாநி சொல்வது மூன்றாவது பொய். சாருவை இண்டெர்நெட் பிச்சைக்காரன் என்று ஞாநி குமுதத்தில் எழுதியதும் அதற்கு சாரு எதிர்வினையாற்றியதும் ஊரறிந்தது. பாய்ஸ் படத்திற்கு இந்தியா டுடேயில் எழுதிய விமர்சனத்தில் ‘சுஜாதாவிற்கு ஏற்கனவே இரண்டு முறை ஹார்ட் அட்டாக் வந்ததை’ குறிப்பிட்டு விமர்சித்தவர்தான் இந்த கண்ணியவான்.

நான் அந்தக் கூட்டத்தில் ஞாநியை சாதியைச் சொலலி திட்டினேன் என்பது நான்காவதுபொய். எந்நேரமும் தங்கள் சாதி சார்ந்த அனுகூலங்களைப் பெற்றுகொண்டே அதைப் பற்றிய மன உறுத்தலிலும் உழல்பவர்களுக்கு இத்தகையை பிரமைகள் தோன்றுவது இயற்கை.

“முழுக்கட்டுரையை மனுஷ்ய புத்திரன் தைரியமிருந்தால் வெளியிடட்டும் ”’ என்கிறார். இதற்கு எதற்கு தைரியம்? அந்த ஆபாசக் கட்டுரை என் கையிலேயே இருக்கிறது. வேண்டும் என்றால் ஞாநிக்கு அனுப்பித் தருகிறேன். அதை முன்வைத்து அவர் தன்னை நிரூபிக்கட்டும்.

’உள்வட்டார தகவல்’ ‘நேரடியாகத் தெரியும்’’ என்பதெல்லாம் ஒருவர் தன்னுடைய புளுகுகளை மறைக்க பயன்படுத்தும் சாயங்கள். ஒரு விவாதத்தில் அதற்கு என்ன மதிப்பு உள்ளது? நான்கூட ஞாநி ஜெயலலிதாவின் ஏஜெண்ட் என்று ஒரு உள்வட்ட தகவல் இருக்கிறது என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா?

பிழைப்புவாத அரசியலில் இருக்கும் எனக்கு ஞாநியை விமர்சிக்க தகுதி இல்லையாம். யார் பிழைப்புவாதி? ஆம் ஆத்மி என்ற ஒரு கட்சி உருவானவுடன் அங்கே ஓடோடிச் சென்று உட்கார்ந்துகொண்டு தேர்தலில் போட்டியிட ஒரு சீட்டும் வாங்கி அந்த தேர்தல் பரபரப்பையும் கிளுகிளுப்பையும் தற்காலிகமாக அனுபவித்துவிட்டு தான் ஒரு செல்லாக்காசு என்று தெரிந்ததும் அடுத்த நாளே கட்சியை கைவிட்டு ஓடி வந்தாரே அவர் சந்தர்ப்பவாதியா அல்லது கடந்த சில வருடங்களாக கட்சியுடன் நேரடி தொடர்பு எதுவும் இல்லாமல் திராவிட இயக்க அரசியலை ஆதரித்து வந்தேனே நான் சந்தர்ப்பவாதியா? மூன்று மாதங்களுக்கு முன்புதான் என் கட்சி உறுப்பினர் அட்டையைக்கூட பெற்றேன்.

திரு.ஸ்டாலின் அவர்கள் ஞாநியிடம் நட்புப் பாராட்டுவது ஒரு தலைவரின் பெருந்தன்மை. திராவிட இயக்கத் தலைவர்கள் ஜெயலலிதாவின் அரசியல் பண்பாட்டை கொண்டவர்கள் அல்ல. ஞாநி போன்றவர்கள் எவ்வளவு அவதூறுகளைச் செய்தாலும் சகித்துக்கொள்கிறார்கள் என்றால் அது அவர்கள் அரசியல் பண்பாடு. ஞாநி அதை அவர்கள் தனக்குக் கொடுத்த நற்சான்றிதழாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

ஞாநி பத்திரிகைத் துறையில் அடந்த தோல்விகளை இலட்சியவாதத்தின் தோல்வியாக பார்க்க ஆசைப்படுகிறவர்கள் பார்க்கட்டும். அது அவர்கள் ஆசை. இது எந்த அரசியலுமற்ற போலி இலட்சியாவதங்களின் காலம். ஞாநி போன்றவர்கள் இந்த மனநிலையை அண்டிப் பிழைப்பவர்கள். ஞாநியின் லௌகீக தோல்விகளை இலட்சியவாதத்தின் வெற்றியாகக் கொண்டாட விரும்புகிறவர்களின் செயல். தங்கள் நிறுவனம் சார்ந்த சமரசங்களின் குற்ற உணர்வுகளை மறைத்துக்கொள்ள வேண்டுமானால் பயன்படலாம். எனக்கு அப்படி எந்தத் தேவையும் இல்லை”.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.