ஏகபோகமாக மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக, கருப்பு பணத்தை மீட்டதோ இல்லையோ, நாட்டை வளர்ச்சிக்குப் பாதைக்குக் கொண்டுச் சென்றதோ இல்லையோ ‘மாட்டிறைச்சி’யை வைத்து நன்றாக அரசியல் செய்தது. மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது நரேந்திர மோடி, “காங்கிரஸ் வெளிர் சிவப்பு(பிங்க் ரெவல்யூஷன்)புரட்சி செய்ய விரும்புகிறது” என மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் இருப்பதை கேலி செய்தார்.
ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகும் 2014-2015 -ஆம் ஆண்டில் இந்தியா மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கிறது. பாஜகவை சேர்ந்தவர்களே மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனம் நடத்துவதும் அம்பலமானது.
2013-ஆம் ஆண்டு இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மூட்டப்பட்ட முசாஃபர் நகர் கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் பாஜக எம் எல் ஏ சங்கீத் சிங் சாம். இவர் மாட்டிறைச்சி அரசியலை தூக்கி நிறுத்தும் முக்கியமான நபர். உத்தரபிரதேச மாநிலம் தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்ற வதந்தியில் முஸ்லிம் பெரியவர் கொல்லப்பட்டப் பிறகு, அந்த ஊருக்குப் போய் வெளிப்படையாகவே கலவரத்தை தூண்டுவகையில் பேசியவர். இவர் ‘அல் துவா’ என்கிற இறைச்சி ஏற்றுமதி நிறுவனத்தின் நடத்திக் கொண்டிருக்கிறார் என்ற செய்தி புலனாய்வாக பத்திரிகைகளில் வெளியானது.
அதுபோல, சமீபத்தில் ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மாட்டிறைச்சி நடத்தும் நிறுவனங்களிடம் ரூ. 200 கோடி நிதி வாங்கியிருக்கிறார்கள் என்று உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மாநில அமைச்சர் அசாம் கான் ஆதாரத்துடன் குற்றம் சாட்டியிருக்கிறார். வழக்கம் போல இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது பாஜக தரப்பு.
உழைக்கும் மக்களின் அன்றாட புரதத் தேவையைப் போக்கும் மாட்டிறைச்சியை உண்ணக்கூடாது என தொடர்ந்து மிரட்டி வரும் பாஜகவின் இரட்டை நிலைபாட்டை எதிர்த்துதான் இந்தியாவின் அறிவுஜீவிகள் விருதைத் திருப்பி அளிக்கும் போராட்டத்தின் மூலம் கேள்வி கேட்டார்கள்.
‘பசு’ மீதான புனித பிம்பத்தை கட்டியெழுப்புவதன் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் பார்க்கிறது பாஜக. ஆனால் அதனுடைய முகமூடிகள் இதுபோல கழற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இன்னும் பல முகமூடிகள் அவிழ வாய்ப்பிருக்கிறது.